Bhagiratha made Ganga as his daughter! | Vana Parva - Section 109| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பகீரதனிடம் சிவன் கங்கையைத் தாங்கிக் கொள்வதாக ஏற்பது; விண்ணிலிருந்த கங்கை மண்ணில் பாய்வது; பகீரதன் கங்கைக்கு வழி காட்டி கடலை அடையச் செய்தது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பகீரதன் சொன்னதைக் கேட்ட அந்த அருளப்பட்ட தெய்வம் {சிவன்}, தேவலோகவாசிகளுக்கு ஏற்புடையதைச் செய்ய எண்ணி அம்மன்னனிடம் {பகீரதனிடம்}, "அப்படியே ஆகட்டும். ஓ! மனிதர்களைக் காப்பவர்களில் மிகவும் நேர்மையானவனே, ஓ! பெரும் பலம்வாய்ந்த வலுத்த கரம் கொண்டவனே (இளவரசனே), சுத்தமானவளும், அருளப்பட்டவளும், தெய்வீகமானவளுமான தேவர்களின் நதி {கங்கை} வானத்தில் இருந்து வீழும்போது, உனக்காக நான் அவளைத் தாங்கிக் கொள்கிறேன்" என்றான். இப்படிச் சொல்லிய அவன் {சிவன்}, வித்தியாசமான ஆயுதங்களை உயர்த்திப் பிடித்தவாறு, பரிதாபகரமான முகங்களுடன் இருந்த தனது சேவகர்களுடன் பனி மலைக்கு வந்தான். அங்கேயே நின்றவாறு மனிதர்களில் மிகவும் போற்றத்தக்க பகீரதனிடம், "ஓ! பலம் நிறைந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே), மலைகளின் மன்னனுடைய {சைலராஜன் = மலைகளின் மன்னன்} மகளான அந்த நதியை {கங்கையை} வேண்டிக் கொள். நதிகளில் மிகவும் போற்றத்தக்க அவள் {கங்கை} உலகத்தின் மூன்றாவது பகுதியில் {சொர்க்கத்தில்} இருந்து வீழும் போது, நான் அவளைத் தாங்கிக் கொள்வேன்" என்றான் {சிவன்}.
சிவனால் உச்சரிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மன்னன் {பகீரதன்} (இதயத்தில்) பக்தியுடன் தனது வணக்கங்களைச் செய்து, தனது சிந்தனையைக் கங்கையை நோக்கித் திருப்பினான். பிறகு அந்தக் காண்பதற்கினிய (நதி) சுத்தமான நீரைக் கொண்டவள் மன்னனால் {பகீரதனால்} நினைக்கப்பட்டதும், அந்தப் பெரும் தெய்வம் (சிவன்), (வீழும் தன்னைப் பெற) நிற்பதைக் கண்டு, திடீரென வானத்தில் இருந்து கீழே வந்தாள். வானத்தில் இருந்து அவள் குதித்ததைக் கண்ட தேவர்கள் பெரும் தவசிகளுடனும், கந்தர்வர்களுடன், பாம்புகளுடனும், யக்ஷரகளுடனும் பார்வையாளர்களாக அங்கே கூடி நின்று பார்த்தனர். பிறகு பனி மலையின் மகளான கங்கை வானத்தில் இருந்து கீழே வந்தாள். மீன்களும் சுறாக்கள் நிறைந்த நீர்ச்சுழிகளுடன் பொங்கிப் பெருக வந்தாள்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடலை நோக்கிச் சென்ற அவள் {கங்கை} தன்னை மூன்று ஓடைகளாகப் பிரித்துக் கொண்டாள். அவளது நீர் நுரைக்குவியலால் சூழப்பட்டிருந்தது. பல வெண் நாரைகளின் அணிவகுப்பைப் போல இருந்தது அது {நுரைக்குவியல்} இருந்தது. நுரை எனும் ஆடையை உடுத்திச் செல்லும் அவள் {கங்கை} ஓரிடத்தில் விரிந்தும், வேறிடத்தில் வளைந்தும், சில இடங்களில் தடுமாறியும் செல்லும் மது மயக்கத்திலுள்ள மங்கையைப் போல இருந்தாள். இன்னும் பிற இடங்களில் அவள் தனது நீரடிப்பின் தன்மையால் பெரும் கர்ஜனை செய்தாள். வானத்தில் இருந்து விழும்போதே இதுபோன்ற பல விதமான செயல்கள் புரிந்து பூமியை அடைந்த அவள் {கங்கை} பகீரதனிடம், "ஓ! பெரும் மன்னா {பகீரதா}, நான் செல்ல வேண்டிய பாதையை எனக்குக் காண்பி. ஓ பூமியின் தலைவா, நான் உனக்காகவே இந்தப் பூமியில் இறங்கினேன்" என்றாள் {கங்கை}.
அதனால், ஓ! மனிதர்களில் மிகவும் போற்றத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் பகீரதன், பெரும் பலம்வாய்ந்த சகர மைந்தர்களின் உடல்களை அந்தப் புனிதமான நீர், நிறைக்கும் பொருட்டு அந்த உடல்கள் {உடல்களின் எச்சம்} கிடந்த இடத்தின் வழியாக செல்லுமாறு தனது பாதையை அமைத்துக் கொண்டான். மனிதர்களால் வழிபடப்பட்ட சிவன், கங்கையைத் தாங்கிக் கொண்ட பணியைச் சாதித்ததும், மலைகளில் போற்றத்தக்க கைலாசத்துக்குத் தேவர்களுடன் சென்றான். பிறகு அந்த மனிதர்களின் பாதுகாவலன் {பகீரதன்} கங்கையை அழைத்துக் கொண்டு கடலை அடைந்தான். வருணனின் வசிப்பிடமான அந்தக் கடலும் விரைவில் நிரம்பியது.
பிறகு அம்மன்னன் {பகீரதன்} கங்கையைத் தனது மகளாகச் சுவீகரித்துக் கொண்டு, தனது மூதாதையர்கள் பெயரில் நீர்க்கடன் செலுத்தி, இதய விருப்பம் நிறைவடைந்தவன் ஆனான். ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, நீ கேட்டுக் கொண்டதற்கிணங்க, கங்கை மூன்று ஓடைகளாகப் பிரிந்து ஓடி, பூமியை அடைந்து, எப்படி கடலை நிரப்பினாள்; குறித்த காரியத்திற்காக அகஸ்தியர் எப்படிக் கடலைக் குடித்தார்; அந்தணர்களைக் கொன்ற வாதாபியை அகஸ்தியர் எப்படி அழித்தார் என்ற வரலாற்றுகளைச் சொல்லிவிட்டேன்" என்றார் லோமசர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.