Rama and Gopratra! | Vana Parva - Section 84b | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் உலகத்தால் கொண்டாடப்படும் சுகந்தத்தை அடைய வேண்டும். இதனால் தனது பாவம் விலகி ஒருவன் பிரம்மனின் வசிப்பிடத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி ருத்ரவர்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் சொர்க்கத்ததிற்கு உயர்கிறான். கங்கையும் சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தை அடைகிறான். பிறகு பத்ரகர்ணேஷ்வரம் சென்று முறைப்படி தேவர்களை வணங்குபவன், அதன்பிறகு துன்பத்தில் மூழ்காதிருந்து சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி குப்ஜாம்ரகம் {குப்ஜாவதி} என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடைந்து சொர்க்கத்தையும் அடைகிறான். பிறகு, ஓ மன்னா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி அருந்ததிவடம் செல்ல வேண்டும். ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பிரம்மச்சரியத்துடன் இருந்து, அங்குள்ள சமுத்ரகத்தில் {கடலில்} நீராடி, மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் குதிரை வேள்வி செய்த பலனையும், ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனையும் அடைந்து தனது குலத்தைக் காக்கிறான்.
பிறகு ஒருவன் அடுத்ததாக ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், பிரம்மச்சரியத்துடனும் பிரம்மவர்தத்தை அடைய வேண்டும். இதனால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சோமனின் உலகத்தை அடைகிறான். யமுனபிரபாவத்துக்குச் (யமுனையின் தோற்றுவாய்க்கு{நதி மூலத்திற்கு}ச்) சென்று அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு, சித்தர்களாலும் கந்தரவர்களாலும் வழிபடப்படும் சிந்து பிரபாவத்தை (சிந்து நதியின் தோற்றுவாய்) அடைந்து, ஐந்து நாட்கள் அங்கே தங்கினால், அவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
அடுத்ததாக யாரும் அணுகுவதற்கு அரிதான தீர்த்தமான வேதிக்குச் செல்வதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன் ரிஷிகுல்யையும், வசிஷ்டையையும் அடைய வேண்டும். வசிஷ்டைக்குச் செல்லும் எந்த வகையினரும் அந்தண நிலையை அடைகின்றனர். ரிஷிகுல்யத்திற்குச் சென்று அங்கே நீராடி ஒரு மாதத்திற்கு மூலிகைகளை உண்டு வாழ்ந்து, தேவர்களையம் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன் முனிவர்களின் உலகத்தை அடைவான். பிறகு அடுத்ததாக பிருகுதுங்கத்தை அடையும் மனிதன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு, விப்ரமோட்சத்தை அடையும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு கிருத்திகை மற்றும் மாக தீர்த்தங்களை அடையும் ஒருவன், அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளின் பலன்களைவிட மேன்மையான பலன்களை அடைகிறான்.
வித்யை எனும் அற்புதமான தீர்த்தத்தை அடையும் மனிதன், அங்கே மாலையில் நீராடினால் அனைத்து ஞானங்களையும் திறமைகளையும் பெறுகிறான். பிறகு ஒருவன் பாவங்களை அழிக்கவல்ல மஹாஸ்ரமம் என்ற தீர்த்தத்தை அடைந்து ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டுமே உண்ண வேண்டும். இதனால் ஒருவன் பல மங்களகரமான பகுதிகளை அடைந்து தனக்கு முன்பான பத்து தலைமுறைகளையும், தனக்குப் பின்பான பத்து தலைமுறைகளையும் விடுவிக்கிறான். மஹாலயத்தில் ஒரு மாத காலம் தங்கி, அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் தனது அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டு, அபரிமிதமான தங்கத்தை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பெருந்தகப்பனால் {பிரம்மனால்} வணங்கப்படும் விதசிகத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனையும் உசானசின் நிலையையும் அடையலாம். பிறகு ஒருவன் சித்தர்களால் வழிபடப்படும் சுந்தரிகா என்ற தீர்த்தத்தை அடைந்தால் முன்னோர்கள் கண்ட அற்புத மேனி அழகைப் பெறுவார்கள்.
பிறகு புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் பிராமணி தீர்த்தத்தை அடைந்து தாமரை நிறத் தேரில் பிரம்ம லோகத்தை அடைவான். பிறகு ஒருவன் சித்தர்களால் வழிபடப்படும் புனிதமான நைமிஷத்தை அடையவேண்டும். அங்கே தேவர்களுடன் சேர்ந்து பிரம்மனும் வசிக்கிறார். நைமிஷத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே ஒருவனின் பாதி பாவங்கள் அழிகின்றன. அதற்குள் நுழையும்போது அவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன் புலனடக்கத்துடன் நைமிஷத்தில் ஒரு மாத காலம் தங்க வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, உலகத்தில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் நைமிஷத்தில் உள்ளன. புலன்களில் இருந்து விடுபட்டு, ஒழுங்கு செய்யப்பட்ட உணவுமுறையுடன் அங்கு நீராடுபவன் பசு வேள்வி {கோமேத வேள்வி} செய்த பலனை அடைந்து, ஓ பாரதர்களில் சிறந்தவனே, தனக்கு முன்பும் பின்பும் உள்ள ஏழு தலைமுறையினரையும் புனிதப்படுத்துகிறான். உண்ணாதிருந்து நைமிஷத்தில் உயிரை விடுபவன், சொர்க்கலோகங்களில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். இது விவேகிகளின் கருத்தாகும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, நைமிஷம் என்றும் எப்போதும் புண்ணியமானதே! புனிதமானதே!
அடுத்ததாக ஒருவன் கங்கோத்பேதத்தை அடைந்து மூன்று இரவுகள் உண்ணாதிருப்பதால் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து பிரம்மனைப் போல ஆகிறான். சரஸ்வதியில் {நதியில்} பயணித்து ஒருவன் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படையலிட வேண்டும். இதனால் ஒருவன் சரஸ்வதா உலகங்களில் மகிழ்ச்சியடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் பாகுதம் செல்ல வேண்டும். ஓ கௌரவா {பீஷ்மா}, அங்கே ஓரிரவு தங்குபவன் சொர்க்கத்தை அடைந்து அங்கே வழிபடப்பட்டு தேவாஸ்திர வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு புனிதமான மனிதர்களால் அடிக்கடி பார்க்கப்படும் க்ஷீரவதிக்குச் செல்ல வேண்டும். அங்கே தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடுபவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் விமலசோகம் அடைந்து, அங்கே ஓர் இரவு வசிப்பவன் சொர்க்கத்தில் கொண்டாடப்படுகிறான்.
பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, சரயுவில் இருக்கும் கோப்ரதாரம் என்ற தீர்த்ததின் மகிமையால் {தசரத} ராமன், தனது பணியாட்களுடனும் மற்ற விலங்குகளுடனும் தனது உடலைத் துறந்த, அந்த அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, ராமனின் அருளாலும், ஒருவனது தன்னறங்களாலும் {தனது செயல்களின் அறங்களாலும்}, அத்தீர்த்தத்தில் நீராடுபவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறது. அவன் சொர்க்கத்தை அடைகிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன், ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மனே}, கோமதியில் இருக்கும் ராம தீர்த்தத்தை அடைந்து அங்கு நீராடுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து, தனது குலத்தைப் புனிதப்படுத்துகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அங்கே மற்றுமொரு தீர்த்தமான சதசாகஸ்ரகம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. புலன்களில் இருந்து விடுபட்டு, முறையான உணவுப்பழக்கத்துடன் இருக்கும் மனிதன், ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, ஒப்பற்ற தீர்த்தமான பர்த்துருஸ்தானத்தை அடைய வேண்டும். இதனால் ஒரு மனிதன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கோடி என்ற தீர்த்தத்தில் நீராடி கார்த்திகேயனை வழிபடும் மனிதன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைந்து, பெரும் சக்தியை அடைகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.