Move my tail aside said Hanuman! | Vana Parva - Section 146 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பீமன் ஹனுமானை வழிவிடச் சொல்வது; ஹனுமான் போகாதே என்று எச்சரிப்பது; மீண்டும் பீமன் ஹனுமானை மிரட்டுவது; ஹனுமான் தனது வாலை நகர்த்தி வைத்துவிட்டு செல்லுமாறு அடக்கத்துடன் சொல்வது; பீமனால் ஹனுமானின் வாலை நகர்த்த முடியாமல் போவது; தான் யார் என்பதை ஹனுமான் சொல்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, புத்திசாலி குரங்குத் தலைவனின் {ஹனுமானின்} வார்த்தைகளைக் கேட்ட பீமன், "யார் நீ? ஏன் குரங்கின் உருவை ஏற்றிருக்கிறாய்? அந்தணர்களுக்கு அடுத்த க்ஷத்திரியக் குலத்தைச் சேர்ந்தவன் கேட்கிறேன். குரு குலத்தில் சந்திர வம்சத்தில் குந்தியின் கருவறையில் பிறந்த பாண்டுவின் மகன்களில் ஒருவனும், வாயுத்தேவனின் வாரிசுமான எனது பெயர் பீமசேனன்" என்றான். குரு வீரனின் {பீமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான் புன்னகைத்தான். அந்த வாயுத்தேவனின் மகன் (ஹனுமான்), வாயுத்தேவனின் வாரிசிடம் (பீமசேனனிடம்), "நான் ஒரு குரங்கு {வானரம்}. நீ விரும்பும் பாதையில் நான் உன்னை அனுமதிக்க மாட்டேன். போதும். நீ திரும்பிச் செல்லுதல் நலம். அழிவைச் சந்திக்காதே" என்றான் {ஹனுமான்}.
அதற்குப் பீமசேனன் {ஹனுமானிடம்}, "ஓ குரங்கே {வானரமே}, எதன் மூலமும் உண்டாகும் அழிவைக் குறித்து நான் கேட்கவில்லை. எனக்கு வழியை விடு. எழு! எனது கைகளால் துன்பத்தை அடையாதே" என்றான். ஹனுமான், "எழுவதற்கு எனக்குப் பலமில்லை; நான் நோயால் துன்புறுகிறேன். நீ செல்ல வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்" என்றான். பீமன், "குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப் போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டியிருப்பேன்" என்றான். அதற்கு ஹனுமான், "கடலைத் தாண்டிய அந்த ஹனுமான் யார்? ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். உன்னால் முடிந்தால் அதைச் சொல்" என்றான்.
பீமன் {ஹனுமானிடம்}, "அவன் எனது தமயன். அனைத்தையும் அற்புதமாகவும் சரியாகவும் செய்பவன். அவன் புத்திகூர்மை கொண்டவன். மன பலமும் உடல் பலமும் கொண்டவன். ராமாயணத்தில் அறியப்பட்ட சிறப்பு மிக்கக் குரங்குகள் தலைவன் அவனே. ராமனின் ராணிக்காக {சீதைக்காக}, அந்தக் குரங்கு மன்னன் ஒரே எட்டில் நூறு யோஜனைகள் கொண்ட கடலைத் தாண்டினான். அந்தப் பெரும் பலமிக்கவனே எனது தமயன். நான் சக்தியிலும், பலத்திலும், பராக்கிரமத்திலும், போரிலும் அவனுக்குச் சமமானவன். என்னால் உன்னைத் தண்டிக்க முடியும். அதனால் எழுந்திரு. ஒன்று எனக்கு வழியை விடு, அல்லது எனது பராக்கிமத்தை இன்று பார். நான் சொல்வதை நீ கேட்கவில்லையென்றால், நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்" என்று மறுமொழி கூறினான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பலத்திலும், தனது கரங்களின் வலிமையின் மீது கொண்ட கர்வத்திலும் (பீமன்) அவன் போதையுண்டிருப்பதை அறிந்த ஹனுமான், இதயத்தில் கேலியாக நினைத்து, "ஓ! பாவமற்றவனே, கண்டிக்காதே. வயதின் காரணமாக, எனக்கு எழுந்திருக்கும் அளவு பலமில்லை. என்னிடம் இரக்கம் கொண்டு, எனது வாலை ஒரு புறமாக நகர்த்தி வை" என்றான். இப்படி ஹனுமானால் சொல்லப்பட்ட பீமன், தனது கரங்களின் பலத்தில் கர்வம் கொண்டும், {ஹனுமானை} சக்தியிலும் பராக்கிரமத்திலும் குறைந்தவன் என நினைத்து, தனக்குள், "இந்த வாலைப் பிடித்து, சக்தியும், வீரமும் அற்ற இந்தக் குரங்கை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புகிறேன்" என்று எண்ணினான்.
அதன்பிறகு, புன்னகையுடனும், கேலியுடனும் தனது இடது கையால் வாலைப் பிடித்தான். ஆனால் அந்த வலிமைமிக்கக் குரங்கின் வாலை அவனால் {பீமனால்} நகர்த்த முடியவில்லை. பிறகு இந்திரனின் நினைவாக நடப்பட்ட தூணைப் போல இருந்த அவ்வாலை இரு கைகளாலும் பிடித்து இழுத்துப் பார்த்தான். இருப்பினும் வலிமைமிக்கப் பீமனால் இரு கைகளாலும் அந்த வாலை உயர்த்த முடியவில்லை. அவனின் {பீமனின்} புருவங்கள் நெறிந்தன, கண்கள் உருண்டன, முகம் சுருங்கியது, அவனின் {பீமனின்} உடல் முழுவதும் வேர்த்தது. இருப்பினும் அவனால் அதை உயர்த்த முடியவில்லை. மிகவும் முயற்சித்த பிறகும், சிறப்புமிக்கப் பீமன் அவ்வாலை உயர்த்துவதில் தோல்வியுற்றான். பிறகு அவன் {பீமன்}, அக்குரங்கின் பக்கத்தில் வந்து வெட்கத்துடன் முகம் கவிழ்ந்து நின்றான்.
அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து {ஹனுமானிடம்}, "ஓ! குரங்குகளில் முதன்மையானவனே இரக்கம் கொள். எனது கடும் வார்த்தைகளுக்காக என்னை மன்னித்துக் கொள். நீ சித்தனா, தேவனா, கந்தர்வனா அல்லது குஹ்யனா? ஆவலால் கேட்கிறேன். குரங்கின் உருவில் இருக்கும் நீ யார் என்பது ரகசியமில்லை என்றால், ஓ! நீண்ட கரம் கொண்டவனே, நான் கேட்கலாம் என்றால் சொல். ஒரு சீடனாக உன்னைக் கேட்கிறேன், ஓ! பாவமற்றவனே நான் உனது புகலிடத்தைக் கோருகிறேன்" என்றான் {பீமன்}.
அதற்கு ஹனுமான் {பீமனிடம்}, "ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலின் எல்லையை அறிந்து நான் விரிவாகவே உரைக்கிறேன். ஓ! பாண்டுவின் மகனே {பீமா} கேள். ஓ! தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உலகத்தின் உயிரான வாயுத்தேவனால் கேசரியின் மனைவியிடத்தில் பெறப்பட்டவன். நான் ஒரு குரங்கு {வானரம்}, எனது பெயர் ஹனுமான். பெரும் பலம் வாய்ந்த அனைத்து வானர மன்னர்களும், வானரத் தலைவர்களும், சூரியனின் மகன் சுக்ரீவனிடமும், இந்திரனின் மகன் வாலியிடமும் காத்து நின்றார்கள். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {பீமா}, காற்றுக்கும் நெருப்புக்கும் இடையே இருப்பது போல எனக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நட்பு இருந்தது. ஏதோ காரணத்திற்காகத் தனது தமயனால் {வாலியால்} துரத்தப்பட்ட சுக்ரீவ்வன் என்னுடன் நீண்ட நாட்களாக ரிஷ்யமுக மலையில் வசித்து வந்தான். தசரதனின் பெரும் பலம் வாய்ந்த மகனும், விஷ்ணுவின் மானுட உருவமுமான வீரன் ராமன் இவ்வுலகத்தில் தனது பிறப்பை அடைய நேர்ந்தது. வில்லாளிகளில் முதன்மையான அவன் {ராமன்}, தனது தந்தையின் நன்மைக்காகத் தனது ராணியையும் {சீதையையும்}, தனது தம்பியையும் {இலட்சுமணனையும்} அழைத்துக் கொண்டு வந்து தண்டக வனத்தில் வசிக்க ஆரம்பித்தான். ராட்சச ஏகாதிபதியும் தீயவனுமான இராவணன், ரத்தினம் போன்ற புள்ளிகள் கொண்ட பொன் மான் வடிவம் கொண்ட மாரீசன் என்ற ராட்சசன் உதவியோடு, மனிதர்களில் முதன்மையானவனை {ராமனை} வஞ்சித்து, அவனுடைய (ராமனின்) ராணியை {சீதையைக்} கபடத்தாலும் பலத்தைப் பயன்படுத்தியும் ஜனஸ்தானத்திலிருந்து கடத்திச் சென்றான்.