Education without exertion will be useless! | Vana Parva - Section 138 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
ரைப்பியரை மான் என்று நினைத்த பராவசு அவரைக் கொல்வது; பராவசு தம்பியான அர்வாவசுவை ஏமாற்றிக் காட்டுக்கு அனுப்புவது; அர்வாவசு கடுந்தவம் இருந்து சூரிய வெளிப்பாடை அடைந்து, ரைப்பியரையும், பரத்வாஜரையும், யவக்கிரீயையும் உயிர்மீட்பது; தனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று அக்னியிடம் கேட்ட யவக்கிரீ...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அதேநேரத்தில், ரைப்பியரின் எஜமானனும் {வேள்வியின் எஜமானனும், ரைப்பியரின் சீடனுமான என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.} நல்ல அதிர்ஷ்டம் வாய்ந்தவனும் பெரும் பலம் வாய்ந்த மன்னனுமான பிருகத்யுன்மனன், ஒரு வேள்வியைச் செய்தான். அந்தப் புத்திகூர்மை கொண்ட ஏகாதிபதி {பிருகத்யும்னன்}, ரைப்பியரின் மகன்களான அர்வாவசுவையும், பராவசுவையும் தனக்கு {பிருகத்யும்னனுக்கு} உதவியாக வேள்வியில் ஈடுபடுத்தினான்.
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இருவரும் {அர்வாவசுவும், பராவசுவும்} தங்கள் தந்தையிடம் {ரைப்பியரிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு {பிருகத்யும்னனின்} வேள்வியை நடத்த சென்றனர். ரைப்பியரும் பராவசுவின் மனைவியும் ஆசிரமத்தில் இருந்தனர். இப்படியே செல்கையில் ஒரு நாள், தனது மனைவியைக் காண விரும்பிய பராவசு, தனியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது கருப்பு மான்தோலால் தன்னை மூடியிருந்த தனது தந்தையை {ரைப்பியரை} வனத்தில் கண்டான். அந்த இரவு மிகுந்த இருளாக இருந்தது. களைப்பால் குருடாகியிருந்த பராவசு அந்த ஆழ்ந்த கானகத்தில் தனது தந்தையை அங்குமிங்கும் திரியும் மானாக நினைத்தான். தவறுதலாக அவரை {தந்தை ரைப்பியரை} மானாக நினைத்துக் கொண்ட பராவசு, எந்த உள்நோக்கமும் இல்லாமல், தனது பாதுகாப்புக்காக, தனது தந்தையைக் கொன்றான்.
ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு (தனது தந்தையின்) இறுதிச் சடங்குகளை முடித்து, வேள்விக்குத் திரும்பி தனது சகோதரனிடம், "உன்னால் இந்தக் காரியத்தைத் {இந்த வேள்வியைத்} துணையில்லாமல் செய்ய முடியாது. நான் மானென்று நினைத்து நமது தந்தையைக் கொன்றுவிட்டேன். ஓ! சகோதரா {அர்வாவசுவே}, அந்தணரைக் கொன்ற பாவம் போக நீ எனக்காக நோன்பிரு. ஓ முனிவனே {அர்வாவசுவே}, நான் எந்தத் துணையும் இல்லாமல் இந்த வேள்வியை முடிப்பேன்" என்றான் {பராவசு}. அர்வாவசு, "கொடைநிரம்பிய பிருகத்யும்னனின் இந்த வேள்வியை நீ நடத்து; எனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நீ அந்தணரைக் கொன்ற பாவத்துக்காக {பிரம்மஹத்தி தோஷம் நீங்க}, உனக்காக நான் நோன்பிருப்பேன்" என்றான் {அர்வாவசு}"
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்தணரைக் கொன்ற பாவத்திற்கான நோன்பை முடித்த முனிவன் அர்வாவசு வேள்விக்குத் திரும்பினான். தனது சகோதரன் {அர்வாவசு} வருவதைக் கண்ட பராவசு, வன்மத்துடன் கூடிய அடைபட்ட குரலுடன், பிருகத்யும்னனிடம், "ஓ மன்னா, அந்தணரைக் கொன்ற இவன் வேள்வியில் நுழையாதவாறு பார்த்துக் கொள். அந்தணரைக் கொன்றவனின் பார்வை கூட உனக்குத் தீங்கை இழைத்துவிடலாம்" என்றான். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்ட அம்மன்னன் உடனடியாகத் தனது சேவகர்களை அழைத்துக் (அர்வாவசுவை வெளியேற்றுமாறு} கட்டளையிட்டான்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவன் {அர்வாவசு} வெளியேற்றப்பட்ட போது, அந்தச் சேவகர்கள் அவனை {அர்வாவசுவை} தொடர்ச்சியாக "அந்தணரைக் கொன்றவனே" என்று சொன்னதால், அர்வாவசு ஒரு முறைக்குப் பலமுறை, "நான் எந்த அந்தணரையும் கொல்லவில்லை" என்றான். தான் தனக்காக {பிரமஹத்தி தீர} அந்நோன்பைச் செய்யவில்லை என்றும், தனது சகோதரனே {பராவசுவே} அப்பாவத்தை இழைத்தவன் என்றும், தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொல்லி, சேவகர்களைக் கண்டித்த அந்தக் கடுந்தவம் கொண்ட அந்தண முனிவன் {அர்வாவசு}, பிறகு அமைதியாக வனத்திற்குள் சென்றான். அங்கே அந்தப் அந்தண முனிவன் {அர்வாவசு} கடுமையான நோன்புகள் இருந்து சூரியனின் பாதுகாப்பை வேண்டினான். அப்போது சூரிய வழிபாடு குறித்த கல்வி அவனுக்கு வெளிப்பாடானது. அது {சூரிய கல்வி} வெளிப்பட்டு அவனை {அர்வாவசுவை} அடைந்தது. (வேள்வி நெய்யில்) முதற்பங்கைப் பெறும் சூரியன் அவனுக்கு எதிரில் உருவமெடுத்து வந்தான்."
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அர்வாவசுவின் செயல்களில் தேவர்களும் திருப்திகொண்டிருந்தனர். அவர்கள் அவனை {அர்வாவசுவை} (பிருகத்யும்னனின்) வேள்வியில் முதன்மைப் புரோகிதராக ஈடுபடுத்தி, பராவசுவை வேள்வி செய்வதிலிருந்து நீக்கினர். பிறகு அக்னியும், பிற தேவர்களும் அர்வாவசுவுக்கு வரங்களை அளித்தனர். மேலும் அவன் {அர்வாவசு} அவனது தந்தை {ரைப்பியர்} உயிர்மீள வேண்டும் என்று வேண்டினான். மேலும் தனது சகோதரனின் பாவம் விலக்கப்பட வேண்டும் என்றும், தனது தந்தை தான் கொல்லப்பட்டதை மீண்டும் நினைக்கக்கூடாது என்றும், பரத்வாஜரும், யவக்கிரீயும் மீண்டும் உயிர்பெற வேண்டும் என்றும், சூரியன் சம்பந்தமான வெளிப்பாடு (பூமியில்) புகழடைய வேண்டும் என்று வேண்டினான். அந்தத் தேவனும் "அப்படி ஆகட்டும் என்று சொல்லி, மேலும் வரங்களை அளித்தான்.
ஓ! யுதிஷ்டிரா, அதன்பேரில் அனைவரும் உயிர்மீண்டனர். அப்போது யவக்கிரீ அக்னியிடமும் பிற தேவர்களிடமும், "நான் அனைத்து வேதங்களின் ஞானத்தையும் பெற்றேன். மேலும் தவமும் பயின்றேன். இருப்பினும், ஓ இறவாதவர்களின் {தேவர்களின்} தலைவா {அக்னியே}, ரைப்பியரால் எப்படி என்னை இத்தகைய வழியில் கொல்ல முடிந்தது?" என்று கேட்டான். அதற்குத் தேவர்கள், "ஓ யவக்கிரீ, நீ நடந்தகொண்டதைப் போல மீண்டும் நடந்து கொள்ளாதே. நீ கேட்பது சாத்தியமே, ஏனென்றால் நீ உனது முயற்சியின்றி, ஒரு குருவின் உதவியின்றி வேதம்பயின்றாய். ஆனால் இந்த மனிதனோ {ரைப்பியரோ}, அனைத்துத் தொல்லைகளையும் தாங்கி, தனது நடத்தையால் குருவைத் திருப்தி செய்து, அற்புதமான வேதங்களைப் பெரும் முயற்சியுடன் குருவிடம் இருந்து நீண்ட காலத்திற்குப் பிறகு பெற்றார்" என்றனர்."
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "யவக்கிரீயிடம் இதைச் சொன்ன அவர்கள் {தேவர்கள்} அனைவரும் இந்திரனைத் தலைமையாகக் கொண்டு சொர்க்கம் திரும்பினர். ஓ! யுதிஷ்டிரா, அனைத்துப் பருவங்களிலும் பூத்துக்குலுங்கும் மலர்களையும் கனிகளையும் தாங்கியிருக்கும் மரங்கள் நிறைந்த இந்தப் புண்ணியமான ஆசிரமம் அந்தத் தவசியினுடையதே {யவக்கிரீயுடையதே}. ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் வசித்தால், உனது பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவாய்" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.