Earth sank in waters! | Vana Parva - Section 114 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கௌசிகி நதி, கலிங்கம் ஆகிய இடங்களுக்கு யுதிஷ்டிரனை அழைத்துச் சென்ற லோமசர், அதன் பெருமைகளையும், செய்ய வேண்டிய செயல்களையும் அவனுக்கு எடுத்துச் சொல்லல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, பிறகு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கௌசிகி நதியில் இருந்து கிளம்பி அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக அனைத்து புனித தலங்களுக்கும் சென்றான். ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே, அவன் {யுதிஷ்டிரன்} கங்கை நதி கலக்குமிடமான கடலை அடைந்து, ஐந்நூறு நதிகளுக்கு மத்தியில் மூழ்கி நீராடி புனித சடங்குகளைச் செய்தான். ஓ! பூமியின் ஆட்சியாளனே, பிறகு தனது தம்பிகளுடன் சென்ற அந்தத் துணிவுமிக்க இளவரசன் {யுதிஷ்டிரன்} கடற்கரை வழியாகவே சென்று பழங்குடிகளான கலிங்கர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கலிங்கப் பழங்குடிகள் வாழும் ஒரு இடம் இருக்கிறது. அந்தப் பகுதியின் வழியே அறத்தேவனும் {தர்மதேவனும்} தேவர்களுடன் சேர்ந்து வழிபடும் நதியான வைதரணீ நதி ஓடுகிறது. இந்த நதியின் வடகரையில் முனிவர்கள் வசிக்கிறார்கள். ஒரு மலையால் அழகாக்கப்பட்ட அந்த இடம் அறச்சடங்குகள் செய்யத் தகுதியான இடமாக இருந்ததால், மறுபிறப்பாளர் {அந்தண} வகையைச் சார்ந்தவர்கள் அந்த இடத்திற்கு அடிக்கடி வந்து சென்றனர். சொர்க்கத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்த அறம்சாரந்த மனிதர்கள் செல்லக்கூடிய தேவர்கள் வசிக்கும் இடத்தைப் பழிக்கும் வண்ணம் இவ்விடம் {கலிங்கம்} இருந்தது. பழங்காலத்தில் இந்த இடத்தில்தான் இறவாதவர்களை வேள்விகள் மூலம் வழிபட்டனர். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, இந்த இடம்தான், ருத்திரன் வேள்விப் பசுவைக் கைப்பற்றி "இது எனது பங்கு" என்ற சொன்ன இடம்.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, சிவனால் வேள்விப்பசு கவரப்பட்ட போது தேவர்கள் அவனிடம் {ருத்திரனிடம்}, "அனைத்து நேர்மையான விதிகளையும் புறந்தள்ளி, அடுத்தவர் பொருளைப் பேராசையுடன் பார்க்காதீர்" என்றனர். அதன்பிறகு, ருத்திரனைத் திருப்திப்படுத்த அவனைப் புகழ்ந்தனர். அவனுக்கு வேள்விப் பங்கைக் கொடுத்து, தகுந்த மரியாதைகளைக் கொடுத்தனர். அதன்பிறகு அவன் {சிவன்} அந்த விலங்கை அவர்களிடம் {தேவர்களிடம்} கொடுத்து, தேவர்கள் சென்ற பாதையிலேயே சென்றான். ஓ! யுதிஷ்டிரா, அதன்பிறகு ருத்திரனுக்கு என்ன நேர்ந்தது என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள். தேவர்கள் ருத்திரன் மீது கொண்ட பயத்தால் புதிதானதும், அனைத்துப் பாகங்களைவிடச் சிறந்ததுமான பாகத்தை ருத்திரனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த இடத்தில் தனது நீர்க்கடன்களைச் செலுத்தும் யாரும், இந்தப் பழங்கதையைச் சொல்லும்போது, தனது ஊனக்கண்ணாலேயே தேவலோகத்திற்குச் செல்லும் வழியைக் காண்பார்கள்" என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, விதியின் உதவியால் துருபதன் மகளும் {திரௌபதியும்}, பாண்டுவின் மகன்கள் அனைவரும், வைதரணீ நதிக்குள் இறங்கி, தங்கள் தந்தையரின் பெயர்களில் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.
யுதிஷ்டிரன் {முனிவர் லோமசரிடம்}, "ஓ லோமசரே, பக்திச் செயலின் சக்தி எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்! இந்த இடத்தில் {வைதரணீ} உரிய முறையில் நீராடிய நான் பிறந்திறக்கும் மனிதனின் உலகங்களை மட்டும் இப்போது காணவில்லை! ஓ தவசியே, அறவாழ்வால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். மந்திரங்களை உரக்கச் சொல்லும் பெருந்தன்மைமிக்கக் கானகவாசிகள் ஒலி இது" என்றான்.
லோமசர், "ஓ யுதிஷ்டிரா, உனது காதுகளை எட்டும் அந்த ஒலி முன்னூறு ஆயிரம் {300,000} யோஜனைகளுக்கு அப்பால் இருந்து கேட்கிறது என்பது நிச்சயம். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அமைதியாக இரு. எந்த வார்த்தையும் உச்சரிக்காதே. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நமது பார்வைக்கு வந்திருக்கும் இது தானே இருப்பவனின் {பிரம்மனின்} தெய்வீக வனமாகும். ஓ மன்னா, அங்கே பயங்கரமான பெயர் கொண்ட விஸ்வகர்மா தனது அறச்சடங்குகளைச் செய்தான். அவ்வேள்வியின் பலம் மிக்க நேரத்தில், பிரம்மன், மலைகளும், கானகங்களும் கூடிய முழு உலகத்தையும் காசியபருக்கு, அவர் செய்த புரோகிதத்திற்குப் பரிசாகக் கொடுத்தான். ஓ குருவின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிப் பூமி கொடுக்கப்பட்ட பிறகு, அவள் {பூமி} கவலை நிறைந்த இதயத்துடனும் மிகுந்த கோபத்துடனும் உலகத்தின் ஆட்சியாளனும் பெரும் தலைவனுமானவனிடம் {பிரம்மனிடம்} "ஓ பலம்வாய்ந்த தேவா, பிறப்பு இறப்பு உள்ள ஒரு மனிதனுக்கு என்னைக் கொடுப்பது உமக்குத் தகாது. இதோ நான் பாதாளத்திற்கு இறங்கப் போகிறேன். ஆகையால், பரிசாகக் கொடுக்கும் இந்த உமது செயலால் ஒன்றுமே நடக்காது" என்று சொன்னாள்.
ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அருளப்பட்ட தவசியான காசியபர், பூமித்தேவி மனச்சோர்வுடனும் சோகத்துடனும் இருப்பதைக் கண்டு, அவளது கோபத்தைத் தணிக்க, ஒரு சினம் தணிக்கும் காரியத்தைச் செய்தார். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு, அவரது பக்தியால் மகிழ்ந்தாள் பூமித்தேவி. மீண்டும் அவள் பூமியில் இருந்து எழுந்து பலிப்பீடத்தில் தனது உருவத்தை வெளிப்படுத்தினாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பலிப்பீடத்தின் உருவில் இருக்கும் இந்தப் பகுதியே அந்த இடம். ஓ! பெரும் ஏகாதிபதி, இதன் மேல் ஏறு. உனக்குத் துணிவும் பலமும் பிறக்கும். இந்தப் பீடம் கடல் வரை சென்று அதன் {பூமியின்} இதயத்தில் நிலைத்திருக்கிறது. நற்பேறு உனதாகட்டும் இதில் ஏறி கடலைக் கட. நீ இன்று இதன் மேல் ஏறும்போது, நான் உன்னில் இருக்கும் தீமைகள் அகல வேண்டி சடங்கு செய்வேன். பிறப்புடையவனின் {மனிதனின்} தொடுதலைப் பெறும் இந்தப் பீடம் உடனே கடலுக்குள் புகுகிறது. இந்த அண்டத்தைக் காப்பவனை வணங்குவோம்! இந்த அண்டத்துக்கு அப்பால் இருப்பவனை வணங்குவோம்! ஓ! தேவர்களின் தலைவா, இந்தக் கடலில் இறங்கு.
ஓ! பாண்டுவின் மகனே, நீ இந்த உண்மையான வார்த்தைகளை உரைக்க வேண்டும். அப்படி உரைத்துக் கொண்டிருக்கும்போதே இந்தப் பீடத்தில் ஏற வேண்டும். "அக்னித் தேவனும், சூரியனும், தலைமுறைக்கான உறுப்பும், நீரும், தேவியும், விஷ்ணுவின் வித்தும் சேர்ந்து அமுதத்தின் இருப்பிடமாகவும் இருக்கிறாய். அக்னித்தேவனே கடலைப் படைத்த உறுப்பாகும். பூமியே உனது உடல். விஷ்ணுவின் வித்தே உன்னை உருவாக்கியது. நீயே அமுதத்தின் இருப்பிடம்" என்று சொல்லிக் கொண்டே பீடத்தில் ஏற வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, இந்த உண்மையான வார்த்தைகள் கேட்கக்கூடிய அளவில் உரைக்கப்பட வேண்டும். அப்படி உரைக்கும்போதே இந்த ஆறுகளின் தலைவனுக்குள் {கடலுக்குள்} மூழ்கு. ஓ குந்தியின் மகன்களில் புகழத்தக்கவனே, இல்லையென்றால் {உரைக்கவில்லையென்றால்} நீரின் களஞ்சியமான இந்தத் தெய்வீகப்பிறப்புடைய நீர்த்தேவனைப் புனிதமான புல்லின் நுனி கொண்டும் தொடக்கூடாது" என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தீமையை விலக்கும் சடங்கு முடிந்ததும், பெருமைமிக்க யுதிஷ்டிரன், கடலுக்குள் சென்று அந்தத் தவசி சொன்ன அனைத்தையும் செய்து, மகேந்திர மலையின் பரப்புக்குச் சென்று அந்த இரவை அங்கே கழித்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.