Rishyasringa married Santa! | Vana Parva - Section 113| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீட்டிய திட்டத்தின்படி விலைமகள்கள் ரிஷ்யசிருங்கரை லோமபாதனிடம் அழைத்துச் செல்வது; லோமபாதன் தனது மகளை ரிஷ்யசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தது; கோபத்துடன் வந்த விபாண்டகர் சாந்தமடைந்தது.
விபாண்டகர் {ரிஷ்யசிருங்கரிடம்} சொன்னார், "ஓ மகனே {ரிஷ்யசிருங்கா}, அவர்கள் ராட்சசர்கள். அவர்கள் அழகான உருவம் எடுத்து அற்புதமாக நடந்து செல்வார்கள். நிகரில்லாத பலமும், பெரும் அழகும் கொண்டவர்கள் அவர்கள். தவப்பயிற்சிகளுக்குத் தடங்கல்கள் ஏற்படுத்துவதே அவர்களது தவம். ஓ! எனது மகனே, அவர்கள் அன்பு உருவம் கொண்டு பல வழிகளில் ஏமாற்றுவார்கள். அந்தக் கடுமையானவர்கள், காடுகளில் வசிக்கும் தவசிகளை அருள் நிறைந்த உலகில் இருந்து (அவர்கள் நற்செயல்கள் மூலம் அவற்றை வென்றிருந்தாலும்) விலக்குகின்றனர்.
தனது ஆன்மாவை முழு கட்டுக்குள் வைத்து, நேர்மையானவர்களின் உலகை அடைய விரும்புபவர்களுக்கு இவர்களிடம் எந்தக் காரியமும் இல்லை. அவர்களது செயல்கள் தீங்கானவை. தவத்திற்கு தடை ஏற்படுத்தி மகிழ்பவர்கள் அவர்கள். பக்தி நிறைந்த மனிதர்கள் அவர்களைக் காணக் கூடாது. ஓ மகனே! அந்தப் பானகங்களும் அருந்தத்தக்கவை அல்ல. அவை நேர்மையற்றவர்களால் பருகப்படும் சாராயமாகும். பிரகாசமாகவும், மணமிக்கதாவும், பல வண்ணங்களில் இருக்கும் இந்த மலர்மாலையும் தவசிக்களுக்கானது இல்லை.
அவர்கள் தீய பேய்கள் என்று சொல்லித் தனது மகனுக்குத் தடையை ஏற்படுத்திய பிறகு, விபாண்டகர் அவளைத் தேடி அலைந்தார். மூன்று நாட்கள் தேடியும் அவள் எங்கிருக்கிறாள் என்ற சுவடுகளை அறியாத அவர் மீண்டும் தனது ஆசிரமத்திற்கே திரும்பினார். அதே வேளையில், காசியபரின் மகன் {விபாண்டகர்} கனிகள் சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போதும் அந்த விலைமகள் மீண்டும் ரிஷ்யசிருங்கரைப் பழைய முறையிலேயே மயக்க வந்திருந்தாள். ரிஷ்யசிருங்கர் அவளைக் கண்டதும் வெகுவாக மகிழ்ந்து அவளிடம் விரைவாகச் சென்று, "எனது தந்தை திரும்புவதற்கு முன்னர், நாம் உமது ஆசிரமத்திற்குச் செல்லலாம்" என்றார்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த விலை மகள்களின் திட்டத்தின்படி காசியபரின் {விபாண்டகரின்} ஒரே மகனைத் தங்கள் மிதக்கும் ஆசிரமத்திற்குள் நுழையச் செய்து, அந்த ஓடத்தை ஓடச் செய்தனர். பிறகு பலவிதமான செயல்கள் மூலம் அவரை மகிழ்ச்சியூட்டிக் கொண்டே, கடைசியாக அங்க மன்னன் அருகே வந்தனர். மிகுந்த வெண்ணிறம் கொண்ட அந்த மிதக்கும் ஓடத்தை நீரிலேயே விட்டு, ஆசிரமத்திலிருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி மிதக்கும் ஆசிரமம் என்ற பெயரிலேயே மிக அழகான கானகத்தை உருவாக்கினான் {லோமபாதன்}. இருப்பினும் அம்மன்னன், விபாண்டகரின் ஒரே மகனை {ரிஷ்யசிருங்கனை} அரண்மனையின் ஒரு பகுதியில் வைத்திருந்தாலும், பெண்களை அருகில் விடவில்லை. பிறகு அவன் {அங்க மன்னன் லோமபாதன்} மழை வானத்தில் இருந்து கொட்டுவதைக் கண்டான். உலகம் நீரால் நிரம்பியது.
இதய விருப்பம் நிறைவேறிய லோமபாதன் தனது மகளாகிய சாந்தையை ரிஷ்யசிருங்கருக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அவரது தந்தையின் {விபாண்டகரின்} கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, அவர் தனது மகனைக் காண வரும் வழியில் மாடுகள் இருக்கவும், நிலங்கள் உழப்பட்டு இருக்கவும் பார்த்துக் கொண்டான். அம்மன்னன் {லோமபாதன்}, அப்படி நிறைய கால்நடைகளை நிறுத்திவிட்டு, அவர்களிடம் {பணியாளர்களிடம்} பின்வருமாறு சொன்னான்.
"அந்தப் பெரும் முனிவரான விபாண்டகர் தனது மகனைக் குறித்து உங்களிடம் விசாரிக்கும்போது, நீங்கள் குவிந்த கரங்களுடன் அவரிடம் இந்த கால்நடைகளும், உழப்பட்ட நிலங்களும் உமது மகனுடையதே. நாங்கள் அவர் சொல்வதற்குக் கீழ்ப்படியும் அடிமைகள்" என்றும் சொல்லவேண்டும் என்றான் {லோமபாதன்}. கடும் கோபம் கொண்ட அந்தத் தவசி பழங்களையும், கிழங்குகளையும் சேகரித்து தனது ஆசிரமத்திற்குத் திரும்பி தனது மகனை {ரிஷ்யசிருங்கரைத்} தேடினார். அவரைக் காணாததால் மிகுந்த கோபத்திற்குள்ளானார். கோபத்தால் துன்புறுத்தப்பட்ட அவர், இது மன்னனுடைய செயல்தான் என்று சந்தேகப்பட்டார். ஆகையால், அவர் சம்பை நகரத்துக்குச் சென்று மன்னனையும், அவனது நகரத்தையும், மொத்த நாட்டையும் எரித்துவிட எண்ணினார்.
வழியில் மிகவும் களைத்துப் போய் பசியுடன் இருந்த அவர் {விபாண்டகர்}, அந்த கால்நடைகள் நிரம்பிய இடத்திற்கு வந்தார். அங்கே அவர் சரியான முறையில் மாடுமேய்ப்பவர்களால் உபசரிக்கப்பட்டு, அந்த இரவை ஒரு மன்னனைப் போல கழித்தார். இப்படிப்பட்ட பெரும் விருந்தோம்பலைப் பெற்ற அவர், அவர்களிடம், "ஓ இடையர்களே, யாருடையவர்கள் நீங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இந்தச் செல்வம் அனைத்தையும் எங்களுக்கு உமது மகன் {ரிஷ்யசிருங்கர்} கொடுத்தார்" என்றனர். பிறகு பல இடங்களில் மனிதர்களில் சிறந்த பலரால் அவர் {விபாண்டகர்} பெரிதும் மதிக்கப்பட்டார். தனது மகன் அங்கே சொர்க்கத்தில் இருக்கும் இந்திரனைப் போல இருப்பதைக் கண்டார். (மேகத்திலிருந்து) வெளியேறும் மின்னலைப் போல இருந்த தனது மருமகளான சாந்தையையும் கண்டார். மாட்டு மந்தைகளும், குக்கிராமங்களும் தனது மகனுக்குக் கிடைத்திருப்பதைக் கண்டும், சாந்தையைக் கண்டும் அவரது பெரும் எதிர்ப்பு நிலை சாந்தப்படுத்தப்பட்டது.
ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பூமியின் தலைவனிடம் விபாண்டகர் தனது பெரும் திருப்தியை வெளிப்படுத்தினார். சூரியனையும், நெருப்பையும் பழிக்கும் சக்தி கொண்ட அந்த பெரும் தவசி {விபாண்டகர்} தனது மகனிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} "உனக்கு ஒரு மகன் பிறந்ததும், மன்னனுக்கு ஏற்புடையது அனைத்தையும் நீ செய்த பிறகு, தவறாமல் காட்டுக்கு வந்துவிடு" என்றார். ரிஷ்யசிருங்கரும் தனது தந்தை சொன்னபடியே செய்து, தனது தந்தையின் இடத்திற்கே திரும்பினார்.
ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, வானத்தில் இருக்கும் ரோகிணி நட்சத்திரம் சந்திரனுக்குக் காத்திருப்பதைப் போல, பெரும்பேறு பெற்ற அருந்ததி வசிஷ்டருக்குக் காத்திருப்பது போல, லோபமுத்திரை அகஸ்தியருக்குக் காத்திருப்பது போல, நளனுக்குக் கீழ்ப்படிந்த மனைவியான தமயந்தியைப் போல, இடியைத் தாங்குபவனுக்கு {இந்திரனுக்கு} சச்சி இருப்பது போல, முத்கலருக்கு நாராயணனின் மகளான இந்திரசேனை {நளாயனி} இருப்பது போல, கானகத்தில் வாழ்ந்த ரிஷ்யசிருங்கருக்காக சாந்தை பாசத்துடன் காத்திருந்தாள். இதுதான் அவருக்குச் சொந்தமான ஆசிரமம். இந்தப் பெரும் தடாகத்திற்கு அழகு சேர்க்கும் இது புனிதமான புகழைப் பெற்றிருக்கிறது. இங்கே உனது கடன்களைச் செய்து விருப்பம் நிறைவேறியவனாகு. உன்னைச் சுத்தகரித்துக் கொண்ட பிறகு, உனது பாதையை வேறு புனிதமான இடங்களின் பால் திருப்பு" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.