Bhagiratha attained grace from Ganga! | Vana Parva - Section 108| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தனது மூதாதையர்களின் நிலையை அறிந்த பகீரதன், ஆட்சியை அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு இமயத்தில் தவம் செய்வது; கங்கையைக் கண்டு அவளது அருளைப் பெறுவது; கங்கை சொன்ன நிபந்தனை; பகீரதன் சிவனை நோக்கி தவம் இருந்தது; பகீரதன் சிவனின் அருளைப் பெற்றது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பெரும் பலம்வாய்ந்த வில்லையும், பலம்வாய்ந்த தேரையும் கொண்ட அம்மன்னன் {பகீரதன்}, அச்சூழ்நிலையில் தலைமையேற்று (அரியணை ஏறி) இந்த உலகத்தின் ஆன்மாவாகவும், அதன் கண்களுக்குக் காண்பதற்கு இனியவனாகவும் இருந்தான். அந்தப் பலம் நிறைந்த கரங்கள் கொண்டவன் பலம்வாய்ந்த ஆன்மாக் கொண்ட கபிலரால் தனது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட துயரமான நிலையையும், அவர்கள் தேவலோகம் அடைய முடியாத நிலையையும் அறிந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} அவன் மன்னனுக்குரிய தனது அரச கடமைகளை அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு தவமியற்ற பனி நிறைந்த மலையை {இமயத்தை} அடைந்தான்.
ஓ! மனிதர்களில் புகழ்மிக்கவனே {யுதிஷ்டிரா}, தவ வாழ்வின் மூலம் தனது பாவங்களை அழித்து, அதன் காரணமாகக் கங்கையின் உதவியை அடைய அவன் {பகீரதன்} மலைகளில் முதன்மையான இமயத்தை அடைந்தான். அங்கே அவன் {பகீரதன்} அதன் சிகரங்களில் வித்தியாசமான தாதுக்களைக் கண்டான். அங்கே மேகத் துளிகள் சிதறி காற்றோடு பயணித்தன. நதிகள், தோப்புகள், (நகரத்தில் இருக்கும் பல} அரண்மனைகள் போன்ற பாறை முடுக்குகளுடன் அம்மலை இருந்தது. குகைகளிலும், பள்ளங்களிலும் சிங்கங்களும் புலிகளும் பதுங்கியிருந்தன. வித்தியாசமாக ஒலியெழுப்பும் பலவண்ண பறவைகளால் அவ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்கே வண்டுகளும், அன்னங்களும், நீர்க்காக்கைகளும், நீர்க்கோழிகளும், மயில்களும், நூறு இறகுகள் கொண்ட பறவைகளும், ஜீவஞ்சீவங்களாலும், குயில்களாலும், கருத்த நிறம் கொண்ட சக்கோரங்களாலும், குஞ்சுகளிடம் அன்பொழுகும் பறவைகளாலும் அவ்விடம் நிறைந்திருந்தது.
அந்த மலையில் நீர்நிறைந்த அழகிய இடங்களில் தாமரைகள் அடர்ந்திருப்பதைக் கண்டான் {பகீரதன்}. அங்கே நாரைகளின் இனிய ஒலிகளுடன், கின்னரர்களும் அப்சரஸ்களும் கற்பாறைகளில் அமர்ந்திருந்தனர். முக்கியமான இடங்களை ஆக்கிரமித்த யானைகள் அங்கிருந்த மரங்களைத் தங்கள் துதிக்கைகளால் திருடின. வித்தியாதர்கள் அங்கே அடிக்கடி வந்து சென்றனர். பலதரப்பட்ட ரத்தினங்கள் நிறைந்து, கடும் விஷம் கொண்ட பிரகாசிக்கும் நாக்குடைய பாம்புகள் நிறைந்தும் இருந்தது அம்மலை. அந்த மலையில் சில பகுதிகள் தங்கம் போலவும், மற்றவை வெள்ளி போவும் பிரகாசித்தன. சில இடங்களில் அது (பழுப்பு நிற) அஞ்சன {மருந்துக்} குவியல் போலவும் காட்சி அளித்தது. அந்தப் பனி நிறைந்த மலையில் மன்னன் {பகீரதன்} தன்னை அமர்த்திக் கொண்டான். மனிதர்களில் மிகவும் புகழத்தக்க அவன் அந்த இடத்தில் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். ஆயிரம் {1000} வருடங்களுக்கு அவன் நீர், கனி மற்றும் கிழங்குகள் தவிர வேறு எதையும் உட்கொள்ளவில்லை. இருப்பினும் தேவர்களின் கணக்குப்படி ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், பெரும் நதியான கங்கை, பொருளுரு கொண்டு {பௌதீக உருவெடுத்து [material form]}, அவனுக்கு (தெய்வீகக்) காட்சியளித்தாள்.
கங்கை {பகீரதனிடம்}, "ஓ! பெரும் மன்னா, நீ என்னிடம் என்ன விரும்புகிறாய்? நான் உனக்கு எதை அருள வேண்டும்? ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே அதை என்னிடம் சொல்! நீ சொல்வதை நான் செய்கிறேன்" என்றாள். இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {பகீரதன்}, அந்தப் பனிநிறைந்த மலையின் மகளான கங்கையிடம், "ஓ! வரமருளுபவளே! ஓ பெரும் நதியே, எனது தந்தையின் தந்தைகள், குதிரையைத் தேடிய போது, கபிலரால் மரணத் தேவன் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சகரனின் அந்த அறுபதாயிரம் மகன்களின் பலம் வாய்ந்த ஆன்மா, கம்பீரமான கபிலரால் ஒருக்கணத்தில் அழிக்கப்பட்டன. இப்படி அழிக்கப்பட்டதால் அவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஓ! பெரும் நதியே, நீ அவர்களின் உடலில் உனது நீரைத் தெளிக்காத வரை அவர்களுக்கு முக்தி கிடையாது. ஓ! அருளப்பட்ட தேவதையே, சகரனின் மகன்களான எனது மூதாதையார்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல். ஓ! பெரும் நதியே, அவர்கள் நிமித்தமாகவே நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "உலகத்தால் வணங்கப்படும் தேவதையான கங்கை, மன்னனின் {பகீரதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் திருப்தி கொண்டு பகீரதனிடம், "ஓ! பெரும் மன்னா! நீ என்னிடம் கேட்பதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நான் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் போது, நான் விழும் வேகம் தாங்க முடியாததாக இருக்கும். ஓ! மனிதர்களின் பாதுகாவலா {பகீரதா}! தெய்வங்களில் மிகவும் போற்றத்தக்க கருநீல மிடறு {தொண்டை} கொண்ட அந்தப் பெருந்தலைவனான சிவனைத் தவிர, அந்த வேகத்தைத் தாங்கும் சக்தி கொண்டவர் மூவுலகிலும் வேறு யாருமிலர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே)! தவம் பயில்வதன் மூலம் அந்த வரங்கள் அருள்பவரான சிவனின் உதவியை அடைய முயற்சி செய். அந்தத் தெய்வம் எனது வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கிக் கொள்வார். ஓ! மன்னா {பகீரதா}, உனது தந்தைகளுக்கான சேவையின் நிமித்தமான உனது விருப்பத்தை அவர் நிறைவேற்றுவார்" என்றாள் {கங்கை}.
இதைக் கேட்ட பெரும் மன்னனான பகீரதன் கைலாச மலைக்குச் சென்று கடும் நோன்புகள் நோற்று, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அருளைக் கொடுப்பவனின் (சிவனின்) உதவியைப் பெற்றான். ஓ! மனிதர்களின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் சிறந்தவன் {பகீரதன்}, தனது மூதாதையர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் பெறுவதின் பொருட்டு, விழும் கங்கையைச் சிவன் தாங்கும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.