Rama severed his mother's head! | Vana Parva - Section 116 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
வேதம் கற்ற ஜமதக்னி; பிரசேனஜித்தின் மகள் ரேணுகையை மணப்பது; ரேணுகை சித்திரரதனைக் கண்டு மயங்குவது; இதை அறிந்த ஜமதக்னி பரசுராமரை, அவளது தலையைக் கொய்யச் செய்வது; பரசுராமர் வரமாகத் தாயின் உயிரைக் கோருவது; கார்த்தவீரியார்ஜுனன் ஜமதக்னியிடம் இருந்து பசுவைக் கவர்வது; இதை அறிந்த பரசுராமர் கார்த்தவீரியார்ஜுனன் கரங்களை அறுத்து வீழ்த்துவது; கார்த்தவீர்யார்ஜுனன் மகன்கள் ஜமதக்னியைக் கொல்வது; பரசுராமர் புலம்பி அழுவது…
அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஜமதக்னி தன்னை வேத கல்விக்கும், புனிதமான தவம் பயிலவும் அர்ப்பணித்துக் கொண்டார். அவர் தனது பெரும் தவங்கள் நிமித்தமாகப் புகழடைந்தார். பிறகு அவர் {ஜமதக்னி} ஒரு முறைசார்ந்த போக்கைத் தொடர்ந்து முழு வேதத்திலும் தேர்ச்சி பெற்றார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவர் {ஜமதக்னி} பிரசேனஜித்திடம் சென்று, ரேணுகையின் கரத்தை திருமணத்திற்காகக் கேட்டார். அவரது வேண்டுதல் அம்மன்னனால் {பிரசேனஜித்தால்} அளிக்கப்பட்டது. பிருகு குலத்தின் இனியவர் {ஜமதக்னி} இப்படியே ரேணுகையைத் தனது மனைவியாக அடைந்து, அவளை {ரேணுகையைத்} தனது ஆசிரமத்தில் வசிக்க வைத்து, அவளால் உதவப்பட்டுத் தவம்பயின்றார். அவள் மூலமாக நான்கு மகன்கள் பிறந்தனர். ஐந்தாவதாக ராமர் {பரசுராமர்} பிறந்தார். ராமர் {பரசுராமர்} அனைவரிலும் இளையவராக இருந்தாலும், தகுதியில் அனைவரையும் விஞ்சியிருந்தார்.
ஒரு காலத்தில், அவளது {ரேணுகையின்} மகன்கள் கனிகள் சேகரிக்க வெளியே சென்றிருந்தபோது, தூய கடினமான வாழ்க்கை வாழ்ந்து வந்த ரேணுகை, நீராடுவதற்காக வெளியே சென்றாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவள் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தபோது, சித்திரரதன் என்ற பெயர் கொண்ட மார்த்திகாவத நாட்டு அரசனை அவள் காண நேரந்தது. தாமரை மலர்மாலை அணிந்திருந்த அந்த மன்னன் {சித்திரரதன்} தனது மனைவியருடன் நீரில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனின் {சித்திரரதனின்} அற்புதமான வடிவத்தைக் கண்ட ரேணுகைக்கு அவன் மீது ஆசை உண்டானது. விதிக்குப்புறம்பான அந்த ஆசையை அவளால் கட்டுப்படுத்தமுடியாமல், நீரிலே மாசடைந்து, இதயத்தால் பயந்து மீண்டும் ஆசிரமம் திரும்பினாள்.
அவளது கணவர் {ஜமதக்னி}, அவளைக் கண்ட உடனேயே, அவளது நிலையை உணர்ந்தார். மயக்கத்துடன் இருந்த அவளிடம் கற்பின் காந்தம் இல்லாததைக் கண்டு வலிமைமிக்க, சக்திவாய்ந்த, மனதில் மிகுந்த கோபம் கொண்ட அவர் {ஜமதக்னி}, அவளை {ரேணுகையை} நிந்தித்து "சீச்சி" என்றார். சரியாக அதே நேரத்தில் ஜமதக்னியின் மகன்களில் மூத்தவரான ருமண்வான் வந்தார்; பிறகு சுஷேணரும், வசுவும், அதேபோல விசுவாவசுவும் வந்தனர். அந்தப் பெரும்பலம் வாய்ந்த தவசி அவர்கள் அனைவரிடமும் ஒருவர் பின் ஒருவராக, அவர்களது தாயின் உயிருக்கு ஒரு முடிவுகட்டச் சொன்னார்.
இருப்பினும் அவர்கள், மதிமயங்கி, இதயம் தொலைந்தவர்களாக இருந்தனர். அவர்கள் ஒருவார்த்தையையேனும் சொல்லவில்லை. பிறகு அவர் {ஜமதக்னி} சினம் கொண்டு அவர்களைச் சபித்தார். அப்படிச் சபிக்கப்பட்ட அவர்கள் தங்கள் உணர்வுகளை இழந்து, விலங்குகள் மற்றும் பறவைகளின் நடத்தைக்கு ஒப்பாக அசையாமல் இருந்தனர். பிறகு, அனைவரிலும் கடைசியாக எதிரி வீரர்களைக் கொல்லும் ராமர் {பரசுராமர்} ஆசிரமத்திற்கு வந்தார். அவரிடம், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பெரும் தவசியான ஜமதக்னி, "ஓ! மகனே {பரசுராமா}, மனவுறுத்தல் இன்றி உனது தீய அன்னையை {ரேணுகையைக்} கொல்" என்றார்.
அதன்பேரில், ராமர் {பரசுராமர்} உடனடியாகத் தனது கோடரியை எடுத்து தனது தாயின் தலையைக் கொய்தார். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பலம் வாய்ந்த ஆன்மா கொண்ட ஜமதக்னியின் கோபம் தணிந்தது. பிறகு அவர் மனத்திருப்தியுடன், "எனது மகனே, அறம் அறிந்த நீ, எனது ஆணையின் பேரில் கடும் சாதனையைச் செய்தாய். ஆகையால், உனது இதயத்தில் இருக்கும் விருப்பங்களைச் சொல், நான் அவற்றைத் தரத் தயாராக இருக்கிறேன். என்னிடம் கேள்" என்றார்.
அதன்பேரில், ராமர் {பரசுராமர்}, தனது தாய் {ரேணுகை} உயிர் பெற வேண்டும் என்றும், இந்தக் கொடூரச் செயலை நினைத்து தான் பீதியடையாதிருக்க வேண்டும் என்றும், தான் எந்தப் பாவத்தாலும் பீடிக்கப்படாதவராக இருக்க வேண்டும் என்றும், தனது சகோதரர்கள் பழைய நிலையை அடைய வேண்டும் என்றும், போர்க்களத்தில் தான் ஒப்பிலாதவராக இருக்க வேண்டும் என்றும், தனக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்றும் கேட்டார். ஓ பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த தவம் பயின்ற ஜமதக்னி, தனது மகனின் அனைத்து விருப்பங்களையும் அருளினார்.
ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, ஒரு முறை, முன்பு போலவே அனைத்து மகன்களும் வெளியே சென்றிருந்த போது, கடற்கரையின் அருகே இருக்கும் நாட்டின் {அனூப நாடு} தலைவனான கார்த்தவீரியனின் வீரமிக்க மகன் {அர்ஜுனன்}, ஆசிரமத்திற்கு வந்தான். அப்படி அவன் அந்த ஆசிரமத்திற்கு வந்தபோது, அந்தத் தவசியின் {ஜமதக்னியின்} மனைவி {ரேணுகை} அவனை {கார்த்தவீரியனின் மகன் அர்ஜுனனை} விருந்தோம்பலுடன் வரவேற்றாள். எனினும், அவன் போர்வீரனுக்குரிய பெருமையால் போதை கொண்டு, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் மகிழ்ச்சி கொள்ளவில்லை. பிறகு வலுக்கட்டாயமாக, அனைத்து எதிர்ப்பையும் மீறி, தனது பாலால் புனித நெய் வழங்கிய தலைமைப் பசுவை {பசுவின் கன்றை என்று வேறு பதிப்பில் படித்ததாக ஞாபகம்}, அதன் {தாய்ப்பசுவின்} அலறலையும் பொருட்படுத்தாமல் ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றிச் சென்றான். வேண்டுமென்றே அந்த வனத்தில் இருந்த பல பெரிய மரங்களை ஒடித்துச் சென்றான்.
ராமர் {பரசுராமர்} வீடு திரும்பியதும், அவரது தந்தை {ஜமதக்னி} நடந்தது யாவற்றையும் சொன்னார். கன்றின் பிரிவால் அலறும் பசுவைக் கண்ட ராமருக்கு {பரசுராமருக்கு} இதயத்தில் அதிருப்தி எழுந்தது. அவர் {பரசுராமர்} கடைசிக் காலம் நெருங்கியிருந்த கார்த்தவீரியனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்தார். பிறகு அந்தப் பிருகுவின் வழி வந்தவர் {பரசுராமர்}, அந்த எதிரி வீரர்களை அழிப்பவர், போர்க்களத்தில் தனது அழகிய வில்லில் இருந்து அடிக்கப்பட்ட, தட்டை முனை கொண்ட கூர்மையான கணைகளால் தனது வீரத்தைக் காண்பித்து, கதவைத் தடுக்கும் மர ஆணிகள் போல இருந்த அர்ஜுனனின் ஆயிரம் கரங்களை அறுத்தெரிந்தார். ஏற்கனவே மரணத்தின் கரங்களில் இருந்த அவனும் {அர்ஜுனனும்}, தனது எதிரியான ராமரால் {பரசுராமரால்} வெற்றிகொள்ளப்பட்டான்.
பிறகு அந்த அர்ஜுனனின் உறவுகள் ராமருக்கு {பரசுராமருக்கு} எதிராகத் தங்கள் கோபத்தைத் திருப்பி, ராமர் {பரசுராமர்} இல்லாத நேரத்தில் ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு விரைந்தனர். அங்கே அவரைக் {ஜமதக்னியைக்} கண்டு கொன்றனர். அவர் பெரும் பலம் கொண்டவராக இருப்பினும், அந்நேரத்தில் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் சண்டையிடவில்லை. இப்படி எதிரிகளால் தாக்கப்பட்டபோது, அவர் உதவியின்றிப் பரிதாபகரமாகத் தொடர்ந்து ராமனின் {பரசுராமனின்} பெயரை உரக்க அழைத்தார்.
ஓ! யுதிஷ்டிரா, மேலும், கார்த்தவீரியனின் மகன்கள் ஜமதக்னியின் மேல் தங்கள் கணைகளை அடித்துத் தங்கள் எதிரியைத் {பரசுராமரைத்} தண்டித்து வந்த வழியே சென்றனர். அப்படி அவர்கள் சென்ற பிறகு, ஜமதக்னி தனது கடைசி மூச்சை சுவாசித்த போது, பிருகு குலத்தில் இனியவரான, ராமர் {பரசுராமர்}, கைகளில் விறகுகளுடன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். அந்த வீரர் தனது தந்தை கொல்லப்பட்டிருப்பதைக் கண்டார். மிகுந்த துக்கமடைந்த அவர் தனது தந்தைக்கு ஏற்பட்ட தகாத விதியை நினைத்து புலம்பி அழுதார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.