The birth of Ashtavakra! | Vana Parva - Section 132 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
உத்தாலகர் தனது சீடனான கஹோடருக்கு, தனது மகள் சுஜாதையை மணமுடித்துக் கொடுப்பது; சுஜாதைக்குக் கரு உருவாவது; அந்தக் கரு, தனது தந்தை கஹோடர் சரியாக வாசிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது; அக்கருவுக்குச் சாபமிட்ட கஹோடர்; வாதப்போரில் தோற்று கஹோடர் இறப்பது; தனது தந்தை கஹோடர் இறந்தது தெரியாமல் வளரும் அஷ்டவிக்கிரன்; உண்மையை அறிந்ததும் ஜனகரின் வேள்விக்குச் செல்ல தனது மாமனான சுவேதகேதுவுடன் அஷ்டவக்கிரன் புறப்பட்டது...
அஷ்டவக்கிரர் |
லோமசர் {யுதிஷ்டிரன்}, "ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, புனிதமான மந்திரங்களில் நிபுணர் என்று உலக முழுதும் புகழ்பெற்ற உத்தாலகரின் மகன் சுவேதகேதுவின் புனிதமான ஆசிரமத்தை இங்கே பார். இந்த ஆசிரமம் தென்னை மரங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இங்கேதான் ஸ்வேதகேது சரஸ்வதி தேவியை மனித உருவில் கண்டு, அவளிடம், "வாக்கைக் {பேச்சைக்} கொடையாகக் கொண்டவனாக நான் இருக்க வேண்டும்" என்று கேட்டார். அந்த யுகத்தில், மாமனும் மருமகனுமான உத்தாலகரின் மகனான ஸ்வேதகேதுவும், கஹோடரின் மகனான அஷ்டவக்கிரரும் புனித கதைகளை அறிந்தவர்களில் சிறந்தவர்களாக இருந்தனர். ஒப்பற்ற சக்தி கொண்ட மாமனும் மருமகனுமான அந்த இரு அந்தணர்களும், மன்னன் ஜனகனின் வேள்விக்களத்திற்குச் சென்று வந்தினை {வந்தின்-ஐ} {வந்தி என்றும் அழைக்கப்படுகிறார்} ஒரு வாதப்போரில் வென்றார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, சிறுவனாக இருக்கும்போதே வந்தினை வென்று, நதியில் மூழ்கும்படி செய்த அஷ்டவக்கிரரைப் பேரனாகக் கொண்டவரின் {உத்தாலகரின்} இந்த ஆசிரமத்தை உனது தம்பிகளுடன் கூடி வழிபடு" என்றார் {லோமசர்}.
அதற்கு யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, "ஓ! லோமசரே, வந்தினை இவ்வகையில் வீழ்த்திய அந்தச் சக்திமிக்க மனிதரை {அஷ்டவக்கிரரைக்} குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. அவர் ஏன் அஷ்டவக்கிரராகப் {உடலின் எட்டுப் பகுதிகள் கோணலானவராகப்} பிறந்தார்?" என்று கேட்டான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "தவசியான உத்தாலகருக்கு, கஹோடர் {கஹோளர் என்றும் அழைக்கப்படுகிறார்} என்ற பெயரில் ஆசைகளை அடக்கிய ஒரு சீடர் இருந்தார். அவர் {கஹோடர்}, தன்னைக் குருவின் சேவைக்கு அர்ப்பணித்து, நீண்ட காலத்திற்குத் தனது கல்வியைத் தொடர்ந்தார். அந்த அந்தணர் {கஹோடர்}, தனது ஆசிரியருக்கு நீண்ட காலம் சேவை புரிந்தார். இவரது சேவையை உணர்ந்த குருவும் {உத்தாலகரும்}, தனது மகளான சுஜாதாவையும், சாத்திரங்கள் மீதான ஆளுமையையும் அவருக்குக் {கஹோடருக்குக்} கொடுத்தார். அவளும் {சுஜாதாவும்} நெருப்புக்கு ஒப்பான ஒரு பிள்ளையைக் கருவில் சுமந்தாள். அந்தக் கரு தனது தந்தை படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் {கஹோடரிடம்}, "ஓ தந்தையே, இரவு முழுவதும் படிக்கிறீர்கள். ஆனால் உமது வாசிப்புச் சரியானதாக எனக்குத் தெரியவில்லை. உமது கருணையால், இந்த எனது கரு நிலையிலேயே சாத்திரங்களையும், வேதங்களையும் அதன் பல கிளைகளையம் நான் அறிந்திருக்கிறேன். ஓ தந்தையே, உமது வாயில் இருந்து வெளிவருபவை {உச்சரிப்பு} சரியானதில்லை என்று நான் சொல்கிறேன்" என்றது. இப்படித் தனது சீடர்களின் முன்னிலையில் அவமதிக்கப்பட்ட அந்தப் பெரும் முனிவர் {கஹோடர்}, கோபத்தால் கருவில் இருந்த அந்தக் குழந்தையிடம், "கருவில் {வக்கிரகதியில்} இருக்கும்போதே நீ இப்படிப் பேசுவதால், உனது உடலில் எட்டுக் கோணல்களைக் கொண்டிருப்பாய்" என்று சபித்தார்.
அதே போல அக்குழந்தையும் கோணலுடனேயே பிறந்தது. அதனாலேயே அந்தப் பெரும் தவசி அஷ்டவக்கிரர் என்ற பெயரால் அறியப்பட்டார். அவருக்கு {அஷ்டவக்கிரருக்கு}, சுவேதகேது என்ற பெயரில் மாமன் ஒருவர் இருந்தார். அவர்கள் இருவரும் {அஷ்டவக்கிரரும், சுவேதகேதுவும்} சமவயது கொண்டவர்களாகவே இருந்தனர். கருவில் வளர்ச்சியடைந்த குழந்தையால் துன்பப்பட்ட சுஜாதை, செல்வத்தை விரும்பி, செல்வமற்றிருந்த தனது கணவரைத் தனிமையில் அழைத்துச் சமாதானப்படுத்தி, "ஓ பெரும் தவசியே, எனது கர்ப்பத்தின் பத்தாவது மாதத்தை நான் எப்படிச் சமாளிப்பேன்? நான் பிரசவித்த பிறகு, என் நிலைமையில் இருந்து நான் மீள வேண்டிய பொருள் எதுவும் உம்மிடம் இல்லையே" என்றாள்.
இப்படி மனைவியால் {சுஜாதாவால்} சொல்லப்பட்ட கஹோடர், செல்வத்திற்காக மன்னன் ஜனகனிடம் சென்றார். அங்கே அவர் வாத {பேச்சு} அறிவியல் அறிந்த வந்தினுடன் ஒரு வாத போரில் தோற்று, (அதன் தொடர்ச்சியாக) நீரில் மூழ்கடிக்கப்பட்டார். தனது மருமகன் {கஹோடர்} வந்தினுடன் விவாவித்து அந்த வாதப்போரில் தோற்று, நீரில் மூழ்கடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட உத்தாலகர், தனது மகளான சுஜாதையிடம், "நீ இதை அஷ்டவக்கிரனிடம் சொல்லாமல் கமுக்கமாக {ரகசியமாக} வைத்துக் கொள்" என்றார். அஷ்டவக்கிரன் பிறந்த பிறகு, அவன் இவ்விஷயத்தைக் குறித்து எதையும் கேள்விப்படாதவாறு அவளும் {சுஜாதையும்} அந்த {தனது தந்தையின்} ஆலோசனையின்படி நடந்து கொண்டாள். அவன் {அஷ்டவக்கிரன்}, உத்தாலகரைத் தனது தந்தையாகவும், சுவேதகேதுவைத் தனது தமையனாகவும் கருதினான்.
அஷ்டவக்கிரனுக்குப் பனிரெண்டு வயதானது. தனது தந்தையின் மடியில் அவன் உட்கார்ந்திருப்பதைச் சுவேதகேது கண்டான். இதனால் அவன் {சுவேதகேது} அவனை {அஷ்டவக்கிரனைக்} கையைப்பிடித்து இழுத்தான். இதனால் அஷ்டவக்கிரன் அழுததால், அவனிடம் {அஷ்வக்கிரரிடம்}, "இது உனது தந்தையின் மடியல்ல" என்றான் {ஸ்வேதகேது}. இந்தக் கொடும் வார்த்தை அஷ்டவக்கிரனின் இதயத்துக்குள் நேராகச் சென்று, மிகுந்த வலியை உண்டாக்கியது. அவன் நேராக இல்லத்திற்குச் சென்று, தனது தாயிடம், "எனது தந்தை எங்கே?" என்று கேட்டான். (இந்தக் கேள்வியால்) பெரிதும் துயருற்ற சுஜாதா, சாபத்திற்குப் பயந்து நடந்தது அத்தனையும் சொன்னாள்.
அனைத்தையும் கேட்ட அந்த அந்தணன் {அஷ்டவக்கிரன்}, இரவில், தனது மாமனான சுவேதகேதுவிடம், "நாம் மன்னன் ஜனகனின் வேள்விக்குச் செல்லலாம். அங்கே அற்புதங்கள் பலவற்றைக் காண வேண்டியுள்ளது. அங்கே நாம் அந்தணர்களுக்கிடையே நடைபெறும் வாதப்போரைக் கேட்டு, அற்புதமான உணவை உண்ணலாம். நமது ஞானமும் அதிகரிக்கும். புனிதமான வேதங்களை உரைப்பது காதுக்கு இனியதும், அருள் நிறைந்ததும் ஆகும்" என்றான். பிறகு அந்த மாமனும் மருமகனும், அற்புதமான வேள்வியான மன்னன் ஜனகனின் வேள்விக்குச் சென்றனர். வாயிலில் இருந்து விரட்டப்பட்ட அஷ்டவக்கிரன் மன்னனைச் {மன்னன் ஜனகனைச்} சந்தித்து, இந்த வார்த்தைகளை உரைத்தான்" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.