Sacred spots of the western quarter! | Vana Parva - Section 89| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
மேற்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.
தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்போது மேற்கு திசையில் இருக்கும் ஆனர்த்தர்களின் நாட்டில் {அவந்தி நாட்டில்} இருக்கும் பலன்களைத் தரக்கூடிய இடங்களை விவரிக்கப் போகிறேன். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அங்கு, பிரயங்கு மரங்களும் {காட்டுக்குமிழ் மரங்களும்}, மாமரங்களும் நிறைந்து பருமனான வஞ்சி மரங்களால் {Cane = பிரம்பு} வரிசையாக மாலை போன்று அலங்கரிக்கப்பட்டு மேற்கு முகமாக ஓடும் புனிதமான நதியான நர்மதை ஓடுகிறது. ஓ குரு குலத்தவரில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அனைத்து தீர்த்தங்களும், புனிதமான இடங்களும், ஆறுகளும், கானகங்களும், மூன்று உலகத்திலுமுள்ள மலைகளில் முதன்மையான மலைகளும், பெருந்தகப்பனுடன் {பிரம்மனுடன்} கூடிய தேவர்களும், சித்தர்கள், முனிவர்கள், சாரணர்களும் நர்மதையின் புனிதமான நீரில் நீராட அங்கு அடிக்கடி வருகின்றனர்.
விஸ்ரவஸ் முனிவரின் புனிதமான ஆசிரமமும், மனிதர்களை வாகனமாகக் கொண்ட கருவூலத் தலைவனான குபேரன் பிறந்த இடமும் அங்கே இருக்கிறது என்று நாம் கேள்விப்படுகிறோம். பசுமையான மரங்களும், கனிகளும், மலர்களும் எப்போதும் நிறைந்திருக்கும் மலைகளில் முதன்மையானதும், புனிதமானதும், மங்களகரமானதுமான வைடூரியச் சிகரம் அங்கே தான் இருக்கிறது. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா} அந்த மலையின் உச்சியில், தேவர்களும், கந்தர்வர்களும் ஓய்ந்திருக்கும், முற்றும் மலர்ந்த தாமரைகளால் நிறைந்திருக்கும் புனிதமான குளம் ஒன்று இருக்கிறது. ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக முனிவர்கள் அடிக்கடி வந்து செல்லும் சொர்க்கத்தைப் போல இருக்கும் அந்தப் புனிதமான மலையில் பல அற்புதங்களைக் காணலாம்.
ஓ எதிரி நகரங்களை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அங்கே விஸ்வாமித்திரம் என்ற ஒரு நதி ஓடுகிறது. பல புனிதமான தீர்த்தங்களைக் கொண்ட அந்நதி அதே பெயர் கொண்ட அரச முனிக்குச் {விஸ்வாமித்திரருக்குச்} சொந்தமானது. அந்த ஆற்றின் கரையில் தான் நகுஷனின் மகனான யயாதி {சொர்க்கத்தில் இருந்து விழுந்தான்} அறம்சார்ந்தவர்களுக்கு மத்தியில் விழுந்து மீண்டும் நேர்மையானவர்களுக்குச் சொந்தமான நித்தியமான உலகங்களை மீண்டும் அடைந்தான். அங்கே நன்கு அறியப்பட்ட புண்ணியம் என்ற தடாகமும், மைநாகம் என்ற மலையும், அளவற்ற கனிகளும் கிழங்குகளும் நிறைந்த அசிதம் என்ற மலையும் இருக்கிறது. கக்ஷசேனரின் புனிதமான ஆசிரமம் அங்குதான் இருக்கிறது. ஓ யுதிஷ்டிரா, அனைத்து நாட்டிலும் புகழ்வாய்ந்த சியவனரின் ஆசிரமமும் அங்குதான் இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} அந்த இடத்தில், ஓ மேன்மையானவனே, மனிதன் கடும் தவச்சடங்குங்களின்றிக் கூட (ஆன்ம) வெற்றியை அடைகிறான்.
ஓ பலம் பொருந்திய மன்னா {யுதிஷ்டிரா}, பறவைகளும் மான்களும் வசிக்கும் ஜம்புமார்க்கம் என்ற பகுதி அங்கு இருக்கிறது. ஓ புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் துறவிகள் வந்து செல்லும் இடமாகவும் அஃது இருக்கிறது. அதற்கு அடுத்ததாகத் துறவிகள் எப்போதும் நிறைந்திருக்கும் புனிதமான கேதுமாலை, மேதியை, கங்காதுவாரம், மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} வசிக்கும் நன்கு அறியப்பட்ட சைந்தவ வனம் ஆகியன இருக்கின்றன. வைகானசர்கள், சித்தர்கள் மற்றும் முனிவர்களுக்குப் பிடித்தமான வசிப்பிடமும், பெருந்தகப்பனுக்கு {பிரம்மனுக்கு} உரிய கொண்டாடப்படும் குளமுமான புஷ்கரை அங்குதான் இருக்கிறது. ஓ குருக்களின் தலைவா, அறம்சார்ந்த மனிதர்களில் முதல்வா {யுதிஷ்டிரா}, பாதுகாப்பை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட படைப்பாளி {பிரம்மன்}, "சுத்தமான ஆன்மாவைக் கொண்ட ஒரு மனிதன் புஷ்கரைக்குக் கற்பனையிலேனும் புனிதப் பயணம் மேற்கொண்டானேயானால், அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் மீண்டு, சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பான்" என்ற இந்த வரிகளைப் புஷ்கரையில் பாடினான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.