Chyavana attained youth | Vana Parva - Section 123 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
குளித்துவிட்டு வந்த சுகன்யையைக் கண்ட அசுவினி தேவர்கள், அவள் அழகைக் கண்டு பாராட்டுவது; ஒரே உருவத்தில் இருக்கும் அவளது கணவர் மற்றும் தங்கள் இருவர் ஆகிய மூவரில் ஒருவரை அவள் கணவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், அவளது கணவருக்கு {சியவனருக்கு} இளமையைத் திரும்ப அளிப்பதாக அசுவினிகள் கூறுவது; சுகன்யை இச்செய்தியை சியவனருக்குச் சொல்வது; சியவனர் அதற்கு இணங்குவது; அசுவினிகள் சியவனரை இளமையடையச் செய்வது; மூவரில் தனது கணவரையே சுகன்யைத் தேர்ந்தெடுப்பது; சோமச்சாற்றைப் பருகும் நிலையை அசுவினிகளுக்குக் கொடுப்பதாகச் சியவனர் உறுதியளிப்பது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முறை தேவர்களான அசுவினி இரட்டையர்கள் சுகன்யையை, அவள் குளித்து முடித்து வெற்றுடலோடு இருக்கும்போது காண நேர்ந்தது. தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகளைப் போல அற்புதமான உறுப்புகள் கொண்டவளைக் {சுகன்யையைக்} கண்ட நாசத்யர்களான {மூக்கில் பிறந்தவர்களான} அசுவினிகள் அவளை {சுகன்யையை} நெருங்கி அவளிடம், "ஓ! அழகிய வடிவம் கொண்ட தொடைகளைக் கொண்டவளே, நீ யாருடைய மகள்? நீ இந்தக் கானகத்தில் என்ன செய்கிறாய்? ஓ! மங்களகரமானவளே, அற்புதமான அருள் கொண்டவளே, இவற்றை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஆகையால் நீ எங்களுக்கு அதைச் சொல்", என்றனர்.
இதன் பேரில் அவள் {சுகன்யா} அந்தத் தேவர்களில் முதன்மையானவர்களிடம் {அசுவினிகளிடம்} நாணத்துடன், "நான் சர்யாதியின் மகளென்றும், சியவனரின் மனைவியென்றும் அறிந்து கொள்ளுங்கள்" என்றாள். இதைக்கேட்ட அசுவினிகள் புன்னகையுடன், "ஓ! நற்பேறு பெற்றவளே {சுகன்யா}, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவருக்கு {சியவனருக்கு} உனது தந்தை {சர்யாதி} உன்னை ஏன் அளித்தான்? ஓ! மருட்சியுடைய மங்கையே, நிச்சயமாக நீ மின்னலைப் போல இந்தக் கானகத்தில் பிரகாசிக்கிறாய். ஓ! பெண்ணே, தேவர்களில் கூட இப்படி எங்கள் கண்களைக் கூசச் செய்தவளை நாங்கள் கண்டதில்லை. ஓ! மங்கையே, ஆபரணங்களற்று, மகிழ்ச்சிகரமான ஆடைகளற்று இருக்கும்போதே நீ இந்தக் கானகத்தில் மிகுந்த அழகுள்ளவளாக இருக்கிறாய். ஓ! குற்றமற்ற உறுப்புகள் கொண்டவளே, இப்படி அழுக்கும் சேறும் பூசப்பட்டவளாக இருந்தால் பிரகாசிக்க மாட்டாய். ஆனால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பபட்டு, கண்கவர் ஆடைகளை உடுத்தினால் மிகவும் பிரகாசிப்பாய். ஓ! அற்புதமான மங்கையே, ஒளிவீசும் புன்னகை கொண்டவளே, மூப்பினால் தளர்ந்தவரும், இன்பம் உணர முடியாத நிலையை அடைந்தவரும், உன்னைப் பராமரிக்க முடியாதவருமான கணவரை {சியவனரை}, இந்தத் துயரத்திலும் நீ ஏன் சேவிக்கிறாய்? ஓ! தெய்வீக அழகு கொண்ட மங்கையே, நீ சியவனரைக் கைவிட்டு, எங்களில் ஒருவரை கணவராக ஏற்பாயாக. உனது இளமையைக் கனியற்றதாக்குவது உனக்குத் தகாது" என்றனர் {அசுவினிகள்}.
இப்படிச் சொல்லப்பட்ட சுகன்யா, அந்தத் தேவர்களிடம், "நான் என்னை எனது கணவரான சியவனருக்கு அர்ப்பணித்திருக்கிறேன். அதில் ([ஒரு மனிதரிடம் விசுவாசத்துடன் இருக்கும்] எனது நேர்மையில்) உங்கள் சந்தேகங்களை ஊக்குவிக்காதீர்கள்" என்றாள். அதற்கு அவர்கள் {அசுவினிகள்} மீண்டும் அவளிடம் {சுகன்யாவிடம்}, "நாங்கள் இருவரும் தேவ மருத்துவர்கள். நாங்கள் உனது தலைவனை இளமையும் அருளும் கொண்டவராக மாற்றுகிறோம். அதன்பிறகு, நீங்கள் எங்களில் ஒருவரை, அதாவது நாங்கள் இருவர் மற்றும் உனது கணவர் ஆகிய மூவரில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ! மங்களகரமானவளே, இதற்கு உறுதியளித்து நீ உனது கணவரை இங்கே அழைத்து வா" என்றனர்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் {அசுவினிகள்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட அவள், பிருகுவின் மகனிடம் {சியவனரிடம்} சென்று அந்த இரண்டு தேவர்களும் {அசுவினிகளும்} சொன்னதைச் சொன்னாள். அவளது செய்தியைக் கேட்ட சியவனர், தனது மனைவியிடம் {சுகன்யாவிடம்}, "அப்படியே செய்" என்றார். தனது தலைவனின் அனுமதியைப் பெற்ற அவள் {சுகன்யா}, (அசுவினி தேவர்களிடம் சென்று) அவர்களிடம், "அப்படியே செய்யுங்கள்" என்றாள். "அப்படியே செய்யுங்கள்" என்ற அவளது வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் {அசுவினிகள்} மன்னனின் {சர்யாதியின்} மகளிடம் {சுகன்யாவிடம்}, "உனது கணவர் நீருக்குள் இறங்கட்டும்" என்றனர்.
அழகை அடைய விரும்பிய சியவனரும் விரைவாக நீருக்குள் இறங்கினார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த அசுவினி இரட்டையர்களும், அந்த நீரின் பரப்புக்குள் மூழ்கினார். அடுத்த நொடியில் அவர்கள் அனைவரும் அழகான உருவத்துடனும், இளமையுடனும், காதில் மெருகூட்டப்பட்ட குண்டலங்களுடனும் தோன்றினர். பார்வைக்கு ஒரே உருவத்தைக கொண்ட அவர்கள் அவளிடம் {சுகன்யாவிடம்}, "ஓ! நற்பேறு கொண்டவளே, எங்களில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ! அழகானவளே, உனது எண்ணத்துக்குத் திருப்தி உண்டாக்கும் ஒருவரை நீ உனது தலைவனாகத் தேர்ந்தெடு" என்றனர். அவர்கள் அனைவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பினும், அவள் ஆழ்ந்து ஆராய்ந்து, கடைசியாகத் தனது கணவரின் அடையாளத்தை உறுதி செய்து, சரியாக அவரையே {சியவனரையே} தேர்வு செய்தாள்.
பேராசைப் பட்ட அழகையும், தனது மனைவியையும் அடைந்த மிகுந்த சக்தி கொண்ட சியவனர், மிகவும் திருப்தி கொண்டு அந்த நாசத்ய {நாசியில் பிறந்த அசுவினி} தேவர்களிடம், "உங்கள் கைகளால் ஒரு முதிர்ந்தவனான நான், இளமையும் அழகும் பெற்று எனது இந்த மனைவியையும் அடைந்ததால், மிகவும் திருப்தி கொண்ட நான், நிச்சயமாக உங்களைத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்னிலையில் சோமச் சாற்றைப் பருகுபவர்களாக ஆக்குவேன். இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்றார் {சியவனர்}. இதைக் கேட்ட அந்த இரட்டையர்கள் {அசுவினிகள்} மிகுந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு சியவனரும் சுகன்யாவும் தேவர்களைப் போலத் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.