Sacred spots of the Northern quarter! | Vana Parva - Section 90| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
வடக்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.
தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இனி நான் வடக்கே இருக்கும் தீர்த்தங்களையும், புனிதமான இடங்களையும் விவரிக்கிறேன். ஓ மேன்மையானவனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். ஓ வீரனே, இந்த உரையைக் கேட்பவன் பயபக்தியுடைய மனதை அடைகிறான். அது ஒருவனுக்கு நன்மைக்கான வழிகோலுகிறது. அந்தப் பகுதியில்தான் எளியவர்களும் அடையக்கூடிய கரைகள் கொண்டதும், தீர்த்தங்கள் நிறைந்ததுமான, பெரும்புனிதம் வாய்ந்த சரஸ்வதி நதி இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே, அங்குதான் பெரும் பலன்களையும், செழிப்பையும் கொடுப்பவையான, கடலை நோக்கி கட்டுக்கடுங்காமல் பாயும் யமுனையும், பிலாக்ஷவதரணம் என்ற தீர்த்தமும் இருக்கின்றன.
சாரஸ்வத வேள்வியைச் செய்யும் மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} வேள்வியின் முடிவில் அங்குதான் நீராடுவார்கள். ஓ பாவங்களற்றவனே, அங்கே நன்கு அறியப்பட்டு, பெரும் பலன்களைக் கொடுக்கும் தெய்வீக தீர்த்தமான அக்னிசிரஸ் இருக்கிறது. மன்னன் சகாதேவன் {ஸ்ரீஞ்சயனின் மகன்}, அங்கே ஒரு சாம்யத்தை {அளவு கோல்} வீசி எறிந்து, அந்தச் சாம்யம் எவ்வளவு தூரம் சென்றதோ, அவ்வளவு தூரமுள்ள இடத்தில் {சாம்யாக்ஷேபம் எனும்} வேள்வியைச் செய்தான். ஓ யுதிஷ்டிரா, இதனால்தான் இந்திரன் சகாதேவனைப் புகழும் வரிகளைப் பாடினான். "யமுனையில் சகாதேவன், அந்தணர்களுக்கு நூறாயிரம் பரிசுகளுடன் வேள்வி நெருப்பை வணங்கினான்" என்ற அந்த வரிகளை இன்னும் இந்த உலகில் மறுபிறப்பாளர்களால் {அந்தணர்களால்} உரைக்கப்படுகிறது.
அங்கேதான், சிறப்பிமிக்க மன்னனான ஏகாதிபத்தியம் கொண்ட பரதன், முப்பத்தைந்து {நூற்று நாற்பத்தெட்டு என்றும் சொல்லப்படுகிறது} குதிரை வேள்விகளைச் செய்தான். ஓ குழந்தாய், பழங்காலத்தின் சரபங்கர் மறுபிறப்பாளர்களின் {அந்தணர்களின்} முழு விருப்பங்களையும் அங்கேதான் ஈடேற்றுவார். அங்கேதான் பெரும் பலனைத் தரக்கூடிய கொண்டாடப்படும் அவரது ஆசிரமம் இருக்கிறது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ பெரும் மன்னா, பழங்காலத்தில் வாலகில்யர்கள் வேள்வி நடத்திய அந்தப் பகுதியில் தான் தேவர்களால் வழிபடப்படும் சரஸ்வதி நதி ஓடுகிறது. ஓ யுதிஷ்டிரா, அந்தப் பகுதியில் தான் பெரும் பலனைக் கொடுக்கவல்ல திருஷ்டத்வதி நதி ஓடுகிறது.
ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நியக்கிரோதர், பாஞ்சால்யர், தால்பியகோஷர், தால்பியர் ஆகியோரின் புனிதமான ஆசிரமங்கள் அங்கே இருக்கின்றன. அற்புதமான நோன்புகள் நோற்று, பெரும் சக்தியுடன் மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க ஆனந்தயசசின் ஆசிரமமும் அங்கே இருக்கிறது. ஓ மனிதர்களின் தலைவா, வேத அறிவில் சொல்லப்பட்டுள்ளவர்களும், வேதங்களையும், வேதச்சடங்குகளையும் அறிந்த சிறப்புமிக்க ஏதாவர்ணம் {நிறமுள்ள}, அவவர்ணம் {நிறமற்ற} என்போர் பலன்கொடுக்கும் வேள்விகளை அங்கே செய்துள்ளனர். ஓ பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில் வருணன், இந்திரன் ஆகியோருடன் கூடிய தேவர்கள் தவச்சடங்குகளைப் பயின்ற விசாகயூபம் அங்கேதான் இருக்கிறது. ஆகையால் அந்த இடம் மேம்பட்ட வகையில் புனிதமானதாகும்.
பெரிதும் அருளப்பட்ட ஜமதக்னி பெருமுனிவர் வேள்விகளைச் செய்த பலாசகம் அங்கேதான் இருக்கிறது. முக்கியமான ஆறுகள் அனைத்தும், தங்கள் தங்கள் சுய உருவை எடுத்து முனிவர்கள் சூழ அங்கே இருக்கின்றனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவரின் {ஜமதக்னியின்} துவக்கத்தைக் கண்ட விபவசு {அக்னி தேவன்}, "சிறப்புமிக்க ஜமதக்னி தேவர்களுக்காக வேள்வி செய்து கொண்டிருக்கும்போது அவரிடம் வந்த ஆறு, அந்தணர்களுக்குத் தேனைத் தானமாகக் கொடுத்து திருப்தி செய்தது" என்ற சுலோகத்தைப் பாடினான். ஓ யுதிஷ்டிரா, கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அடிக்கடி வந்து போகும் இடமும், வேடர்கள் மற்றும் கின்னரர்களின் வசிப்பிடமுமான மலைகளில் முதன்மையான அந்த மலையைப் பிளந்து விரைந்து செல்லும் கங்கை அம்மலையை வெட்டும் இடமே கங்காத்துவாரம் என்றழைக்கப்படுகிறது.
ஓ மன்னா, பிரம்ம முனிவர்கள் அடிக்கடி வந்து செல்லும் அந்த இடத்தை, கனகலத்தைப் போன்ற புனிதமான தீர்த்தமென்று சனத்குமாரர் சொல்கிறார். அங்கே பெரும் முனிவர்கள் வந்து செல்லும் இடமும் புரூரவர்கள் பிறந்த இடமும், பிருகு தவம் பயின்ற இடமும்மான புரு என்ற மலை இருக்கிறது. ஒ மன்னா, அதன் காரணமாகவே அந்தப் பெரும் சிகரம் பிருகுதுங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே புனிதமானதும் அகன்றதும், மூன்று உலகங்களிலும் புகழப்பட்டதுமான பதரி என்ற ஆசிரமம் இருக்கிறது. ஓ பரதக் குலத்தின் காளையே, நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகிய அனைத்துமான நாராயணன் என்று அழைக்கப்படும், நித்தியமானவனும், ஆண்மக்களில் சிறந்தவனும், அனைத்துச் சிறப்புகளும் கொண்டவனுமான தலைவன் விஷ்ணுவின் ஆசிரமமே பதரி. அந்தப் பதரிக்கு அருகே பாயும் கங்கையின் குளிர்ந்த ஊற்று முன்பொரு காலத்தில் வெப்பமாக இருந்தது. அதன் கரைகள் அனைத்தும் தங்க மண்ணால் விரிக்கப்பட்டிருந்தது. அங்கே மிகுந்த பிரகாசமிக்கத் தேவர்களும், பெரும் நற்பேறு பெற்ற முனிவர்களும் தெய்வீகமான தலைவன் நாராயணனை அணுகி எப்போதும் வழிபட்டு வருகிறார்கள்.
தீர்த்தங்கள், புனிதமான இடங்கள் ஆகிய அனைத்தையும் கொண்ட முழு அண்டமும், தலைமை ஆன்மாவான தெய்வீகமான நித்தியமான நாராயணனிடமே வசிக்கின்றன. அவனே தலைமையான பிரம்மா, அவனே தீர்த்தம், அவனே தவப்பயன், அவனே முதன்மையானவன், அவனே தேவர்களில் முதன்மையானவன். மேலும் அவனே அனைத்து உயிர்களின் பெரும் தலைவனும் ஆவான். அவன் நித்தியமானவன், பெரும் படைப்பாளி அவனே, அவனே அருளின் உயர்ந்த நிலை. சாத்திரங்கள் அறிந்த கற்றவர்கள் அவனை அறிவதாலேயே பெரும் மகிழ்ச்சியை அடைகின்றனர். அந்தப் பகுதியில் தெய்வீக முனிவர்களும், சித்தர்களும், அனைத்து முனிவர்களும், பெரும் யோகி மற்றும் ஆதி தெய்வமுமான மதுவைக் கொன்றவனுடன் {மதுசூதனனான கிருஷ்ணனுடன்} அங்கேயே வசிக்கின்றனர். அந்தப் பகுதியே அனைத்து புனிதமான இடங்களிலும் முதன்மையானது என்பதில் உனது இதயம் சந்தேகம் கொள்ளாது இருக்கட்டும்.
ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவையே நான் உரைத்தபடி பூமியிலுள்ள புனிதமான இடங்களும் தீர்த்தங்களும் ஆகும். ஓ மனிதர்களில் சிறந்தவா, வசுக்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், மருதர்கள், அசுவினிகள் மற்றும் தேவர்களைப் போன்ற சிறப்பு மிக்க முனிவர்கள் ஆகியோர் இவை அனைத்துக்கும் {முன்பு சொன்ன அனைத்து தீர்த்தங்களுக்கும் புனிதமான இடங்களுக்கும்} அடிக்கடி பயணிக்கின்றனர். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்தணர்கள் மற்றும் தவசிகளுடன் மற்றும் உனது அருள் நிறைந்த தம்பிகளுடனும் அங்கெல்லாம் பயணிக்கப்போகும் நீ துயரத்திலிருந்து விடுபடுவாய்!" என்றார் {தௌமியர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.