Let the Brahmanas incapable of toil resist! | Vana Parva - Section 92| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனனின் வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம் சொன்ன லோமசர்; பரிவாரத்தின் அளவைக் குறைக்கச் சொன்ன லோமசர்; துன்பம் பொறுக்காத அந்தணர்கள் திருதராஷ்டிரனிடம் சென்றது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ யுதிஷ்டிரா, தனஞ்சயன் {அர்ஜுனன்} என்ன சொன்னான் என்பதை இப்போது கேள். அவன், "எனது அண்ணன் யுதிஷ்டிரனை செழிப்புக்கு வழிகாட்டும் அறப்பயிற்சியில் பங்கெடுக்கச் செய்யும். தவத்தைச் செல்வமாகக் கொண்ட {லோமசரே} நீர் உயர்ந்த அற நெறிகளையும், அனைத்துவிதமான தவச்சடங்குகளையும், செழிப்பால் அருளப்பட்ட மன்னர்களின் நித்தியமான கடமைகளையும், தீர்த்தங்களால் மனிதர்கள் அடையும் புனிதப்பயன்களையும் அறிந்தவர். தீர்த்தங்கள் சம்பந்தமான பலன்களை அடைய பாண்டுவின் மகன்களைச் சம்மதிக்க வைக்கக் கடவீர். உமது முழு ஆன்மாவுடன் மன்னன் {யுதிஷ்டிரன்} தீர்த்தங்களுக்குப் பயணித்துப் பசுக்களைத் தானம் செய்யச் சம்மதிக்க வைக்கக் கடவீர்." என்றான் {அர்ஜுனன்}.
இதுவே அர்ஜுனன் என்னிடம் சொன்னது. மேலும் அவன் {அர்ஜுனன்}, "உம்மால் பாதுகாக்கப்பட்ட அவர் {மன்னனான அண்ணன் யுதிஷ்டிரன்} தீர்த்தங்களுக்குப் பயணிக்கட்டும். நீர் அவர் கடக்கமுடியா பகுதிகளையும் முரட்டு மலைகளையும் கடக்கும்போதும் கண்காணித்து, ராட்சசர்களிடம் இருந்து அவரைப் பாதுகாப்பீராக. ததீச, இந்திரனைக் காத்தது போலவும், அங்கிரஸ், சூரியனைக் காத்தது போலவும், ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, குந்தியின் மகன்களை நீர் ராட்சசர்களிடம் இருந்து காக்க வேண்டும். வழியில் மலை முகடுகளைப் போன்ற பெரும் ராட்சசர்கள் இருக்கின்றனர். ஆனால் உம்மால் பாதுகாக்கப்பட்ட குந்தியின் மகன்களை அவர்களால் அணுக முடியாது" என்றான் {அர்ஜுனன்}.
இந்திரனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும், உன்னை ஆபத்துகளில் இருந்து காக்கும்படியான அர்ஜுனனின் பரிந்துரையின் பேரிலும், நானும் உன்னுடன் பயணிப்பேன். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, நான் இதற்கு முன் இரு முறை தீர்த்தப்பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருக்கிறேன். உன்னுடன் சேர்ந்து மூன்றாவது முறையாக நான் பயணப்படப் போகிறேன். ஓ யுதிஷ்டிரா, மனுவும், மெச்சத்தகுந்த செயல்கள் செய்த மற்ற அரச முனிகளும் தீர்த்தங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவற்றுக்குப் பயணம் மேற்கொள்வதால் ஒருவனது பயங்கள் விலகுகின்றன. ஓ கௌரவ்யா {குந்தியின் மகனே யுதிஷ்டிரா} நேர்மையற்ற மனதுடையவர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவர்களும், சொற்கேளாத கல்லாதவர்களும் தீர்த்தங்களில் நீராடுவதில்லை. ஆனால் நீ எப்போதும் அறம்சார்ந்த மனநிலையில் இருக்கிறாய். அறநெறிகளை அறிந்திருக்கிறாய். சத்தியங்களில் உறுதியுடன் இருக்கிறாய். உன்னால் இந்த உலகத்தில் இருந்து நிச்சயம் விடுபட முடியும். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மன்னன் பகீரதன், கயன், யயாதி அல்லது அவர்களைப் போன்றோரைப் போன்றவன் நீ" என்றார் {லோமசர்}.
யுதிஷ்டிரன், "ஓ அந்தணரே, உமக்குப் பதிலுரைப்பதற்கான வார்த்தைகள் கிடைக்காத அளவுக்கு, எனக்கு மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. தேவர்கள் தலைவன் {இந்திரன்} என்னை நினைவில் வைத்திருப்பதால், என்னைப் போன்ற நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும்? உமது சேர்க்கை கிடைத்தவனும், தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனும், வாசவனால் {இந்திரனால்} நினைக்கப்படுபவனுமான என்னைக் காட்டிலும் நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும்? ஓ சிறப்புமிக்கவரே, தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தைக் குறித்து நீர் சொன்னதுபோலவே, தௌமியரது வார்த்தைகளால் எனது மனது ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது. ஓ அந்தணரே, பரிந்துரைக்கப்பட்டுள்ள தீர்த்தங்களுக்கான புனிதப் பயணத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இஃது எனது உறுதியான தீர்மானமாகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பரிந்துரைக்கப்பட்ட பயணத்துக்காக மனதைத் தயார் செய்திருந்த யுதிஷ்டிரனிடம் லோமசர், "ஓ பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, உனது பரிவாரத்தைப் பொறுத்தவரை, அதன் அளவைக் குறைத்துக் கொள். இதனால் நீ செல்வது எளிதாக இருக்கும்" என்றார்.
பிறகு யுதிஷ்டிரன், "பசி தாகத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத, பயணத்தால் களைப்படைகிற, துன்பம் பொறுக்காத, குளிர்காலத்தின் கடுமையைப் பொறுக்காத, இரந்துண்டு வாழ்பவர்களும் {பிச்சைக்காரர்களும்}, அந்தணர்களும், யோகிகளும் விலகிக் கொள்ளட்டும். இனிய இறைச்சிகளிலும், உறிஞ்சுதல் மற்றும் குடித்தலுக்குரிய உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளிலும் விருப்பமுடைய அந்தணர்களும் விலகிக் கொள்ளட்டும். விசுவாசத்தின் காரணமாக என்னைத் தொடர்ந்து வந்த குடிமக்களும், இதுவரை முறையான ஊதியம் கொடுத்து நான் வைத்திருந்தவர்களும் மன்னன் திருதராஷ்டிரரிடம் திரும்பிச் செல்லட்டும். அவர் {திருதராஷ்டிரர்} குறித்த நேரத்தில் அவர்களுக்குப் படிகளைக் கொடுப்பார். அந்த மன்னன் சரியான படிகளைக் {ஊதியம்} கொடுக்க மறுத்தால், எங்கள் மனநிறைவுக்காகவும், நன்மைக்காகவும் பாஞ்சாலர்களின் மன்னன் {திரௌபதியின் தந்தையும்,யுதிஷ்டிரனின் மாமனாருமான துருபதன்} அவற்றை அவர்களுக்குக் கொடுப்பார்" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதனால் துன்புற்ற குடிமக்களும், முக்கியமான அந்தணர்களும், யதிகளும் ஹஸ்தினாபுரம் சென்றனர். நீதிமானான யுதிஷ்டிரன் மீதிருந்த பாசத்தால், அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} அவர்களை முறையாக வரவேற்று, உரிய படிகளைக் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்தான். பிறகு குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, சிறு எண்ணிக்கையிலான அந்தணர்களுடன், லோமசரால் உற்சாகப்படுத்தப்பட்டு, காம்யகத்தில் மூன்று இரவுகள் வசித்தான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.