Dust of Kurukshetra! | Vana Parva - Section 83e | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "ஓ மன்னா {பீஷ்மா}, புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒரு பயணி {யாத்ரீகர்} பிறகு, சுவஸ்திபுரம் செல்ல வேண்டும். அந்த இடத்தை வலம் வருபவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பாவனம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைந்து பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் திருப்படையல் {தர்ப்பணம்} செய்ய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா} இதனால் அவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். அதற்கு அருகிலேயே கங்காஹ்ரதமும் மற்றுமொரு தீர்த்தமான கூபமும் இருக்கின்றன. ஓ மன்னா, அந்தக் கூபத்தில் மூன்று கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கு நீராடும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கங்காஹ்ரதத்தில் நீராடி மகேஸ்வரனை {சிவனை} வணங்கும் ஒருவன் கணபத்திய நிலையை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். பிறகு ஒருவன் மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் ஸ்தாணுவடத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.
பிறகு ஒருவன் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கும் பதரீபாச்சனத்தை {பதரீகானனம்} அடையவேண்டும். அங்கே மூன்று இரவுகள் தங்கி இலந்தைப்பழத்தைச் {Jujubes} சுவைத்து உண்ண வேண்டும். அங்கே இலந்தைப்பழத்தை {மட்டுமே} உண்டு பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ்பவனும், அங்கே மூன்று இரவுகள் உண்ண நோன்பிருப்பவனும் நிலையான நிலையை அடைவான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு இந்திரமார்க்கத்தை அடைந்து, அங்கே ஒரு பகலும் ஒரு இரவும் உண்ணாதிருக்கும் புனிதப்பயணி இந்திரனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஏகராத்ரத்தை அடையும் மனிதன் முறையான நோன்புகளுடன், பொய்மையில் இருந்து விலகி ஒரு இரவு அங்கே தங்கினால் பிரம்மனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், ஒளிக்குவியலான சிறப்பு மிக்க தேவன் ஆதித்தியனின் ஆசிரமத்தை அடைய வேண்டும். மூன்று உலகத்திலும் கொண்டாடப்படும் அத்தீர்த்தத்தில் நீராடி, அந்த ஒளித்தேவனை வழிபடும் ஒருவன் ஆதித்திய உலகத்தை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒரு புனிதப்பயணி சோமத் தீர்த்தத்தில் நீராடுவதால் சந்தேகமற சோமனின் உலகத்தை அடைகிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, பிறகு ஒருவன், அனைத்தையும் தூயதாக்கும் வல்லமைப் படைத்ததென முழு உலகத்தாலும் கொண்டாடப்படும் ததீச்சரின் மிகப் புனிதமானத் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கேதான் சரஸ்வத குலத்தைச் சேர்ந்த தவச்சடங்குகளின் கடல் அங்கிரஸ் பிறந்தார். அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து, சந்தேகமற சரஸ்வதியின் உலகத்தை அடைகிறான். புலனடக்கத்துடன், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் ஒருவன் அடுத்ததாக கன்னியாஸ்ரமத்தை அடைய வேண்டும். ஓ மன்னா அங்கே புலனடக்கத்துடனும், முறையான உணவுப்பழக்கத்துடனும் மூன்று இரவுகள் தங்குபவன் நூறு தெய்வீக மங்கையரை அடைகிறான். பிறகு அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் ஸன்னிஹதி என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் அங்கே சிறிது காலம் தங்கி மேலும் அறப்பயன் அடைந்தனர். அங்கே சரஸ்வதி நதியில் சூரிய கிரஹணத்தின் போது நீராடும் ஒருவன் நூறு குதிரை வேள்விகள் செய்த பலனை அடைகிறான். அங்கு செய்யப்படும் எந்த வேள்வியும் நிலையான பலனைத் தருகிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஓ மனிதர்களின் மன்னா, பூமியிலோ, ஆகாயத்திலோ, ஆறுகளிலோ, ஏரிகளிலோ, சிறு தடாகங்களிலோ, ஊற்றுகளிலோ, குளங்களிலோ, பெரியதாகவோ, சிறியதாகவோ குறிப்பிட்ட சில தேவர்களுக்குப் புனிதமாக இருக்கும் அனைத்து தீர்த்தங்களும் சந்தேகமற, மாதத்திற்கு மாதம் சந்நிஹதியில் கலக்கிறது. அனைத்துத் தீர்த்தங்களும் இங்கே ஒன்று சேரும் காரணத்தால்தான் அத்தீர்த்தம் தனது பெயரை {சந்நிஹதி என்று} அடைந்தது. அங்கே நீராடி அதன் நீரைப் பருகும் ஒருவன் சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான்.
ஒ மன்னா {பீஷ்மா}, சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசையில் சிராத்தம் செய்யும் மனிதனுக்கு உண்டாகும் பலனைக் கேள். அங்கே {சந்நிஹதியில்}, அந்த நாளில் சிராத்தம் செய்து {சமைக்கப்படாத உணவுப்பொருட்களை அந்தணர்களுக்கு தானமளித்தல் அன்னசிராத்தம் எனப்படுகிறது} அத்தீர்த்தத்தில் நீராடும் மனிதன், ஆயிரம் குதிரை வேள்விகளைச் சரியாகச் செய்வதால் வரும் பலனை அடைகிறான். ஆண்களாலும் பெண்களாலும் செய்யப்படும் என்ன வகை பாவமானாலும், அங்கே நீராடியவுடன் சந்தேகமற அழிந்து போகிறது. அங்கே நீராடும் ஒருவன் தாமரை நிறம் கொண்ட தேரில் பிரம்மனின் வசிப்பிடத்தை அடைகிறான். பிறகு, வாயில் காப்போனான யக்ஷன் மசக்ரூகனை வழிபட்டபின் கோடி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்திற்கு அருகிலேயே கங்காஹ்ரதம் என்ற ஒரு தீர்த்தம் இருக்கிறது. ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மனே}, அங்கே ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், பிரம்மச்சரியம் கடைப்பிடித்து நீராட வேண்டும். இதனால் ஒருவன் ராஜசுயம் மற்றும் குதிரை வேள்விகள் செய்ததை விட உயர்ந்த பலனை அடைகிறான். அதற்கு அருகிலேயே பூமியில் நன்மையை விளைவிக்கும் நைமிஷம் என்ற தீர்த்தம் இருக்கிறது. விண்ணுலகத்துக்கு புஷ்கரை நன்மையை விளைவிக்கும் என்றாலும் மூன்று உலகத்திற்கும் குருக்ஷேத்திரமே நன்மையை விளைவிக்கும். காற்றால் சுமக்கப்படும் குருக்ஷேத்திரத்தின் தூசி கூட ஒரு பாவியை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்.
திருஷ்த்வதிக்கு {நதி} வடக்கிலும், சரஸ்வதிக்குத் தெற்கிலும் இருக்கும் குருக்ஷேத்திரத்தில் வசிப்பவர்கள் உண்மையில் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள். "நான் குருக்ஷேத்திரத்திற்குச் செல்வேன்" என்றும், "நான் குருக்ஷேத்திரத்தில் வசிப்பேன்" என்ற வார்த்தைகளை ஒரு முறையேனும் உச்சரித்தாலும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். பிரம்ம முனிவர்களாலும் வழிபடப்படும் குருக்ஷேத்திரம் தேவர்களின் வேள்வி மேடையாகக் {பலிப்பீடமாகக்} கருதப்படுகிறது. அங்கே வசிக்கும் மனிதர்களுக்கு எந்தக் காலத்திலும் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை. தரந்துகம், அருந்துகம் ஆகியவற்றுக்கும் ராம {ராமஹ்ரதம்}, மசக்ருகம் ஆகிய தடாகங்களுக்கும் மத்தியில் இருப்பதே குருக்ஷேத்திரம். அது சமந்தபஞ்சகம் என்றும் அழைக்கப்படுகிறது. அது பெருந்தகப்பனின் {பிரம்மாவின்} வடபுற வேள்வி மேடையெனச் சொல்லப்படுகிறது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.