Pandavas approach the Kailasa to ascend! | Vana Parva - Section 139 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
லோமசரின் வழிகாட்டுதலின் படி யுதிஷ்டிரன் பல மலைகளையும் அற்புத தீர்த்தங்களையும் கடந்தது.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, ஓ மன்னா, இப்போது நீ உசீரவிஜம், மைநாகம், ஸ்வேதம் மற்றும் கால மலைகளைத் தாண்டியிருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் காளையே, இப்போது உனக்கு முன்பாக ஏழு கங்கைகள் பாய்ந்தோடுகின்றன. இவ்விடம் புண்ணியம் நிறைந்த புனிதமான இடமாகும். இங்கே இடைவெளி இல்லாமல் அக்னி சுடர்விட்டு எரிகிறது. மனுவின் எந்த மகனும் {எந்த மனிதனும்} இந்த அற்புதக் காட்சியைக் காண இயன்றதில்லை. ஆகையால், ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதோ இந்தத் தீர்த்தங்களைத் தீவிரமானக் கவனம் கொண்ட மனதுடன் பார். நாம் கால மலையைக் கடந்து வந்துவிட்டதால் தேவர்களின் விளையாட்டு மைதானத்தில் அவர்களுடைய கால்தடங்களைப் பார்ப்பாய். நாம் இப்போது, யக்ஷர்களாலும், யக்ஷர்களின் மன்னர்களான மாணிபத்திரன், மற்றும் குபேரன் ஆகியோர் வசிக்கும் வெள்ளைப் பாறை போல இருக்கும் இந்த மந்தர மலையில் ஏறுவோம்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்பதாயிரம் {80,000} பேர் கொண்ட கந்தர்வப்படையும், அதைப்போல நான்கு மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கையில், கைகளில் ஆயுதங்களுடனும் பல்வேறு உருவங்களிலும் இருக்கும் கிம்புருஷர்களும், யக்ஷர்களும், யக்ஷ மன்னன் மாணிபத்திரனுக்காகக் காத்திருக்கின்றனர். இப்பகுதிகளில் அவர்களது சக்தி அதிகமாக இருக்கும். வேகத்தில் அவர்கள் காற்றைப் போல இருக்கிறார்கள். சந்தேகமற அவர்களால் தேவர்களின் தலைவனையும் {இந்திரனையும்} அவனது ஆசனத்தில் இருந்து இறக்க முடியும். அப்படிப்பட்ட அவர்களால் பாதுகாக்கப்பட்டும், ராட்சசர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் இருக்கும் இந்த மலைகள் அணுகுவதற்கு மிகவும் அரிதானது {ஏறுவதற்குக் கடினமானது}. ஆகையால், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, உனது நினைவுகளைக் கவனமாக ஒருமுகப்படுத்து. அது ஒருபுறம் இருக்க, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் குடும்பங்களும், குபேரனின் கடுமையான அமைச்சர்களும் இங்கே இருக்கின்றனர். நாம் அவர்களையெல்லாம் சந்திக்க நேரிடும். ஆகையால், ஓ! குந்தியின் மகனே, உனது சக்திகளைக் குவித்துக் கொள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கைலாச மலை ஆறு யோஜனை உயரம் கொண்டது. அதில் {கைலாச மலையில்} மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்று இருக்கிறது.
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எண்ணிலடங்கா யக்ஷர்களும், ராட்சசர்களும், கின்னரர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், கந்தர்வர்களும் குபேரனின் அரண்மனைக்குச் செல்லும் இந்த வழியாகச் செல்கின்றனர். ஓ! மன்னா, என்னாலும், பலம்வாய்ந்த பீமசேனனாலும் காக்கப்படும் நீ, உனது சுய தவ அறத்தாலும், சுய கட்டளையாலும், நீ இன்றும் அவர்களோடு கலக்க வேண்டும். மன்னன் வருணனும், போர்க்களங்களை வெல்லும் யமனும், கங்கையும், யமுனையும், இந்த மலையும், மருதர்களும், அசுவினி இரட்டையர்களும், அனைத்து நதிகளும், தடாகங்களும் உன்னைக் காக்கட்டும். ஓ! ஒளிவீசுபவனே {யுதிஷ்டிரனே}, தேவர்களிடமும், அசுரர்களிடமும், வசுக்களிடமும் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கட்டும். ஓ! கங்கா தேவி, இந்திரனுக்குப் புனிதமான பொன் மலையிலிருந்து உனது கர்ஜனை எனக்குக் கேட்கிறது. ஓ! மங்கள தேவியே இந்த மலைப்பாங்கான பகுதிகளில் அனைவராலும் வழிபடப்படும் அஜமீட குலத்தைச் சேர்ந்த இந்த மன்னனை {யுதிஷ்டிரனைக்} காப்பாற்று. ஓ! மலையின் (இமயத்தின்) மகளே, இந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்த மலைப்பாங்கான பகுதிக்குள் நுழையப்போகிறான். எனவே அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} உன் பாதுகாப்பை வழங்கு" என்றார் {லோமசர்}
"இப்படி நதியிடம் {கங்கையிடம்} பேசிய லோமசர் யுதிஷ்டிரனிடம், "எச்சரிக்கையாக இரு" என்றார்.
யுதிஷ்டிரன் , "முன்னெப்போதும் இல்லாத வகையில் லோமசர் குழம்புகிறார். ஆகையால், எல்லோரும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} காப்பாற்ற வேண்டும். நாம் கவனக்குறைவாக இருக்க முடியாது. இந்த இடத்தை அணுகுவது கடினம் என்று லோசமருக்கு நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, இங்கே நமது செயல்கள் மிகுந்த தூய்மையுடன் இருக்க வேண்டும்" என்று அனைவரிடமும் சொன்னான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பியான பெரும் வீரம் கொண்ட பீமனிடம், "ஓ பீமசேனா, கிருஷ்ணையை {திரௌபதியைக்} கவனமாகக் காத்து வா. அர்ஜுனன் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும், ஆபத்துக் காலங்களில் கிருஷ்ணை {திரௌபதி} உன்னுடைய பாதுகாப்பை மட்டுமே எப்போதும் நாடுகிறாள்" என்றான் {யுதிஷ்டிரன்}.
பிறகு அந்த உயரான்ம ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவனை அணுகி, அவர்களது தலையை முகர்ந்து, அவர்கள் உடலைத் தடவி கண்களில் நீருடன், "அச்சப்பட வேண்டாம். எனினும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்" என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.