Pilgrimage begun! | Vana Parva - Section 93| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தைத் தொடங்கல்; அந்தணர்கள் தங்களையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டல்; யுதிஷ்டிரன் அவர்களை ஏற்றல்; வியாசர், பர்வதர், நாரதர் ஆகியோர் வருகையும் அவர்களது வாழ்த்துகளும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தக் கானகத்தில் (யுதிஷ்டிரனுடன்) வசித்து வந்த அந்தணர்கள், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} (பக்திமயமான புனிதப்பயணத்திற்கு) புறப்படுவதைக் கண்டு, ஓ மன்னா {ஜனமேஜயா}, அவனை {யுதிஷ்டிரனை} அணுகி, "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான தீர்த்தங்களை நோக்கிய உனது பயணத்திற்கு, உனது தம்பிகளுடனும், சிறப்புமிக்க முனிவர் லோமசருடனும் புறப்பட்டுவிட்டாய். ஓ! மன்னா, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, எங்களையும் உன்னுடன் அழைத்துச் செல். ஓ குரு குலத்தின் மகனே, நீ இல்லாமல் எங்களால் அத்தீர்த்தங்களுக்குப் பயணம் செய்ய முடியாது. ஆபத்துகள் சூழ்ந்ததும், அடைவதற்கு அரிதானதுமான அவற்றில் {தீர்த்தங்கள்} இரை தேடும் விலங்குகளின் தொந்தரவுகளும் அதிகம் இருக்கும்.
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தத் தீர்த்தங்கள் சிறு குழுக்களில் உள்ள மனிதர்களால் {அந்தணர்களைச் சிறு குழு என்கிறார்களோ என்னவோ} அடைய முடியாதனவாக இருக்கின்றன. வில்லைத் தாங்குபவர்களில் முதன்மையான உனது தம்பிகள் எப்போதும் வீரம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர். உங்களைப் போன்ற வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, நாங்களும் அவற்றுக்கு {தீர்த்தங்களுக்கு} முன்னேறுவோம். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, உனது கருணையால், தீர்த்தங்களால் கிடைக்கும் அருள்நிறைந்த கனியை அடைய அனுமதி கொடு. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உனது சக்தியால் பாதுகாக்கப்பட்ட நாங்கள், அந்தத் தீர்த்தங்களை அடைந்து, நீராடி எங்கள் பாவங்களைக் கழுவி கொள்ள விடு. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தத் தீர்த்தங்களில் நீராடுவதால், கார்த்தவீரியனும், அஷ்டகனும், அரசமுனியான லோம்பதரும், ஏகாதிபத்திய வீரனுமான பரதனும் மட்டுமே அடைந்திருக்கும் அடைவதற்குக் கடினமான பகுதிகளைச் {உலகங்களைச்} சந்தேகமற நீயும் அடைவாய்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிரபாசத்தையும் மற்றத் தீர்த்தங்களையும், மகேந்திரத்தையும் மற்ற மலைகளையும், கங்கையையும் மற்ற நதிகளையும், பிலக்ஷத்தையும் மற்ற மரங்களையும் {தலவிருட்சங்களையும்- gigantic trees} உன்னுடன் காண விரும்புகிறோம். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உனக்கு அந்தணர்களிடத்தில் ஏதும் மதிப்பு இருக்குமானால், தக்க நடவடிக்கையை எடு. இதனால் நீ நிச்சயம் செழிப்பை அடைவாய். ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அத்தீர்த்தங்கள், தவ நோன்புகளுக்கு எப்போதும் தடையை ஏற்படுத்தும் ராட்சசர்களின் தொல்லைகளால் நிரம்பியிருக்கின்றன. எங்களை அவர்களிடம் இருந்து காத்தலே உமக்குத் தகும். லோமசரால் பாதுகாக்கப்பட்டு, எங்களையும் உடன் அழைத்துக் கொண்டு, தௌமியரும், புத்திகூர்மை கொண்ட நாரதரும் பேசிய தீர்த்தங்களுக்கும், பெரும் தவச் செல்வம் கொண்ட தெய்வீக முனிவரான லோமசர் சொன்னவற்றிற்கும் செல். அப்படிச் செல்வதால் உனது பாவங்கள் அனைத்தும் விலகும்" என்றனர்.
அவர்களால் இப்படி மரியாதையுடன் சொல்லப்பட்ட பாண்டுவின் மகன்களில் காளையான மன்னன் {யுதிஷ்டிரன்}, பீமனால் தலைமைதாங்கப்பட்ட தனது தம்பிகளால் சூழப்பட்டு, ஆனந்தக் கண்ணீருடன் அந்தத் தவசிகளிடம், "அப்படியே ஆகட்டும்" என்றான். பிறகு லோமசர் மற்றும் புரோகிதரான தௌமியரின் அனுமதியுடன், பாண்டு மகன்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, முழு ஆன்மக் கட்டுப்பாட்டுடனும் தீர்மானத்துடனும், தனது தம்பிகளுடனும், துருபதனின் களங்கமற்ற மகளுடனும் {திரௌபதியுடனும்} புறப்பட்டுச் சென்றான். சரியாக அந்த நேரத்தில், அருள்நிறைந்த வியாசரும், புத்திகூர்மை நிறைந்த பர்வதர் மற்றும் நாரதரும் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே காம்யகத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவர்களை உரியச் சடங்குகளுடன் வழிபட்டான்.
அந்த ஏகாதிபதியால் {யுதிஷ்டிரனால்} இப்படி வழிபடப்பட்ட அந்த அருளப்பட்டவர்கள் யுதிஷ்டிரனிடம், "ஓ யுதிஷ்டிரா, ஓ பீமா, இரட்டையர்களே {நகுல சகாதேவர்களே}, உங்கள் மனதில் இருந்து தீய எண்ணங்களை அகற்றுங்கள். உங்கள் இதயங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, தீர்த்தங்களுக்குச் செல்லுங்கள். உடல் ரீதியாக விதிகளைக் கடைப்பிடிப்பது பூலோக விரதம் என்றழைக்கப்படுகிறது; அதே வேளையில், தீய எண்ணங்களில் இருந்து விடுபெற இதயத்தைச் சுத்திகரிக்கும் முயற்சி தெய்வீக விரதம் என்று அழைக்கப்படுகிறது என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தீய எண்ணங்களில் இருந்து விடுபட்ட மனது உயர்ந்த தூய்மையைக் கொண்டது. ஆகையால், உங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, நட்புணர்வுகளை மட்டுமே வளர்த்துத் தீர்த்தங்களைக் காணுங்கள். உடல் சார்ந்து பூலோக விரதங்களைக் கடைப்பிடித்துக் கொண்டே, தெய்வீக விரதங்களால் மனதைச் சுத்திகரிப்பவர்களாக இருந்து, ஏற்கனவே உரைகளில் கேட்டவாறு புனிதப்பயணங்களின் கனிகளை அடைந்து கொள்ளுங்கள்" என்றனர்.
"அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள், தெய்வீக மற்றும் மனித முனிவர்களை வழக்கமான சடங்குகளைச் {மங்கல வாழ்த்துகளைச்} செய்ய வைத்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, லோமசர், துவைபாயனர்{வியாசர்}, நாரதர் மற்றும் தெய்வீக முனிவரான பர்வதர் ஆகியோரின் பாதங்களை வழிபட்டு தௌமியருடனும், தங்களுடன் கானகத்தில் இருந்த தவசிகளுடனும் மார்கழியின் {Agrahayana} முழு நிலவிற்கு {பௌர்ணமிக்கு} அடுத்த நாளில் {the day following the full moon of Agrahayana} பூசம் நட்சத்திரத்தில் {Pushya} புறப்பட்டனர். மரவுரியும், மான்தோலும், சடா முடியும் தரித்து, துளைக்கமுடியாத கவசத்துடன் வாள்கள் ஏந்தியவாறு அவர்கள் அனைவரும் இருந்தனர். ஓ ஜனமேஜயா, அம்பறாத்தூணிகளுடனும், கணைகளுடனும், குறுவாள்களுடனும், மற்ற ஆயுதங்களுடனும் இருந்த பாண்டுவின் வீர மகன்கள், இந்திரசேனனுடனும், மற்றப் பணியாட்களுடனும், பல சமையற்காரர்களுடனும், பிற வகைகளைச் சேர்ந்த ஊழியர்களுடனும் பதினைந்து தேர்களில் {fourteen and one cars}, கிழக்கு நோக்கிய முகங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.