Biography of Hanuman! | Vana Parva - Section 147 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
ஹனுமான் சொன்ன சுயவரலாறு
ஹனுமான் {பீமனிடம்} சொன்னான், "தனது மனைவி {சீதை} கடத்தப்பட்ட பிறகு, ரகுவின் வழித்தோன்றால் {ராமன்}, தனது தம்பியுடன் {லட்சுமணனுடன்} சேர்ந்து தனது ராணியைத் {சீதையைத்} தேடிக் கொண்டிருந்த போது, வானரத் தலைவனான சுக்ரீவனை மலைச்சிகரத்தில் சந்தித்தான். பிறகு அவனுக்கும் {சுக்ரீவனுக்கும்}, உயர் ஆன்ம ராகவனுக்கும் இடையில் ஒரு நட்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. பிறகு பின்னவன் {ராமன்}, வாலியைக் கொன்று, சுக்ரீவனை அரசாட்சி ஏற்க வைத்தான். நாட்டை அடைந்த பிறகு சுக்ரீவன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வானரங்களைச் சீதையைத் தேடி அனுப்பி வைத்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {பீமா}, ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே அந்த எண்ணிலடங்கா குரங்குகளுடன் நானும் சீதையைத் தேடி தென்திசை நோக்கிப் பயணித்தேன்.
பிறகு வலிமைமிக்கச் சம்பாதி என்ற பெயர் கொண்ட கழுகு, சீதை இராவணனின் வசிப்பிடத்தில் இருக்கும் வரலாற்றைச் சொன்னது. பிறகு ராமனுக்கு வெற்றியைத் தேடித்தரும் முயற்சியில் நான் நூறு யோஜனைகள் பரந்திருந்த கடலை திடீரெனத் தாண்டினேன். ஓ! பாரதர்களின் தலைவா {பீமா}, எனது சுய பராக்கிரமத்தில் முதலைகள் மற்றும் சுறாக்களின் வசிப்பிடமான கடலைக் கடந்து, இராவணனின் வசிப்பிடத்தில் தேவர்களின் மகளுக்கு ஒப்பாக இருந்த, மன்னன் ஜனகனின் மகளான சீதையைக் கண்டேன். ராமனின் அன்பிற்குரியவளான மங்கை வைதேகியிடம் {சீதையிடம்} நான் பேசிய பிறகு, கோபுரங்களும், பாதுகாப்பு அரண்களும், வாயில்களும் கொண்ட மொத்த இலங்கையையும் எரித்து, எனது பெயரைச் சொல்லிவிட்டுத் திரும்பினேன்.
என்னிடம் இருந்து அனைத்தையும் கேட்ட தாமரை இதழ் போன்ற கண்களை உடைய ராமன், தான் செய்ய வேண்டிய செயல்களை உறுதி செய்து கொண்ட பிறகு, தனது படைக்கு ஒரு வழி ஏற்படுத்துவதற்காக, ஆழமான கடலின் மேல் ஒரு பாலத்தை அமைத்தான். குரங்குக் கூட்டமும் அந்தப் பாலத்தைக் கடந்தன. பிறகு ராமன் தனது பராக்கிரமத்தால் போரில் ராட்சசர்களையும், உலகத்தையே ஒடுக்கியவனான இராவணனையும் அவனது அடிப்பொடிகளையும் கொன்றான். தனது தம்பியுடன் சேர்ந்து ராட்சசர்களின் மன்னனை {இராவணனை} அவனது மகன்கள் மற்றும் உறவினர்களோடு சேர்த்து கொன்ற பிறகு, பக்திமானும், மதிப்பிற்குரியவனும், நம்பி வந்தவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான விபீஷணனை ராட்சசத் தலைவனாக நியமித்து, இலங்கையின் அரசுரிமையை அவனிடம் {விபீஷணனிடம்} கொடுத்தான் {இராமன்}. பிறகு தொலைந்து போன வேதத்தை மீட்டு வந்தது போலத் தனது மனைவியை {சீதையை} மீட்டு வந்தான் {ராமன்}.
பிறகு ரகுவின் மகனான ராமன், தனக்கு அர்ப்பணிப்புடன் இருந்த மனைவியுடன் {சீதையுடன்}, தனது சொந்த நகரமும், எதிரிகளால் அடைய முடியாத நகரமுமான அயோத்யைக்குத் திரும்பி, அங்கே அந்த மனிதர்களின் தலைவன் வசிக்கலானான். பிறகு மன்னர்களில் முதன்மையான ராமன் அரசாட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். பிறகு, தாமரை மலர் போன்ற கண்களையுடைய ராமனிடம் நான் {ஹனுமான்} ஒரு வரம் கோரினேன், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே, ராமா, உனது சாதனைகளின் வரலாறு உலகத்தில் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் நான் உயிர் வாழக் கடவேன்" என்று கேட்டேன். அதற்கு அவன் {ராமன்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, ஓ! பீமா, சீதையின் அருளாலும் {ராமனின் அருளாலும்}, எனது கேளிக்கைக்கான அனைத்து அற்புதமான பொருட்களும், இங்கே யார் வசித்தாலும் எனக்கு வழங்கப்படுகிறது. ராமன் பதினோராயிரம் {11000} ஆண்டுகள் அரசுபுரிந்தான்.
பிறகு தனது சொந்த இருப்பிடத்திற்கு உயர்ந்தான். அது முதல், ஓ! பாவமற்றவனே {பீமா}, இங்கே அப்சரசுகளும், கந்தர்வர்களும் சேர்ந்து அந்த வீரனின் {ராமனின்} சாதனைகளைப் பாடி என்னை மகிழ்விக்கின்றனர். ஓ! குருக்களின் மகனே {பீமனே}, இந்தப் பாதை மனிதர்களால் கடக்க முடியாத பாதை. ஓ! பாரதா {பீமா}, அதனாலேயே, யாரும் உன்னை வீழ்த்தவோ சபிக்கவோ கூடாது என்ற காரணத்திற்காகவே இறவாதவர்கள் {தேவர்கள்} நடந்து செல்லும் பாதையில், உனது வழியைத் தடுத்தேன். இது சொர்க்கத்திற்குச் செல்லும் வழிகளில் ஒன்று. இது தேவர்களுக்கானது; இதன் வழியே மாள்பவர்கள் {மனிதர்கள்} செல்ல முடியாது. ஆனால், நீ தேடி வந்த தடாகம், அதோ அந்தத் திசையில் இருக்கிறது" என்றான் {ஹனுமான்}.