Chyavana paralysed Indra | Vana Parva - Section 124 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சியவனர், தனது மாமனான சர்யாதியிடம் சொல்லி ஒரு வேள்விக்கு ஏற்பாடு செய்து, சோமச்சாற்றின் பங்கை அசுவினிகளுக்குப் படைக்க முயற்சிப்பது; இந்திரன் அதற்குத் தடை சொல்வது; அதை மீறி கொடுக்க முயன்ற சியவனர் மேல் வஜ்ரத்தை இந்திரன் ஓங்க, சியவனர் இந்திரனை அசைவற்றவனாக்கியது; சியவனரால் உண்டாக்கப்பட்ட பிசாசு இந்திரனிடம் செல்வது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "சியவனர் இளமையைப் பெற்றார் என்ற செய்தி சர்யாதியை அடைந்தது. மிகவும் திருப்தி கொண்ட அவன் {சர்யாதி}, தனது படைகளுடன், பிருகு மைந்தனின் {சியவனரின்} ஆசிரமத்திற்கு வந்தான். அங்கே சியவனரும், சுகன்யாவும் தேவர்களிடம் எழுந்த இரு பிள்ளைகள் போல இருப்பதைக் கண்டான். அவனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் அடைந்த மகிழ்ச்சி பெரியதாக இருந்தது. அவன் மொத்த பூமியையும் வென்றுவிட்டதாகக் கருதினான். அந்தத் தவசியால் {சியவனரால்} அந்தப் பூமியின் ஆட்சியாளனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் மரியாதையாக வரவேற்கப்பட்டனர். பிறகு அந்த மன்னன் {சர்யாதி}, அந்தத் தவசியின் {சியவனரின்} அருகில் அமர்ந்து, மகிழ்ச்சிகரமாக விவாதித்தான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு, அந்தப் பிருகுவின் மைந்தர் {சியவனர்} அந்த மன்னனிடம் {சர்யாதியிடம்} இன்சொல்பேசி, "ஓ! மன்னா, நான் உனக்கு ஒரு வேள்வியைச் செய்வேன். ஆகையால் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வாயாக" என்றார். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அதன்பேரில், பூமியின் பாதுகாவலனான சர்யாதி, மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்று, சியவனரின் கோரிக்கையைப் பாராட்டினான். பிறகு வேள்வி செய்யக்கூடிய ஒரு நன்னாளில் சிறப்பாகச் சொல்லும் அளவுக்கு ஒரு வேள்விக் கோவிலை ஏற்படுத்தி அதில் விரும்பத்தக்க அனைத்து பொருட்களையும் வைத்தான். அங்கே பிருகுவின் மகனான சியவனர், மன்னனின் {சர்யாதியின்} புரோகிதராகப் பணியை ஏற்றார். அந்த இடத்தில் நடந்த அற்புதமான நிகழ்ச்சிகளை இனி சொல்கிறேன் கேள்.
சியவனர், தேவ மருத்துவர்களான அசுவினிகளுக்குப் படைப்பதற்காகச் சோமச்சாற்றில் ஒரு பகுதியை எடுத்து வைத்தார். அந்தத் தவசி அதைத் தெய்வீக அசுவினிகளுக்குப் படைப்பதற்கு எத்தனித்த போது, இந்திரன், "அசுவினிகளான இவர்கள் இருவருக்கும் சோமச்சாற்றின் பகுதியை அடைவதற்கு உரிமையில்லை என்பது எனது கருத்து. இவர்கள் சொர்க்கத்தில் தேவர்களுக்கு மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்களது தொழிலே, இவர்களுக்கு (சோமச்சாற்றைப் பெறுவதில்) உரிமையில்லை என்பதைப் பறைசாற்றுகிறது" என்று தனது தடையைச் சொன்னான்.
அதற்குச் சியவனர் {இந்திரனிடம்}, "வலிமைமிக்க ஆன்மாக் கொண்ட இவர்கள் இருவரும் பெரும் தொழிலைச் செய்பவர்களே! இவர்கள் அசாதாரண அழகும் அருளும் கொண்டவர்கள். ஓ! இந்திரா, இவர்கள் என்னை நித்திய இளமை கொண்டவனாக, தேவர்களுக்கு இணையானவனாக மாற்றியிருக்கிறார்கள். வடித்த சோமச்சாற்றைப் பெறும் தகுதியை நீயும் பிற தேவர்களும் ஏன் பெற வேண்டும்? இவர்கள் {அசுவினிகள்} ஏன் பெறக்கூடாது? ஓ! தேவர்களின் தலைவா, ஓ எதிரிகளின் நகரங்களை அழிப்பவனே {இந்திரா}, அசுவினிகளும் தேவர்கள் என்ற மதிப்புடையவர்கள் என்பதை நீ அறிவாயாக" என்றார். இதற்கு இந்திரன் {சியவனரிடம்}, "இவர்கள் இருவரும் குணப்படுத்தும் {சிகிச்சை} கலை பயில்கிறார்கள். ஆகையால் அவர்கள் சேவகர்களைத் தவிர வேறல்ல. நினைத்த வண்ணம் தங்கள் உருவங்களை அடைந்து, இவர்கள் மனிதர்களின் உலகில் உலவிவருகிறார்கள். இவர்கள் எப்படி உரிமையுடன் சோமச்சாற்றைக் கோரலாம்?" என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவர்கள் தலைவனால் மறுபடியும் மறுபடியும் பேசப்பட்ட போது, பிருகுவின் மகன் {சியவனர்} இந்திரனைக் கருதிப் பாராமல் {லட்சியம் செய்யாமல்}, காணிக்கை {சோமச்சாற்றை} படைக்கும் நோக்குடன் எடுத்தார். அந்தச் சோமச்சாற்றின் அற்புதமான பகுதியை அந்த இரு அசுவினிகளுக்கும் அவர் படைக்கப்போகும் நேரத்தில், அசுரன் பலனை அழித்தவன் {இந்திரன்}, இச்செயலைக் கண்டு அவரிடம் {சியவனரிடம்}, "அந்தத் தேவர்களுக்குப் படைக்கும் நோக்கோடு நீர் சோமத்தை எடுத்தீரென்றால், நிலைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களிலும் மேன்மையான, கொடூர வடிவிலான எனது வஜ்ராயுதத்தை நான் உம்மீது ஏவுவேன்" என்றான் {இந்திரன்}.
இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி, சோமச்சாற்றின் பகுதியை அசுவினிகளுக்குப் படைப்பதற்காக எடுத்தார். அப்போது சச்சியின் தலைவன் {இந்திரன்} கொடூர வடிவம் கொண்ட வஜ்ரத்தை அவர் மீது வீச எத்தனித்தான். அவன் அதை ஏவ முற்பட்ட போது, அவனது கரங்கள் பிருகுவின் மைந்தனால் {சியவனரால்} அசைவற்றனவாக மாற்றப்பட்டன. சியவனர் புனித பாடல்களை {மந்திரங்களை} உரைத்து நெருப்பில் படையலிட்டார். அவரது நோக்கம் நிறைவேறிய பிறகு, அவர் அந்தத் தேவனை {இந்திரனை} அழிக்க முற்பட்டார், பிறகு அந்தத் தவசியின் தவச்சக்தியின் விளைவாக தீய ஆவி கொண்ட பெரிய பிசாசானவன் உண்டானான். பெரும் பலமும், பெருத்த உருவமும் கொண்ட அவனது பெயர் மதன் ஆகும்.
அவனது {பிசாசான மதனின்} உடல் தேவர்களாலும் அசுரர்களாலும் அளவிடமுடியாதபடி இருந்தது. அவனது வாய்ப் பயங்கரமாகப் பெருத்த அளவிலும் கூரிய பற்களுடனும் இருந்தது. அவனது ஒரு தாடை பூமியில் இருந்தபோது, மறு தாடை சொர்க்கம் வரை நீண்டது. அவனுக்கு நான்கு கோரைப் பற்கள் {தெற்றுப் பற்கள்} இருந்தன. அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனை தூரமும், மற்றப் பற்கள் பத்து யோஜனை தூரமும் இருந்தன. அவை ஒவ்வொன்றின் முனையும் கூரிய ஈட்டி போலவும் ஒரு மாளிகையின் கோபுரம் போலவும் இருந்தன. அவனது இரு கரங்களும் இரு மலைகள் போலப் பத்தாயிரம் யோஜனை தூரம் இருந்தன. அவனது இரு கண்களும் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. அவனது முகம் பிரளயத்தின் பெருந்தீ போல இருந்தது. அவன் தனது வாயை, மின்னலைப் போல இருந்த ஓய்வறியா நாவால் நக்கிக் கொண்டிருந்தான். அவனது வாய்த் திறந்திருந்தது. அவனது பார்வை பயங்கரமாக இருந்தது. அவன் இந்த மொத்த உலகத்தையுமே விழுங்கிவிடுவான் போல இருந்தது. அப்படிப்பட்ட அந்தப் பிசாசானவன் {மதன்} நூறு வேள்விகள் செய்த தேவனிடம் {இந்திரனிடம்} விரைந்தான். அவனது நோக்கம் அந்தத் தேவனை {இந்திரனை} விழுங்குவதாக இருந்தது. அந்த அசுரன் கர்ஜித்த பயங்கர ஒலி உலகத்தையே நிரப்பியது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.