The sacrifices preformed by Gaya | Vana Parva - Section 121 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கயன் செய்த வேள்விகள்; பயோஷ்ணி ஆறின் பெருமை; நர்மதை ஆறு; நீலரத்தின மலை; சியவனர் கோபம்...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிருகன் {மன்னன் கயன்} இங்கே வேள்வி செய்த போது, அவன் சோமச் சாறைக் கொடுத்து எதிரிகளின் நகரங்களை அழிக்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். இதனால் இந்திரன் புத்துணர்ச்சி பெற்று மிகவும் திருப்தி கொண்டான். இங்கே தேவர்களோடு சேர்ந்த இந்திரனும், அனைத்து உயிரினங்களின் பாதுகாவலர்களும், புரோகிதர்களுக்குப் பெரும் அளவில் பரிசுகள் கொடுத்து அந்த வேள்வியைக் கொண்டாடினர். இங்கே உலகத்தின் தலைவனான மன்னன் அமிர்தராயசன் {கயன்} ஏழு குதிரை வேள்விகளைச் செய்தபோது, சோமச் சாறால் இடியைத் {வஜரத்தை} தாங்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். மற்ற வேள்விகளில் மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட இன்றியமையாத பொருட்கள் அனைத்தும், அவனால் செய்யப்பட்ட ஏழு வேள்விகளிலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. ஏழு குச்சி கட்டுகள், வேள்வி வளையங்கள், இடங்கள், அகப்பைகள், பாத்திரங்கள், கரண்டிகள் ஆகியன அவனால் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு வேள்வி குச்சியின் மேலும், ஏழு வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
ஓ! யுதிஷ்டிரா, இந்திரனுடன் கூடிய தேவர்கள் சேர்ந்து அவனது புனித சடங்குக்குத் தேவையான வேள்விக் குச்சிகளைப் பளபளக்கும் தங்கத்தில் செய்தார்கள். பூமியின் பாதுகாவலனான கயன் நடத்திய அந்தச் சிறப்பு வாய்ந்த வேள்விகளிலெல்லாம், சோமச்சாற்றைக் குடித்து இந்திரன் திருப்தியடைந்தான். அந்த வேள்விகளை நடத்திய புரோகிதர்களும் அவர்களுக்குக் கிடைத்த பணிக்கொடையில் திருப்தி கொண்டார்கள். சொல்லொணா செல்வத்தைப் பெற்ற அந்தப் புரோகிதர்கள் அவற்றை எண்ணிப் பார்த்தனர். பூமியின் மண் துகள்கள் போல, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல, மழையில் விழும் துளிகள் போல, அவை எவராலும் எண்ண முடியாதவையாக இருந்தன. கயன் கொடுத்த செல்வங்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாதவையாக இருந்தன. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு வேள்விகளில் அவற்றை நடத்திய புரோகிதர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றில் மேற்சொன்னவையைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், அவனால் அளிப்பட்ட பணிக்கொடைகளின் நிறைவை யாராலும் எண்ணிக்கையில் அடக்க முடியாது.
தேவதச்சனால் {விஸ்வகர்மாவால்} கல்வித் தேவதையின் {சரஸ்வதியின்} உருவம் தங்கத்தில் பொறிக்கப்பட்டு, அனைத்துத் திக்குகளில் இருந்தும் வந்திருந்த புரோகித சாதி உறுப்பினர்களுக்குக் {அந்தணர்களுக்கு} பரிசாகக் கொடுக்கப்பட்டன. ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அந்த உயரான்ம கயன் தனது வேள்விச் சடங்குகளைச் செய்த போது, பல இடங்களில் வேள்வித்தூண்கள் நாட்டப்பட்டதால், பூமியின் பரப்பில் சிறிது இடமே எஞ்சியிருந்தது. ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்தப் புனிதச் செயலால் அவன் {கயன்} இந்திரலோகத்தை அடைந்தான். இந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடும் எவரும் கயன் அடைந்த உலகங்களை அடைகிறார்கள். ஆகையால், ஓ! மன்னர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஓ! தடுமாற்றம் இல்லாத இளவரசே! நீயும் உனது தம்பிகளும் இந்த நதியில் நீராட வேண்டும். ஓ! பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அப்போதுதான் நீ இந்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவாய்" என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், அந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடினான். பிறகு ஓ! பாவமற்ற இளவரசே {ஜனமேஜயா}, அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் சேர்ந்து நீலரத்தின மலைக்கும், பெரும் ஆறான நர்மதைக்கும் பயணப்பட்டான். அருளப்பட்ட தவசியான லோமசர் அவனிடம் மகிழ்ச்சிகரமான பல புண்ணிய இடங்களையும், தேவர்களின் புனிதக் கோவில்களையும் சொன்னார். பிறகு அவன் தனது தம்பிகளுடன் அந்த இடங்களுக்குத் தனது விருப்பப்படியும், வசதிக்குத்தக்கவாறும் பயணப்பட்டான் பல இடங்களில் அந்தணர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்து ஆயிரக்கணக்கான பரிசுகளைப் பெற்றனர்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}! நீலரத்தின மலையை அடைந்து, நர்மதையாற்றில் மூழ்குபவன் தேவர்களும் மன்னர்களும் வசிக்கும் உலகங்களை அடைவான். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே! {யுதிஷ்டிர}னே இந்தக் காலம் திரேதா யுகத்துக்கும், கலியுகத்துக்கு இடைப்பட்ட காலமாகும். ஓ! குந்தியின் மகேன {யுதிஷ்டிரா}, இதுவே ஒரு மனிதன் தனது பாவங்களைத் தொலைக்கும் காலமாகும். ஓ மரியாதைக்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில்தான், சர்யாதி வேள்விச்சடங்குகளைச் செய்த போது, இரு தேவ மருத்துவர்களுடன் {அசுவின் தேவர்களுடன்} காணும் உருவத்தில் இந்திரன் வந்து, சோமச்சாற்றைப் பருகினான். கடும் தவமிருந்த பிருகுவின் மகன் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டு, அவனை அசைவற நிற்கச் செய்து, இந்த இடத்தில் தான் சுகன்யா என்ற இளவரசியை மனைவியாக அடைந்தார்."
யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, "பகாசுரனைத் தண்டித்தவனான ஆறு குணங்களைக் கொண்டவன் {இந்திரன்}, சியவனரால் எப்படி அசைவற்று நிற்க வைக்கப்பட்டான்? எக்காரணத்திற்காக அந்தப் பெரும் பலம் வாய்ந்த தவசியானவர் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டார்? ஓ அந்தணரே {லோமசரே}, அவர் தான் தேவ மருத்துவர்களைச் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதிக்கு உயர்த்தியவரா? இவை அனைத்தையும், சரியாக அது நடந்த படியே மதிப்பிற்குரிய நீர் மறுபடி எனக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன் லோமசரிடம்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.