The Knowledge of Ashtavakra! | Vana Parva - Section 133 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
அஷ்டவக்கிரன், வாயில் காப்போன், மன்னன் ஜனகன் ஆகியோர் பேசிக் கொள்வது; மன்னன் ஜனகன் அஷ்டவக்கிரனைப் பரிசோதித்துப் பார்ப்பது; பிறகு வேள்விக்களத்திற்குள் அனுமதிப்பது...
அஷ்டவக்கிரன் {மன்னன் ஜனகனிடம்}, "வழியில் எந்த அந்தணனும் எதிர்படாத போது, அந்த வழி, குருடர், செவிடர், மகளிர், சுமைதூக்கிகள், மன்னன் ஆகியோரை முறையே சாரும். ஆனால் வழியில் ஒரு அந்தணனைச் சந்தித்தால், அந்த வழி அவனுக்கு மட்டுமே {அந்த அந்தணனுக்கே} சொந்தமாகும்" என்றான். அதன்பேரில் மன்னன் {ஜனகன்}, "உள்ளே நுழையும் தனிச்சலுகையை {உமக்கு} அளிக்கிறேன். எனவே, உள்ளே நுழைந்து நீர் விரும்பியதைச் செய்யலாம். சிறு பொறி நெருப்பையும் அசட்டை செய்யக்கூடாது. இந்திரனே கூட அந்தணர்களைப் பணிகிறான்" என்றான். இதற்கு அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, "ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, எங்கள் ஆவல் மேலீட்டால், உனது வேள்விச்சடங்கைக் காண நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் உனது விருந்தினர்களாக இங்கே வந்திருக்கிறோம். எங்களுக்கு (உள்ளே நுழைய) உனது அனுமதி வேண்டும்.
ஓ! இந்திரதியும்னனின் மகனே {ஜனகா}, நாங்கள் வேள்வியைக் காண விரும்பியும், மன்னன் ஜனகனைக் கண்டு அவனுடன் பேசவும் வந்திருக்கிறோம். ஆனால், உனது பாதுகாவலர் எங்களைத் தடை செய்கின்றனர். இதனால் எங்களது கோபம் ஜுரத்தைப் போல எரிகிறது" என்றான்.
அதற்கு அந்தப் பாதுகாவலர், "நாங்கள் வந்தினின் {வந்தியின்} கட்டளைகளை ஏற்று நடக்கிறோம். நான் சொல்ல வேண்டியதைக் கேளும். சிறுவர்கள் நுழைய இங்கே அனுமதிப்பதில்லை. கற்ற முதிர்ந்த அந்தணர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்" என்றான். அதற்கு அஷ்டவக்கிரன், "முதிர்ந்தவர்களுக்குத்தான் அனுமதி என்ற நிலைதான் இருக்கிறது என்றால், ஓ! பாதுகாவலனே, எங்களுக்கும் உள்ளே நுழைய உரிமை உண்டு. நாங்கள் முதிர்ந்தவர்கள். நாங்கள் புனிதமான நோன்புகளை நோற்றிருக்கிறோம். வேதம் உரைப்பதனால் உண்டான சக்தியையும் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு மேன்மையானவர்களுக்குப் பணிவிடை செய்திருக்கிறோம். எங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். ஞானத்திலும் நிபுணத்துவத்தை வென்றிருக்கிறோம். நெருப்பு சிறு பொறியாக இருந்தாலும், அதைத் தொட்டால் எரிக்கும் என்பதனால் சிறுவர்களும் அசட்டை செய்யப்படக்கூடாது என்று சொல்லப்படுகிறது" என்றான் {அஷ்டவக்கிரன்}.
பாதுகாவலன், "ஓ! இளம் அந்தணரே, நான் உம்மைச் சிறுவராகவே கருதுகிறேன். ஆகையால், தெய்வீகத் தவசிகளால் போற்றப்படுவதும் பிரம்மத்தின் {கடவுளின்} இருப்பை உணர்த்துவதும், ஒரு எழுத்தைக் கொண்ட போதிலும் பல பொருளை உணர்த்துவதுமான அந்த ஒரு வரியை நீர் உரைக்க வேண்டும். வீண் பெருமை பேசாதீர். கற்ற மனிதர்கள் உண்மையில் மிகவும் அரிதாகவே இருக்கின்றனர்" என்றான். அதற்கு அஷ்டவக்கிரன், "இலவ {இலவம்பஞ்சு} மரத்தின் முடிச்சுகள் அதன் வயதைக் குறிப்பதில்லை. ஆகவே உண்மையான வளர்ச்சியை வெறும் உடல் வளர்ச்சியால் அனுமானிக்க முடிவதில்லை. ஒரு மரம் மெலிதாகவும், குறுகியதாகவும் இருந்தாலும் கனிகளைத் தாங்கினால், அது முழுமையாக வளர்ந்தது என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கனியைத் தாங்காதவை வளர்ந்தவையாகக் கருதப்படுவதில்லை" என்றான்.
பாதுகாவலன், "சிறுவர்கள், முதியவர்களிடம் இருந்து கல்வியைப் பெற்றுக் கொண்டு காலத்தால் அவர்களும் வளர்ந்து முதிர்கிறார்கள். ஞானம் என்பது குறுகிய காலத்தில் அடையக்கூடியதல்ல. நீர் குழந்தையாக இருந்த போதிலும் ஏன் முதிர்ந்த மனிதனைப் போலப் பேசுகிறீர்?" என்று கேட்டான். அதற்கு அஷ்டவக்கிரன், "ஒருவனது தலை நரைத்துப் போவதால் அவன் முதிர்ந்தவனாவதில்லை. ஒருவன் வயதால் குழந்தையாக இருந்தாலும், அவன் ஞானத்தைப் பெற்றிருந்தால் தேவர்களும் அவனை முதிர்ந்தவனாகக் கருதுகிறார்கள். ஒரு மனிதனின் தகுதி வயதிலோ, நரை முடியிலோ, செல்வத்திலோ அல்லது நண்பர்களாலோ வருவது என்று தவசிகள் விதிக்கவில்லை. எங்களுக்குள் வேதங்களை நன்கு அறிந்தவனே பெருமைவாய்ந்தவன். ஓ! வாயில் காப்போனே, நாங்கள் அவையில் வந்தினைக் காண விரும்பி இங்கே வந்திருக்கிறோம். கழுத்தில் தாமலை மாலை அணிந்திருக்கும் மன்னன் ஜனகனிடம் சென்று, நான் இங்கே இருக்கிறேன் என்பதைச் சொல். உள்ளே நுழைந்து கற்ற மனிதர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டு, வாதப்போரில் வந்தினை நான் தோற்கடிப்பதை நீ இன்று காண்பாய். மற்றவர்கள் அமைதியடைந்த பிறகு, முதிர்ந்த கல்வி கற்ற அந்தணர்களும் தனது முதன்மைப் புரோகிதர்களுடன் கூடிய மன்னனும் {ஜனகனும்}, எனது திறனின் மேன்மை அல்லது தாழ்மையான தன்மையைச் சாட்சியாகக் காண்பார்கள்" என்றான்.
பாதுகாவலன், "பதின்ம வயதில் இருக்கும் நீர், கல்வி கற்ற மனிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பபடும் இந்த வேள்விக்குள் நுழைவீர் என்று எப்படி நம்பலாம்? இருப்பினும் நான் உமது நுழைவுக்காகச் சில வழிகளில் முயற்சிப்பேன். நீரும் உமது பங்குக்கு முயற்சி செய்யும்" என்றான். பிறகு அஷ்டவக்கிரன் மன்னனிடம் சென்று, "ஓ மன்னா, ஓ ஜனக குலத்தில் முதன்மையானவனே, நீயே தலையாய இறையாண்மை. அனைத்து சக்திகளும் உன்னில் நிறைந்திருக்கின்றன. பழங்காலத்தில் வேள்விகளைக் கொண்டாடுபவனாக மன்னன் யயாதி இருந்தான். இக்காலத்தில் நீயே அதைச் செய்கிறாய். கற்றவனான வந்தின், வாதம் புரிவதில் நிபணர்களை வீழ்த்தியபிறகு, உம்மால் நியமிக்கப்பட்டிருக்கும் தனது நம்பிக்கைக்குரிய சேவகர்கள் மூலம் அவர்களை {வாத நிபுணர்களை} நீரில் மூழ்கடிப்பதாகக் கேள்விப்பட்டோம். இதைக் கேட்ட பிறகே, நான் இந்த அந்தணர்கள் முன்னிலையில், பிரம்மத்தின் ஒருமைப்பாடு குறித்த கொள்கையை விளக்க இங்கே வந்திருக்கிறேன். வந்தின் இப்போது எங்கிருக்கிறான்? சூரியன் நட்சத்திரங்களை அழிப்பது {மறைப்பதைப்} போல நானும் அவனை {வந்தினை} அணுகி அழிக்க வந்திருக்கிறேன். அவன் {வந்தின்} எங்கிருக்கிறான் என்பதைச் சொல்லுங்கள்" என்றான் {அஷ்டவக்கிரன்}.
அதற்கு மன்னன் {ஜனகன்}, ஓ அந்தணரே, வந்தினின் வாத திறனை நீர் அறியாததால் அவரை வீழ்த்திவிடலாம் என்று நம்புகிறீர். அவரது சக்தியை அறிந்தவர்கள் உம்மைப் போலப் பேச முடியுமா? வேதமறிந்த அந்தணர்கள் அவரிடம் முயன்றும் பார்த்துவிட்டார்கள். அவரது {வாதத்திறனை} சக்தியை அறியாததாலேயே நீர் வந்தினை வென்று விடலாம் என்று நம்புகிறீர். சூரியன் முன்னால் மறைந்து போகும் நட்சத்திரங்களைப் போல, அவர் முன்னால் பல அந்தணர்கள் மறைந்து போயிருக்கின்றனர். தங்கள் கல்வியில் கர்வம் கொண்ட மக்கள் அவரை வீழ்த்த விரும்பி, அவரது முன்னிலையில் வந்து தங்கள் புகழைத் தொலைத்து, சபை உறுப்பினர்களிடம் கூடப் பேசும் துணிவை இழந்து, அவருக்கெதிரில் இருந்து விலகிப் போயிருக்கின்றனர்" என்றான்.
அஷ்டவக்கிரன் {மன்னன் ஜனகனிடம்}, "வந்தின் இதுவரை என்னைப்போன்ற மனிதனுடன் சர்ச்சையில் ஈடுபடவில்லை. இதனால் தான் அவன் தன்னைச் சிங்கமாகக் கண்டு கர்ஜித்து வருகிறான். ஆனால் இன்று என்னைச் சந்தித்து, நெடுஞ்சாலையில் {அச்சாணியற்று} சக்கரங்கள் விலகிய வண்டியைப் போல இறந்து விழுவான்" என்றான். மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, "முப்பது பிரிவுகளும், பன்னிரெண்டு பகுதிகளும், இருபத்துநான்கு இணைப்புகளும் {பொருத்துகளும்} முன்னூற்று அறுபது ஆரங்களும் கொண்ட ஒரு பொருளின் {சக்கரத்தின்} முக்கியத்துவத்தை எவன் அறிவானோ அவனே உண்மையில் கற்ற மனிதனாவான்" என்றான்.
அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, "இருபத்துநான்கு இணைப்புகளும் {பொருத்துகளும்}, ஆறு மையங்களும் {நாபிகளும்-தொப்புள்களும்}, பனிரெண்டு எல்லைகளும் {அச்சுகளும்}, முன்னூற்று அறுபது ஆர்ங்களும் கொண்ட எப்போதும் நகரும் சக்கரம் {காலச்சக்கரம்} உன்னைப் பாதுகாக்கட்டும்"என்றான். {சூரியன், சந்திரன் மற்றும் நிழற்கோள்களின் {ராகு, கேது} சுழற்சியைக் கொண்ட காலச்சக்கரத்தின்படி சரியான நேரங்களில் செய்யப்படும் நற்செயல்கள் உன்னைப் பாதுகாக்கட்டும் என்பதே பொருள்}. மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, "தேவர்களுள் எவன், (தேரில் பூட்டப்பட்ட) இரண்டு பெண் குதிரைகளைப் போல சேர்ந்திருப்பவைகளும், பருந்தைப் போல விழுகின்றவைகளுமானவற்றைத் தேவர்களுள் எவன் தாங்குகிறான்? அவை எதைப் பெற்றெடுக்கின்றன?" என்று கேட்டான். அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, "ஓ! மன்னா, உன் வீட்டிலும், ஏன் உனது பகைவரின் வீட்டிலும் கூட அவ்விரண்டும் {இடியும், மின்னலும் அல்லது துன்பமும், மரணமும்} நேர வேண்டாம். காற்றைச் சாரதியாகக் கொண்டிருப்பவன் {மேகம் அல்லது மனம்} இவற்றைப் பெற்றெடுக்கிறான். அவையும் {இடியும், மின்னலும் அல்லது துன்பமும் மரணமும்} அவனையே {மேகத்தையே அல்லது மனத்தையே} பெற்றெடுக்கின்றன" என்றான்.
பிறகு அம்மன்னன் {ஜனகன்}, "உறங்கும் போதும் தனது கண்களை மூடாதது எது; பிறக்கும்போதும் எது அசையாமல் இருக்கிறது; இதயம் இல்லாதது எது; எது தன் வேகத்தைத் தானே பெருக்கிக் கொள்ளும்?" என்று கேட்டான். அதற்கு அஷ்டவக்கிரன், "உறங்கும்போது கண் இமைகளை மூடாதது மீன் {எப்போதும் விழிப்புடன் இருக்கும் ஜீவாத்மா}. உற்பத்தியாகும்போதும் {பிறக்கும்போதும்} அசையாமல் இருப்பது முட்டை {இம்மைக்குரிய முட்டை அல்லது உலகம் என்றும் கொள்ளலாம்}. இதயமே இல்லாதது கல் {உடலைத் துறந்த ஆன்மா}. தனது வேகத்தைத் தானே பெருக்கிக் கொள்வது ஆறு {ஒரு யோகியின் இதயம்}" என்றான்.
அதற்கு மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, "ஓ தெய்வீக சக்தியைக் கொண்டவரே, நீர் மனிதர் அல்ல என்று காண்கிறேன். நான் உம்மைச் சிறுவனாகக் கருதவில்லை, முதிர்ந்த மனிதராகவே கருதுகிறேன்; பேச்சில் தன்னை உம்முடன் ஒப்பிடத்தக்க வேறு மனிதன் கிடையாது. ஆகையால் நான் உமக்கு அனுமதியளிக்கிறேன். அதோ வந்தின் {வந்தி} அங்கிருக்கிறார்" என்றான் {மன்னன் ஜனகன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.