The slaughter of Jatasura! | Vana Parva - Section 156 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பீமன் இல்லாத நேரத்தில் ஜடாசுரன் என்ற ராட்சசன், பாண்டவர்களையும், திரௌபதியையும் கடத்திச் செல்வது; பீமன் ஜடாசுரனைக் கொல்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படி அச்சிறந்த மலையில் அந்தணர்களுடன் வசித்து வந்த பாண்டவர்கள் அர்ஜுனன் திரும்புவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை வளர்ந்து பிற ராட்சசர்களும், பீமனின் மகனும் {கடோத்கசனும்} சென்ற பிறகு, ஒரு நாள் பீமன் வெளியே சென்றிருந்தான். அப்போது, தீடீரென ஒரு ராட்சசன், நீதிமானான யுதிஷ்டிரனையம், இரட்டையர்களையும் {நகுலன், சகாதேவன் இருவரையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} கடத்திச் சென்றான். (அந்தண வேடத்தில் இருந்த) அந்த ராட்சசன் பாண்டவர்களுடனேயே நெடுங்காலமாகத் தங்கியிருந்தவனாவான். அப்படி இருந்த போது அவன் தன்னைச் சாத்திரங்களை அறிந்த ஆலோசனை கூறத்தக்க உயர்ந்த வகை அந்தணனனாகக் காட்டிக் கொண்டான். பாண்டவர்கள் உபயோகித்த வில் மற்றும் அம்பறாத்தூணிகளையும், இன்னும் பிற பொருட்களையும் கவர்ந்து செல்லவும், திரௌபதியை அபகரிக்கவுமே அவன் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தான். அந்தத் தீய பாவியின் பெயர் ஜடாசுரன் ஆகும். ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அவனை ஆதரித்த பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அந்தப் பாவி சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப் போன்றவன் என்பது தெரியாது.
ஒரு நாள் எதிரிகளை ஒடுக்குபவனான பீமசேனன் வேட்டையாடுவதற்கு வெளியே சென்றான். கடோத்கசனும், அவனது அடிபொடிகளும் பலதரப்பட்ட திசைகளுக்குச் சிதறிப் போனதையும், லோமசர் மற்றும் நோன்பு நோற்கும் பிற பெரும் முனிவர்கள் நீராடுவதற்கும், மலர்கள் சேகரிப்பதற்கும் சென்றிருப்பதையும் கண்ட அவன் {அந்த ராட்சசன் ஜடாசுரன்}, பயங்கரமான பெரும் உருவம் எடுத்து (பாண்டவர்களின்) ஆயதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, திரௌபதியையும், மூன்று பாண்டவர்களையும் கடத்திக்கொண்டு சென்றான். அதன் பிறகு, பாண்டுவின் மகனான சகாதேவன், தனது முயற்சியால் அவனிடமிருந்து {அந்த ஜடாசுரன் என்ற ராட்சசனிடம் இருந்து} விடுபட்டு, கௌசிக என்ற வாளை எதிரியிடம் இருந்து பறித்து, பீமனை அழைத்துக் கொண்டே, அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் சென்ற திக்கில் சென்றான்.
இப்படிக் கடத்திச் செல்லப்பட்ட போது, நீதிமானான யுதிஷ்டிரன் அவனிடம் (அந்த ராட்சசனிடம்), "ஓ! மூடா, (இத்தகு செயலால்) உனது தகுதி குறைந்தது. இயற்கையால் விதிக்கப்பட்ட விதியை நீ மதிக்க மாட்டாயா? மானுட இனத்தைச் சேர்ந்தவரோ அல்லது தாழ்ந்த வகையைச் சேர்ந்தவரோ, எவராயினும் அறத்தை மதித்து நடக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ராட்சசர்கள் அப்படி மதித்து நடக்க வேண்டும். முதலில் அவர்களே மற்றவர்களைவிட அறத்தை நன்கறிந்தவர்கள். இதையெல்லாம் கருதிப் பார்த்து நீ அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ! ராட்சசா, தேவர்கள், பித்ருக்கள், சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், ஏன் புழுக்களும் எறும்புகளும் கூட மனிதர்களை நம்பியே தங்கள் வாழ்வை நடத்துகின்றனர். நீயும் அப்படியே வாழ்கிறாய். மானுட இனத்தில் செல்வம் கொழிக்கிறது என்றால், உனது இனமும் செழிப்படையும். அவர்களுக்குப் பேரிடர் சம்பவித்தால் தேவர்களும் துன்புறுவர். காணிக்கைகளால் திருப்தி செய்யப்படுவதால்தான் தேவர்களும் வாழ்கின்றனர். ஓ! ராட்சசா {ஜடாசுரா}, நாங்களே {மனிதர்களே} நாடுகளின் பாதுகாவலர்களாகவும், ஆட்சியாளர்களும், குருக்களாகவும் இருக்கிறோம். நாடுகள் பாதுகாப்பற்று இருந்தால் வளமையும் மகிழ்ச்சியும் எப்படி வரும்? குற்றமேதும் நடக்காத வரை ஒரு ராட்சசன் ஒரு மன்னனை மீறி நடக்கக்கூடாது.
ஓ! மனிதர்களை உண்பவனே {ஜடாசுரனே}, சிறு தீங்கைக் கூட நாங்கள் செய்யவில்லையே. விகாசையில் வாழும் நாங்கள் தேவர்களையும் பிறரையும் எங்கள் சக்திக்குத் தக்கவாறு சேவித்தே வருகிறோம். நாங்கள் எங்களுக்கு மூத்தவர்களையும், அந்தணர்களையும் வணங்காமல் இருந்ததில்லை. ஒரு நண்பன், நம்பியிருப்பவன், உணவு கொடுத்தவன், தங்க இருப்பிடம் அளித்தவன் ஆகியோருக்கு ஒரு போதும் தீங்கிழைக்கக் கூடாது. நீ எங்களுடன் இருந்ததில் மகிழ்ச்சியாகவும் மரியாதையுடனும் வசித்திருக்கிறாய். ஓ! தீய மனம் கொண்டவனே, நாங்கள் கொடுத்த உணவையும் உண்ட நீ, எங்களைக் கடத்திக் கொண்டு செல்கிறாயா? உனது செயல்கள் சரியற்றவையாக இருக்கிறது. எந்தப் பலனும் இல்லாமல் நீ வயதால் வளர்ந்திருக்கிறாய். விலங்குக்கொப்பான உனது இயல்புகள் தீமையானவையாக இருக்கின்றன. ஒன்றுமில்லாததற்குச் சாகத் துணிந்தாய். ஆகையால் இன்று நீ ஒன்றுமில்லாமலேயே இறப்பாய். நீ உண்மையில் அறமற்று இருந்தாலும், தீமையற்றவனாக இருந்தால், எங்கள் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, போரிட்ட பின் திரௌபதியை அபகரித்துச் செல். ஆனால் மூடத்தனத்தால் நீ இச்செயலைச் செய்தால் நீ அவப்பெயரையும், சிறுமையையுமே பெறுவாய். மானுட இனத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு {திரௌபதிக்கு} நீ ஏதும் தீங்கு செய்தால், நன்கு குலுக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்த விஷத்தைக் குடித்தவனாவாய்" என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}.
பிறகு, யுதிஷ்டிரன் தன்னைக் கனம் நிறைந்தவனாக ஆக்கிக் கொண்டான். அவனது எடையால் ஒடுக்கப்பட்ட அவன் முன்பு போல வேகமாகச் செல்ல முடியவில்லை. பிறகு திரௌபதி, நகுலன், சகாதேவன் ஆகியோரிடம் யுதிஷ்டிரன், "இந்த இழிந்த ராட்சசனைக் குறித்து அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நான் அவனது வேகத்தைத் தடுத்திருக்கிறேன். பலம்வாய்ந்த கரம் கொண்ட வாயுத்தேவனின் மகன் {பீமன்}, வெகு தொலைவில் இருக்க மாட்டான். பீமன் இங்கு வந்த அடுத்த நொடி இந்த ராட்சசன் வாழ மாட்டான்" என்றான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, உணர்விழந்த ராட்சசனை முறைத்துப் பார்த்த சகாதேவன் குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், "ஒரு க்ஷத்திரியனுக்குப் போரைவிடவோ அல்லது எதிரியை வீழ்த்துவதை விடவோ எது தகுதி வாய்ந்ததாக இருக்கும்? ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே, நாம் போரிடலாம். ஓ! பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, ஒன்று இவன் நம்மைக் கொல்வான் அல்லது நாம் இவனைக் கொல்வோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதுவே தகுந்த நேரமும் இடமும் ஆகும். ஓ! பொய்க்காத பராக்கிரமம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நமது க்ஷத்திரிய அறத்தைக் காட்ட நேரம் வாய்த்தது. நாம் வென்றோ அல்லது கொல்லப்பட்டோ சொர்க்கத்தை அடைவதே நமக்குத் தகும். இந்த ராட்சசன் வாழ்ந்தவாறே இன்று சூரியன் மறைந்தனானால், நான் இனிமேல் என்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஹோ! ஹோ! ராட்சசனே, நான் பாண்டுவின் மகனான சகாதேவன். ஒன்று என்னைக் கொன்று இந்த மங்கையைக் கடத்தி செல் அல்லது என்னால் கொல்லப்பட்டு உணர்விழந்து விழு" என்றான் {சகாதேவன்}.
மாத்ரியின் மகனான சகாதேவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, வஜ்ரம் தாங்கியிருக்கும் வாசவனைப் போலக் கைகளில் கதாயுதத்துடன் பீமசேனன் அங்கே தோன்றினான். அவன் {பீமன்} தனது இரு சகோதரர்களையும், நல்ல மனம் கொண்ட திரௌபதியையும் (அந்தப் பேயின் தோள்களில்), தரையில் நின்று கொண்டு விதியால் மதியிழந்த ராட்சசனை கண்டித்துக் கொண்டிருந்த.சகாதேவனையும் கண்டான். தனது சகோதரர்களும், திரௌபதியும் கடத்தப்படுவதை அறிந்த பெரும் பலம் வாய்ந்த பீமன் கோபத்தால் எரிந்து அந்த ராட்சசனிடம், "முன்பு நீ எங்கள் ஆயுதங்களை நுண்ணாய்வு செய்த போதே நீ தீயவன் என்பது எனக்குத் தெரியும்; ஆனால் உன்னைக் குறித்து நான் அச்சப்படவில்லை. அதனால் உன்னை அப்போது கொல்லாமல் விட்டேன். நீ அப்போது அந்தண உருவில் இருந்தாய். எங்களிடம் எந்தக் கடும் வார்த்தைகளையும் பேசவில்லை. எங்களைத் திருப்தி செய்வதிலேயே மகிழ்ச்சி கொண்டிருந்தாய். மேலும் நீ எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. அதற்கு மேலும் நீ எங்கள் விருந்தினராக வேறு இருந்தாய். ஆகையால் குற்றமிழைக்காத அப்பாவியான உன்னை; அதுவும் அந்தண உருவில் இருந்த உன்னை நான் எப்படிக் கொல்ல முடியும்? அப்படியிருப்பவன் ஒருவன் ராட்சசனாகவே இருந்தாலும், அவனைக் கொல்பவன் நரகத்திற்குச் செல்வான். மேலும் நேரம் வருவதற்கு முன்னால் உன்னைக் கொல்ல முடியாதல்லவா. இன்று உனது முழு நேரமும் முடிந்தது. அதனால்தான் விதி உன்னைக் கிருஷ்ணையை {திரௌபதியை} அபகரிக்கச் செய்தது. இக்காரியத்தைச் செய்ததால் நீ விதியெனும் தூண்டில் முள்ளில் சிக்கிக் கொண்டாய். முள்ளால் தைக்கப்பட்ட வாயுடன் நீரில் இருக்கும் மீனைப் போல இருக்கும் நீ எப்படி இன்று உயிருடன் இருக்க முடியும்? நீ ஏற்கனவே மனதால் {நீ விரும்பிய இடத்திற்கு} சென்றிருந்தாலும் உன்னால் இன்று நீ விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் பகனும், ஹிடிம்பனும் சென்ற இடத்திற்கு நீ செல்ல வேண்டியதிருக்கும்" என்றான் {பீமன்}.
பீமனால் இப்படிச்சொல்லப்பட்ட அந்த ராட்சசன் அச்சத்தால் அவர்கள் அனைவரையும் கீழே இறக்கினான். இருப்பினும் விதியால் இழுக்கப்பட்ட அவன் போர் செய்ய அணுகினான். கோபத்தால் உதடுகள் துடிக்க அவன் {ஜடாசுரன்} பீமனிடம், "இழிந்தவனே, நான் தடுமாறவில்லை. நான் உனக்காகவே தாமதம் செய்தேன். நான் கேட்டிருப்பது போல உன்னால் ஏற்கனவே போரில் கொல்லப்பட்ட ராட்சசர்களுக்கு உனது இரத்தத்தைக் காணிக்கையாக்குவேன்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட பீமன் மிகச்சினம் கொண்டு பிரளய கால யமன் போல வாயோரங்களைத் தனது நாவால் நக்கிக் கொண்டிருந்த அந்த ராட்சசனை அணுகி, தனது கரங்களைத் தட்டினான். பீமன் போருக்கு எதிர்பார்த்து காத்திருப்பதைப் பார்த்த ராட்சசன் {ஜடாசுரன்} கோபத்துடன் வாலி இந்திரனை நோக்கி விரைந்தது போல விரைந்து சென்றான்.
அந்த இருவருக்குள்ளும் கடும் மற்போர் ஏற்பட்ட போது, மாத்ரியின் மகன் இருவரும் எல்லைமீறிய கோபத்துடன் முன்னேறினர். ஆனால் குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்} அவர்களைப் புன்னகையுடன் தடுத்து, "இந்த ராட்சசனுக்கு நானே போதும். நின்று பார். எனது சகோதரர்கள், எனது நற்செயல்கள், எனது வேள்விகள், எனது சக்திகள் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் இந்த ராட்சசனைக் கொல்வேன்" என்றான். அவன் {பீமன்} அப்படிச் சொன்ன பிறகு, அந்த இரு வீரர்களான ராட்சசனும் {ஜடாசுரனும்} விருகோதரனும் {பீமனும்} ஒருவருக்கொருவர் சவால் விட்டபடி ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்தனர். அவர்கள் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டது தேவனுக்கும் அரசுரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அது இருந்தது. தொடர்ச்சியாக மரங்களை வேரோடு பிடுங்கி அந்தப் பலம் பொருந்திய இருவரும் போரிட்டுக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொல்ல நினைத்த அவர்கள் தங்கள் தொடைகளால் பெரும் மரங்களை ஒடித்துப் போட்டனர். செடிகளுக்கு அழிவைத் தருவதான மரங்களைக் கொண்டு அவர்கள் செய்த போர் ஒரு பெண்ணுக்காக இரு சகோதரர்களான வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த போரைப் போல இருந்தது. ஒரு நொடியில் மரங்களைக் காற்றில் வீசிய அவர்கள், அதைக் {மரங்களைக்} கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பெரும் கர்ஜனை செய்தனர்.
அந்தப் பகுதியில் இருந்த மரங்களை அனைத்தும் பிடுங்கப்பட்டு நார்நாராய் ஆன பிறகு ஒருவரை ஒருவர் கொல்ல நினைத்த பலம்பொருந்திய அவர்கள் இருவரும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மலையைப் போன்றும், பெரும் மேகக்கூட்டம் போன்று இருந்த பெரிய பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். அதனால் பாதிக்கப்படாத இருவரும், பிறகு இடியைப் போன்ற செங்குத்தான பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். பலம் நிறைந்த அவர்கள் அறைகூவியபடி துள்ளிக் குதித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு இரு பெரும் யானைகளைப் போல மற்போர் புரிந்தனர். பிறகு கடும் அடிகளைக் கொண்டு சண்டையிட்டனர். அந்த இரு பெரும் பலம் வாய்ந்தவர்களும் பற்களை நறநறவெனக் கடித்து ஒலியை எழுப்பினர்.
ஐந்து தலை பாம்பைப் போல இருந்த தனது கரத்தால் பீமன் அந்த ராட்சசனின் {ஜடாசுரனின்} கழுத்தில் ஒரு கடுமையை அடியை அடித்தான். பீமன் அடித்த முதல் அடியில் அந்த ராட்சசன் மயங்கினான். மயங்கிய அவனைப் பீமேசனேன் பிடித்துக் கொண்டான். பிறகு தேவனைப் போன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட பீமன் தனது இரு கரங்களால் அவனைத் தூக்கி நல்ல விசையுடன் தரையில் தூக்கி எறிந்து அவனது உறுப்புகள் அனைத்தையும் நொறுக்கினான். பிறகு தனது முட்டியால் அடித்து, கண்கள் உருண்டபடி, உதடுகள் கடித்தபடி இருந்த அந்த ராட்சசனின் தலையை மரத்தில் இருந்து கனியைப் பிடுங்குவது போல அவனது உடலில் இருந்து பிய்த்தெறிந்தான். பீமசேனன் தனது பலத்தால் ஜடாசுரனின் தலையைப் பிய்த்த போது, அவனது உடல் முழுவதும் ரத்தத்தால் பூசப்பட்டபடி இருந்தது. ஜடாசுரனைக் கொன்ற பீமன் யுதிஷ்டிரனின் முன்னிலைக்குக் வந்தான். அந்தணர்களில் முதன்மையானவர்கள் (பீமனை) வாசவனைப் புகழும் மருதர்களைப் போலப் புகழ ஆரம்பித்தனர்.