Recollections of former life! | Vana Parva - Section 84e | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் தேவர்களின் குளத்திற்குச் சென்று துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்பை அடைந்து, குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் சோமபதத்தை அடைய வேண்டும். அங்கே இருக்கும் மகேஸ்வரபதத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அத்தீர்த்தத்தில் கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன என்பது நன்கறியப்பட்டதே. ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மனே}, ஆமை வடிவில் இருந்த ஒரு தீய அசுரன் ஒருவன் அந்தத் தீர்த்தத்தை அபகரித்துச் சென்றான். அப்போது பலமிக்க விஷ்ணு அவனிடம் இருந்து அதை மீட்டான். அத்தீர்த்தத்தில் ஒருவன் தனது நீர்க்கடன்களைச் செலுத்துவதால் பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான்.
ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் நாராயணன் என்றும் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், ஆதித்தியர்களும், வசுக்களும், ருத்திரர்களும் அத்தீர்த்தத்தில் கூடி அந்த ஜனார்த்தனனை {விஷ்ணுவை} வழிபடுகின்றனர். அற்புதமான செயல்கள் செய்யும் அந்த விஷ்ணு அங்கே சாலக்கிராமன் என்று அறியப்படுகிறான். {இது பத்ரிநாத் மற்றும் கண்டகி நதியாக இருக்கலாம்} மூன்று உலகங்களின் தலைவனான, வரங்கள் அருளும் அந்த நிலைத்த விஷ்ணுவை அணுகுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா} அவ்விடத்தில் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் ஒரு கிணறு இருக்கிறது. நான்கு கடல்களும் அந்தக் கிணற்றுக்குள் எப்போதும் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைகிறான். அங்கிருக்கும் வரமருளும் நித்தியமான கடுமை நிறைந்த மகாதேவனைக் காண்பதால், ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் மேகத்திலிருந்து வெளிவரும் நிலவெனப் பிரகாசிக்கிறான். பிறகு தூய மனதுடனும், புலனடக்கத்துடனும் ஜாதிஸ்மரத்தில் நீராடும் ஒருவன் சந்தேகமற தனது பூர்வ ஜென்ம ஞாபகங்களை அடைவான்.
பிறகு மகேஸ்வரபுரத்தை அடையும் ஒருவன், காளையைக் குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வணங்கி, சிறிது காலம் உண்ணா நோன்பிருப்பதால் அவனது விருப்பங்கள் யாவையும் சந்தேகமற அடைகிறான். பிறகு பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் வாமனத்திற்குச் சென்று ஹரி தெய்வத்தை வணங்கி அனைத்து துரதிர்ஷ்டங்களில் இருந்தும் ஒருவன் விடுபடுகிறான். பிறகு ஒருவன், அனைத்துப் பாவங்களையும் அகற்றும் குசிகரின் ஆசிரமத்தை அடைய வேண்டும். பிறகு கௌசிகி நதியை அடைந்து பெரும்பாவங்களாக இருப்பினும் அங்கே நீராடுவதால் தொலைந்துவிடும். ஆகையால், ஒருவன் அங்கே நீராட வேண்டும். இதனால் அவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான சம்பக வனத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவைக் கழிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை ஒருவன் அடைகிறான். அங்கே பெரும் பிரகாசமிக்க விஸ்வேஸ்வரனை அவனது துணையுடன் காணும் மனிதன், ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மா}, மித்ர வருணனின் உலகத்தை அடைகிறான். அங்கே மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் கன்னியாசம்வேத்ய தீர்த்தத்தை புலனடக்கத்துடனும் முறைப்படுத்தப்பட்ட உணவு வழக்கத்துடனும் அடைய வேண்டும். அதனால், ஓ மனிதர்களில் காளையே, ஒருவன் படைப்புத் தலைவனான மனுவின் உலகத்தை அடைகிறான். அத்தீர்த்தத்தில் அரிசியைத் தானம் கொடுத்தாலோ அல்லது அங்கே தானமளிக்கப்படும் எந்தப் பரிசாக இருந்தாலும் அது பெருகும் என்று கடும் நோன்புகள் கொண்ட முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்து மூன்று உலகத்தாலும் நிஷ்சீரம் என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, நிஷ்சீரத்தில் தானமளிக்கும் ஒருவன் பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். அந்தத் தீர்த்தத்தில் மூன்று உலகத்தாலும் அறியப்படும் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு தெய்வீக முனிவர்களால் அடிக்கடி பயணிக்கப்படும் தேவகூடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு, குசிக முனிவரின் மகனான விஸ்வாமித்திரயை வெற்றியடைந்த இடமான கௌசிக முனிவரின் தடாகத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ வீரனே {பீஷ்மா} அங்கே கௌசிகத்தில் ஒருமாதம் தங்குபவன், ஓ பாரத குலத்தின் காளையே, அதனால் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். தீர்த்தங்களில் சிறந்ததான மஹாஹ்ரதத்தை அடைந்து வசிக்கும் ஒருவன் துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்படைந்து, அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைகிறான்.
பிறகு ஒருவன் வீராஸ்ரமத்தில் வசிக்கும் கார்த்திகேயனைக் {முருகனைக்} கண்டு ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடையலாம். பிறகு, மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்னிதாரத்தை அடைந்து, அங்கே நீராடி, தேவர்களுக்குத் தேவனான நித்தியமான வரமளிக்கும் விஷ்ணுவைக் காண்பதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு பனியால் முடி மூடப்பட்டிருக்கும் மலைகளின் அருகே இருக்கும் பெருந்தகப்பனின் {பிரம்மனின்} குளத்தை அடைந்து அங்கே நீராடும் ஒரு மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பெருந்தகப்பனின் குளத்தில் இருந்து கீழிறங்கும் ஒருவன் மூன்று உலகத்தாலும் குமாரதாரம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் தனது காரியங்கள் அனைத்தும் ஈடேறிவிட்டதாகக் கருதலாம். அத்தீர்த்தத்தில் மூன்று நாள் உண்ணாதிருந்து, அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் விடுபடலாம்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி, மூன்று உலத்திலும் புகழ்பெற்ற கௌரி என்ற பெரும்பெண் தெய்வத்தின் சிகரத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அதன் மீதேறி ஸ்தனகுண்டத்தை அடைய வேண்டும். ஸ்தனகுண்டத்தின் நீரைத் தொடுவதால் ஒரு மனிதன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தீர்த்தத்தில் நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து இந்திரனின் உலகை அடைகிறான். தேவர்களால் அடிக்கடி காணப்படும் தாமரார்ண கிணற்றை அடையும் ஒருவன், ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, மனித வேள்வி செய்த பலனை அடைகிறான். கிருத்திகை, கௌசிகி மற்றும் அருணை சங்கமிக்கும் சங்கமத்தில் மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்கும் படித்த மனிதன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஊர்வசி மற்றும் சோமஸ்ராம தீர்த்தங்களை அடையும் ஒரு விவேகி, கும்பகர்ணாஸ்ரத்தில் நீராடி உலகத்தால் வழிபடப்படுவான். தடுமாறாத நோன்புகளுடன் பிரம்மச்சரியம் இருந்து கோமுகத்தின் நீரைத் தொடுவதால் ஒருவன் முந்தைய ஜென்ம ஞாபகங்களை மீட்டெடுக்கிறான்.
பிறகு நந்தா என்று அழைக்கப்பட்டும் வேகமாகச் செல்லும் நதியை அடையும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, கட்டுப்பட்ட ஆன்மாவுடன் இந்திரனின் உலகத்துக்கு உயர்கிறான். பிறகு கொக்குகள் அழியும் ரிஷபத் தீவுக்குச் சென்று அங்கே சரஸ்வதியில் நீராடும் ஒருவன் சொர்க்கத்தில் சுடரெனப் பிரகாசிக்கிறான். பிறகு ஔத்தாலகம் என்றழைக்கப்படும் தீர்த்ததிற்குச் செல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். அடுத்து, அந்தணர்களால் அதிகம் பார்க்கப்படும் தர்மம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அதனால் ஒருவன் வாஜபேயி வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மதிக்கப்படுவான். பிறகு சம்பைக்குச் சென்று பகீரதியில் {கங்கையில்} நீராடி, தண்டபர்ணத்தில் சிறிது காலம் தங்கி ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் புனிதமான தடாகமான லலிதகாவை அடையவேண்டும். அறம்சார்ந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள். இதனால் ஒருவன் ராஜசூய வேள்வி செய்ததாகக் கருதப்பட்டு சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகின்றான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.