Chyavana married sukanya | Vana Parva - Section 122 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சியவனர் கடுந்தவம் இருப்பது; சியவனரைச்சுற்றி எறும்புப்புற்று வளர்வது; சர்யாதி தனது பணியாட்களுடனும் நாலாயிரம் பெண்களுடனும், தனது ஒரே மகளுடனும் அங்கே வருவது; சுகன்யாவைக் கண்டு சியவனர் மயங்குவது; எறும்புப்புற்றில் தெரிந்த சியவனரின் கண்களைச் சுகன்யா முள்ளால் துளைப்பது; சியவனர் கோபம் கொள்வது; சர்யாதி சியவனரைச் சாந்தப்படுத்துவது; சுகன்யா சியவனர் திருமணம்...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பெரும் முனிவரான பிருகுவுக்குச் சியவனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்திருந்தார். மிகப்பிரகாசமானவராக அவர் {சியவனர்} அந்தத் தடாகத்தின் அருகே தவமிருக்கத் தொடங்கினார். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}! ஓ மனிதர்களின் பாதுகாவலா! பெரும் சக்தி கொண்ட அவர் {சியவனர்} வீர நிலை என்ற ஆசனத்தில் {வீராசனம்} நீண்ட காலத்திற்கு அசைவற்று அதே இடத்தில் அமர்ந்திருந்தார். கொடிகள் சூழ்ந்த அவரை {சியவனரைச்} சுற்றி எறும்புப்புற்று {கரையான்புற்று} உண்டாயிற்று. அதன் பிறகு நீண்ட காலம் கழித்து, திரளான எறும்புக் கூட்டம் அவரை மொய்த்தது. முழுதும் எறும்புகளால் மூடப்பட்ட அந்த மதிநுட்பமுடைய தவசி {சியவனர்} கிட்டத்தற்ற மண்குவியல் போலவே காணப்பட்டார். அப்படி எறும்புப்புற்றால் மூடப்பட்ட அவர் தொடர்ந்து தவம்பயின்று வந்தார்.
அதன் பிறகு, நீண்ட காலம் கடந்து, சர்யாதி என்ற பெயர் படைத்த பூமியின் ஆட்சியாளன், அந்த இனிமையான அற்புதமான தடாகத்துக்கு கேளிக்கைக்காக வந்தான். ஓ பாரதக் குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அவனோடு சேர்ந்து அவனால் {மன்னன் சர்யாதியால்} மணம்புரியப்பட்ட நாலாயிரம் பெண்களும் அங்கே வந்தனர். மேலும், அழகான புருவம் கொண்ட அவனது {மன்னன் சர்யாதியின்} மகளான சுகன்யா என்ற பெயர் கொண்டவளும் அவனோடு வந்திருந்தாள். தேவர்கள் அணியும் ஆபரணங்கள் பூண்டிருந்த அவள் {சுகன்யா}, தனது பணிப்பெண்கள் சூழ நடந்து, பிருகுவின் மகன் {சியவனர்} அமர்ந்திருந்த அந்த எறும்புப் புற்றை அணுகினாள். பணிப்பெண்கள் சூழ இருந்த அவள் {சுகன்யா}, அழகான இயற்கைக் காட்சிகளையும், உயர்ந்த மரங்கள் நிரம்பிய வனத்தையும் கண்டு உல்லாசமாக இருக்க ஆரம்பித்தாள். இளமையின் துவக்கத்தில் இருந்த அவள் {சுகன்யா} அழகாகவும், எளிதில் காதல் கொள்ளத்தக்க வகையிலும், விளையாட்டின் மீது நாட்டம் கொண்டவளாகவும் இருந்தாள். பூத்துக்குலுங்கும் காட்டு மரங்களின் கிளைக்குச்சிகளை அவள் உடைத்துக் கொண்டிருந்தாள்.
புத்திக்கூர்மை கொண்ட பிருகுவின் மகன் {சியவனர்}, பணிப்பெண்களற்று, ஒற்றையாடையுடனும், ஆபரணங்கள் பூணப்பட்டும் இருந்த அவளை {சுகன்யாவை} நடமாடும் மின்னலெனக் கண்டார். அவளை {சுகன்யாவை} அக்கானகத்தில் தனிமையில் கண்ட மிகப் பிரகாசமுள்ள அந்தத் தவசி {சியவனர்}, ஆசையால் ஈர்க்கப்பட்டார். தவச் சக்தி கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {சியவனர்}, மெல்லிய குரலில் அந்த மங்களகரமானவளை {சுகன்யாவை} அழைத்தார். ஆனால் அவளுக்கு அவரது குரல் கேட்கவில்லை. பிறகு, அந்த எறும்புப் புற்றில் தெரியும் அந்தப் பிருகு மகனின் {சியவனரின்} கண்களைக் கண்ட சுகன்யா ஆர்வமிகுதியால் தனது உணர்வை இழந்து, "இது என்ன?" என்று கேட்டவாறு, ஒரு முள்ளை எடுத்து அந்தக் {முனிவர் சியவனரின்} கண்களைத் துளைத்தாள். அவளால் கண்கள் துளைக்கப்பட்ட அவர் மிகுந்த வலியை உணர்ந்து கோபமடைந்தார். (கோபத்தால்) அவர் சர்யாதியின் படையில் இருந்தவர்களின் இயற்கை அழைப்புகளைத் {மலம் மற்றும் சிறுநீர் கழிதலைத்} தடை செய்தார்.
இப்படி இயற்கையின் அழைப்புகள் தடைசெய்யப்பட்ட அந்த மனிதர்கள் மிகுந்த துன்பத்தை அடைந்தனர். இந்நிலைகளைக் கண்ட மன்னன் {சர்யாதி} "முதியவரும், எப்போதும் தவத்திலிருப்பவரும், கோபம் கொண்டவருமான பிருகுவின் சிறப்புமிகுந்த மகனுக்கு {சியவனருக்கு} யார் தீங்கிழைத்தது.? அறிந்தவர்கள் விரைவாக எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். அதற்குப் படைவீரர்கள், "அம்முனிவருக்கு யாரும் தீங்கிழைத்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நீர் சொல்வது போல இருந்தால், இவ்விஷயத்தை நீர்தான் விசாரித்து அறியவேண்டும்" என்றனர். அதன் பேரில் அந்தப் பூமியின் ஆட்சியாளன், (சந்தர்ப்பத்திற்கேற்ப) அச்சுறுத்தல், சமரசம் என்ற இரண்டையும் பயன்படுத்தித் தனது நண்பர்களிடம் (அச்சூழ்நிலை பற்றி) விசாரித்தான். ஆனால் அவர்களும் எதையும் அறியவில்லை.
இயற்கை அழைப்புகள் தடைசெய்யப்பட்டதால் துயரப்பட்ட படையினரைக் கண்டும், தனது தந்தையின் துயரத்தைக் கண்டும், சுகன்யா தனது தந்தையிடம், "நான் கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, ஒரு எறும்புப்புற்றில் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டேன். அதை மின்மினிப் பூச்சி என்றெண்ணி அதை நெருங்கித் (முள்ளால்) துளைத்தேன்" என்றாள். இதைக் கேட்ட சர்யாதி உடனே அந்த எறும்புப்புற்றுக்கு வந்து வயதிலும், தவத்திலும் முதிர்ந்த பிருகுவின் மகனைக் {சியவனரைக்} கண்டான். பிறகு அந்தப் பூமியின் அதிபதி கூப்பிய கரங்களோடு (அத்தவசியைக்) கண்டு, "சிறுபிள்ளைத்தனமாக அறியாமையில் எனது மகள் {சுகன்யா} செய்த இந்தச் செயலை மன்னிப்பதே உமக்குத் தகும்" என்றான். பிருகுவின் மகனான சியவனர், "என்னை அவமதித்த இவள், கர்வம் நிறைந்து எனது கண்களைத் துளைத்தாள். ஓ மன்னா {சர்யாதி}, அழகுடன் கூடிய இவள் {சுகன்யா}, அறியாமையிலும், சபலத்தாலும் தனது உணர்வுகளை இழந்தாள். உனது மகள் எனது மணமகளாக வேண்டும். அந்த ஒரு நிபந்தனையால் மட்டுமே உன்னை மன்னிப்பேன் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்" என்றார் {சியவனர்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்தத் தவசியின் {சியவனரின்} வார்த்தைகளைக் கேட்ட சர்யாதி, சற்றும் நேரமும் பொறுக்காமல், தனது மகளை அந்த உயர் ஆன்ம சியவனருக்கு அளித்தான். அந்த மங்கையின் கரத்தைப் பெற்ற அந்தப் புனிதமானவர் {முனிவர் சியவனர்} மன்னனிடம் {சர்யாதியிடம்} திருப்தி கொண்டார். அந்த முனிவரின் அருளை வென்ற அந்த மன்னன் {சர்யாதி} தனது படைகளுடன் நகரத்துக்குத் திரும்பினான். களங்கமற்ற சுகன்யாவும் அந்தத் தவசியை {சியவனரை} கணவராக அடைந்து, அவரது தவப்பயிற்சியின்போதும், விதிகளைக் கடைப்பிடிக்கும்போதும் அவரை நன்றாகப் பராமரித்தாள். அந்த அழகிய முகம் கொண்டவள் {சுகன்யா}, கபடமற்றவளாக இருந்து விருந்தினர்களுக்கும், புனித நெருப்புக்கும் பணிவிடை செய்து சியவனரை வழிபட்டு வந்தாள்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.