"Return to Vadari" said the ariel voice! | Vana Parva - Section 155 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பீமனிடம் யுதிஷ்டிரன், குபேரன் வசிப்பிடத்தை அடைவதற்கான வழியைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஓர் அசரீரி அவர்களை மீண்டும் பதரிக்குத் திரும்புமாறு பணித்தது; பிறகு அவர்கள் அனைவரும் மீண்டும் பதரி திரும்பி வசிக்க ஆரம்பித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த இடத்தில் {குபேரனின் தடாகத்தருகில்} வாழ்ந்து வந்தபோது யுதிஷ்டிரன் ஒருநாள் கிருஷ்ணை {திரௌபதி}, தனது தம்பிகள் மற்றும் அந்தணர்களிடம், "நாம் கவனத்துடன் பல மங்களகரமான புண்ணியத் தீர்த்தங்களையும், காண்பதற்கினிய கானகங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டோம். அவ்விடங்கள் அனைத்தும் தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும், பல அந்தணர்களாலும் வழிபடப்படும் இடங்களாகும். நாம் அந்தணர்களுடன் கூடி பல புண்ணிய ஆசிரமங்களிலும் நமது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்துள்ளோம். அந்த அந்தணர்களிடமிருந்து பல முனிவர்கள் மற்றும் பழங்கால அரசமுனிகளின் வாழ்வுகளையும், செயல்களையும், இனிமையான கதைகளையும் கேட்டோம். மலர்களையும் நீரையும் கொண்டு தேவர்களை வணங்கினோம். அந்த அந்த இடங்களில் கிடைக்கும் கனிகளையும், கிழங்குகளையும் காணிக்கைகளாகக் கொடுத்து பித்ருக்களையும் திருப்தி செய்தோம்.
உயர் ஆன்மா கொண்டவர்களுடன் சேர்ந்து புண்ணியமான அழகான மலைகளிலும், தடாகங்களிலும், கடலிலும் நமது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்தோம். அந்தணர்களுடன் கூடி இளை, சரஸ்வதி, சிந்து, யமுனை, நர்மதை மற்றும் பல அழகிய தீர்த்தங்களிலும் நீராடினோம். கங்கையின் தோற்றுவாயைக் கடந்த நாம், பல பறவைகள் வசிக்கும் அழகிய மலைகளையும், இமய மலைகளையும் கடந்து விசாலை என்று அழைக்கப்படும் இலந்தை இருக்கும் இடமான {பதரி} நரன் மற்றும் நாராயணனின் ஆசிரமத்தை அடைந்தோம். (கடைசியாக) சித்தர்கள் பெரிதாக மதிக்கும் இந்தத் தெய்வீகமான தடாகத்தை அடைந்தோம். ஓ! அந்தணர்களில் சிறந்தோரே, கொண்டாடப்படும் புனிதமான இடங்களை உயர் ஆன்ம லோமசருடன் சேர்ந்து நாமனைவரும் உண்மையில் கவனமாகக் கண்டோம். ஓ! பீமா, இனி நாம் சித்தர்கள் வசிக்கும் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்திற்கு எப்படிச் செல்வது? அதை அடைவதற்கான வழிகளைக் குறித்துச் சிந்தி" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அப்படிச் சொன்ன போது, ஒரு ஆகாயக் குரல், "அடைவதற்கு அரிதான அவ்விடத்தை {குபேரனின் வசிப்பிடத்தை} உங்களால் அடைய முடியாது. குபேரனின் இந்த இடத்தில் இருந்து, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அந்தப் பதரி என்றழைக்கப்படும் நர நாராயணனின் ஆசிரமத்திற்கு இந்த வழியாகவே செல்லுங்கள். ஓ! கௌந்தேயா {யுதிஷ்டிரா}, பிறகு மலர்களும் கனிகளும் நிறைந்து, சித்தர்களும் சாரணர்களும் வசிக்கும் விருஷபர்வாவின் ஆசிரமத்திற்குச் செல். அதைக் கடந்த பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அர்ஷ்டிஷேனரின் ஆசிரமத்தை அடைவாய். அங்கிருந்து குபேரனின் வசிப்பிடத்தைக் காண்பாய்" என்றது {அசரீரி}.
அதே நேரத்தில் தெய்வீக மணத்துடன் குளிர்ந்த புதிய காற்று வீசியது; மலர் மாரியும் பொழிந்தது. வானத்தில் இருந்து வந்த தெய்வீகக் குரலைக் கேட்ட அனைவரும் மலைத்தனர். குறிப்பாக முனிவர்களும், அந்தணர்களும் மிகவும் ஆச்சரியப்பட்டனர். இந்த மாபெரும் அற்புதத்தைக் கேட்ட அந்தணரான தௌமியர், "இதற்கு மாறாக நாம் நடக்கக்கூடாது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அதன்படியே {அக்குரல் சொல்லியபடியே} செய்வோம்" என்றார். மன்னன் யுதிஷ்டிரனும் அவருக்குக் கீழ்ப்படிந்தான். பிறகு, நர நாராயணரின் ஆசிரமத்திற்குத் திரும்பி, பீமசேனன், மற்றத் தம்பிகள், பாஞ்சாலி {திரௌபதி} மற்றும் அந்தணர்கள் சூழ அவன் {யுதிஷ்டிரன்} மகிழ்ச்சியாக வசிக்க ஆரம்பித்தான்.