Yudhishthira's search for Bhima! | Vana Parva - Section 154 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தாங்கள் இருந்த இடத்தில் தோன்றிய தீச்சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன், பீமனைத் தேடல்; பீமன் மலர் தேடி வடகிழக்கில் சென்றிருக்கலாம் என்று திரௌபதி யுதிஷ்டிரனுக்குச் சொல்வது; யுதிஷ்டிரன் ராட்சசர்கள் உதவியுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி சௌகாந்திக மலர் இருக்கும் தடாகத்தை அடைந்து பீமனைக் காண்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, பாரதர்களில் சிறந்தவனான பீமன் தெய்வீகமானதும் அரிதானதுமான பல வண்ண புது மலர்களை அபரிமிதமாகச் சேகரித்தான்.
அச்சமயத்தில் போரை முன்னறிவிக்கும் வகையில், சரளைக் கற்களைக் தூக்கி வீசவல்லதும், கடுமையாகத் தாக்குவதுமான கடும் காற்று வீசியது. பயங்கரமான எரிகற்கள் இடிபோன்ற சத்தத்துடன் விழுந்தன. இருள் சூழ்ந்து சூரியன் ஒளியிழந்தான். அவனது கதிர்களை இருள் மூடியது. தனது பராக்கிரமத்தை வெளிப்படுத்திய பீமன் வெளியிட்ட பயங்கரச் சத்தம் வானத்திலேயே உலவி கொண்டிருந்தது. பூமி நடுங்கத் தொடங்கியது. தூசி மழை பொழிந்து. திசைகள் சிவந்தன. விலங்குகளும் பறவைகளும் கிறீச்சொலி கொண்ட குரலுடன் கதறின. எதையும் பிரித்துப் பார்க்க முடியாதவாறு அனைத்தையும் இருள் மூடியது. பிற தீய சகுனங்களும் அங்கே தெரிந்தன.
இந்த விசித்திர நிலையைக் கண்ட பேச்சாளர்களில் முதன்மையான தர்மனின் மகன் யுதிஷ்டிரன், "யார் நம்மை வெல்லப்போகிறார்கள்? போரில் மகிழும் பாண்டவர்களே, உங்களுக்கு நல்லது நடக்கட்டும்! உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நான் காணும் காட்சி, நமது பராக்கிரமத்தை வெளிக்காட்டும் நேரம் அருகில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது" என்றான். இதைச் சொன்ன மன்னன் {யுதிஷ்டிரன்} சுற்றிலும் பார்த்தான். எதிரிகளை ஒடுக்கும் பீமனை காணாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன் கிருஷ்ணையிடமும் {திரௌபதியிடமும்}, இரட்டையர்களிடமும் கடும் செயல்களைச் செய்யும் பீமனைக் குறித்து விசாரித்தான். அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ! பாஞ்சாலி {திரௌபதி}, பீமன் ஏதோ பெரும் சாதனையைச் செய்ய நினைத்திருக்கிறான் போலும். அல்லது தைரியமான செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்ளும் அவன் {பீமன்}, ஏற்கனவே ஏதாவது வீரச் செயலைச் செய்து கொண்டிருக்கிறானா? அச்சத்தைத் தரும் போரைக் குறிக்கும் பெரும் அபாயத்தை முன்னறிவிக்கவே, இத்தகு தீச்சகுனங்கள் சுற்றிலும் தெரிகின்றன" என்றான்.
தனது அன்பிற்குரிய ராணியிடம் {திரௌபதியிடம்} யுதிஷ்டிரன் இப்படிச் சொல்லும்போது, இனிய புன்னகையும் உயர் மனமும் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, அவனது {யுதிஷ்டிரனின்} துயரத்தை நீக்கும் வகையில், "ஓ! மன்னா, இன்று காற்றால் அடித்து வரப்பட்டதே ஒரு சௌகாந்திகத் தாமரை. அதை அன்பால் நான் பீமசேனரிடம் காண்பித்தேன். அதன் பிறகு அந்த வீரரிடம் "உம்மால் இது போன்ற மலர்களை எடுத்துக் கொண்டு வர முடியுமானால், அதை எடுத்துக். கொண்டு விரைவாக வர வேண்டும்" என்று சொன்னேன். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, வலுத்த கரம் கொண்டவர் {பீமர்}, எனது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, வடகிழக்கு நோக்கிச் சென்றிருக்கலாம்" என்றாள்.
அவளின் {திரௌபதியின்} வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இரட்டையர்களிடம், "விருகோதரன் {பீமன்} சென்ற பாதையில் நாமும் ஒன்றாகச் சேர்ந்து செல்வோம். களைத்துப் போய், பலமற்று இருக்கும் அந்தணர்களை ராட்சசர்கள் சுமக்கட்டும். ஓ! கடோத்கசா, ஓ! தேவனைப் போன்றவனே, நீ கிருஷ்ணையை {திரௌபதியைச்} சுமந்து கொள். பீமன் காட்டுக்குள் சென்றிருக்கிறான் என்பது எனக்கு நிதர்சனமாகத் தெரிகிறது. அவன் சென்று நீண்ட நேரமும் ஆயிற்று. வேகத்தில் அவன் காற்றுக்கு நிகரானவனாவான். வினதையின் மகனைப் {கருடனை} போல அவன் விரைவாக நிலத்தைக் கடந்து, தனது விருப்பப்படி வானத்தில் ஏறும் சக்தியையும் பெற்றவனாவான். ஓ! ராட்சசர்களே, நாம் உங்களது பராக்கிரமத்தின் மூலம் தொடர்ந்து செல்வோம். வேதங்களை அறிந்த சித்தர்களுக்கு அவனாக முதலில் எந்தத் தீங்கையும் செய்ய மாட்டான்" என்றான் {யுதிஷ்டிரன்}.
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன ஹிடிம்பையின் மகனும் {கடோத்கஜனும்}, பிற ராட்சசர்களும் குபேரனின் தாமரைத் தடாகத்தை அறிந்ததால், லோமசருடனும் பிற அந்தணர்களுடனும், பாண்டவர்களைச் சுமந்து கொண்டு மகிழ்ச்சிகரமாகக் கிளம்பினர். விரைவாக அந்த இடத்தை அடைந்த அவர்கள், சௌகாந்திகங்களும், மற்றத் தாமரைகளும் நிரம்பிய கானகம் சூழந்த அந்த அழகிய தடாகத்தைக் கண்டனர். அதன் கரைகளில் நீண்ட கண்கள் கொண்ட யக்ஷர்கள் கொல்லப்பட்டும், கண்கள், கரங்கள், தொடைகள் அடித்தொடிக்கப்பட்டு, தலைகள் நசுக்கப்படும் கிடப்பதையும், அங்கே உயர் ஆன்ம பீமன் உணர்ச்சிப்பெருக்குடன் நிற்பதையும் கண்டனர். நிலைத்த கண்களுடன், உதடுகளைக் கடித்துக் கொண்டு, இரு கரங்களையும் சேர்த்து உயர்த்திப் பிடித்த கதாயுதத்துடன், பிரளய காலத்து யமனைப் போலக் கோபத்துடன் அத்தடாகக் கரையில் நின்று கொண்டிருந்தான்.
நீதிமானான யுதிஷ்டிரன் அவனை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொண்டு இனிய வார்த்தைகளில், "ஓ! கௌந்தேயா {பீமா}, நீ என்ன செய்துவிட்டாய்? உனக்கு நன்மை ஏற்படட்டும்! நீ எனக்கு நன்மை செய்ய விரும்பினால், இதுபோன்ற மூர்க்கமான செயல்களையோ, அல்லது தேவர்களுக்குக் குற்றமிழைக்கும் செயல்களையோ இனி செய்யக் கூடாது" என்று சொன்னான். குந்தியின் மகனுக்கு {பீமனுக்கு} இவ்வாறு அறிவுரை கூறிபிறகு, மலர்களை எடுத்துக் கொண்டு, அந்தத் தெய்வீகமானவர்கள் அதே தடாகத்தில் விளையாட ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் பெருத்த உடல் படைத்த நந்தவனக் காவலர்கள், தங்கள் ஆயுதங்களாகப் பாறைகளை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். நீதிமானான யுதிஷ்டிரனையும், பெரும் முனிவரான லோமசரையும், நகுலன் மற்றும் சகாதேவனையும், அந்தணர்களில் முதன்மையானவர்களையும் கண்ட அவர்கள் பணிவுடன் வணங்கினார்கள். பிறகு நீதிமானான யுதிஷ்டிரனால் சமாதானப்படுத்தப்பட்ட ராட்சசர்கள் திருப்தியடைந்தார்கள். பிறகு குபேரனுக்கு அறிந்தவாறே, அந்தக் குருக்களில் முதன்மையானவர்கள் கந்தமாதனச் {மலைச்} சரிவுகளில் அமைந்த அந்த இடத்தில் அர்ஜுனனை எதிர்பார்த்து சில காலம் தங்கினார்கள்.