A thirtha for one to become a Brahmana! | Vana Parva - Section 83d | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்...
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "சாரஸ்வதத்தை அடைந்த பின்னர் ஒருவன் மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் ஔசன தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, அங்கே பிரம்மனின் தலைமையில் தேவர்களும், துறவையே செல்வமாகக் கொண்டிருக்கும் முனிவர்களும், சிறப்பு மிகுந்த கார்த்திகேயனும் தினந்தோறும் பகலும் இரவும் சந்திக்கும் இரு சந்திவேளைகளிலும் மதிய வேளையிலும் பார்க்கவருக்கு {சுக்ரனுக்கு} நன்மை செய்ய விரும்பி நேரடியாகவே இருப்பார்கள். அங்கே கபாலமோட்சம் என்ற பாவங்களைக் கழுவும் மற்றுமொரு தீர்த்தமும் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே நீராடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன் அக்னி என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் காளையே, அங்கே நீராடும் ஒருவன் அக்னியின் உலகத்தை அடைந்து தனது குலத்தை தாழ்ந்த உலகங்களில் இருந்து மீட்டெடுக்கிறான். அந்தத் தீர்த்தத்திலேயே விஸ்வாமித்ரருடைய மற்றுமொரு தீர்த்தமும் இருக்கிறது. ஓ பாரதர்களில் தலைவா, அங்கே நீராடும் ஒருவன், ஓ மனிதர்களில் சிறந்தவனே, பிரம்மனின் நிலையை அடைகிறான்.
பிறகு ஒருவன் சுத்தமான உடலுடனும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மயோனியை அடையும் ஒருவன், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே நீராடி பிரம்மலோகத்தை அடைந்து ஏழு தலைமுறை வரை தனது குலத்தைச் சந்தேகமற சுத்தம் செய்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் கார்த்திகேயனின் {முருகனின்} பிருதூதகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி, பித்ருக்களையும் தேவர்களையும் வழிபடும் வேலையில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மனித நோக்கங்களால் உந்தப்பட்ட ஆணாலோ, பெண்ணாலோ அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட தீமைகள் யாவும் அங்கு நீராடுவதால் அழிந்து போகும். அங்கே நீராடுவதால் ஒருவன் குதிரை வேள்வி செய்யும் பலனை அடைந்து சொர்க்கத்தை அடைகிறான். குருக்ஷேத்திரத்தைப் புனிதம் என்றும்; சரஸ்வதி குருக்ஷேத்திரத்தைவிட புனிதமானது என்றும்; சரஸ்வதியைவிட ஒன்றாகக் கூடிய அனைத்துத் தீர்த்தங்களும் புனிதமானது என்றும்; அனைத்துத் தீர்த்தங்களைக் காட்டிலும் பிருதூதகம் புனிதமானது என்றும் கற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அங்கே தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் மனிதன், அனைத்துத் தீர்த்தங்களிலும் சிறந்ததான பிருதூதகத்திலேயே தனது உடலைக் கைவிட்டு இறவா நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பிருதூதாகம் செல்ல வேண்டும் என்று வேதங்களிலும் உள்ளது. சனத்குமாரராலும், உயர் ஆன்ம வியாசராலும் கூட இது பாடப்பட்டுள்ளது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிருதூதகத்திற்கும் மேன்மையான ஒரு தீர்த்தம் வேறு எதுவும் இல்லை. சந்தேகமற அத்தீர்த்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதும், புனிதமானதும், பாவங்களை அழிக்கவல்லதுமாகும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா} ஒரு மனிதன் எவ்வளவுதான் பாவியாக இருந்தாலும், பிருதூதகத்தில் நீராடினால் சொர்க்கம் செல்வான் என்று கற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கே மற்றுமொரு தீர்த்தமாக மதுஸ்ரவம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் கொண்டாடப்படும் புனித தீர்த்தமும், சரஸ்வதியும் அருணை நதிகளும் சந்திக்கும் சங்கமமுமான அந்தத் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன் அந்தணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டு அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகள் செய்த பலனை விட மேன்மையான பலனைப் பெற்று மேலும் கீழுமாகத் தனது ஏழு தலைமுறைகளை மீட்டெடுக்கிறான். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {பீஷ்மா}, அங்கேயே மற்றுமொரு தீர்த்தமான அர்த்தகீலம் {அவதீர்ணம்} என்ற தீர்த்தமும் இருக்கிறது. அந்தத் தீர்த்தம் முன்பொரு காலத்தில் அந்தணர்கள் மீது கொண்ட கருணையால் தார்பீயினால் {சார்ங்கீயினால்} உண்டாக்கப்பபட்டது. நோன்புகளாலும், புனிதமடைவதாலும், உண்ணா நோன்புகளாலும், சடங்குகளாலும், மந்திரங்களாலும் சந்தேகமற ஒருவன் அந்தணனாகிறான். ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மனே}, இருப்பினும், முற்காலத்தில் இருந்த கற்றவர்கள், சடங்குகளும், மந்திரங்களும் அற்ற ஒருவன் இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதன் மூலமே கற்றவனாகவும், நோன்புகள் நோற்ற பலனையும் அடைகிறான் என்பதைக் கண்டனர். தார்ப்பி இங்கே நான்கு கடல்களையும் கொண்டு வந்தான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, இங்கே நீராடும் ஒருவன், அதன்பிறகு துயரை அடையாமல், நாலாயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
ஓ ஆறம்சார்ந்தவனே, பிறகு ஒருவன் சதஸஹஸ்ரகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அதன் அருகிலேயே மற்றும் ஒரு தீர்த்தமான சாகஸ்ரகம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. அந்த இரண்டு தீர்த்தங்களும் கொண்டாடப்படுபவையே. அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். அங்கே அளிக்கப்படும் தானங்களும் நோன்புகளும் ஆயிரம் மடங்குகளாகப் பெருகுகின்றன. ஓ மன்னா, பிறகு ஒருவன் ரேணுகா என்ற அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி பித்ருக்களையும் தேவர்களையும் வழிபட வேண்டும். இதன்காரணமாக ஒருவன் அனைத்துப் பாவங்களிலும் இருந்து விடுபட்டு அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு விமோ என்ற தீர்த்தத்தில் ஆசைகளையும் புலன்களையும் கட்டுக்குள் வைத்து நீராடும் ஒருவன், பரிசுகளை ஏற்பதால் உண்டாகும் பாவத்தில் இருந்து விடுபடுகிறான். பிறகு ஒருவன் புலன்களைக் கட்டுக்குள் வைத்து, பிரம்மச்சரிய வாழ்வுமுறை வாழ்ந்து பஞ்சவடி வனத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கி இருப்பதால் ஒருவன் மிகுந்த அறத்தை அடைந்து, அறம் சார்ந்தவர்களின் உலகத்தை அடைகிறான்.
பிறகு ஒருவன் வருணனின் தீர்த்தமான தன்னொளியால் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தைஜசத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே அந்தத் தீர்த்தத்தில் யோகத்தின் தலைவனான, காளையைத் தனது வாகனமாகக் கொண்ட ஸ்தாணு {சிவன்} இருக்கிறான். அங்கே சிலகாலம் தங்கும் ஒருவன் தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வழிபடுவதால் வெற்றியை அடைகிறான். அங்கேதான், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் குகனை {முருகனை} தேவர்களின் படைத்தளபதியாக நியமித்தனர். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே, அந்தத் தீர்த்தத்திற்குக் கிழக்கேதான் குரு தீர்த்தம் என்று அழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய வாழ்வு முறை வாழும் ஒருவன் அக்குரு தீர்த்தத்தில் நீராடுவதால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு பிரம்மனின் உலகை அடைகிறான்.
பிறகு அடக்கப்பட்ட புலன்களுடனும், முறையான உணவுப் பழக்கத்துடனும் இருக்கும் ஒருவன் சுவர்க்கத்வாரம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து பிரம்மனின் வசிப்பிடத்தை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி, அநரகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா அங்கே நீராடும் ஒருவன் அதன்பிறகு எந்தத் துயரையும் அடைவதில்லை. ஓ மன்னா, ஓ மனிதர்களில் புலியே அங்கே நாராயணனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் எப்போதும் இருக்கின்றனர். ஓ குருகுலத்தின் அரசமகனே {பீஷ்மா}, ருத்திரனின் மனைவியும் அங்கே இருக்கிறாள். அந்தத் தேவியைக் காணும் ஒருவன் அதன்பிறகு துயரையே சந்திப்பதில்லை. அங்கே அந்தத் தீர்த்தத்தில் உமையின் தலைவனான விஸ்வேஸ்வரனும் இருக்கிறான். தேவர்களுக்குத் தேவனை {சிவனை} அங்கே காணும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே நாராயணனையும், அவனது நாபியில் உதிக்கும் கமலத்தையும் {தாமரையையும்} காணும் ஒருவன் சுடர்விட்டுப் பிரகாசித்து விஷ்ணுவின் வசிப்பிடத்தை அடைகிறான். ஓ மனிதர்களில் காளையே அனைத்து தேவர்களின் தீர்த்தங்களிலும் நீராடும் ஒருவன் அனைத்து துக்கத்தில் இருந்தும் விடுப்பட்டு, சந்திரனைப் போல ஒளிர்கிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.