The end of Yavakri! | Vana Parva - Section 136 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யவக்கிரீ, ரைப்பியரின் மருமகளும், பரவசுவின் மனைவியுமான பெண்ணின் மீது மையல் கொள்வது; அவள் யவக்கிரீயை ஏமாற்றிவிட்டு, ரைப்பியரிடம் வந்து விஷயத்தைச் சொல்வது; ரைப்பியர் தனது முடியினால் உண்டான ராட்சசன் மூலம் யவக்கிரீயைக் கொன்றது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "அச்சமற்று உலவிக்கொண்டிருந்த யவக்கிரீ, சித்திரை மாதத்தின் ஒரு நாளில் ரைப்பியரின் ஆசிரமத்தை அணுகினார். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பூத்துக்குலுங்கும் மரங்களுடன் இருந்த அந்த அழகிய ஆசிரமத்தில், அவர், கின்னரப் பெண்மணி போல மெல்ல நடந்து கொண்டிருந்த ரைப்பியரின் மருமகளைக் காண நேர்ந்தது. ஆசையால் தனது உணர்வுகளை இழந்த யவக்கிரீ, அந்த நாணம் கொண்ட பெண்ணிடம் சிறிதும் வெட்கமில்லாமல், "நீ என்னோடு இணைந்திருப்பாயா?" என்று கேட்டார். அவரது {யவக்கிரீயின்} இயல்பை அறிந்து, சாபத்திற்கு அஞ்சி, அதே வேளையில் ரைப்பியரின் சக்தியையும் நினைத்துப் பார்த்து, அவரிடம் "நான் சம்மதிக்கிறேன்" என்று சொன்னாள் அவள் {ரைப்பியரின் மருமகள்}.
ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு அவரை {யவக்கிரீயை} தனிமையில் அழைத்துச் சென்று சங்கிலியால் பிணைத்தாள். ஓ! எதிரிகளை வெல்பவனே {யுதிஷ்டிரா}, ஆசிரமத்திற்குத் திரும்பிய ரைப்பியர், பரவசுவின் மனைவியான தனது மருமகள் கண்ணீருடன் இருப்பதைக் கண்டார். ஓ! யுதிஷ்டிரா, அவர் {ரைப்பியர்} அவளைச் சமாதானப் படுத்தி, அவளது துயரத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதன்பேரில், அந்த அழகிய மங்கை, யவக்கிரீ தன்னிடம் பேசியதையும், பதிலுக்கு புத்திசாலித்தனமாக தான் செய்தவற்றையும் சொன்னாள். யவக்கிரீயின் தீய நடத்தையைக் கேட்ட அந்தத் தவசி {ரைப்பியர்} கோபத்தால் எரிந்தார்.
எளிதில் கோபமடையக்கூடிய மனநிலை கொண்ட அந்தப் பெரும் முனிவர் {ரைப்பியர்}, இதனால் ஏற்பட்ட உந்துதலால், தனது ஜடா முடியில் இருந்த ஒரு முடியைப் பிடுங்கி, புனிதமான மந்திரங்களைச் சொல்லி அதை வேள்வித்தீயில் காணிக்கையாகக் கொடுத்தார். இதன் காரணமாக அந்த நெருப்பில் இருந்து அவரது மருமகளை ஒத்த உருவம் கொண்ட ஒரு பெண் வெளிப்பட்டாள். பிறகு அவர் மேலும் ஒரு முடியை அவரது ஜடா முடியில் இருந்து பிடுங்கி மீண்டும் அதை வேள்வி நெருப்பில் காணிக்கைக் கொடுத்தார். இப்போது காண்பதற்குப் பயங்கராமன கடும் விழிகள் கொண்ட ஒரு ராட்சசன் வெளிவந்தான். பிறகு அந்த இருவரும் {அந்த அழகிய பெண்ணும், ராட்சசனும்} ரைப்பியரிடம், "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர். அதற்கு அந்தக் கோபக்கார முனிவர் {ரைப்பியர்}, "நீங்கள் சென்று யவக்கிரீயைக் கொல்லுங்கள்" என்று சொன்னார். "அப்படியே செய்கிறோம்" என்று சொன்ன அவர்கள், யவக்கிரீயைக் கொல்லும் நோக்குடன் அங்கிருந்து சென்றனர்.
அந்தப் பெரும் இதயம் கொண்ட முனிவர் {ரைப்பியர்} படைத்த அந்த அழகிய பெண், தனது அழகால் யவக்கிரீயை மயக்கி, அவரிடம் இருந்த கமண்டலத்தைப் {sacred water pot} பிடுங்கிக் கொண்டாள். பிறகு அந்த ராட்சசன், ஓங்கிய ஈட்டியுடன் {அல்லது சூலத்துடன்}, கமண்டலம் இழந்ததால் சுத்தமற்றிருந்த யவக்கிரியின் மேல் பாய்ந்தான். ஓங்கிய ஈட்டியுடன் தன்னை நோக்கி வரும் ராட்சசனைக் கண்ட யவக்கிரீ, திடீரென எழுந்து தடாகத்தை நோக்கி ஓடினார். ஆனால் அத்தடாகம் நீர் வற்றிப் போய் இருப்பதைக் கண்டார். மேலும் பல நதிகளுக்கு ஓடினார். ஆனால் அவையும் வறண்டிருப்பதையே கண்டார்.
ஈட்டி {[அ] சூலம்} தாங்கிய ராட்சசனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்ட யவக்கிரீ பயத்தால் தனது தந்தையின் {பரத்வாஜரின்} அக்னிஹோத்ர அறைக்குள் நுழைய முற்பட்டார். ஆனால் அவர் {யவக்கிரீ}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூத்திரனான ஒரு குருட்டுக் காவற்காரணால் தடுக்கப்பட்டார். அவர் {யவக்கிரீ} அந்த மனிதனிடம் {சூத்திர சாதியைச் சேர்ந்த குருட்டுக் காவற்காரனிடம்} பிடிபட்ட நிலையில், அந்த வாசலிலேயே நின்றார். யவக்கிரீ இப்படிச் சூத்திரனால் பிடிபட்டதை அறிந்த ராட்சசன், தனது ஈட்டியை அவர் {யவக்கிரீ} மீது வீசினான். இதனால் இதயம் துளைக்கப்பட்ட அவர் {யவக்கிரீ}, அங்கேயே இறந்து கீழே விழுந்தார். யவக்கிரீயைக் கொன்ற அந்த ராட்சசன் ரைப்பியரிடம் திரும்பி, அந்த முனிவரின் {ரைப்பியரின்} அனுமதியுடன் அந்தப் பெண்ணுடன் {ரைப்பியர் உருவாக்கிய பெண்ணுடன்} வாழ ஆரம்பித்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.