Gods, Daityas and Danavas! | Vana Parva - Section 94| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தமாடலால் தேவர்களுக்கும், தைத்திய தானவர்களுக்கும் கிடைத்த பலன்களை யுதிஷ்டிரனுக்கு லோமசர் சொன்னது...
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "ஓ தெய்வீக முனிவர்களில் சிறந்தவரே {லோமசரே}, நான் பலன்களற்றவனாக என்னைக் கருதவில்லை. இருப்பினும், துக்கத்தால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற வேறொரு மன்னன் இல்லை என்பது போல நான் துயரத்துடன் இருக்கிறேன். எனது எதிரிகள் நற்குணங்கள் மற்றும் அறநெறிகள் அற்றவர்களாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இருப்பினும், ஓ லோமசரே, இந்த உலகத்தில் அவர்கள் {அந்த எதிரிகள்/பாவிகள்} ஏன் செழிப்புடன் இருக்கின்றனர்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ மன்னா, ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, எப்போதும் நீ கவலை கொள்ளாதே. பாவிகள் அவர்கள் செய்யும் பாவங்களாலேயே செழிப்புடன் இருக்கிறார்கள். ஒரு மனிதன் தனது பாவங்களின் மூலமாகச் செழிப்படைவதையும், நற்பேறு பெறுவதையும், தனது எதிரிகளை அழிப்பதையும் நாம் காணலாம். இருப்பினும், அழிவு அவனது வேர்களைப் பற்றியிருக்கிறது. ஓ மன்னா, தைத்தியர்களும், தானவர்களும் பாவங்களினால் செழிப்படைவதை நான் கண்டிருக்கிறேன். அதே வேளை அவர்களை {பாவிகளை} அழிவு ஆக்கிரமித்தத்தையும் நான் கண்டிருக்கிறேன். ஓ மேன்மையானவனே {யுதிஷ்டிரா}, இவையனைத்தையும் பழங்காலத்தின் நேர்மையான காலத்தில் நான் கண்டிருக்கிறேன்.
தேவர்கள் அறம்பயின்றனர்; அசுரர்கள் அதைக் கைவிட்டனர். தேவர்கள் தீர்த்தங்களுக்குச் சென்றனர்; அசுரர்கள் அங்குச் செல்லவில்லை. முதலில் அசுரர்கள் கர்வமடைந்தனர். கர்வம் மாயையை உருவாக்கியது; மாயை கோபத்தை உருவாக்கியது. கோபம் அனைத்து விதமான தீய மனப்பான்மைகளையும், வெட்கங்கெட்ட செயல்களையும் உருவாக்கியது. அந்த வெட்கங்கெட்ட நிலையின் காரணமாக அவர்களிடம் இருந்த நன்னடத்தை மறைந்தது. அவர்கள் வெட்கங்கெட்டு, அறம் சார்ந்த மனப்பான்மைகள் அற்று, அற நோன்புகள் அற்றுப் போனதால், மன்னிக்கும் தன்மை, செழிப்பு மற்றும் அறநெறிகள் அவர்களை விரைவில் கைவிட்டன. ஓ மன்னா, பிறகு செழிப்புத் தேவர்களை அடைந்தது; தீயூழ் {துரதிர்ஷ்டம்} அசுரர்களை அடைந்தது.
கர்வத்தால் தங்கள் உணர்வை இழந்த தைத்தியர்களும் தானவர்களும் துரதிர்ஷ்டத்தை அடைந்தனர். கலியும் அவர்களை அடைந்தது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கர்வத்தில் மூழ்கி, சடங்குகள் மற்றும் வேள்விகள் அற்று, உணர்வையும் மதியையும் இழந்து, இதயம் நிறைந்த மாயையைக் கொண்டதால் அவர்களுக்கு விரைவில் அழிவு ஏற்பட்டது. புகழற்றப் போன தைத்தியர்கள் விரைவில் அழித்தொழிக்கப்பட்டனர். கடல்கள், ஆறுகள், தடாகங்கள் மற்றும் புனிதமான இடங்களுக்குச் சென்று தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, அறம்சார்ந்த பயிற்சிகள் மேற்கொண்ட தேவர்கள் தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டனர். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, தவநோன்பாலும், வேள்விகளாலும், தானங்களாலும், அருளாலும் அவர்கள் {தேவர்கள்} செழிப்பை அடைந்தனர்.
வேள்விகளையும், புனிதமான செயல்களையும் செய்த தேவர்கள், தீமையான செயல்களைக் கைவிட்டும், தீர்த்தங்களுக்கும் சென்றதால் அவர்கள் பெரும் நற்பேறை அடைந்தனர். ஓ மன்னா, இதனால் வழிகாட்டப்பட்டு, நீ உனது தம்பிகளுடன் தீர்த்தங்களில் நீராடி மீண்டும் செழிப்பை அடைவாயாக. இதுவே நித்தியமான பாதை. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் நிருகன், சிபி, ஔசிநரா {உசீநரன்}, பகீரதன், வசுமனஸ், கயன், புரு, புரூரவஸ் ஆகியோர் தவம் செய்து, தீர்த்தங்களை அடைந்து, புனிதமான நீர்நிலைகளைத் தொட்டு, சிறப்புமிக்கத் தவசிகளைக் கண்டு புகழையும், புனிதத்தையும், பலன்களையும், செல்வங்களையும் அடைந்து, இறுதியாகப் பெரும் செழிப்பையும் அடைந்தனர்.
பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் தொடர்பவர்கள் ஆகியோருடன் கூடிய இக்ஷவாகு, முசுகுந்தன், மாந்தாத்ரி {மாந்தாதா}, மன்னன் மருத்தன் ஆகியோர் தேவர்களைப் போலவே தவத்தின் சக்தியாலும், தெய்வீக முனிவர்களின் சக்தியாலும் புகழையும் பெரும் பெருமைகளையும் அடைந்தனர். மறுபுறம், பாவங்களில் அடிப்பட்டுக் கிடக்கும் திருதராஷ்டிரன் மகன்கள் அறியாமையால் தைத்தியர்களைப் போல விரைவில் அழிந்தொழிந்து போவார்கள் என்பது சந்தேகத்திற்கிடமில்லாதது ஆகும்" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.