A tirtha after Kanya in the midst of the sea! | Vana Parva - Section 85a | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு அற்புதமான தீர்த்தமான சம்வேத்திய தீர்த்தத்தை மாலைப்பொழுதில் அடைந்து, அதன் நீரைத் தொடுவதால் ஒருவன் நிச்சயமாக அறிவைப் பெறுகிறான். முற்காலத்தில் {தசரத} ராமனின் அருளால் உண்டான லௌஹித்ய தீர்த்தத்தை அடைந்தால் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு கரதோயை நதியை அடையும் ஒருவன், மூன்று இரவுகள் உண்ணாதிருப்பதால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். இந்த விதி படைப்பாளியாலேயே {பிரம்மனாலேயே} உண்டாக்கப்பட்டது. ஓ மன்னா {பீஷ்மா}, கடலில் கங்கை கலக்கும் இடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனைப் போன்று பத்து மடங்கு பலனை அடைவான் என்று ஞானிகள் கூறுகின்றனர். ஓ மன்னா {பீஷ்மா} கங்கையின் மறு கரைக்குக் கடந்து சென்று, அதில் நீராடி அங்கே மூன்று இரவுகள் வசிப்பவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
பிறகு ஒருவன் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வைதரணியை அடைய வேண்டும். அடுத்ததாக விராஜம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடையும் ஒருவன் சந்திரனைப் போலப் பிரகாசிப்பவனாகி, தனது குலத்தைப் புனிதமாக்கி, அதைக் காத்து, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். விராஜத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைந்து தனது குலத்தை புனிதப்படுத்துகிறான். சுத்தத்துடன் சோணம் மற்றும் ஜோதிரத்தியையின் சங்கமத்தில் வசிக்கும் ஒருவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்துவதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். அடுத்ததாக, சோணம் மற்றும் நர்மதையின் பிறப்பிடங்களை உள்ளடக்கிய வம்சகுல்மத்தின் நீரைத் தொடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, அடுத்ததாக கோசலத்தில் ரிஷபம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தில் சிறிது காலம் தங்குபவன் அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருந்தால் வாஜபேய வேள்வி செய்த பலனையும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனையும் அடைந்து, தனது குலத்தையும் காக்கிறான். கோசலத்தை அடையும் மனிதன் அங்கே இருக்கும் கால தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதனால் ஒருவன் நிச்சயமாக பதினோரு காளைகளை தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா} புஷ்பவதியில் நீராடி, மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் தனது குலத்தைப் புனிதப்படுத்தி, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு, ஓ பாரத குலத்தில் முதன்மையானவனே {பீஷ்மா}, பதரிகா என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைந்து, சொர்க்கத்தை அடைகிறான். அடுத்ததாக சம்பையை அடைந்து, பாகிரதியில் நீராடும் ஒருவன், தண்டத்தைக் காண்பதால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான்.
பிறகு ஒருவன் புண்ணியவான்கள் இருக்கும் புனிதமான லபேடிகையை அடைய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவன் வாஜபேய வேள்வியைச் செய்த பலனை அடைந்து தேவர்வகளால் மதிக்கப்படுகிறான். அடுத்ததாக ஜமதக்னேயன் {பரசுராமன்} வசிக்கும் மகேந்திரம் என்று அழைக்கப்படும் மலையை அடைந்து, ராமனின் {பரசுராமனின்} தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, இங்கே மதங்கரின் கேதாரம் என்ற தீர்த்தம் இருக்கிறது. ஒ குரு குலத்தில் முதன்மையானவனே {பீஷ்மனே}, அங்கே நீராடுவதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஸ்ரீ {ஸ்ரீபர்வதம்} என்ற மலையை அடைந்து, அங்கிருக்கும் ஓடையின் நீரைத் தொட்டு காளையைத் தனது குறியீடாகக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} வணங்கினால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஸ்ரீ என்ற அந்த மலையில் பிரகாசமிக்க மகாதேவன் {சிவன்}, தேவியுடன் மகிழ்ச்சியாக வசிக்கிறான். பிரம்மனும் மற்ற தேவர்களும் கூட அங்கே வசிக்கின்றனர். அங்கிருக்கும் தேவத்தடாகத்தில் சுத்தமான தெளிந்த மனதுடன் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து உயர்ந்த வெற்றியை அடைகிறான். அடுத்ததாக பாண்டிய நாட்டில் தேவர்களால் வழிபடப்படும் ரிஷப மலையை அடைபவன், வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மகிழ்கிறான்.
பிறகு ஒருவன் அப்சரஸ்கள் அடிக்கடி செல்லும் காவேரி ஆறுக்குச் செல்ல வேண்டும். ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கு நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு கடற்கரையில் இருக்கும் கன்யா {கன்யாகுமாரி} தீர்த்தத்தை அடைந்து அதன் நீரைத் தொடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா} பிறகு ஒருவன், கடலுக்கு மத்தியில் பிரம்மாவின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், பூதங்களும், யக்ஷர்களும், பிசாசர்களும், கின்னரர்களும், பெரும் நாகர்களும் {மகோரகர்களும்}, சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், மனிதர்களும், பன்னகர்களும், ஆறுகளும், கடல்களும், மலைகளும் எங்கு உமையின் தலைவனை {சிவனை} வழிபடுகிறார்களோ, அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருந்து அந்த ஈசானனை {சிவனை} வணங்க வேண்டும். இதனால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து கணபத்திய {கணங்களின் தலைவன்} நிலையை அடைகிறான். அங்கே பனிரெண்டு இரவுகள் தங்குவதால் ஒருவனது ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறது.
பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் காயத்ரி என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே மூன்று இரவுகள் வசிக்கும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா} அங்கே அந்தணர்கள் காரியத்தில் ஒரு வினோதமான நிகழ்வு நடக்கிறது. ஒரு பிராமணத்தி மூலமோ அல்லது வேறு பெண்ணின் மூலமோ பிறந்த ஒரு அந்தணன் அங்கே காயத்ரியை உச்சரித்தால் அது ஸ்வரமும் நியமமும் உள்ளதாக இருக்கிறது. அதுவே அந்தணனில்லாத மனிதன் அப்படி உரைக்க முடிவதில்லை. அந்தண முனிவரான சம்வர்த்தரின் அடைவதற்கு அரிதான குளத்தை {வாவியை} ஒருவன் அடைந்தால் அவன் மேனி அழகையும் செழிப்பையும் அடைகிறான்.
பிறகு வேணையை அடைந்து, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்யும் ஒருவன் மயில்களாலும் நாரைகளாலும் இழுக்கப்படும் தேரை {விமானமாக இருக்கும் என்று நினைக்கிறேன்} அடைகிறான். அடுத்ததாக, சித்தர்களால் அடிக்கடி அணுகப்படும் கோதாவரியை அடைபவன் பசு வேள்வி செய்த பலனை அடைந்து, வாசுகியின் அற்புதமான உலகத்தை அடைகிறான். பிறகு வேணையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு வரதாவின் சங்கமத்தில் மூழ்கி எழும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு பிரம்மஸ்தானத்தை அடைந்து, மூன்று இரவுகள் தங்கும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான்.
பிறகு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், பிரம்மச்சரியத்துடனும் குசப்லவனத்தை அடையும் ஒருவன், அங்கே மூன்று இரவுகள் தங்கி நீராடுவதால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கிருஷ்ண வேணையின் நீரினால் உண்டான தேவஹ்ரதம் ஜாதிஸ்மரஹ்ரதம் என்கிற குளத்திலும் நீராடினால் முற்பிறப்புகளின் நினைவுகளை அடைகிறான். அங்கேதான் தேவர்கள் தலைவன் நூறு வேள்விகளைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அங்கே ஒருவன் பயணம் செய்வதாலேயே அவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு சர்வதேவஹ்ரதத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான்.
பிறகு ஒருவன் மிகப்பெரும் புனிதம் வாய்ந்த பயோஷ்ணி என்ற நீரில் சிறந்த நீரைக் கொண்ட குளத்தை அடையும் ஒருவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு புனிதமான காடான தண்டகத்தை அடையும் ஒருவன், அங்கே (அக்கானகத்தில் இருக்கும் நீரில்) நீராட வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, ஓ பாரதா, இதனால் ஒருவன் உடனே, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். அடுத்ததாக சரபங்கரின் ஆசிரமத்தையும், சிறப்பு மிக்க சுகரின் ஆசிரமத்தையும் அடையும் ஒருவன், துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைந்து தனது குலத்தைப் புனிதப்படுத்துகிறான்.
பிறகு ஒருவன் ஜமதக்னியின் மகன் {பரசுராமன்} முன்பு வசித்த சூர்ப்பாரகத்தை அடைய வேண்டும். அங்கே ராமனின் {பரசுராமனின்} தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் செய்த பலனை அடைகிறான். அடுத்ததாக புலனடக்கத்துடனும் முறையான உணவுப் பழக்கத்துடனும் சப்தகாதுவாரத்தில் நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைந்து தேவர்களின் உலகத்தை அடைகிறான். அடுத்ததாக புலனடக்கத்துடனும் முறையான உணவுப் பழக்கத்துடனும் தேவஹ்ரதத்தை அடையும் ஒருவன், தேவாஸ்திர வேள்வி செய்த பலனை அடைகிறான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.