Somaka met Yama! | Vana Parva - Section 128 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
வேள்வி நடந்தேறுவது; ஜந்து கொல்லப்படுவது; தாய்மார்களுக்கு நூறு மகன்கள் பிறப்பது; ஜந்துவே மீண்டும் மூத்த மகனாகப் பிறப்பது; சோமகனும் புரோகிதரும் இறப்பது; புரோகிதர் நரகத்தில் அவிக்கப்படுவதைச் சோமகன் காண்பது; புரோகிதருடன் சேர்ந்து சோமகனும் நரகவாசம் பெற்று பிறகு அருள் உலகை அடைந்தது...
சோமகன் {குடும்ப புரோகிதரிடம்} சொன்னான், "ஓ அந்தணரே! எது நடத்தப்பட வேண்டுமோ அதை, அதன் அவசியத்திற்கேற்ப துல்லியமாகச் செய்யும். நான் பல மகன்களைப் பெற விரும்புவதால், நீ சொல்லும அனைத்தையும் நான் செய்வேன்"
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு வேள்வியை நடத்திய அந்தப் புரோகிதர், ஜந்துவை பலிக்காணிக்கையாக்கினார். இரக்கம் கொண்ட அந்தத் தாய்மார்கள் அந்த மகனை வலுக்கட்டாயமாகப் பறித்து எடுத்துச் சென்றான். பிறகு அவர்கள், "ஐயோ, நாங்கள் கெட்டோம்" என்றனர். அவர்கள் துன்பத்தின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டு, ஜந்துவின் வலக்கரத்தைப் பற்றிப் பரிதாபகரமான முறையில் அழுதனர். ஆனால் வேள்வியை நடத்திய புரோகிதரோ, அந்தப் பிள்ளையை வலக்கரத்தால் பற்றி இழுத்தார். பெண் அன்றில் பறவைகளைப் போல அவர்கள் துயரத்தால் கதறினர். ஆனால் அந்தப் புரோகிதர் அவர்களது மகனை இழுத்து, அவனைக் கொன்று, அவனது கொழுப்பை சரியான முறையில் எரித்தார். ஓ! குரு குலத்தின் இன்பமே {யுதிஷ்டிரா}, அக்கொழுப்புப் படையலாக்கப்பட்ட போது, துயரத்தில் இருந்த அத்தாய்மார், அதன் மணத்தை நுகர்ந்தபடியே, திடீரெனத் தரையில் (மயங்கி) விழுந்தனர்.
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த அழகிய மங்கையர் அனைவரும் கருவுற்றனர். ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே! {யுதிஷ்டிரா}, பத்து மாதம் கடந்ததும் சோமகனுக்கு அந்த மங்கையர்கள் மூலம் நூறு மகன்கள் பிறந்தனர். ஓ பூமியின் ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, ஜந்து, முன்புபோலவே, தன் தாயிடத்திலேயே சோமகனின் மூத்த பிள்ளையாகப் பிறந்தான். அந்த மங்கையருக்கு அவன் {ஜந்து} அன்பிற்கினியவனாக இருந்தது போல அவர்களது சொந்த பிள்ளைகளும் இருக்கவில்லை. அவனது முதுகில் தங்கக்குறியும் {மச்சம்} இருந்தது. அவன் அந்த நூறு மகன்களைக் காட்டிலும் மேன்மைதங்கியவனாக இருந்தான்.
பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்தில் சோமகனின் குடும்பப் புரோகிதர் தனது உயிரை விட்டார். சோமகனும் அவ்வாறே தனது உயிரை விட்டான். இப்போது அவன் {சோமகன்}, தனது புரோகிதர் கொடுராமன நரகத்தில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அவன் {சோமகன்} அவரிடம் {புரோகிதரிடம்}, "ஓ! அந்தணரே! நீர் ஏன் இந்த நரகத்தில் அடைபட்டுக் கிடக்கிறீர்!" என்று கேட்டான். நெருப்பில் வெந்து கொண்டிருந்த அந்தக் குடும்பப் புரோகிதர் அவனிடம் {சோமகனிடம்}, "உனது வேள்வியை நான் நடத்தியதன் விளைவு இது" என்றார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்ட தவசியான அம்மன்னன் {சோமகன்}, இறந்தவர்களின் ஆன்மாவைத் தண்டிக்கும் தேவனிடம் {யமனிடம்}, "நான் இதற்குள் நுழைவேன். எனது வேள்வியை நடத்திய புரோகிதரை விடுவி; இந்த மரியாதைக்குரிய மனிதர் என் காரணமாகவே இந்நரக நெருப்பில் வேக வைக்கப்படுகிறார்" என்றான்.
அதற்குத் தர்மராஜன் {யமன்} {மன்னன் சோமகனிடம்}, "ஒருவன் இன்னொருவன் செயல்களுக்காக மகிழவோ துன்பப்படவோ முடியாது. ஓ! பேசுபவர்களில் சிறந்தவனே {சோமகா}! நீ காணும் இவை யாவும் உனது செயல்களின் கனிகளாகும்", என்றான்.
சோமகன் {யமனிடம்}, "இங்கே இருக்கும் இந்த அந்தணர் இல்லாமல் நான் அருளுலகு செல்ல விரும்பவில்லை. சொர்க்கமோ, நரகமோ நான் இம்மனிதரின் துணையுடனே இருந்து விடுகிறேன். ஓ தர்மராஜா {யமா}, எனது செயல் அவருக்கு ஒத்ததுதான். அச்செயல் நன்மையோ தீமையோ, அதன் கனி எங்கள் இருவருக்கும் சமமாகவே இருக்க வேண்டும்" என்றான்.
தர்மராஜன் {யமன்}, "ஓ! மன்னா {சோமகா}! இதுவே உனது விருப்பமென்றால், அச்செயலுக்கான கனியை அவன் பெறும் காலம் வரை சுவை. அதன் பிறகு நீ அருளுலகு செல்லலாம்" என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தத் தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்ட மன்னன் {சோமகன்}, பரிந்துரைக்கப்பட்டபடியே அனைத்தையும் சரியாகச் செய்தான். அவரது பாவங்கள் தொலைந்த பிறகு, அவன் தனது புரோகிதருடன் விடுவிக்கப்பட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புரோகிதரிடம் அன்பு கொண்ட அவன் நல்வினையினால் கிடைத்த அருள் உலகையும், மற்றும் அனைத்தையும் புரோகிதரான அந்த அந்தணருடனேயே அடைந்தான். நமது கண்ணெதிரே இருக்கும் இந்த ஆசிரமம் அவனுடையதே {சோமகனுடையதே}. இங்கே புலனடக்கத்துடன் ஆறு இரவுகள் தங்கும் மனிதன் அருளப்பட்ட உலகங்களை அடைகிறான். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! குரு குலத்தின் தலைவா! உற்சாகத்தை விடுத்து, தன்னடகத்துடன், நாம் ஆறு இரவுகளைக் கழிக்க வேண்டும். நீ அதற்குத் தயாராகு" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.