The Birth of Jamadagni | Vana Parva - Section 115 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் மகேந்திர மலையில் தங்கி, பரசுராமரின் சீடரான அக்ருதவ்ரணரிடம் பரசுராமரைக் குறித்து வினவுதல்; அக்ருதவ்ரணர் பரசுராமரின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; கார்த்தவீரியார்ஜுனன் அறிமுகம்; தேவர்களும் தவசிகளும் கார்த்தவீரியார்ஜுனனின் அத்துமீறல்களை விஷ்ணுவிடம் எடுத்துக் கூறல்; கன்யாகுப்ஜநாட்டின் மன்னனான காதிக்கு மகளாக சத்தியவதி பிறப்பது; சத்தியவதியை பிருகு மைந்தன் ரிசீகர் மணப்பது; ரிசீகருக்கு ஜமதக்னி பிறப்பது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பூமியைக் காப்பவன் {யுதிஷ்டிரன்} ஓரிரவைத் தனது தம்பிகளுடன் அங்கே தங்கி பக்திமான்களுக்கு உயர்ந்த மரியாதையை அளித்தான். பிருகுக்கள், அங்கிரஸர்கள்,
வசிஷ்டர்கள், காசியபர்கள் குறித்த பெயர்களை லோமசர் அவனுக்குத் {யுதிஷ்டிரனுக்குத்} தெரிவித்தார். அந்த அரசமுனியும் அவர்கள் அனைவரையும் சந்தித்து கூப்பிய
கரங்களுடன் வணங்கினான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, பரசுராமரின் சீடனான துணிவுமிக்க அக்ருதவ்ரணரிடம் {Akritavrana}, "மரியாதைக்குரிய பரசுராமர் இந்த பக்திமான்களிடம் எப்போது
தன்னை வெளிப்படுத்துவார்? பிருகு குலத் தோன்றலின் காட்சி இச்சந்தர்ப்பத்தில் கிடைப்பது விரும்பப்படுகிறது" என்றான்.
அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்} "தடையற அனைத்தையும் அறியும் ஆன்மா கொண்ட ராமருக்கு {பரசுராமருக்கு}, இந்த இடத்திற்கான உனது பயணம் குறித்துத் தெரியும். அவர் அனைத்துவிதத்தில்
உன்னிடம் திருப்தியுடன் இருக்கிறார். அவர் உனக்காக விருப்பத்துடன் தன்னை வெளிப்படுத்துவார். இங்கே தவம்பயிலும் தவசிகள் பதினாலாவது {சதுர்த்தசி} மற்றும் எட்டாவது
{அஷ்டமி} சந்திர நாட்களில் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரவின் இறுதியில் பதினாலாவது நாள் {சதுர்த்தசி} உதிக்கிறது. அச்சந்தர்ப்பத்தில் கருப்பு
மான்தோல் உடுத்தி ஜடா முடி தரித்தவரான அவரது {பரசுராமரது} காட்சி உனக்குக் கிடைக்கும்" என்றார்.
யுதிஷ்டிரன் {அக்ருதவ்ரணரிடம்}, "ஜமதக்னி முனிவரின் மகனும் பெரும்பலம் வாய்ந்தவருமான ராமரைத் {பரசுராமரைத்} தொடர்ந்து சென்றவர் நீர். ஆகையால் அவர் பழங்காலத்தில் செய்த சாதனைகளை
நேராக சாட்சியாகக் கண்டிருக்கிறீர். ஆகையால், போர்ச்சாதியின் உறுப்பினர்களை {க்ஷத்திரியர்களைப்} போர்க்களத்தில் ராமர் {பரசுராமர்} எப்படி வீழ்த்தினார்.
என்பதையும் அந்த மோதல்களுக்கான காரணத்தையும் உரைக்குமாறு உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்." என்றான்.
அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ பரதனின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ மன்னர்களின் தலைவா, நான் பிருகு குலத்தின் வழி வந்த ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} தெய்வீகச் செயல்களை உடைய அந்த
அற்புதக் கதையை மகிழ்ச்சியுடன் சொல்வேன். ஹேஹய குலத்தின் பெரும் ஆட்சியாளனின் {கார்த்தவீர்யனின் மகனான அர்ஜுனனின்} சாதனைகளையும் சொல்வேன். அர்ஜுனன் {கார்த்தவீர்யார்ஜுனன்}
என்ற பெயர்கொண்ட அந்த ஹேஹய குலத்தின் பலம்வாய்ந்த தலைவன் ராமரால் {பரசுராமரால்} கொல்லப்பட்டான்.
ஓ! பாண்டுவின் மகனே, அவன் {கார்த்தவீர்யனின் மகன் அர்ஜுனன்} ஆயிரம் {1000} கரங்களைக் கொண்டிருந்தான். தத்தாத்ரேயனின் கருணையால் அவனுக்கு தங்கத்தால் ஆன தெய்வீகத் தேர் ஒன்று இருந்தது. ஓ! பூமியின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அவனது ஆட்சி அசையும் தன்மை கொண்ட உலகம் முழுவதும் பரவியிருந்தது. அந்தப் பலம் பொருந்திய ஏகாதிபதி எங்கும் தங்கு தடையின்றிச் சென்று வந்தான். பெற்ற வரத்தின் அறத்தால் தாங்கமுடியாதவாறு வளர்ந்து, தேரில் ஏறி எல்லாப் புறங்களிலும் உள்ள தேவர்களையும், யக்ஷர்களையும், தவசிகளையும் நசுக்கினான். பிறந்த அனைத்து உயிர்களும் அவனால் தொந்தரவுக்கு உள்ளாகின.
பிறகு அனைத்து தேவர்களும் கடும் அறவாழ்வு வாழ்ந்த தவசிகளும் சந்தித்து தேவர்களுக்குத் தேவனும், பேய்களை {அசுரர்களை}க் கொல்பவனும் வீழா பராக்கிரமம் கொண்டவனுமான
விஷ்ணுவிடம் சென்று, "ஓ மதிப்பிற்குரிய அருள்நிறைந்த தலைவா, பிறந்த பிறவிகள் அனைத்தையும் பாதுகாக்கும் காரணத்திற்காக, உம்மால் அர்ஜுனன் {கார்த்தவீர்யனின் மகன் அர்ஜுனன்}
கொல்லப்பட வேண்டும். ஹேஹய குலத்தின் பலம் பொருந்திய ஆட்சியாளன் தன்னைத் தனது தெய்வீகத் தேரில் அமர்த்திக் கொண்டு, இந்திரன், தனது ராணியான சச்சியுடன்
இன்புற்றிருந்த போது அவனை அவமதித்தான்" என்றனர். ஓ பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு அந்த மதிப்புமிக்க அருள்நிறைந்த தெய்வம் (விஷ்ணு), கார்த்தவீரியனின் மகனைக்
கொல்லும் நோக்கோடு இந்திரனுடன் கலந்தாலோசித்தான். உலகத்தில் பிறந்த பிறவிகளுக்கு நன்மை விளையும் அச்சந்தர்ப்பத்தில், தேவர்களுக்குத் தலைவன் {விஷ்ணு} தொடர்பு
கொள்ளப்பட்டான். உலகமனைத்தாலும் வழிபடப்படும் அந்த அருள்நிறைந்த தேவனும் {விஷ்ணுவும்}, தேவையான அனைத்தையும் செய்யும்பொருட்டு, காண்பதற்கினிய வனமான பதரிக்குச்
சென்று தவம் பயின்றான். அந்த நேரத்தில் பூமியில் கன்யாகுப்ஜம்[1] என்ற நாட்டில் படைபலமிக்க காதி என்ற பெயரால்
புகழ்பெற்ற பலம்பொருந்திய ஏகாதிபதி ஒருவன் இருந்தான். இருப்பினும் அவன் கானக வாழ்க்கையை மேற்கொண்டான். அப்படி அவன் வனத்திற்கு மத்தியில் வாழ்ந்து
கொண்டிருந்தபோது அவனுக்கு விண்ணுலகின் தேவதையைப் போன்ற அழகுடைய ஒரு மகள் {சத்தியவதி} பிறந்தாள்.
பிருகுவின் மகனான ரிசீகர், அவளைத் தனக்கு மணமுடித்துத் தரும்படி கேட்டார். கடும் தவவாழ்வு வாழ்ந்த அந்த அந்தணரிடம் காதி, "எங்கள் குலத்தில் குறிப்பிட்ட வழக்கம்
இருக்கிறது. இது எனது மூதாதையர்களால் உண்டாக்கப்பட்டது. ஓ புரோகித சாதியில் மிகவும் சிறந்தவரே, இந்த மணமகளை மணக்க, பழுப்பு நிற உடலும், கருப்பு நிறத்தில் ஒரு
காதும், மிகுந்த வேகமும் கொண்ட ஆயிரம் குதிரைகள் வரதட்சணையாகக் கொடுக்க வேண்டும் என்பதை அறிவீராக. ஆனால், ஓ பிருகுவின் மகனே, உம்மைப் போன்ற மதிப்பிற்குரிய
தவசியால் அதைக் கொடுக்க முடியாது. நான் எனது மகளை {சத்தியவதியை} ஒரு பெருமைமிக்க தவசிக்குக் கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது" என்றான் {காதி}. அதற்கு ரிசீகர், "நான்
உமக்கு, பழுப்பு நிறமும், கருப்பு நிறம் கொண்ட காதும், மிகுந்த வேகமும் கொண்ட ஆயிரம் குதிரைகளைத் தருகிறேன். நீர் உமது மகளை எனக்கு மணமுடித்துத் தாரும்"
என்றார். {ரிசீகர்}.
அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி தனது வார்த்தைகளைக் கொடுத்த அவர் {ரிசீகர்}, வருணனிடம் சென்று, "பழுப்பு நிற உடலும், கருப்பு நிறத்தில் ஒரு காதும்,
மிகுந்த வேகமும் கொண்ட ஆயிரம் குதிரைகளை எனக்குக் கொடு. அவை எனது திருமணத்திற்கான கன்யாசுல்கத்திற்காக {ஆண்வீட்டார் பெண்வீட்டாருக்குக் கொடுக்கும் தட்சணைக்காக} வேண்டும்" என்று கேட்டார். வருணனும் அவருக்கு {ரிசீகருக்கு} ஆயிரம் குதிரைகளைக்
கொடுத்தான். அந்தக் குதிரைகள் கங்கை நதியில் இருந்து எழுந்து வந்தன. அதன் காரணமாகவே அந்த இடத்திற்கு குதிரைகள் இறங்கும் இடம் {அஸ்வத் தீர்த்தம்} என்ற பெயர்
ஏற்பட்டது. கன்யாகுப்ஜ நகரத்தில் காதியின் மகளான சத்தியவதி திருமணத்தில் அளிக்கப்பட்டாள். மணமகன் சார்பாக தேவர்களும் வந்திருந்தனர். புரோகிதச் சாதியில் மிகச்
சிறந்தவரான ரிசீகர், ஆயிரம் குதிரைகளை அடைந்து, தேவலோகவாசிகளின் காட்சியும் கிடைத்து, சரியான உருவம் கொண்ட ஒரு மனைவியையும் வென்றார். அவர் {ரிசீகர்} அந்தக் கொடியிடை
மங்கையுடன் {சத்தியவதியுடன்} இன்புற்றிருந்து இது வரை அவர் விரும்பிய அனைத்து விருப்பங்களும் நிறைவேறப்பெற்றார்.
அத்திருமணம் கொண்டாடப்பட்டபிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவரது {ரிசீகரது} தந்தையான பிருகு அவரையும், அவரது மனைவியையும் காண வருகை தந்தார். அவர் தனது பெருமைமிக்க
மகனைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து கூப்பிய கரங்களுடன் அவர் {முனிவர் பிருகு} அருகில் நின்று, அவர் சொல்லும் செயலைச் செய்யக் காத்திருந்தனர். பிறகு
அந்த மரியாதைக்குரிய தவசியான பிருகு, இதயத்தில் மகிழ்ந்து தனது மருமகளிடம் {சத்தியவதியிடம்}, "அழகிய மகளே, ஒரு வரத்தைக் கேள். நீ விரும்பிய எதையும் தர நான்
தயாராக இருக்கிறேன்" என்றார். அதன் பேரில் அவள் அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள். தனக்கும் தனது தாய்க்கும் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கேட்டாள். அவரும்
அவரிடம் கேட்கப்பட்டதை அருளினார்.
பிருகு {தனது மகன் ரிசீகரின் மனைவி சத்தியவதியிடம்}, "மாதவிடாயின் கடைசி காலத்தில் நீயும் உனது தாயும் ஆண் மகவைப் பெற சடங்குகளுடன் நீராட வேண்டும். நீங்கள் இருவரும் தனித்தனியாக இரு வேறு மரங்களை அணைத்துக்
கொள்ள வேண்டும். அவள் அரச மரத்தையும் {Peepal tree}, நீ அத்திமரத்தையும் {Fig tree} அணைக்க வேண்டும். ஓ கடமையுணர்வுள்ள பெண்ணே, என்னால் மிகுந்த கவனத்தோடு தயார்
செய்யப்பட்ட அரிசி மற்றும் பால் குடங்கள் இரண்டு {பால்சோறு கொண்ட குடங்களாக இருக்கலாம்} இங்கே இருக்கின்றன. நான் அந்த மருந்துகளைக் கண்டுபிடிக்க, முழு அண்டத்தையும் சூறையாடி {ransack}, அதன்
{அம்மருந்தின்} சாரத்தை இந்தப் பாலிலும் அரிசியிலும் கலந்திருக்கிறேன். இது மிகுந்த கவனத்துடன் உணவாகக் கொள்ளப்பட வேண்டும்" என்றார். இதைச் சொல்லிவிட்டு,
பார்வையில் இருந்து அவர் {பிருகு} மறைந்து போனார்.
இருப்பினும், அந்த மங்கையர் இருவரும், அரிசிக்குடங்களையும், மரங்களையும் மாற்றிக் கொண்டனர். பிறகு பல நாட்கள் கடந்ததும், அந்த மரியாதைக்குரிய தவசி {பிருகு}
மறுபடியும் வந்தார். அவர் தனது தெய்வீக ஞானத்தால் (நடந்ததை) அறிந்து அங்கு வந்தார். பிறகு பெரும்பலத்தைக் கொண்ட பிருகு, தனது மருமகளான சத்தியவதியிடம், "ஓ
கடமையுணர்வுள்ள பெண்ணே! அழகிய புருவம் கொண்ட எனது மகளே, தவறான அரிசிக்குடத்திலிருந்து உனது உணவைக் கொண்டாய். மேலும் உன்னால் தவறான மரம் அணைக்கப்பட்டது. உன்னை
வஞ்சித்தது உனது தாயே. உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் புரோகித சாதியில் உதித்தாலும், அவன் போர் செய்யும் வகைக்கான குணத்தைப் பெற்றிருப்பான். அதே நேரம் உனது
தாய்க்கு பலம் பொருந்திய மகன் பிறப்பான். அவன் பிறப்பால் க்ஷத்திரியனாக இருந்தாலும், புரோகித வகை வாழ்வை மேற்கொள்வான். அவனது சக்தி பெரியதாக இருக்கும். அவன்
நேர்மையான மனிதர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பான்" என்றார்.
பிறகு அவள் {சத்தியவதி} தனது மாமனாரை {பிருகுவை} மீண்டும் மீண்டும், "எனது மகன் இந்தக் குணத்தை அடையவேண்டாம். எனது பேரன் அதை அடையட்டும்" என்று வேண்டிக் கேட்டாள். ஓ
பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அவர் அதற்கு, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார். இப்படியே அவர் அவளிடம் திருப்தி கொண்டு அவளது கோரிக்கையை நிறைவேற்றினார். பிறகு
அவள் {சத்தியவதி}, எதிர்பார்த்த நாளில் ஜமதக்னி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றெடுத்தாள். அந்தப் பிருகுவின் மைந்தன் {ஜமதக்னி} பிரகாசமும் அருளும் கொண்டிருந்தார். அவர்
வயதிலும், பலத்திலும் வளர்ந்து, வேதஞானத்தில் மற்ற தவசிகளை விஞ்சி இருந்தார். ஓ பரதகுலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, ஒளியின் ஆசிரியனை {சூரியனை} பழிக்கும் வண்ணம்
காந்திமிக்கவராக இருந்து, தன்னியல்புடனும், தன்னிச்சையாகவும், எந்த அறிவுறுத்தலும் இல்லாமல், முழு இராணுவக்கலையையும், நான்குவகையான ஏவுகணை ஆயுத அறிவியலையும்
அறிந்தார்" என்றார் {அக்ருதவ்ரணர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.