Rub ash on one's body! | Vana Parva - Section 84c | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "அடுத்ததாக வாரணாசிக்குச் சென்று காளையைத் தனது குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வழிபட்டு, கபிலஹ்ரதத்தில் நீராடுபவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைவான். பிறகு, ஓ குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே, அவிமுக்தம் என்ற தீர்த்தத்திற்குச் சென்று அங்கு தேவர்களுக்கு தேவனைக் காணும் புனிதப்பயணி, அந்தக் காட்சியின் நிமித்தமாகவே அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் கூட விடுபடுகிறான். அங்கே தனது உயிரைக் கைவிடுபவன், விடுதலையைப் பெறுகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு அரிதான தீர்த்தமும் உலகத்தால் கொண்டாப்படுவதும், கங்கை சங்கமிக்கும் இடத்தில் இருப்பதுமான மார்க்கண்டேய தீர்த்தத்தை அடையும் ஒருவன், அக்னிஷ்டோமா வேள்வியைச் செய்த பலனை அடைந்து, தனது குலத்தை விடுவிக்கிறான். பிறகு கயைக்குச் சென்று புலன்களை அடக்கி, பிரம்மச்சரியம் இருந்து சிறிதுகாலம் அங்கு தங்கியிருப்பவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தை மீட்கிறான். மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்ஷயவடம் அந்தத் தீர்த்தத்தில் தான் இருக்கிறது. அங்கே பித்ருக்களுக்கு தானமளிக்கப்படும் எதுவாக இருந்தாலும் அது பன்மடங்காகிறது. அங்கே மகாநதியில் நீராடி தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் மனிதன் நித்தியமான உலகங்களை அடைந்து தனது குலத்தை மீட்கிறான்.
பிறகு தர்மவனத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பிரம்மசரத்தை அடைந்து அங்கே ஒரு இரவை கழிக்கும் மனிதன் பிரம்ம லோகத்தை அடைகிறான். அந்தத் தடாகத்தில் பிரம்மா ஒரு வேள்வித்தூணை எழுப்பியிருக்கிறான். அத்தூணை வலம் வரும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, பிறகு ஒருவன் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தேனுகா என்ற தீர்த்தத்தை அடையவேண்டும். அங்கே ஓரிரவு தங்கி எள்ளையும், பசுவையும் தானமாகக் கொடுப்பவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் சுத்தப்படுத்தப்பட்டு, ஒருவன் சந்தேகமற சோமனின் உலகத்தை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே அந்த மலைகளில் கபிலை என்ற பசு தனது கன்றுடன் உலாவுவது வழக்கம். ஓ பாரதா {பீஷ்மா}, அந்தப் பசு மற்றும் கன்றின் கால் தடயங்கள் இன்னும் இருப்பதாக நம்பப்படுகிறது. ஓ பாரதா, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மா}, அக்கால்த் தடயங்களில் உண்டான தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் எப்பாவம் செய்திருந்தாலும் அப்பாவங்கள் கழுவப்படுகின்றன. பிறகு ஒருவன், திரிசூலம் தாங்கும் தெய்வத்தால் {சிவனால்} புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கிருத்திரவடத்தை அடைய வேண்டும். அங்கே காளையைத் தனது குறியீடாகக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} அணுகும் ஒருவன் சாம்பலைத் தன் மேனியில் பூசிக் கொள்ள வேண்டும். ஒருவன் அந்தணனாக இருந்தால், பனிரெண்டு வருட நோன்பு மேற்கொண்ட பலனை அடைகிறான். அவன் வேறு வகைகளைச் சார்ந்தவானாக இருந்தால், அவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
பிறகு ஒருவன் இனிய மெல்லிசையால் நிறைந்த உதயந்த மலைகளை அடைய வேண்டும். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அங்கே சாவித்திரியின் கால் தடம் இன்னும் தெரிகிறது. கடும் நோன்பிருந்து காலை, நடுப்பகல் மற்றும் மாலை வழிபாடுகளை இங்கே செய்யும் அந்தணன், பனிரெண்டு வருடம் இச்சேவையைச் செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே, அங்கே, புகழ்மிக்க யோனிதுவாரம் இருக்கிறது. அங்கே செல்லும் ஒரு மனிதன் மறுபிறவி பெறும் வலியில் இருந்து விடுபடுகிறான். தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்கள் அனைத்தையும் கயையில் கழிப்பவன் நிச்சயமாக சுத்திகரிக்கப்பட்டவனாகி, ஓ மன்னா {பீஷ்மா}, தனக்கு முன்பும் பின்பும் உள்ள ஏழு தலைமுறைகளைக் காக்கிறான். தனது பிள்ளைகளில் ஒருவன் கயைக்குச் செல்லவோ அல்லது குதிரை வேள்வி செய்யவோ
அல்லது நீலக்காளையை தானம் செய்யவோ வேண்டுமானால் ஒருவன் நிறைய மகன்களைப்
பெற்றுக் கொள்ள விரும்ப வேண்டும்..
ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி பல்குவை அடைய வேண்டும். இதனால் அவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து பெரும் வெற்றியையும் அடைகிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன், கட்டுப்பட்ட ஆன்மாவுடன் தர்மப்பிரஸ்தத்தை அடைய வேண்டும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, அங்கே, அறம் என்பது நிலைத்து இருக்கிறது. அங்கே இருக்கும் கிணற்றிலுள்ள நீரை அருந்தி, குளித்துத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட ஒருவன் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன்களைச் செலுத்தி தனது பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொண்டு சொர்க்கத்திற்கு உயர்கிறான். அத்தீர்த்ததில் தான் மதங்கப் பெருமுனிவரின் ஆசிரமம் இருக்கிறது. களைப்பையும் துன்பத்தையும் போக்கும் அந்த அழகிய ஆசிரமத்திற்குள் நுழையும் ஒருவன் கவாயன {கவாமயநயஜ்ஞ} வேள்வி செய்த பலனை அடைந்து, அங்கே இருக்கும் அறத்தேவனைத் {தர்மதேவனின் உருவத்தைத்} தொடுவதால், ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓ மன்னா, பிறகு ஒருவன், பிரம்மஸ்தானம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே பிரம்மனை அணுகும் ஆடவர்களில் காளையே, ஓ பலம் பொருந்திய ஏகாதிபதியே {பீஷ்மா}, ராஜசூயம் மற்றும் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மனிதர்களின் மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி ராஜசூயத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் (சொர்க்கத்தில்) மகிழ்ச்சியாக வாழும் காக்ஷீயரை (முனிவரைப்) போல வாழ்கிறான். தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்ட ஒருவன் யக்ஷிணிக்கு படையலிட்டதை உண்ண வேண்டும். இதனால் யக்ஷிணியின் அருளை அடைந்து, அந்தணரைக் கொன்ற பாவத்திலிருந்தும் கூட ஒருவன் விடுபடுகிறான். பிறகு மணிநாகத்தை அடையும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ பாரதா {பீஷ்மா} மணிநாகத்தீர்த்தத்திற்குச் சம்பந்தப்பட்ட எதையும் உண்ணும் ஒருவன், கடும் விஷம் கொண்ட பாம்பால் கடிக்கப்பட்டாலும், அதன் விஷத்துக்கு வீழ்வதில்லை. அங்கே ஒரு இரவு தங்கும் ஒருவன் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.
பிறகு ஒருவன் பிரம்ம முனிவர் {பிரம்மரிஷி} கௌதமருக்குப் பிடித்தமான வனத்தை அடைய வேண்டும். அங்கே அகலிகையின் மடுவில் நீராடும் ஒருவன் மேன்மையான நிலையை அடைகிறான். பிறகு ஸ்ரீயின் உருவத்தைக் காணும் ஒருவன் பெரும் செழிப்பை அடைகிறான். அந்தத் தீர்த்ததில் மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் ஒரு கிணறு இருக்கிறது. அதில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அங்கே அரசமுனியான ஜனகனின் மற்றுமொரு கிணறும் இருக்கிறது. அது தேவர்களாலும் வணங்கப்படுகிறது. அக்கிணற்றில் நீராடும் ஒருவன் விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒருவன் அனைத்து பாவங்களையும் அழிக்கும் விநசத்தை அடைய வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சோமனின் உலகத்தை அடைகிறான்.
பிறகு ஒருவன் அனைத்துத் தீர்த்தங்களின் நீராலும் உண்டாக்கப்பட்ட கந்தகியை அடைவதால், அவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சூரிய உலகத்திற்கு உயர்கிறான். பிறகு ஒருவன் விசல்யை என்ற மூன்று உலகத்திலும் கொண்டாடப்படும் இடத்தை அடைவதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மா}, துறவிகளின் வனமான ஆதிவங்கத்தை அடையும் ஒருவன், சந்தேகமற குஹயர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அடைவான். அடுத்ததாக, சித்தர்களால் அடிக்கடி அடையப்படும் கம்பனை என்ற நதியை அடைபவன், பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா} மகேஸ்வரி என்று அழைக்கப்படும் ஓடைக்கு வரும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தை மீட்கிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.