The counsel of Satyaki | Vana Parva - Section 120 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பாண்டவர்களுக்காக நாம் போராடலாம் என்று யாதவர்களிடம் சாத்யகி ஆலோசனை கூறுவது; யுதிஷ்டிரன் அதை ஏற்கமாட்டான் என்று கிருஷ்ணன் சொல்வது; யாதவர்களும் பாண்டவர்களும் பிரிவது; பாண்டவர்கள் தங்கள் புனித பயணத்தைத் தொடர்வது...
சாத்யகி சொன்னான், "ஓ! ராமா {பலராமா}, இது புலம்புவதற்கான நேரமன்று; யுதிஷ்டிரன் ஒரு வார்த்தையும் பேசவில்லையென்றாலும் இந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்க காரியத்தைச் செய்வோமாக. தன் நன்மைகளைக் கவனித்துக் கொள்ள ஆட்களிருப்பவர்கள், தாங்களே எதையும் செய்து கொள்வதில்லை; சைப்பியனும் {சிபியும்} மற்றவர்களும் யயாதிக்குச் செய்ததைப் போல, தங்கள் வேலையைச் செய்து கொள்ள அவர்களுக்குப் பிறர் இருக்கிறார்கள். அதே போல, ஓ ராமா! {பலராமா}, தங்கள் சார்பாக, தங்கள் வேலையைச் செய்யப் பிறரை மனிதர்களுக்குத் தலைவர்களாக நியமித்து, காப்பாளர் உள்ளவராக இருப்பவர்கள் ஆதரவற்றவர்கள் போலச் சிரமத்தை அடைவதில்லை. மூன்று உலகங்களையும் சேர்த்துக் காக்கக்கூடியவர்களான ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும் மற்றும் பிரத்யும்னன், சாம்பன் ஆகியோரையும் என்னையும் காப்பாளராகக் கொண்டவர்கள் தானே பாண்டுவின் மகன்கள். அப்படியிருக்கும்போது இந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் தன் தம்பிகளுடன் கானகத்தில் எப்படி வாழ்கிறார்?
பலதரப்பட்ட ஆயுதங்களுடனும், கவசங்களுடனும் தசாஹர்களின் படை கிளம்ப இந்த நாளே தகுந்தது. விருஷ்ணிகளின் படைகளால் திருதராஷ்டிரன் மகன்கள் நசுக்கப்படட்டும். அவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து மரணத் தேவன் வசிப்பிடத்திற்குச் செல்லட்டும். கோபத்தால் தூண்டப்பட்டால், கொம்பாலான வில்லைத் தாங்குபவன் {கிருஷ்ணன் - சாரங்கம் என்ற வில்லைத் தாங்குபவன்} தனியொருவனாகவே இந்த முழுப் பூமியையும் சூழ முடியும். தேவர்களின் தலைவனான பெரும் இந்திரன் விரித்திரனைக் கொன்றதைப் போலத் திருதராஷ்டிரன் மகனை அவனுடைய ஆதரவாளர்களுடன் சேர்த்து நீர் கொல்ல வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், எனக்குச் சகோதரனும், நண்பனும், குருவும் ஆவான். மேலும் அவன் இரண்டாவது கிருஷ்ணனைப் போன்றவன். தகுதியுடைய மகனை விரும்பும் மனிதன், முரண்படாத சீடனைத் தேடும் குரு ஆகியோர் இதன்காரணமாகவே {தீமை அழிய} அவற்றைத் தேடுகின்றனர். இதன் காரணமாகவே, செயல்களில் சிறந்த செயலும், செய்து முடிக்கக் கடினமானதுமான அந்த அற்புதமான வேலையைச் செய்ய நேரமும் வந்திருக்கிறது. துரியோதனனின்1 கணைகளை எனது அற்புதமான ஆயுதங்களால் நான் சிதறடிப்பேன். பாம்புகள், நஞ்சு, நெருப்பு ஆகியவற்றுக்குச் சற்று குறைந்த எனது அற்புதமான கணைகளைக் கொண்டு, கோபத்துடன் நான் அவனது தலையைக் கொய்வேன். கூரிய முனை கொண்ட எனது வாளால், போர்க்களத்தில் அவனது தலையை உடலில் இருந்து அறுப்பேன். பிறகு அவனது ஆதரவாளர்களையும், துரியோதனனையும்2 மற்ற அனைத்து குரு குலத்தவரையும் கொல்வேன்.
ஓ! ரோகிணியின் மகனே {பலராமா}, பிரளயகாலத்தில் பெரும் புற்குவியலை எரிக்கும் நெருப்பு போலப் போர்க்களத்தில் நான் எனது ஆயுதங்களைக் கொண்டு போர்வீரர்களில் சிறந்தவர்களைக் கொல்லும்போது பீமனின் ஆதரவாளர்கள் இதயத்தில் மகிழட்டும். பிரத்யும்னன் அடிக்கும் கூரிய கணைகளைக் கிருபர், துரோணர், விகர்ணன், கர்ணன் ஆகியோரால் தாங்க முடியாது. அர்ஜுனன் மகன் {அபிமன்யு} வீரத்தை நான் அறிவேன். அவன் போர்க்களத்தில் கிருஷ்ணனின் மகனைப் {பிரத்யும்னனைப்} போன்றவன். சாம்பன் தனது ஆயுதங்களின் பலத்தால் துச்சாசனனைத் தண்டிக்கட்டும். அவன் {சாம்பன்}, துச்சாசனனையும், அவனது தேரோட்டியும், அவனது தேரையும் தனது பலத்தால் அழிக்கட்டும்.
களத்தில் நடக்கும் போரில் ஜாம்பவதியின் மகன் {பிரத்யும்னன்} தாங்க முடியாதவனாக இருப்பான். எதுவும் அவனது பலத்தைத் தாங்க முடியாது. அவன் சிறுவனாக இருந்த போது சம்பரன் என்ற அசுரனின் படை அவனால் விரைவாக விரட்டப்பட்டது. உருண்ட தொடை கொண்டவனும், மிக நீண்ட பருத்த கரங்கள் கொண்டவனுமான அஸ்வசக்ரன் இவனாலேயே {பிரத்யும்னனாலேயே} கொல்லப்பட்டான். தேரில் இருக்கும்போது போரில் வல்லவனாக இருக்கும் சாம்பனுடைய தேரை யார்தான் யுத்தத்தில் நேர் கொண்டு எதிர்த்து வர முடியும்? மரணத்தின் பிடிக்குள் வரும் மனிதனால் எவ்வாறு தப்பிக்க முடியாதோ, அப்படியே. போர்களத்தில் அவனது பிடிக்குள் வரும் எவரும் எப்படித் தப்ப முடியும்? வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மகன் தனது கணைகளின் நெருப்பால், தேரில் இருக்கும்போது வலியவர்களான பீஷ்மர் துரோணர் மற்றும் தனது மகன்களால் சூழப்பட்ட சோமதத்தன் ஆகியோர் கொண்ட எதிரிகளின் படையை எரித்துப் போடுவான்.
போராயுதங்களை எடுத்து, கைகளில் அற்புதமான கணைகளையும், சக்ராயுதத்தையும் கொண்டிருக்கும் கிருஷ்ணனுக்கு நிகராக, தேவர்களையும் சேர்த்து இந்த உலகத்தில் யார்தான் இருக்கிறார்கள்? அநிருத்தன் தனது கேடயத்தையும் வாளையும் எடுத்துக் கொள்ளட்டும். அவன் திருதராஷ்டிரன் மகன்களின் தலைகளை உடலில் வெட்டியெடுத்து இந்தப் பூமியின் பரப்பை நிரப்பட்டும். உணர்வற்ற அவர்களது உடலை எடுத்து புல் மூடிய அந்தப் பூமியின் மேல் எழுப்பப்படும் வேள்விப் பீடத்தில் எறியட்டும். கதன், உலூகன் {உல்முகன்}, பாகுகன், பானு, நீதன், யுத்தத்தில் வீரனான இளம் நிசடன், கடும்போர் செய்கிறவர்களான சாரணன், சாருதேஷ்ணன் ஆகிய அனைவரும் தங்கள் குலத்துக்குகந்த சாதனைகளைப் புரியட்டும்.
சாத்வதர்கள் மற்றும் சூரர்களின் ஒன்றுபட்ட படை, விருஷ்ணிகள், போஜர்கள் மற்றும் அந்தகர்களின் சிறந்த படைவீரர்களுடன் சேர்ந்து போர்க்களத்தில் திருதராஷ்டிரன் மகன்களைக் கொன்று தங்கள் புகழை உலகம் முழுவதும் பரப்பட்டும். அறம் பயில்பவர்களில் மிக மேன்மையான யுதிஷ்டிரர் சூதாட்டத்தின் போது குரு குலத்தின் மிக நேர்மையானவர் {பீஷ்மர்} முன்பு எடுத்துக்கொண்ட உறுதி நிறைவேறும் வரை அபிமன்யு இந்தப் பூமியை ஆளட்டும். அதன்பிறகு, நமது கணைகளால் அவரது எதிரிகள் வீழ்ந்த பிறகு அந்த அறம் சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பூமியைப் பாதுகாக்கட்டும். அப்போது இந்தப் பூமியல் திருதராஷ்டிரன் மகன்களென்று யாரும் இருக்க மாட்டார்கள். தேரோட்டியின் மகனும் {கர்ணனும்} இருக்க மாட்டான். இதுவே நாம் செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும். இது நிச்சயம் நமக்குப் புகழைத் தரும்" என்றான் {சாத்யகி}.
அதற்குக் கிருஷ்ணன், "ஓ மது குலத்தின் வழித்தோன்றலே {சாத்யகியே}!, நீ சொல்வது உண்மை என்பதில் சந்தேகமில்லை; ஓ பலமும் வீரமும் கொண்டவனே, உனது வார்த்தைகளை நாங்கள் ஏற்கிறோம்! ஆனால், இந்தக் குரு குலத்தின் காளை (யுதிஷ்டிரன்), தனது கரத்தின் பலத்தால் வெல்லப்படாத வரை, இந்தப் பூமியின் ஆட்சி அதிகாரத்தை ஏற்கமாட்டார். இன்பத்திற்காகவோ, பலத்திற்காகவோ, பேராசைக்காகவோ யுதிஷ்டிரர் தனது சாதியின் {சத்திரிய சாதியின்} விதிகளைக் கைவிடமாட்டார். பீமனும் அர்ஜுனனும் இதை ஏற்க மாட்டார்கள். இரட்டைச் சகோதரர்களும் {நகுலனும் சகாதவேனும்}, துருபதன் மகளான கிருஷ்ணையும் {திரௌபதியும்} இதை ஏற்க மாட்டார்கள். ஓநாயின் பசி கொண்டவனும் (பீமனும்), செல்வங்களை வெல்பவனும் (அர்ஜுனனும்), இந்த முழு உலகிலும் போரில் நிகரற்றவர்கள் ஆவார்கள். மாத்ரியின் இரு மகன்களும் {நகுல-சகாதேவன்} இவரது காரியத்தை நிறைவேற்ற இருக்கும்போதும், ஏன் இந்த மன்னன் இந்த முழு உலகத்தையும் ஆளக் கூடாது? பாஞ்சாலத்தின் உயர் ஆன்ம ஆட்சியாளனும், கேகய மன்னனும் சேர்ந்து தங்கள் பலத்தால் ஒன்றுபட்டால், யுதிஷ்டிரரின் எதிரிகள் அழிவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.
யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ! மது குலத்தின் வழித்தோன்றலே {சாத்யகி}! நீ இப்படிப் பேசுவது எனக்கு வியப்பைத் தரவில்லை. ஆனால் எனக்கு, ஆட்சி அதிகாரத்தை விட உண்மையே முதல் கருதுகோளாகப் படுகிறது. ஆனால் கிருஷ்ணன் மட்டுமே என்னைச் சரியாக அறிவான்; அதே போல, நானே (உண்மையில்) கிருஷ்ணனைச் சரியாக அறிவேன். ஓ வீரம் கொண்டவனே! ஓ மது குலத்தின் வழித்தோன்றலே! வீரச்செயல்களுக்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவன் {கிருஷ்ணன்) கண்டவுடன், ஓ சினி குலத்தவரில் மிகத்துணிவுள்ளவனே {சாத்யகி}, அந்த அழகிய முடி கொண்டவன் (கிருஷ்ணன்) சுயோதனனை {துரியோதனனை} வீழ்த்துவான். தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த வீரர்கள் இன்று திரும்பிச் செல்லட்டும். அவர்களே எனது காப்பாளர்களும் மனிதர்களில் முதன்மையானவர்களும் ஆவர். அவர்களால் நான் இன்று பார்க்கப்பட்டேன். ஓ! அளவிடமுடியா பலம் கொண்டவனே! அறத்தின் வழியில் இருந்து எப்போதுமே விழக்கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கும்போது, நான் மீண்டும் உன்னைப் பார்ப்பேன்" என்றான்.
பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி, மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தி, இளையவர்களை அணைத்துக் கொண்ட பிறகு, அந்த யது குலத்து வீர மனிதர்களும், பாண்டுவின் மகன்களும் பிரிந்து சென்றனர். யதுக்கள் தங்கள் இல்லங்களுக்கு மீண்டும் சென்றனர்; பாண்டவர்கள் புனித இடங்களுக்குச் செல்லும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். கிருஷ்ணனைப் பிரிந்த பிறகு, அந்த அறம் சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளுடனும், பணியாட்களுடனும், லோமசருடனும், வடிகட்டப்பட்ட சோமச் சாறு கலந்த நீருடைய புனிதமான நதியான பயோஷ்ணிக்குச் சென்றான். அங்கே அந்த உயர் ஆன்ம யுதிஷ்டிரன், பல இரு பிறப்பாளர் வர்க்கத் தலைவர்களால் {அந்தணர்களால்} புகழ்ந்து வரவேற்கப்பட்டான். அவர்கள் {அந்தணர்கள்} அவனை அங்கே கண்டு மகிழ்ந்தனர்.
1. இங்கே கர்ணன் என்று வர வேண்டும் என நினைக்கிறேன்↩
2. இங்கே மறுபடியும் துரியோதனன் என்று வர அவசியமில்லை. ஆகையால் முதலில் கர்ணன் என்றே வர வேண்டும் என்று நினைக்கிறேன்}↩
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.