Ashtavakra won the discussion! | Vana Parva - Section 134 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
அஷ்டவக்கிரன், வந்தின் {வந்தி} வாதப்போர்; அஷ்டவக்கிரன் வெல்வது; வந்தினைக் கடலில் மூழ்கச் சொல்வது; வந்தின் அஷ்டவக்கிரனின் தந்தையை வரவழைத்துக் கொடுப்பது; கஹோடர் தனது மகனான அஷ்டவக்கிரனை நதியில் மூழ்கச் செய்து கோணலான உடலை நிமிர்த்தியது...
அஷ்டவக்கிரன் {மன்னன் ஜனகனிடம்}, "ஓ! மன்னா {ஜனகா}, ஓ! கடுமையான நிலங்கள் கொண்ட பகுதிகளின் தலைவனே, ஒப்பற்ற சக்திகள் கொண்டு, ஒரே இடத்தில் கூடியிருக்கும் இந்த ஏகாதிபதிகளின் சபையில், சர்ச்சைகளின் தலைவனான வந்தினை என்னால் காண முடியவில்லை. அகன்ற நீர்ப்பரப்பின் மேல் அன்னத்தைத் (அன்னப்பறவையைத்} தேடுவது போல, நான் அவனை {வந்தினைத்} தேடிக் கொண்டிருக்கிறேன். ஓ! வந்தினே, நீ உன்னைச் சர்ச்சைகள் {வாதம்} செய்வதில் முதன்மையானவனாகக் கருதிக் கொள்கிறாய். என்னுடன் நீ பந்தயத்தில் ஈடுபட்டதும், நதியின் ஓட்டம்போல உனது பேச்சுச் சரளமாக இருக்காது. நான் முழுமையாகச் சுடர்விட்டெரியும் நெருப்பு போன்றவன். ஓ! வந்தினே, என் முன் அமைதியாக இரு. தூங்கிக் கொண்டிருக்கும் புலியை எழுப்பாதே.
வாயின் ஓரங்களை நாவால் நக்கிக் கொண்டிருக்கும் விஷம் கொண்ட பாம்பின் தலை மீது நீ மிதித்தால், உனது காலால் காயமடைந்த அதன் {அந்தப் பாம்பின்} கடியில் இருந்து நீ தப்பமுடியாது. பலத்தில் கர்வம் கொண்ட பலமற்ற மனிதன், மலையைக் குத்த முயன்றால், அவனது கைகளுக்கும், நகங்களுக்கும் காயம் ஏற்படுகின்றன. ஆனால் மலையின் மீது எந்தக் காயமும் இருப்பதில்லை. மைநாக மலைக்கு {Mainaka} மற்ற மலைகள் எப்படித் தாழ்ந்தனவோ, காளைகளுக்குக் கன்றுகள் எப்படித் தாழ்ந்தனவோ, அதே போல மிதிலையின் தலைவனுக்கு, பூமியின் பிற மன்னர்கள் அனைவரும் தாழ்ந்தவர்களே. இந்திரனே தேவர்களில் முதன்மையானவன், கங்கையே நதிகளில் சிறந்தவள். ஆகையால், ஓ! மன்னா {ஜனகனே}, நீ மட்டுமே ஏகாதிபதிகளில் மிகச் சிறந்தவன். ஓ மன்னா, வந்தினை எனது முன்னிலைக்குக் கொண்டு வரச் செய்" என்றான் {அஷ்டவக்கிரன்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, வந்தின் மீது கோபத்தில் இருந்த அஷ்டவக்கிரன் அந்தச் சபையில் இப்படி முழங்கிய பிறகு, "எனது கேள்விகளுக்கு நீ பதில் சொல். நான் உனது கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன்" என்றான்.
{1} அதற்கு வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, "ஒரே நெருப்புதான் பல உருவங்களில் மூட்டப்படுகிறது; ஒரே சூரியன்தான் இந்த முழு உலகத்துக்கும் ஒளியூட்டுகிறான்; தேவர்கள் தலைவனான இந்திரன் என்ற ஒரே வீரன்தான் எதிரிகளை அழிக்கிறான்; யமன் ஒருவனே பித்ருகளின் ஒரே தலைவனாக இருக்கிறான்" என்றார் {வந்தின்}.
{1} அதற்கு வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, "ஒரே நெருப்புதான் பல உருவங்களில் மூட்டப்படுகிறது; ஒரே சூரியன்தான் இந்த முழு உலகத்துக்கும் ஒளியூட்டுகிறான்; தேவர்கள் தலைவனான இந்திரன் என்ற ஒரே வீரன்தான் எதிரிகளை அழிக்கிறான்; யமன் ஒருவனே பித்ருகளின் ஒரே தலைவனாக இருக்கிறான்" என்றார் {வந்தின்}.
(பின்வருவன மேற்கண்ட வந்தினின் உரைக்கு அடிக்குறிப்பாகக் கங்குலி கொடுத்திருக்கும் விளக்கமாகும் : பிரம்மத்தின் ஒருமைப்பாட்டை விளக்கவே அஷ்டவக்கிரர் ஜனகனின் வேள்விக்கு வந்திருக்கிறார். வந்தின் தனது எதிராளியை எதிர்க்க பல்வேறு தத்துவ அமைப்புகளைப் பயன்படுத்துகிறார். அவர் லோகாயதத் [Buddhistic system] தத்துவத்தைக் கொண்டு ஆரம்பிக்கிறார். அந்த உரையின் வடிவம் இலக்கியத்தில் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. புதிர் நிறைந்ததும், உள்ளுறை பொருளை வினோதமான முறையிலும் இழிந்த தோற்றத்திலும் பலவகைப்பட்ட சேர்க்கைகளின் தோற்றத்திலும் மறைத்து சொல்லும் ஒரு உரையாக வந்தினின் உரை உள்ளது. மேற்சொன்னவை அனைத்தும் ஒன்று என்ற எண்ணைக் குறிப்பதாகவும், ஆண்டவனும், தலைவனும், புலன்களின் வழிகாட்டியும் - அறிவாற்றல் கொண்ட ஒருவனே {ஒருமையே} என்று சொல்லியும் வந்தின் சர்ச்சையைத் துவக்குகிறார்.)
{2} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, "இரு நண்பர்களான இந்திரனும் அக்னியும் எப்போதும் நகர்வது இருவராகவே; நாரதரும், பர்வதரும் தெய்வீக முனிவர்களாகிய இருவரே; அசுவினி குமாரர்கள் இருவரே; ஒரு தேரின் சக்கரங்கள் இரண்டே. தெய்வத்தால் விதிக்கப்பட்டுக் கணவனும் மனைவியுமாக வாழும் ஒரு இணையில் இருவரே உள்ளனர்" என்றான்.
(கங்குலி விளக்கம் : வேத வெளிப்பாட்டில் நண்பர்களான இரு பறவைகள் ஒரு மரத்தில் ஒன்றாக வாழ்கின்றன. அதில் ஒன்று பழங்களை உண்ண, மற்றொன்று அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் வெளிப்படையாவது என்னவென்றால், ஆண்டவர்களும், தலைவர்களும், புலன்களின் வழிகாட்டிகளும் இருவரே என்பதுதான் {இருமையுடன் செயல்படுகின்றன என்பதுதான்}. ஒரு ஆற்றல் {அறிவு} இருக்கும்போதே இயல்பான இரண்டாம் ஆற்றல் {அதாவது உணர்வு} இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவன் {ஒரு அறிவாளி} செயலற்று உறங்கிக் கொண்டிருக்கும்போதும் அந்த மற்றொரு ஆற்றல் {அறிவு [அ] மூளை] தனது நடவடிக்கையைத் தொடர்கிறது. அப்படி இல்லையென்றால் நாம் உறங்கிய பிறகு எதுவும் நமக்கு நினைவிருக்காது. அல்லது உறக்கத்திற்கு முன்பு நடந்ததையும், பின்னர் நடக்கும் நிலையையும் இணைத்துப் பார்க்க முடியாது. இதன்படி எண் இரண்டை மேற்கோள் காட்டும் அஷ்டவக்கிரன், அறிவாற்றலையும் தவிர வேறு ஒரு ஆற்றலும் {உணர்வு என்ற ஆற்றலும்} உள்ளது என்பதைச் சொல்கிறார். உணர்வு {consciousness} என்ற ஆற்றலும் சேர்ந்து இரண்டும் கூட்டாகவே ஆண்டவர்களாகவும், தலைவர்களாகவும், புலன்களின் வழிகாட்டிகளாகவும் செயல்படுகின்றன. அவை இரண்டுமே {அறிவும், உணர்வும்} ஒன்றாக இந்திரனும் அக்னியும் போலவும், மேற்சொன்ன பலவற்றைப் போலவும் செயல்படுகின்றன} என்கிறார்.)
{3} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, "செயல்களின் வினையால் மூன்று விதமான உயிரினங்கள் உண்டாகின்றன; மூன்று வேதங்கள் இணைந்து வாஜபேயம் என்ற வேள்வியைச் செய்கின்றன, மூன்று வேறு காலங்களில் அத்வர்யுக்கள் {மூன்று வர்ணத்தார்} வேள்விச்சடங்குகளைச் செய்கின்றனர்; மூன்று என்பது உலகங்களின் எண்ணிக்கை {சொர்க்கம், நரகம், பூமி}; தெய்வீக ஒளிகளும் மூன்றாக உள்ளன {சூரியன், சந்திரன், நெருப்பு}" என்றார்.
(கங்குலியின் விளக்கம் : எண் மூன்றை மேற்கோள் காட்டும் வந்தின், செயல்களே மூன்று வகையான உயிரினங்களையும் பிறக்க வைப்பதால், செயல்களே தலைமையாக இருக்கின்றன. மற்ற அனைத்தும் அறிவாகவே இருக்கும். அல்லது அறிவும் உணர்வும் ஒன்றாகச் சேர்ந்தாலும், அவை செயல்களுக்குத் தாழ்ந்தனவே என்பதைச் சொல்ல வருகிறார்.)
{4} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, "அந்தணர்களின் ஆசிரமங்கள் நான்கு; நான்கு வர்ணங்கள் வேள்விகளைச் செய்கின்றன; முக்கியமான திசைகள் நான்கு; எழுத்துகளின் எண்ணிக்கை நான்காகும் {"அ"காரம், "உ"காரம், "ம"காரம், மற்றும் அர்த்தமாத்திரை [புள்ளி] ஆகிய எழுத்துகள் சேர்ந்தனவே ஓம் என்ற வடிவம்}; பசுவின் கால்களும் நான்கு என்பது எப்போதும் அறியப்பட்டதே" என்றான்.
(கங்குலியின் விளக்கம் : செயல்கள் தலைமையானதாக இருந்தாலும் கூட (நான்காவதாக) ஆன்மாவில் பிரம்மம் வெளிப்படும்போது, அவ்வான்மாவுக்குச் செயலின் தேவையே இல்லாமல் போய் விடுகிறது என்று இங்கே அஷ்டவக்கிரர் ஆய்வை மேலும் முன்னெடுத்துச் செல்கிறார்.)
{5} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, "நெருப்புகளின் எண்ணிக்கை ஐந்து, பங்கி என்ற செய்யுளடி ஐந்து அடி கொண்டது; வேள்விகள் ஐந்து; ஐந்து பூட்டுகள் {கொண்டைகளாகவும் இருக்கலாம்} அப்சரஸ்களின் தலையில் இருப்பதாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது; உலகில் அறியப்பட்ட புனிதமான ஆறுகள் ஐந்து" என்றார்.
(கங்குலியின் விளக்கம் : ஐந்தடுக்குத் தொடரைக் கொண்டு வருவதால், வந்தின் ஐந்து புலன்கள், அவற்றுக்குரிய பொருட்களை ஏற்கத் தகுதிவாய்ந்தனவாகவே இருக்கும் என்று வலியுறுத்துகிறார். {அதாவது புலன்கள் செயலைச் செய்ய வைக்கும் என்கிறார். அதாவது ஐம்புலன்கள் என்பன: கண், காது, மூக்கு, நாக்கு, சருமம்})
{6} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, "புனித நெருப்பை நிறுவும் வேளையில் {வேள்வியில்}, ஆறு பசுக்களை வேள்விக் கொடையாகச் {தட்சணையாகச்} சிலர் கேட்கின்றனர்; காலச்சக்கரத்திற்குச் சொந்தமான பருவங்கள் ஆறு; புலன்களின் எண்ணிக்கை ஆறு; கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் இருக்கின்றன; அனைத்து வேதங்களிலும் சாத்யஸ்கங்கள் என்கிற வேள்விச் சடங்களுகள் ஆறு என்று காட்டப்படுகின்றன" என்றான்.
(கங்குலியின் விளக்கம் : ஐந்து புலன்களைத் {கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகியன} தவிர அஷ்டவக்கிரர் கூடுதலான உணர்வான மனத்தைச் {மனம்} சொல்லியபடி, ஆறு என்ற எண்ணை மேற்கோள் காட்டுகிறார்)
{7} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, "ஏழு எண்ணிக்கையில் வளர்ப்பு விலங்குகள் இருக்கின்றன; வன விலங்குகள் ஏழு ஆகும். ஒரு வேள்வியின் முடிவில் ஏழு செய்யுளடிகள் {meters = சந்தங்கள்} சொல்லப்படுகின்றன; முனிவர்கள் எழுவர்; (உலகில்) அஞ்சலி செலுத்தும் வடிவங்கள் ஏழாக முன்வைக்கப்படுகின்றன; வீணையின் தந்திகள் ஏழு என்பது அறியப்பட்டதே" என்றார்.
(கங்குலியின் விளக்கம் : வந்தின் ஆறு புலன்களின் இருப்பை ஏற்றுக் கொள்கிறார்; ஆனால் ஆன்மா, அவை {அந்த ஆறு புலன்கள் : கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் + மனம்} மூலமும், ஏழாவதாக அறிவின் மூலமும் மகிழ்ச்சி மற்றும் துன்பத்தை அனுபவிக்கிறது என்று சொல்கிறார்.)
{8} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, "நூற்றுக்கணக்கானவற்றை அடக்கி வைத்துக் கொண்டிருப்பது எட்டுப் பைகள் {சணலாலான கோணிகள்}; சிங்கங்களை வேட்டையாடும் சரபத்துடைய {சரபம்} கால்களின் எண்ணிக்கை எட்டு; தேவர்களில் எட்டு பேர் வசுக்கள் என்று கேள்விப்படுகிறோம்; வேள்விகளில் உள்ள யூபங்கள் {வேள்விக் கம்பங்கள்} எட்டுப் பட்டைகள் கொண்டவை" என்றான்.
(கங்குலியின் விளக்கம் : அஷ்டவகிரர் எட்டாவது உறுப்பாக ஒன்றை முன்வைக்கிறார். {கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் + மனம் + அறிவு ஆகியவற்றையும் தாண்டி} அகங்காரத்தை அறிதலும் மற்றொன்றொன்று {அதாவது அகங்காரமும், மகிழ்ச்சி மற்றும் துன்பத்தில் மய்ய வினையாற்றுகிறது என்கிறார்})
{9} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, "பித்ருக்களுக்கு {மூதாதையர்களுக்குச்} செய்யப்படும் வேள்விகளில் {சாமிதேனீ என்ற} நெருப்புக் கிண்டப்படும் போது ஒன்பது மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன; படைப்பின் செயல்முறைகள் ஒன்பது செயல்பாடுகளாக நியமிக்கப்பட்டுள்ளன; பிருகதீ என்ற செய்யுளடி {metre} ஒன்பது எழுத்துகள் கொண்டது. (கணக்கில்) ஒன்பது எண்களே எப்போதும் உள்ளன" என்றார்.
(கங்குலியின் விளக்கம் : முக்குணம் {அதாவது இருப்பு, தூய்மைக்கேடு [அழுகும் தன்மை], அறியாமை ஆகியவற்றைக்} கொண்ட பிரக்ருதி {உலகின் எதிரிடை அல்லது பௌதீகக் [பொருள்] காரணம்}, பிரதானத்தின் {உலகின் நேரிடை அல்லது ஆன்மிகக் [கருத்து] காரணம்} மூன்று குணங்களுடன் {ஏற்றம் தாழ்ச்சி, சமம்} பல்வேறு விகிதாச்சாரங்களில் கலந்து {ஒன்பது எண்ணிக்கையைப் பெற்று} உலகத்தின் பல பொருட்களை உண்டாக்குகிறது. எனவே, பரக்ருதி அல்லது இயற்கையின் நித்திய தன்மை நிரூபிக்கப்படுகிறது. மேலும் இருமை கோட்பாடும் நிறுவப்படுகிறது என்கிறார் வந்தின்)
{10} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, "இவ்வுலக மனிதரின் அறிவுடலுக்குள் நுழைந்தால், {அந்த ஆன்மாவுக்கு} முக்கியத் திக்குகளின் எண்ணிக்கை பத்து என்று சொல்லப்படுகிறது; பத்து நூறுகள் ஆயிரமாகும், பெண்கள் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்; உண்மை ஞானத்தை {தத்துவத்தை} உரைக்கும் ஆசிரியர்கள் பத்து பேர், அதை வெறுப்பவர்கள் {தத்துவத்தை நிராகரிப்பவர்கள்} பத்து பேர், அதைக் கற்கும் தகுதி படைத்தோர் பத்துப் பேராகும்" என்றான்.
(கங்குலியின் விளக்கம் : பிரகிருதி எதையும் உருவாக்குவதில்லை. மாயையின் மூலம் பிரம்மம், பத்து உறுப்புகளுடன் {அதாவது, ஐந்து செயல் உறுப்புகள் {வாய், கை, கால், மலவாய், கருவாய்}, ஐந்து உணர்வுறுப்புகள் {கண், காது, மூக்கு, நாக்கு, சருமம்} ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, பொருட்களின் அமைப்புகளை வெளிப்படுத்துகிறது. ஆகவே பிரக்ருதிக்கு உண்மையான இருப்பு இல்லை. அவள் {பிரக்ருதி} ஆன்மாவின் இருப்பில் மட்டுமே தெரிகிறாள் என்கிறார் அஷ்டவக்கிரர்)
{11} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, "உயிரினங்களுக்கு இன்பம் தரக்கூடிய பொருட்கள் பதினொன்று; யூபங்களின் {வேள்விக் கம்புகளின்} எண்ணிக்கை பதினொன்றாகும். உயிருள்ள எவருக்கும் இயல்பு நிலை மாற்றம் பதினொன்றாகும்; சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களில் ருத்திரர்கள் பதினோரு பேராகும்" என்றார்.
(கங்குலியில் விளக்கம் : இங்கே யூபங்கள் {வேள்விக்கம்புகள்} என்பன மனிதர்களை இவ்வுலகத்தோடு கட்டிப்போடும் உணர்ச்சிகளாகும். இங்கே ருத்திரர்கள் என்பவர்கள் மற்றவர்களை அழ வைப்பவர்கள் என்று பொருளில் சொல்லப்படுகிறது.புலனுணர்வின் {காட்சி, ஒலியறிதல், தொடு உணர்ச்சி, சுவை, நாற்றம் ஆகியவற்றின்} பதினோரு பொருட்களால் எழும் இன்பம் மற்றும் துன்பத்திற்கான தடைகளிடம் இருந்து ஒரு ஆன்மா விடுபடுவதில்லை. இவ்வுலகில் அனைத்து மனிதர்களும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஆட்படுகின்றனர். சொர்க்கத்திலும் ருத்திரர்கள் {அழ வைப்பவர்கள்} இருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம் என்று சொல்ல வருகிறார் வந்தின்)
{12} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, "ஒரு வருடம் பனிரெண்டு மாதங்களைக் கொண்டது; ஜகதீ என்ற செய்யுளடி {சந்தம்} பனிரெண்டு எழுத்துகளால் ஆனது; சிறு வேள்விகள் பனிரெண்டாகும்; கற்றவர்கள் சொற்படி, ஆதித்தியர்கள் பனிரெண்டு பேர்" என்றான்.
(கங்குலி விளக்கம் : இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கப்படாத பரமாத்மாவின் இருப்பு உண்மையில் இருக்கிறது. ஆனால் அவனது {பரமாத்மாவின்} இருப்பை, எளிதாக உணரக்கூடிய வகையில் நிரூபிக்க முடியாது. அல்லது அறியாமை கொண்டவர்களால் அவனைக் {பரமாத்மாவைக்} காண முடியாது. மனிதர்கள், அறம், உண்மை {சத்தியம்}, சுயக்கட்டுப்பாடு, நோன்புகள், நல்லெண்ணம், அடக்கம், மன்னிக்கும் குணம், பகைமை தவிர்த்தல், தியாகம், கொடை {தானம்}, ஒருமைப்பாடு {குவிந்த கவனம்} மற்றும் புலன்களின் மீதான கட்டுப்பாடு ஆகிய பனிரெண்டின் மூலம் அந்த நிலையை {பரமாத்மாவைக் காணும் நிலையை} அடையலாம் என்கிறார் அஷ்டவக்கிரர்)
{13} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, "பதிமூன்றாவது சந்திர நாள் {திரயோதசி திதி} மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது; உலகில் பதிமூன்று தீவுகள் இருக்கின்றன." என்றார்.
(கங்குலியின் விளக்கம் : சிலரின் கூற்றுப்படி, முக்தியடையும் முயற்சிகள் இவ்வுலகில் வெற்றியைத் தராது. ஆனால் பிரம்மலோகத்தில் வெற்றியடையலாம். மற்றவர்கள் அந்த நிலையை அடைய சிறப்பான யோகம் தேவைப்படுகிறது என்கிறார்கள். பதிமூன்று பொருட்களைச் சுட்டும் எண்ணை மேற்கோள் காட்டுவதால், வந்தின், அறம் மற்றும் இன்ன பிற மட்டுமே முக்திக்குப் போதுமானது கிடையாது. ஆனால் சரியான நேரமும், இடமும் அவசியம் என்கிறார்)
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வளவு தூரம் சொன்னதும் வந்தின் நிறுத்திவிட்டார். அதன்பேரில் அஷ்டவக்கிரன் மீதி பாதி ஸ்லோகத்தைச் சொன்னான்.
அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, "கேசியால் பதிமூன்று வேள்விகள் செய்யப்பட்டன. வேதத்தின் அதிச்சந்தங்களால் {அதிஜகதீச்சந்தங்களால் = நீண்ட செய்யுளடிகளால்} பதிமூன்றும் விழுங்கப்பட்டன" என்றான்.
(கங்குலியின் விளக்கம் : பதிமூன்று என்ற எண்ணை மேற்கோள் காட்டியே அஷ்டவக்கிரர் முடிக்கிறார். அடிப்படையில் பாதிக்கப்படாத ஆன்மா - பத்து உறுப்புகள், அறிவு, மனம், மற்றும் அகங்காரம் {ஐந்து செயல் உறுப்புகளான வாய், கை, கால், மலவாய், கருவாய், ஐந்து உணர்வுறுப்புகளான கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகியவையும் + அறிவு + மனம் + அகங்காரம் அறிதல்} ஆகிய பதிமூன்றால் இன்பத்தையும் துன்பத்தையும் அடைகிறது. ஆனால் அதிச்சந்தங்கள், அதாவது அறியாமையை வெற்றி கொண்டவையான அந்தப் பனிரெண்டும், அறமும் இன்ன பிறவும் சேர்ந்து அந்தப் பதிமூன்றையும் அழிக்கிறது. அதுவே முக்தி {விடுதலையடைந்த} நிலையாகும் என்கிறார் அஷ்டவக்கிரர்.)
அஷ்டவக்கிரர் பேசுவதையும், சூதனின் மகன் {வந்தின்} தலைதாழ்த்தி, சிந்தனையிலாழ்ந்து அமைதியடைந்ததையும் கண்ட அந்தச் சபை பெரும் கூச்சலை ஏற்படுத்தியது. மன்னன் ஜனகனால் நடத்தப்பட்ட அந்த அற்புதமான வேள்வியில் இப்படி அமளி எழுந்தபோது, மிகவும் திருப்தியடைந்த அந்தணர்கள், கூப்பிய கரங்களுடன் அஷ்டவக்கிரனை அணுகி அவனுக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்.
அதன் பிறகு அஷ்டவக்கிரன், "இதற்கு முன்னால் இந்த மனிதன் {வந்தின்}, சர்ச்சைகளில் அந்தணர்களை வீழ்த்தி, அவர்களை நீருக்குள் வீழ்த்துவதை வழக்கமாக வைத்திருந்தான். இன்று வந்தினும் அதே விதியைச் சந்திக்கட்டும். அவனைப் பிடித்து நீரில் மூழ்கடியுங்கள்" என்றான்.
வந்தின் {மன்னன் ஜனகனிடம்}, "ஓ ஜனகா, நான் மன்னன் வருணனின் மகனாவேன். இங்கே உனது வேள்வி நடக்கும்போதே, அங்கேயும் {எனது தந்தையான வருணனின் உலகத்திலேயும்} பனிரெண்டு வருடங்கள் {12} நீளும் வேள்வி நடந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே நான் முதன்மையான அந்தணர்களை அங்கே {நீரில் மூழ்கடித்து} அனுப்பி வைத்தேன். அவர்கள் வருணனின் வேள்விக்குச் சாட்சியாக இருக்கச் சென்றிருக்கிறார்கள். அதோ பார்! அவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். வணங்கப்பட வேண்டிய அஷ்டவக்கிரருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இவரது கருணையால் நான் இன்று என்னைப் பெற்றவருடன் {வருணனுடன்} சேர்ந்து கொள்ளப் போகிறேன்" என்றார்.
வந்தின் {மன்னன் ஜனகனிடம்}, "ஓ ஜனகா, நான் மன்னன் வருணனின் மகனாவேன். இங்கே உனது வேள்வி நடக்கும்போதே, அங்கேயும் {எனது தந்தையான வருணனின் உலகத்திலேயும்} பனிரெண்டு வருடங்கள் {12} நீளும் வேள்வி நடந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே நான் முதன்மையான அந்தணர்களை அங்கே {நீரில் மூழ்கடித்து} அனுப்பி வைத்தேன். அவர்கள் வருணனின் வேள்விக்குச் சாட்சியாக இருக்கச் சென்றிருக்கிறார்கள். அதோ பார்! அவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். வணங்கப்பட வேண்டிய அஷ்டவக்கிரருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இவரது கருணையால் நான் இன்று என்னைப் பெற்றவருடன் {வருணனுடன்} சேர்ந்து கொள்ளப் போகிறேன்" என்றார்.
அஷ்டவக்கிரன், "வார்த்தைகள் அல்லது நுணுக்கத்தின் மூலமாக அந்தணர்களை வீழ்த்திய வந்தின், அவர்களைக் கடலின் நீரில் மூழ்கடித்தான். (வேத உண்மையை மறைத்து, தவறான வாதங்கள் மூலமாக அவர்களை அடக்கினான்), அவர்களை நான் இன்று என் ஞானத்தின் விளைவால் காப்பாற்றினேன். இதைக் கபடற்ற வெளிப்படைத்தன்மை கொண்ட மனிதர்கள் தீர்மானிக்கட்டும். நல்லது கெட்டது அறிந்த நெருப்பு, நேர்மையானவர்களின் உடலை எரிக்காமல் விட்டு அவர்களிடம் சார்பு நிலை {பாரபட்சம்} கொள்கிறது. ஆகவே, சிறுவர்கள் பேசும் திறமை குறைந்தவர்களாக இருப்பினும், நல்ல மனிதர்கள், அச்சிறுவர்களின் முயற்சிகளில் அவர்களுக்கு ஆதரவாகவே முடிவு எடுப்பார்கள். ஓ ஜனகா, நறுவிலி மரத்தின் {ஸ்லேஷ்மாதகீ [Sleshmataki] மரம் = இதன் இலையையும், கனியும் உண்பது புத்தியைக் கெடுக்கும்.} கனியை உண்டதன் விளைவாக {வந்தினின் போதனைகளைக் கேட்டதால்} உணர்வை இழந்தது எனது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். அல்லது {வந்தினின்} முகத்துதி உனது உணர்வைத் திருடிவிட்டதா? யானை ஒன்று என் வார்த்தைகளால் (எனும் கொக்கியால்) துளைக்கப்பட்டும் அதை அறிய மறுப்பது போல, நீ என் வார்த்தைகளைக் கேட்க மறுக்கிறாய்" என்றான்
ஜனகன் {அஷ்டவக்கிரனிடம்}, "உமது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அவற்றை நான் அற்புதமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதுமாக எடுத்துக் கொள்கிறேன். உமது வடிவம் கூட மனிதசக்திக்கு அப்பாற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிகிறது. இன்று வந்தினை நீர் வாதத்தில் தோற்கடித்ததால், உம் வசம் அவரை ஒப்படைக்கிறேன்" என்றான். அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, "ஓ மன்னா, வந்தின் உயிருடன் இருப்பதால், எனது எந்த நோக்கத்திற்கும் பயன்படப் போவதில்லை. உண்மையில் வருணன் அவனது தந்தையானால், அவன் கடலில் மூழ்கட்டும்" என்றான்.
வந்தின், "நான் மன்னன் வருணனின் மகனே. இத்தருணத்திலேயே (ஆகையால்) மூழ்குவதில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. அஷ்டவக்கிரர், நீண்ட காலத்திற்கு முன்பு தொலைந்து போன தனது தந்தை கஹோடரைக் காண்பார்" என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "பிறகு வருணனால் முறையாக வழிபடப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும் ஜனகனுக்கு முன்பாக {நீரிலிருந்து} எழுந்து வந்தனர். கஹோடர், "ஓ ஜனகா, இதற்காகவே மனிதர்கள் நற்செயல்களைச் {வேள்விகள் போன்றவற்றை என்று நினைக்கிறேன்} செய்து மகன்களுக்காக வேண்டுகிறார்கள். நான் எதில் தவறினேனோ அது என் மகனால் அடையப்பட்டது. பலமற்ற மனிதர்கள் பலம்பொருந்திய மகனைப் பெறுவார்கள்; மக்கு மனிதர்கள் அறிவார்ந்த மகன்களைப் பெறுவார்கள்; கல்வியற்றவர்கள் கல்வியில் சிறந்தவனை மகனாகப் பெறுவார்கள்" என்றார் {கஹோடர்}. வந்தின், "ஓ ஏகாதிபதி {ஜனகா}, உனது கூரிய கோடரியாலேயே யமன் தனது எதிரிகளின் தலைகளைக் கொய்கிறான். உமக்கு வளமையுண்டாகட்டும்! மன்னன் ஜனகனின் இந்த வேள்வியால், உக்தா {உக்தயம்} சடங்குகளுக்குரிய முதன்மையான மந்திரங்கள் சொல்லப்பட்டு, சோமச்சாறும் போதுமான அளவு குடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நேரிடையாக நேரில் வந்த தேவர்களும், தங்கள் புனிதமான பங்குகளைப் பெற்று விட்டனர்" என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "மேம்பட்ட பிரகாசத்துடன் அந்தணர்கள் {நீரிலிருந்து} உயர்ந்து வந்த போது, வந்தின் மன்னன் ஜனகனின் அனுமதியுடன், கடலின் நீருக்குள் இறங்கினார். பிறகு சூதனின் மகனை {வந்தினை} வென்ற அஷ்டவக்கிரன் தனது தந்தையை வழிபட்டான். தானும் {நீரிலிருந்து} வந்த அந்தணர்களால் வழிபடப்பட்டான்.
(கங்குலியின் விளக்கம் : சூதனின் மகன் என்பதற்கு விளக்கம் இதுதான். சூ (su) என்றால் அற்புதம், உதா (uta) என்றால் வேள்வி என்றும் பொருளாகும். ஆகவே அந்தச் சொல்லிணைப்பு {சூதனின் மகன் என்றால்} அற்புதமான வேள்வியை நடத்தியவன் என்ற பொருளைத் தருகிறது. Su means excellent, and uta, sacrifice. The compound accordingly means,--performer of excellent sacrifice. - http://sacred-texts.com/hin/m03/m03135.htm#fn_39)
பிறகு அஷ்டவக்கிரன் தனது ஆசிரமத்திற்குத் தனது மாமனுடன் {சுவேதகேதுவுடன்} சென்றான். பிறகு அவனது {அஷ்டவக்கிரனின்} தாயின் {தாய் சுஜாதாவின்} முன்னிலையில் அவனது தந்தை {கஹோடர்}, அவனிடம் {அஷ்டவக்கிரனிடம்}, "(ஓ மகனே), விரைவாக இந்தச் சமங்கா நதிக்குள் இறங்கு" என்றார். அதன் படி அவனும் (நீருக்குள்) இறங்கினான். (அவன் நீருக்குள் மூழ்கியதும்), அவனது (கோணலான) உறுப்புகள் அனைத்தும் உடனே நிமிர்த்தப்பட்டன. அந்த நாளில் இருந்து அந்த நதி சமங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அதுமுதல் அவள் {சமங்கா நதி} (பாவங்களைச்) சுத்தீகரிக்கும் அறம்பயில ஆரம்பித்தாள். அவளுக்குள் {சமங்கா நதியில்) நீராடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஆகையால், ஓ யுதிஷ்டிரா, நீ உனது தம்பிகளுடனும், மனைவியுடனும் நீருக்குள் இறங்கி சுத்திகரிப்பைச் செய். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ அஜமீட குலத்தின் வழித்தோன்றலே, இங்கே உனது தம்பிகளுடனும் அந்தணர்களுடனும் மகிழ்ச்சியாக வசித்து, நற்செயல்கள் செய்யும் நோக்கோடு மற்றப் பிற தகுதிகளை வளர்க்கும் நற்செயல்களைச் செய்" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.