Yavakri! and Indra!! | Vana Parva - Section 135 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
லோமசர் யுதிஷ்டிரனிடம் யவக்கிரீயின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; யவக்கிரீ கடுந்தவம் இருப்பது யவக்கிரி வேத ஞானத்தை அடைவது பரத்வாஜர் யவக்கிரீயிடம் அகங்காரம் கூடாது என்று எச்சரிப்பது; யவக்கிரீ முனிவர்களைப் புண்படுத்தி இன்பங்கண்டு திரிவது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முன்பொரு காலத்தில் மதுவிலை என்று அழைக்கப்பட்ட சமங்க நதி இதோ தெரிகிறது. இங்கேதான் பரதன் நீராடிய கர்த்தமிலம் என்ற இடம் இருக்கிறது. சச்சியின் தலைவன் {இந்திரன்}, விரித்திரனைக் கொன்றதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பேரிடரின் போது, அவன் தனது சுத்திகரிப்பைச் சமங்கையில் செய்து பாவத்தில் இருந்து விடுபட்டான். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில்தான் மைநாக மலை பூமிக்குள் மூழ்கியது; அதனாலேயே இந்த இடம் வினசனம் என்று அழைக்கப்படுகிறது. ஓ! மனிதர்களில் காளைகளே, பழங்காலத்தில் அதிதி, மகன்களைப் பெறுவதற்காகக் கொண்டாடப் பட்ட ஒரு உணவைச் சமைப்பதற்காக (பிரம்மன் தலைமையில்), இந்த உயர்ந்த மலையில் ஏறி, சொல்ல முடியாத இழிவான துன்பத்துக்கு ஓர் முற்றுப் புள்ளி வைத்தாள்.
பெரிதுபடுத்த சொடுக்கவும் |
யுதிஷ்டிரன் {லோசரிடம்}, "பரத்வாஜரின் மகனான பெரும் தவசி யவக்கிரீ எப்படி வேதங்களில் ஆழமான ஞானத்தை அடைந்தார்? மேலும் அவர் எப்படி அழிந்தார்? நான் இவற்றையெல்லாம் நடந்தபடியே அறிய ஆவலாய் இருக்கிறேன். தேவர்களைப் போன்ற அம்மனிதர்களின் செயல்களின் விவரிப்பைக் கேட்பதில் நான் மகிழ்கிறேன்" என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பரத்வாஜரும், ரைப்பியரும் இரு நண்பர்களாவர். அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து பெரும் மகிழ்ச்சியுடன் இங்கே வசித்தார்கள். ரைப்பியருக்கு அர்வாவசு, பரவசு என்று இரு மகன்கள் இருந்தனர். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பரத்வாஜருக்கு யவக்கிரீ என்ற ஒரே மகன் இருந்தான். பதரத்வாஜர் தவம்பயின்றிருந்த வேளையில் ரைப்பியர் தனது இருமகன்களுக்கும் வேதங்களில் நல்ல நிபுணத்துவத்தைக் கொடுத்தார். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, சிறுவர்களாக இருந்த பொழுதிலிருந்தே அந்த இருவருக்குள்ளும் {பரத்வாஜருக்கு ரைப்பியருக்கும்} நட்பு ஒப்பற்றதாக இருந்தது. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, தவம்பயின்ற தனது தந்தை அந்தணர்களால் அசட்டை செய்யப்பட்டதையும், அதே வேளையில் ரைப்பியரையும் அவரது மகன்களையும் {அர்வாவசுவையும், பரவசுவையும்} அவர்கள் {அந்தணர்கள்} நன்கு மதித்தையும் கண்ட யவக்கிரீ மிகவும் துக்கம் கொண்டு, மன வருத்தமடைந்தார். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு அவர் {யவக்கிரீ} வேத ஞானத்திற்காகக் கடுந்தவத்தை ஆரம்பித்தார். அவர் தனது உடலை எரியும் நெருப்புக்கு வெளிப்படுத்தினார். கடும் தவம்பயின்று, இந்திரனின் மனதில் துயரத்தை ஏற்படுத்தினார். ஓ யுதிஷ்டிரா, பிறகு இந்திரன் அவரிடம் {யவக்கிரீயிடம்} சென்று, "ஓ தவசியே, எதற்காக நீர் இத்தகு கடும் தவம் இருக்கிறீர்?" என்று கேட்டான். அதற்கு யவக்கிரீ, "தேவர்களில் புகழத்தக்கவனே {இந்திரனே}, எந்த அந்தணனும் அடைய முடியாத வேத ஞானத்தை நான் விரும்புகிறேன். ஓ! பகனை வீழ்த்தியவனே {இந்திரா}, அந்த ஞானத்திற்காகவே நான் இத்தகு கடும் தவம் செய்கிறேன். ஓ! கௌசிகா எனது தவத்தின் சக்தியால் நான் அனைத்து சாத்திரங்களின் ஞானத்தையும் அறிய விரும்புகிறேன். ஓ!தலைவா {இந்திரா}, ஆசிரியர்கள் மூலம் அடையப்படும் வேத ஞானத்திற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. ஆகையால், (குறுகிய காலத்திற்குள் வேத ஞானம் அடைய) நான் இந்த உயர்ந்த முயற்சியைச் செய்கிறேன்" என்றார் {யவக்கிரீ}. அதற்கு இந்திரன், "ஓ! அந்தணத் தவசியே, நீர் மேற்கொண்டிருக்கும் வழி சரியானதல்ல. ஓ! அந்தணரே, நீர் எதற்காக உம்மையே அழித்துக் கொள்கிறீர்? போய் ஒரு குருவின் வாயிலாக அவற்றைப் படித்துக் கொள்ளும்" என்றான் {இந்திரன்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லிவிட்டு, சக்ரன் {இந்திரன்} சென்றுவிட்டான். பிறகு அளவிடமுடியாத சக்தி கொண்ட யவக்கிரீ மீண்டும் தனது கவனத்தைத் தவத்தில் செலுத்தினார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவரது கடுந்தவங்களை அறிந்த இந்திரன் மீண்டும் பெரும் தாக்கத்திற்கு உள்ளானான். பிறகு வலனைக் கொன்ற தேவனான இந்திரன், மீண்டும் கடுந்தவத்திலிருந்த அந்தப் பெரும் தவசியிடம் வந்து, "நீரும் உமது தந்தையும் வேத ஞானத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்; ஆனால் உமது முயற்சிகள் வெற்றி அடைய முடியாது. இந்த உமது செயல் பரிந்துரைக்கத்தக்கதன்று" என்றான். யவக்கிரீ, "ஓ தேவர்களின் தலைவா {இந்திரா}, நீ எனது விருப்பங்களை நிறைவேற்றவில்லையென்றால், நான் இந்த வேள்வியில் சுடர்விட்டு எரியும் நெருப்பில் எனது அங்கங்களை வெட்டிப் போடுவேன்" என்றார் {யவக்கிரீ}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்த உயர் ஆன்ம தவசியின் தீர்மானத்தை அறிந்த அறிவுநுட்பம் கொண்ட இந்திரன் சிறிது நேரம் சிந்தித்து, அவரது கருத்தை மாற்ற சிறந்த ஓர் உபாயத்தைக் கண்டுபிடித்தான். பிறகு இந்திரன், நூறு வயது கொண்ட ஒரு உறுதியற்ற சுவாசக்கோளாறுடைய ஒரு அந்தண வடிவம் எடுத்தான். பிறகு அவன் {இந்திரன்}, யவக்கிரீ தனது நீர்க்கடனை செலுத்த வரும் பகீரதியின் {கங்கையின்} கரையில் மணலை அள்ளி வீசிக் கொண்டிருந்தான். அந்தணர்களின் தலைவரான யவக்கிரீ தன்னைக் கவனிக்காததைக் கண்ட இந்திரன், அக்கங்கையை மணலால் நிரப்பத் தொடங்கினான். நிறுத்தாமல் கைநிறைய மணலை அள்ளி பகீரதிக்குள் எறிந்து, அந்தத் தவசியின் {யவக்கிரீயின்} கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு அணை கட்டத் தொடங்கினான்.
இந்திரன் அணை கட்டுவதைக் கண்ட தவசிகளில் காளையான யவக்கிரீ சத்தம் போட்டு சிரித்து, "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய். ஓ! அந்தணா, உனது நோக்கம்தான் என்ன? ஒன்றுக்கும் ஆகாத, இந்தப் பெரும் முயற்சியை நீ ஏன் செய்கிறாய்?" என்று கேட்டார். இந்திரன், "ஓ மகனே, ஒரு தாராளமான வழி வேண்டும் என்பதற்காக நான் கங்கையின் மீது அணை கட்டுகிறேன். (இந்த நதியை) படகில் கடக்க மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்" என்றான். யவக்கிரீ, "ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்தப் பெரும்பலம் வாய்ந்த ஊற்றை உம்மால் அணை கட்டித் தடுக்க முடியாது. ஓ அந்தணரே, அனுபவத்திற்கு ஒத்துவராத உமது முயற்சியைக் கைவிடும், அனுபவத்துக்குகந்த வேறு எதையாவது செய்யும்" என்றார். இந்திரன், "ஓ தவசியே, நிச்சயமாகக் கனி தராது என்று தெரிந்தும், வேதங்களின் ஞானத்தை அடைய நீர் செய்யும் தவத்தைப் போலத்தான் நானும் இந்தப் பெரும்பணியைச் செய்கிறேன்" என்றான். யவக்கிரீ, "ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, உனது முயற்சிகளைப் போலவே எனது முயற்சிகள் அனைத்தும் கனியற்றதாகுமென்றால், எது அனுபவத்திற்கு உகந்து வருமோ அதை எனக்குச் செய் {உன்னால் முடிந்ததை எனக்குச் செய்}. நான் மற்ற மனிதர்களை விஞ்சி இருக்கும் வகையில் எனக்கு வரங்களை அருள் செய்" என்று கேட்டார் {பரத்வாஜரின் மகன் யவக்கிரிவர்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு இந்திரன் அந்தப் பெருஞ்சக்தி வாய்ந்த தவசி கேட்ட வரங்களை அளித்தான். பிறகு அவன், "நீர் விரும்பிய படியே, வேதங்களின் ஞானம் உமக்கும் உமது தந்தைக்கும் கிடைக்கும். உமது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். ஓ யவக்கிரீ, வீட்டிற்குச் செல்லும்" என்றான்.
இப்படித் தனது விருப்பத்தை அடைந்த யவக்கிரீ தனது தந்தையிடம் {பரத்வாஜரிடம்} வந்து, "ஓ! தந்தையே, எனக்கும் உமக்கும் வேதங்கள் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. நான் அனைத்து மனிதர்களை விஞ்சும் வகையில் வரங்களைப் பெற்றிருக்கிறேன்" என்று சொன்னான். பரத்வாஜர், "ஓ மகனே {யவக்கிரிவனே}, நீ விரும்பிய நோக்கங்களை அடைந்ததனால், நீ அகங்காரம் கொள்வாய். நீ அப்படி அகங்காரத்தை அடையும்போது நீ இரக்கமற்று போவாய். அப்படி இரக்கமற்றுப் போவதால், விரைவில் அழிவு உன்னை வந்தடையும். ஓ எனது மகனே {யவக்கிரிவனே}, இது சம்பந்தமாகத் தேவர்கள் ஒரு உபகதையைச் சொல்வார்கள். ஓ மகனே {யவக்கிரிவனே}, பழங்காலத்தில் பாலதி என்ற பெயரில் பெரும் சக்தி கொண்ட ஒரு தவசி வாழ்ந்து வந்தார். தனது பிள்ளையின் இறப்பால் துக்கத்தில் இருந்த அந்த முனிவர் {பாலதி}, தேவர்களைப் போலவே இறவாதவனாக ஒரு மகனை வேண்டி கடும் தவம் செய்தார். அவர் விரும்பியபடி ஒரு மகனையும் அடைந்தார். ஆனால் அவருக்கு {முனிவர் பாலதிக்கு} ஆதரவாக நடந்து கொண்ட தேவர்கள், அவரது மகனை இறவாதவனாக ஆக்கவில்லை. அவர்கள், "இறக்கக்கூடிய ஒரு மனிதன் ஒரு நிபந்தனையின் பேரில் இறவாதவனாக ஆக முடியும். இருப்பினும் உமது மகனின் உயிர், ஏதாவது ஒன்றின் மூலம் பிரிவதாக இருக்க வேண்டும்" என்று கேட்டனர். அதற்குப் பாலதி, : "ஓ தேவர்களின் தலைவா, நித்தியமாக நிலைத்து நிற்கும் இந்த அழிவில்லாத மலைகள் அவன் உயிர் பிரிவதற்கான காரணமாக இருக்கட்டும்" என்று சொன்னார். பிறகு அந்தத் தவசிக்கு {பாலதிக்கு}, மேதாவி என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். அவர் எரிச்சல் மிக்க மனநிலை கொண்டவனாக இருந்தான். அனைத்தையும் (தனது பிறப்பைக் குறித்துக்) கேள்விப்பட்ட அவன் {மேதாவி}, அவனுக்கு அகங்காரம் பெருகி, முனிவர்களை அவமதிக்க ஆரம்பித்தான். முனிவர்களுக்குத் தீங்கிழைத்தவாறே அவன் இந்தப் பூமியைச் சுற்றி வந்தான்.
ஒருநாள் பெரும் சக்தி கொண்டவரும் கற்றறிந்தவருமான தனுஷாக்ஷர் என்ற தவசியை அவன் {மேதாவி} சந்திக்க நேர்ந்தது. மேதாவி அவருக்குத் தீங்கிழைத்தான். அதனால் அந்தத் தவசி {தனுஷாக்ஷர்} "சாம்பலாகப் போ" என அவனைச் {மேதாவியைச்} சபித்தார். இருப்பினும் மேதாவி சாம்பலாகவில்லை. பிறகு தனுஷாக்ஷர், மேதாவியின் உயிருக்குக் காரணமாக இருந்த அந்த மலையை எருமைகளைக் கொண்டு சிதறடித்தார். தனது உயிருக்குக் காரணமான மலையின் அழிவால் அந்தப் பிள்ளையும் {மேதாவியும்} அழிந்து போனான். மேதாவியின் தந்தை {பாலதி} தனது இறந்த மகனை அணைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதார். ஓ மகனே, அப்படி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த அந்தத் தவசியிடம் வேதங்களை அறிந்த தவசிகள் என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்கிறேன் கேள். "எந்த நிபந்தனையின் பேரிலும் {இறக்கக்கூடிய} ஒரு மனிதன், விதியால் நிர்ணயிக்கப்பட்ட முடிவை மீற முடியாது. பார்! தனுஷாக்ஷர் எருமைகளைக் கொண்டே மலைகளைக் கூடப் பிளந்துவிட்டார்." என்றனர்.
ஆகையால் வரங்களைப் பெற்றுவிட்டோம் என்று அகங்காரம் கொள்ளும் இளந்துறவிகள் குறுகிய காலத்தில் அழிந்து போவார்கள். நீ {யவக்கிரீயே} அவர்களுள் ஒருவனாக ஆகவிடாதே. ஓ எனது மகனே {யவக்கிரீ}, இந்த ரைப்பியர் பெரும் சக்தி வாய்ந்தவர். அவரது பிள்ளைகளும் {அர்வாவசுவும், பரவசுவும்} அவரைப் {ரைப்பியரைப்} போலவே இருக்கின்றனர். ஆகையால் நீ அவரை {ரைப்பியரை} அணுகாமல் எச்சரிக்கையாய் இரு. ஓ எனது மகனே, பெரும் தவசியான ரைப்பியர் எரிச்சல் குணம் கொண்டவர். அவர் கோபப்பட்டால் உனக்குத் தீங்கு நேரும்" என்றார் {பரத்வாஜர்}. யவக்கிரீ, "ஓ தந்தையே {பரத்வாஜரே}, நீர் சொன்னவாறே நான் செய்வேன். அதற்காக நீர் எவ்வகையிலும் வருந்தாதீர். எனது தந்தையைப் போலவே, எனக்கு ரைப்பியரும் மரியாதைக்கு உரியவரே!" என்றான். அப்படி இனிமையான வார்த்தைகளைத் தனது தந்தையிடம் கூறிய யவக்கிரீ, எதற்கும் யாருக்கும் அஞ்சாமல், முனிவர்களைப் புண்படுத்துவதில் இன்பம் கொண்டு திரிய ஆரம்பித்தார்." என்றார் {லோமசர் யுதிஷ்டிரனிடம்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.