The power of the syllable Om! | Vana Parva - Section 85b | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் துங்ககத்தை அடைய வேண்டும். பழங்காலத்தில் அங்கேதான் சாரஸ்வத முனிவர் துறவிகளுக்கு வேதங்களைக் கற்பித்தார். வேதங்கள் (முனிவர்களால் மறக்கப்பட்டுத் தொலைந்த போது, அந்த அங்கிரச குமாரன் {சாரஸ்வதர்}, முனிவர்களின் மேலாடைகள் {துண்டு என்று நினைக்கிறேன்} மேல் வசதியாக அமர்ந்து கொண்டு, "ஓம்" என்ற முக்கிய எழுத்தை முழுவதும் முறைப்படி உச்சரித்தார். இதன்காரணமாக, துறவிகள் அனைவரும் தாங்கள் ஏற்கனவே கற்றதை நினைவு கூர்ந்தனர். அந்த இடத்தில்தான் முனிவர்களும், தேவர்களும் வருணன், அக்னி, பிரஜாபதி, ஹரி என்று அழைக்கப்படும் நாராயணன், மகாதேவன், மற்றும் பெரும் பிரகாசம் கொண்ட சிறப்புமிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மா} ஆகியோரும் வேள்வியை நடத்த பிரகாசித்துக் கொண்டிருந்த பிருகுவை நியமித்தனர். தெளிந்த நெய்யை முறைப்படி பானபலியாகக் {libation} கொடுத்து அக்னியைத் திருப்தி செய்த சிறப்புமிக்கப் பிருகு, ஒருமுறை அக்னேயதான வேள்வியை முனிவர்களுக்காக நடத்தினார். அந்த வேள்விக்குப் பிறகு முனிவர்களும் தேவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு ஒருவர் பின் ஒருவராகத் திரும்பினர். துங்கக வனத்தில் நுழையும் ஆணோ பெண்ணோ, ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர். ஓ வீரனே, ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் புலனடக்கத்துடனும், முறையான உணவுக்கட்டுப்பாட்டுடனும் ஒரு மாதம் தங்க வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, இதனால் ஒருவன் பிரம்மனின் உலகத்தை அடைந்து, தனது குலத்தைக் காக்கிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான பர்த்திரிஸ்தானத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே தேவர்களின் தளபதியான கார்த்திகேயன் {முருகன்} இருக்கிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வதாலேயே ஒருவன் வெற்றியை அடைகிறான். பிறகு கோடி என்றழைக்கப்படும் தீர்த்ததில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு அந்தக் கோடியை வலம் வரும் ஒருவன் ஜேஷ்டஸ்தானத்தை அடைய வேண்டும். அங்கே சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டு இருக்கும் மகாதேவனைக் {சிவனைக்} காண வேண்டும். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கே ஒரு கொண்டாடப்படும் கிணறு இருக்கிறது. ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அந்தக் கிணற்றில் நான்கு கடல்களும் இருக்கின்றன. ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அங்கே கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவோடு தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட்டு நீராடும் ஒருவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மேன்மையான நிலையை அடைகிறான். ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பெருமைவாய்ந்த சிருங்கபேரபுரத்தை அடைய வேண்டும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, முன்பொரு காலத்தில் தசரதனின் மகனான ராமன் இங்கேதான் (கங்கையைக்) கடந்து சென்றான். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். புலனடக்கத்துடனும், பிரம்மச்சரியத்துடனும் அங்கே இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, *வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.
பிறகு ஒருவன் உயர்ந்த நுண்ணறிவு கொண்ட மகாதேவனைப் பிரதிஷ்டை செய்திருக்கும் மயூரவடத்தை அடைய வேண்டும். அங்கே அந்தத் தெய்வத்தைக் கண்டு, அவனை வணங்கி வலம் வருபவன், ஓ பாரதா {பீஷ்மா} கணபத்திய நிலையை அடைகிறான். அந்தத் தீர்த்தத்தில் இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவனது அனைத்துப் பாவங்களும் கழுவப்படுகின்றன. ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், முனிவர்களால் அதன் பெருமைகள் பாடப்படும் பிரயாகையை அடைய வேண்டும். பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், திக்குகளின் தெய்வங்களும், லோகபாலர்களும், சித்தர்களும், உலகங்களால் வழிபடப்படும் பித்ருக்களும், பெரும் முனிவர்களான சனத்குமாரர்களும் மற்றவர்களும், களங்கமற்ற பிரம்ம முனிவர்களான அங்கிரசும் மற்றவர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், சித்தர்களும், பாம்புகளும் {நாகர்களும்}, ஆறுகளும், கடல்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், பிரஜாபதியுடன் கூடிய தலைவன் ஹரியும் அங்கே {பிரயாகையில்} வசிக்கின்றனர். அத்தீர்த்ததில் இருக்கும் மூன்று அக்னிக்குண்டங்களுக்கு மத்தியில், தீர்த்தங்களில் முதன்மையான கங்கை வேகமாக வருகிறாள். அங்கே அந்தப் பகுதியில்தான் உலகத்தைச் சுத்தப்படுத்தும் சூரியனின் மகளான, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் யமுனை, கங்கையுடன் இணைகிறாள்.
கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட நாடு பெண்ணின் இடையைப் போன்று இருக்கிறது என்று கருதப்படுகிறது. பிரயாகையே அதன் முதன்மையான இடம் என்றும் கருதப்படுகிறது. பிரவேள்வி, பிரதிஷ்டாம், கம்பளம், அஸ்வதரம், போகவதி ஆகிய தீர்த்தங்கள் படைப்பாளனின் {பிரம்மாவின்} வேள்வி மேடைகளாகும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா} அந்த இடங்களில் வேதங்களும் வேள்விகளும் வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. துறவை செல்வமாகக் கொண்ட முனிவர்கள் பிரம்மனை வழிபடுகின்றனர். தேவர்களும், எல்லைகளை ஆளுபவர்களும் {மன்னர்களும்} அங்கே தங்கள் வேள்விகளை நடத்துகின்றனர். ஓ மேன்மையானவனே, இருப்பினும் இந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் பிரயாகையே மிகவும் புனிதமானது என்று கற்றோர் சொல்கின்றனர். உண்மையில் அது மூன்று உலகிலும் முதன்மையான தீர்த்தமாகும். அந்தத் தீர்த்ததிற்குச் {பிரயாகைக்குச்} சென்று, அதன் {பிரயாகையின்} புகழைப் பாடி, அங்கிருந்து சிறிது மண்ணை எடுத்துக் கொள்பவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே இருக்கும் சங்கமத்தில் நீராடும் ஒருவன், ராஜசூய வேள்வி செய்த பலனையும், குதிரை வேள்வி செய்த பலனையும் அடைகிறான். இந்த வேள்விக்கான இடம் தேவர்களால் கூட வழிபடப்படுகிறது. ஓ பாரதா {பீஷ்மா} ஒரு மனிதன் அங்கே சிறிதளவே தானம் செய்தாலும் அது ஆயிரம் மடங்காகப் பெருகும்.
ஓ குழந்தாய் {பீஷ்மா}, வேதங்களின் உரையோ, மனிதர்களின் கருத்துகளோ, பிரயாகையில் உயிரை விட விரும்பும் உனது மனதை மாற்றாது இருக்கட்டும். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பத்தாயிரம் {ten thousand} தீர்த்தங்களுடன், அறுபது கோடி {600 million) தீர்த்தங்களும் பிரயாகையில் இருக்கின்றன. கங்கை மற்றும் யமுனையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் நால்வகை அறிவு சம்பந்தமான பலன்களையும், உண்மையின் பலன்களையும் அடைகிறான். அந்தப் பிரயாகையில் வாசுகியின் தீர்த்தமான போகவதி என்றழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அந்தக் கங்கையில், பத்து குதிரை வேள்விகளின் பலனைத் தரும் மூன்று உலகத்திலும் புகழோடு இருக்கும் ராமப்பிரப்பதன தீர்த்தம் இருக்கிறது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, கங்கையில் எங்கேனும் நீராடும் மனிதன் குருக்ஷேத்திரப் பயணத்திற்கு ஒப்பான பலனை அடைகிறான். இருப்பினும், கனகலத்தில் அதைவிட அதிகப் பலனை அடைகிறான். பிரயாகையில் கனகலத்தைவிட அதிக பலனை அடைகிறான். நூறு பாவங்களைச் செய்த ஒருவன் கங்கையில் நீராடினால், அதன் நீரால் அவனது பாவங்கள் அனைத்தும் எரிபொருளை விழுங்கும் நெருப்பைப் போலக் கழுவப்படும். சத்திய யுகத்தில் அனைத்து தீர்த்தங்களும் புனிதமானவை என்றும், திரேதா யுகத்தில் புஷ்கரை மட்டுமே அப்படி என்றும், துவாபரையில் குருக்ஷேத்திரம் என்றும், கலியுகத்தில் கங்கை மட்டுமே புனிதம் என்றும் சொல்லப்படுகிறது.
*******************************************
* வாஜபேய வேள்வி என்றால் என்ன? என்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். ஆறு சோம வேள்விகளில் முக்கியமான ஒன்றுதான் வாஜபேய வேள்வி. அதில் அந்த வேள்வியின் தலைவன் {எஜமானன்} சடங்கு நீராடி வர வேண்டும். வேள்வியின் முடிவில் மன்னனே அத்தலைவனுக்கு {எஜமானனுக்கு} வெண்குடை பிடிக்க வேண்டும். "வாஜ" என்றால் அரிசி {உணவு} என்று பொருள். "பேய" என்றால் பானகம் என்று பொருள். வாஜபேயம் என்ற பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, அவ்வேள்வி அபரிமிதமான பயிர் உற்பத்தியையும், அபரிமிதமான நீரையும் கொடுக்கும். அவ்வேள்வியில் சோமரச ஹோமம், பசுஹோமம் (23 விலங்குகள்), அன்னம் அல்லது வாஜ ஹோமம் {அதாவது உணவு} ஆகியவை அடக்கம். வேள்வித்தலைவன் மீதியிருக்கும் அரசியில் குளிப்பதால், அதாவது, நீரைப்போல அரிசி அவன் மீது ஊற்றப்படுவதால் "வாஜபேயம்" என்று அழைக்கப்படுகிறது. ஆதாரம் : http://www.kamakoti.org/hindudharma/part19/chap6.htm
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.