Bhima collected the flowers! | Vana Parva - Section 153 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சௌகாந்திக மலர் பெற தான் வந்த காரணத்தை பீமன் சொல்வது; மலர்களைப் பறிக்க முடியாது என்று குரோதவாசர்கள் சொல்வது; பீமன் அதை மறுத்து மலர்களைப் பறிக்கச் செல்வது; ராட்சசர்களுக்கு பீமனுக்குமிடையில் நடந்த மோதல்; நூற்றுக்கணக்கான ராட்சசர்களை பீமன் கொல்வது; பின்வாங்கி ராட்சசர்கள் குபேரனிடம் சென்று முறையிடுவது; குபேரன் மலர்களை பீமன் பறித்துக் கொள்ளட்டும் என்று சொல்வது...
பீமன் {குரோதவாசர்களிடம்} சொன்னான், "நான் பாண்டுவின் மகன், பிறப்பால் நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அடுத்தவன், எனது பெயர் பீமசேனன். ஓ! ராட்சசர்களே, நான் விசால என்ற பெயர் கொண்ட இலந்தை மரத்திற்கு எனது சகோதரர்களுடன் வந்திருக்கிறேன். அவ்விடத்தில் பாஞ்சாலி {திரௌபதி}, இந்தப் பகுதியில் இருந்து வீசிய காற்றால் அடித்துவரப்பட்ட அற்புதமான சௌகாந்திக தாமரையைக் கண்டாள். அவள் அது போன்ற மலர்களை நிறைய அடைய விரும்புகிறாள். ராட்சசர்களே, களங்கமற்ற எனது மனைவியின் {திரௌபதியின்} விருப்பத்தை நிறைவேற்றுவதில் முனைப்புடனே நான் அம்மலர்களைப் பெறுவதற்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என்றான்.
அதற்கு ராட்சசர்கள், "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {பீமா}, இவ்விடம் குபேரனுக்குப் பிடித்தமான விளையாட்டிடமாகும். மரணத்துக்கு ஆட்படும் மனிதர்கள் இங்கே விளையாட முடியாது. ஓ! விருகோதரா {பீமா}, தெய்வீக முனிவர்களும், தேவர்களும் கூட யக்ஷர்கள் தலைவனிடம் {குபேரனிடம்} அனுமதி பெற்றுத்தான் இத்தடாகத்தின் நீரை அருந்தி இங்கே விளையாடுவார்கள். ஓ பாண்டவா {பீமா}, கந்தர்வர்களும் அப்சரசுகளும் கூட இத்தடாகத்திற்கு வருவார்கள். பொக்கிஷத் தலைவனை அவமதித்து, சட்டத்தை மீறி இங்கே விளையாடும் தீயவன், சந்தேகற இங்கே அழிவைச் சந்திக்கிறான். அவனை {குபேரனை} அவமதித்து, பலத்தால் தாமரைகளைக் கவர்ந்த செல்ல முயற்சிக்கிறாய். பிறகு ஏன் நீ உன்னை நீதிமானான யுதிஷ்டிரன் தம்பி என்று சொல்லிக் கொள்கிறாய்? முதலில், யக்ஷர்களின் தலைவனிடம் {குபேரனிடம்} அனுமதி பெற்ற பிறகு இத்தடாகத்தின் நீரை அருந்தி, மலர்களையும் எடுத்துச் செல். அப்படிச் செய்யவில்லையென்றால், ஒரு தாமரையின் மீது கூட உனது பார்வை பட இயலாது" என்றார்கள் {குரோதவாசர்கள்}
பீமசேனன், "ராட்சசர்கள், நான் பொக்கிஷத் தலைவனை {குபேரனை} இங்குக் காணவில்லை. நான் அந்தப் பெரும் பலம் வாய்ந்த மன்னனை {குபேரனைக்} கண்டால் கூட, நான் அவனிடம் கெஞ்ச மாட்டேன். க்ஷத்திரியர்கள் {யாரிடமும்} எப்போதும் கெஞ்சமாட்டார்கள். இதுவே நிலைத்த அறநெறி; எவ்வகையிலேனும் நான் க்ஷத்திரிய அறநெறியைக் கைவிட மாட்டேன். இத்தாமரைத் தடாகம் இம்மலையின் அருவியில் இருந்தே ஊற்றெடுத்திருக்கிறது. இது குபேரனின் மாளிகைக்குள் இல்லை. எனவே, வைஸ்ரவணனுடன் சேர்ந்து அனைத்து உயிரினங்களுக்கும் இதில் சமபங்கு சொந்தமானதே. இத்தகு இயல்பு கொண்ட ஒன்றுக்காக யார் ஒருவரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பான்?" என்று கேட்டான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ராட்சசர்களிடம் இப்படிச் சொன்ன அந்த வலுத்த கரம் கொண்ட பொறுமையற்ற பலம்வாய்ந்த பீமசேனன், அத்தாமரைத் தடாகத்துக்குள் மூழ்கினான். இதன் காரணமாக அந்தப் பலம்வாய்ந்தவன் ராட்சசர்களால், "இதைச் செய்யாதே" என்று கண்டிக்கப்பட்டான். பிறகு அவர்கள் அனைவரும் அனைத்துப் பக்கங்களிலும் கூடிய நின்று கோபத்தால் திட்ட ஆரம்பித்தனர். அந்த ராட்சசர்களைக் கேலி செய்த அந்தக் கடும் பராக்கிரமம் நிறைந்த பலசாலி {பீமன்} (மேலும் மேலும்) மூழ்கினான். அவர்கள் {ராட்சசர்கள்} அனைவரும் அவனை {பீமனை} எதிர்க்கத் தயாரானார்கள். கண்களை உருட்டிக் கொண்டு, தங்கள் கரங்களை உயர்த்திய படி கோபத்துடன் பீமசேனனை நோக்கி ஓடி, "அவனைப் பிடியுங்கள்!", "அவனைக் கட்டிப் போடுங்கள்", "அவனை வெட்டுங்கள்! நாம் பீமசேனனைச் சமைத்து உண்டு விடலாம்!" என்று கத்தினர்.
இதைக் கண்ட அந்தப் பெரும் சக்தி கொண்டவன் {பீமன்}, தங்கத்தகடுகள் பொருத்தப்பட்ட தனது பலமிக்கப் பளு நிறைந்த கதாயுதத்தை எடுத்து அவர்களை நோக்கி "நில்லுங்கள்" என்று சொன்னான். அவர்கள் {ராட்சசர்கள்}, பளபளக்கும் ஈட்டிகள், போர்க்கோடரிகள் மற்றும் பல ஆயுதங்களுடனும் உணர்ச்சி வேகத்துடனும் திடீரெனத் துள்ளிக் குதித்தார்கள். பீமனை அழிக்க விரும்பிய அந்தக் கொடியவர்களும் மிகுந்த பயங்கரம் கொண்டவர்களுமான குரோதவாசர்கள் அவனை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால், வாயுவினால் குந்தியின் கருவறையில் பெறப்பட்ட அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்}, உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் பலமும் சக்தியும் நிறைந்த வீரனாக இருந்தான். அதனால், உயர் ஆன்ம பீமன் தனது அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி, அவர்கள் கரங்களை ஒடித்து, முதன்மையாக வந்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அந்தத் தடாகத்தின் கரையிலேயே கொன்று போட்டான். அவனது வீரத்தையும் பலத்தையும், நிபுணத்துவத்தையும், வேகத்தையும், கரங்களின் பலத்தையும் தாங்க முடியாத அந்த முதன்மை வீரர்கள் {ராட்சசர்கள்} திடீரென ஓடிப் பின்வாங்கினர்.
பீமசேனனால் அடிக்கப்பட்டும் துளைப்பட்டும் இருந்த குரோதவாசர்கள் போர்க்களத்திலிருந்து விலகி, குழப்பத்தால் விரைவாகக் கைலாசத்தின் சிகரத்தில் ஏறி வானத்தில் தங்களைத் தாங்கிக் கொண்டார்கள். தைத்தியர்களையும், தானவர்களையும் வீழ்த்திய சக்ரன் {இந்திரன்} போல, தனது வீரத்தால் எதிரிகளை வீழ்த்திய அவன் (பீமன்) வெற்றியடைந்ததால், தடாகத்துக்குள் மூழ்கி, தனது நோக்கத்தை அடைய விரும்பி, தாமரைகளைச் சேகரித்தான். அமுதம் போன்ற அந்நீரைப் பருகிய அவனது சக்தியும் பலமும் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டது. பிறகு அவன் விழுந்த அற்புதமான நறுமணமிக்கச் சௌகாந்திகத் தாமரைகளைச் சேகரிக்க ஆரம்பித்தான்.
மறுபுறம், பீமேசேனனின் பலத்தால் விரட்டப்பட்ட குரோதவாசர்கள், மிகவும் பயந்து போய், செல்வத்தலைவன் {குபேரன்} முன்பு நின்று, பீமனின் வீரம் மற்றும் போரில் அவனது பலத்தைக் குறித்துச் சுருக்கமாகச் சொன்னார்கள். அவர்களது வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தேவன் {குபேரன்} சிரித்தவாறு, "கிருஷ்ணைக்காக {திரௌபதிக்காக} பீமன் தான் விரும்பிய அளவு எவ்வளவு வேண்டுமானாலும் தாமரைகளை எடுத்துச் செல்லட்டும். இது ஏற்கனவே நான் அறிந்ததுதான்" என்றான். அதன்பிறகு, செல்வத்தலைவனின் {குபேரனின்} அனுமதியை எடுத்துக் கொண்ட (ராட்சசர்கள்), கோபத்தைக் கைவிட்டு, குருக்களில் முதன்மையானவனிடம் {பீமனிடம்} சென்றனர். அங்கே பீமன் தாமரைத் தடாகத்தில் தனியாக மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.