The lament of Bharadwaja for his son! | Vana Parva - Section 137 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
விறகு சேகரித்து வந்த முனிவர் பரத்வாஜர் தனது மகனின் இறப்பை அறிவது; மகனின் பிரிவைத் தாளாது அழுதுப் புலம்புவது; பரத்வாஜர் ரைப்பியருக்கு சாபமிடுவது; தனது மகனின் உடலை எரியூட்டி, தானும் நெருப்பில் விழுவது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, விறகுகள் சேகரித்து அந்த நாளின் சடங்குக் கடமைகளை நிறைவேற்றிய பரத்வாஜர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அவரது மகன் {யவக்கிரீ} இறந்துவிட்டதால், வழக்கம்போல அவரை {பரத்வாஜரை} வரவேற்கும் வேள்வி நெருப்பு அன்று அவரை வரவேற்கவில்லை. அக்னிஹோத்திரத்தில் இருந்த மாற்றத்தைக் கண்ட அந்தப் பெரும் முனிவர் {பரத்வாஜர்}, அங்கு அமர்ந்திருந்த சூத்திரனான அந்தக் குருட்டுக் காவற்காரனிடம், "ஓ! சூத்திரா, ஏன் இன்று என்னைக் கண்ட பிறகு நெருப்புகள் மகிழவில்லை? நீயும் உற்சாகமாக இருப்பதாகத் தெரியவில்லையே. எனது ஆசிரமம் நன்றாக இருக்கிறதா {அனைத்தும் நன்றாக இருக்கின்றனவா}? அற்ப புத்தி கொண்ட எனது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றிருக்க மாட்டான் என்று நம்புகிறேன். ஓ! சூத்திரா, எனது கேள்விகள் அனைத்திற்கும் விரைவாகப் பதில் சொல். எனது மனம் ஐயம் கொள்கிறது" என்று கேட்டார் {பரத்வாஜர்}.
அதற்கு அந்தச் சூத்திரன், "அற்ப புத்தி கொண்ட உமது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரிடம் சென்றதால், ஒரு ராட்சசனால் கொல்லப்பட்டு இங்கே (தரையில்) நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கிறார். ஈட்டி {சூலம்} தாங்கிய ராட்சசனால் தாக்கப்பட்ட அவர், இந்த அறைக்குள் நுழைய முற்பட்ட போது, நான் எனது கரங்களால் அவரது வழியைத் தடுத்தேன். சுத்தமற்ற நிலையில் நீரை எடுக்க விரும்பிய அவர் நம்பிக்கையற்று நின்ற போது, கரங்களில் ஈட்டியுடன் இருந்த உணர்ச்சி வேகமுள்ள ராட்சசனால் கொல்லப்பட்டார்" என்றான்.
அந்தச் சூத்திரனிடம் இருந்து இந்தப் பெருந்துயரத்தைக் கேட்ட பரத்வாஜர் மிகவும் துன்புற்ற தனது மகனை {யவக்கிரீயைக்} கட்டி அணைத்துக் கொண்டு புலம்பி அழுதார். அவர் {பரத்வாஜர்}, "ஓ எனது மகனே, எந்த அந்தணனாலும் அறியப்படாத வேதங்களை நீ அறிய வேண்டும் என்று, அந்தணர்களின் நன்மைக்காக அல்லவா நீ தவம் பயின்றாய். அந்தணர்களிடம் உனது நடத்தை நன்றாகவே இருந்தது. அனைத்து உயிர்களுக்கும் தீங்கு செய்யாதவனாக இருந்தாய். ஆனால் ஐயோ! (கடைசியில்} முரட்டுத்தனம் என்ற குறையைக் கொண்டாய். ஓ! எனது மகனே, ரைப்பியனின் வசிப்பிடத்தை அணுகாதே என்று நான் உன்னைத் தடுத்தேனே; ஆனால், மரணத் தேவன் அல்லவா உன்னை அவ்விடம் அழைத்துச் சென்றிருக்கிறான்.
நான் முதிர்ந்த வயதினன் என்பதை அறிந்தும், நீ {யவக்கிரீ} எனது ஒரே மகன் என்பதை அறிந்தும் அந்தத் தீய மனம் கொண்ட மனிதன் {ரைப்பியன்} கோபத்துக்கு இடம் கொடுத்தானே. ரைப்பியனின் ஏற்பாட்டால் அல்லவா நான் எனது குழந்தையை இழந்தேன். ஓ! எனது மகனே, நீ இல்லாத உலகில் நான் இனி வாழ மாட்டேன். நான் எனது உயிரை விடுகிறேன். ஆனால், நான் ஒன்றைச் சொல்கிறேன். குறுகிய காலத்திற்குள் ரைப்பியனின் மூத்த மகன், அவனை {ரைப்பியரைக்} கொல்வான். துயரத்தை அறியாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதால் {பிள்ளையின் மரணத்தைக் காணாததால்}, பிள்ளைகளே பெறாதவர்கள் அருளப்பட்டவர்களே. தனது பிள்ளை இறந்த துக்கம் தாளாமல், தனது ஆருயிர் தோழனைச் சபிக்கும் ஒரு மனிதனைவிடத் தீய மனிதன் வேறு எவன் இருக்க முடியும்! எனது மகன் இறந்ததைக் கண்டதால், நான் எனது ஆருயிர் நண்பனைச் சபித்து விட்டேன்! இவ்விதமான துயரை இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு யார் அனுபவிப்பான்?" என்று புலம்பி அழுதார். இப்படி நீண்ட நேரம் புலம்பி அழுத பரத்வாஜர் தனது மகனின் {யவக்கிரீயின்} உடலுக்கு எரியூட்டினார். பிறகு, தழல்விட்டு முழுதும் எரிந்த நெருப்புக்குள் அவரும் புகுந்தார்" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.