Vrishaparva and Arshtishena! | Vana Parva - Section 157 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடனும் அந்தணர்களுடனும் பேசி இமய மலையின் உச்சிக்குப் புறப்பட்டது; பாண்டவர்கள் மலையுச்சியை அடைந்தது; தங்கள் உடைமைகளை விருஷபர்வாவிடம் பாண்டவர்கள் வைத்துச் சென்றது; விருஷபர்வா பாண்டவர்களுக்கு வழிகாட்டித் திரும்பியது; பாண்டவர்கள் பல இடங்களைக் கண்ட பிறகு ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தை அடைந்து அவரைக் காண்பது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த ராட்சசன் {ஜடாசுரன்} கொல்லப்பட்ட போது, குந்தியின் அரச மகனான அந்தத் தலைவன் {யுதிஷ்டிரன்}, நாராயணனின் ஆசிரமத்திற்குத் திரும்பி அங்கே வசிக்க ஆரம்பித்தான். பிறகு ஒரு நாள்,, தனது தம்பியான ஜெயனை (அர்ஜுனனை) நினைவுகூர்ந்த யுதிஷ்டிரன் தனது மற்றத் தம்பிகளையும் திரௌபதியையும் அழைத்து, "நாம் இந்த நான்கு வருடத்தையும் கானகங்களில் உலவி அமைதியாகக் கழித்தோம். பூத்துக்குலுங்கும் செடிகளும், குயில்களும், கருவண்டுகளும், சாதகங்களும், புலிகளும், பன்றிகளும், எருமைகளும் கவயங்களும், மான்களும், கடும் விலங்குகளும், புனிதமான அழகான நூறு {100} இதழ் மற்றும் ஆயிரம் {1000} இதழ் தாமரைகளும், குவளை மலர்களும், நீலக் குவளைகளும் நிறைந்து தேவர்களாலும் அசுரர்களாலும் அடையப்படும் மலைகளின் ஏகாதிபதியான ஸ்வேத மலைக்கு ஐந்தாம் ஆண்டு வருவதாக அர்ஜுனன் வாக்களித்திருக்கிறான்.
அவனை {அர்ஜுனனைக்} காண விரும்பிய நாமும் அவனை {அர்ஜுனனைச்} சந்திப்பதற்காக அங்கே செல்வதாக இருந்தோம். ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} என்னிடம், "நான் இராணுவ அறிவியல் பயில்வதற்காக அயல்வெளியில் இருப்பேன் ஐந்து வருடங்கள்" என்று என்னிடம் குறித்துச் சொல்லியனுப்பியிருக்கிறான். தேவலோகத்தைப் போல இருக்கும் அந்த இடத்தில் ஆயுதங்களைப் பெற்றுத் திரும்பும் காண்டீவத்தைத் தாங்கியிருப்பவனைக் காண்போம்" என்றான் {யுதிஷ்டிரன்}. இதைச் சொன்ன அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்} அந்தணர்களையும், பிருதையின் {குந்தியின்} மகன்களையும் துறவிகளை வலம் வரச் செய்து, அத்துறவிகளிடம் மேற்சொன்ன காரியங்களைத் தெரிவித்தான். அதற்கு அந்த அந்தணர்கள், "இக்காரியம் உங்களுக்குச் செழிப்பையும் நன்மையையும் தரும். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இந்தத் தொல்லைகள் அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும். ஓ! பக்திமானே, க்ஷத்திரிய அறத்தால் பூமியை அடைந்து அவற்றை நீ ஆள்வாய்" என்று சொல்லி தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.
பிறகு அத்துறவிகளின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்த, அந்த எதிரிகளை ஒடுக்குபவனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும் ராட்சசர்கள் பின்தொடர லோமசரின் பாதுகாப்போடு கிளம்பினான். அந்தப் பெரும் சக்தியுடையவனும் நோன்புகள் நோற்பவனுமான யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் வெறுங்காலில் நடந்து சென்றான். மற்றவர்கள் ராட்சசர்களால் சுமந்து செல்லப்பட்டனர். பிறகு மன்னன் யுதிஷ்டிரன் பல இன்னல்களுக்கிடையில், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்த வடக்கு திசையை நோக்கிச் சென்றான். அப்படி அவர்கள் செல்லும் வழியில் மைநாக மலையையும், கந்தமாதனத்தின் அடிப்பாகத்தையும், பாறை பரப்பான ஸ்வேத மலையையும், மலையின் உச்சியில் தெளிந்த நீருடைய சிற்றோடைகளையும் கண்டான். பதினேழாவது நாளில் அவன் இமயத்தின் புனிதச் சரிவுகளை அடைந்தான். ஓ! மன்னா {ஜனமேஜெயனே}, காந்தமாதனத்திலிருந்து வெகு தொலைவில் அல்லாமல் சற்று அருகே, ஒரு அருவிக்கருகில் பூத்துக் குலுங்கும் மரங்களுடன் இருந்த விருஷபர்வாவின் ஆசிரமத்தை பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பல மரங்களும் கொடிகளும் அடர்ந்த இமயத்தின் புனிதச் சரிவுகளில் கண்டான்.
அந்த எதிரிகளை ஒடுக்குபவர்களான பாண்டுவின் மகன்கள், களைப்பில் இருந்து மீண்டு அரசமுனியான பக்திமான் விருஷபர்வாவிடம் சென்று அவருக்கு வாழ்த்து கூறினர். அந்த அரச முனியும் {விருஷபர்வாவும்} பாரதர்களில் முதன்மையான அவர்களைத் {பாண்டவர்களைத்} தனது சொந்த மகன்களைப் போலப் பாசத்துடன் வரவேற்றார். அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள் அங்கே உரிய மரியாதையுடன் ஏழு இரவுகளைக் கடத்தினர். எட்டாவது நாளில் அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படும் அந்த முனியிடம் {விருஷபர்வாவிடம்} விடைபெற்றுக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடங்க தயாராகினர். தங்களிடம் மீந்திருந்த ஆடைகளை உயர் ஆன்ம விருஷபர்வாவிடம் ஒப்படைத்த பாண்டுவின் மகன்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆபரணங்களையும், நகைகளையும் ஒன்றாக விருஷபர்வாவின் ஆசிரமத்தில் விட்டுவிட்டுச் சென்றனர். ஞானியும், பக்திமானும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்தவனுமான அவன் {விருஷபர்வா}, தனது மகன்களுக்குச் சொல்வது போல அந்தப் பாரதர்களில் சிறந்தவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அறிவுரை கூறினார். பிறகு அவனிடம் {விருஷபர்வாவிடம்} விடைபெற்றுக் கொண்ட அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் வடக்கு நோக்கி சென்றனர். அப்படி அவர்கள் சென்ற போது பெருந்தன்மை கொண்ட விருஷபர்வா சிறிது தூரம் அவர்களைத் தொடர்ந்து சென்றார். பிறகு பாண்டவர்களை அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி, அருள் கூறி, அவர்கள் செல்ல வேண்டிய வழி குறித்துச் சொல்லிய பெரும் சக்தி படைத்த விருஷபர்வா தான் வந்த வழியே சென்றான்.
பிறகு பொய்க்காத பராக்கிரமம் கொண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் சேர்ந்து அனைத்து வகை விலங்குகளும் இருந்த மலைப்பாதையில் கால்நடையாக நடந்து சென்றான். அடர்த்தியான மரங்கள் நிறைந்த மலைச்சரிவுகளில் வாழ்ந்த பாண்டுவின் மகன் நான்காவது நாளில், ஓடைகளும், தங்கமும் ரத்தினங்களும் நிறைந்த பெரும் மேகக் குவியல் போல இருந்த ஸ்வேத மலையை அடைந்தான். பிறகு விருஷபர்வா சொன்ன வழியில் சென்று தாங்கள் பார்க்க எண்ணிய பலவித மலைகளையும் இடங்களையும் கண்டான். மீண்டும் மீண்டும் பல கடக்க முடியாத பாறைகளையும், அடைவதற்கு அரிதான மலைக்குகைகளையும் அவர்கள் தாண்டி சென்றனர். தௌமியர், கிருஷ்ணை {திரௌபதி}, பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, பெருந்துறவியான லோமசர் ஆகியோர் ஒன்றாக {சுமக்கப்பட்டு} சென்றனர். அவர்கள் களைப்படையவில்லை. பறவைகள் மற்றும் விலங்குகளின் ஓசைகளும், பலதரப்பட்ட மரங்களும் கொடிகளும், தாமரைத்தடாகங்களும், சதுப்பு நிலங்களும் நிறைந்து குரங்குகள் வசிக்கும் இடமாக அந்தப் பரந்து விரிந்த கானகம் இருந்தது. கிம்புருஷர்களின் வசிப்பிடமும், சித்தர்கள், சாரணர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள் அடிக்கடி அடைவதும், யானைக்கூட்டங்களும், சிங்கங்கள், புலிகள், சரபங்களின் கர்ஜனைகள் நிறைந்ததும், பல விலங்களின் வசிப்பிடமுமான கந்தமாதன மலையை மயிர்ச்சிலிர்ப்புடன் அங்கிருந்து கண்டனர்.
போர்க்குணமுள்ள பாண்டுவின் மகன்கள் படிப்படியாக மகிழ்ச்சி நிறைந்த மனம் மற்றும் இதயத்துடன் நந்தன தோட்டத்தைப் போல அழகான தோப்புகளுடன் இருந்த வசிக்கத்தகுந்த கந்தமாதனை காட்டுக்குள் நுழைந்தனர். திரௌபதியுடனும், உயர் ஆன்ம அந்தணர்களுடனும் இப்படி நுழைந்த அந்த வீரர்கள் மந்தமாகத் தெளிவில்லாமல் மங்களகரமாக இருக்கும் காதுக்கினிமையான பறவைகளின் இனிய ஓசைகளைக் கேட்டனர். அனைத்துக் காலங்களிலும் பிரகாசமாகப் பூக்கும் மலர்களையும், காய்க்கும் கனிகளையும் கொண்ட மரங்கள் பாரம் தாங்க முடியாதவாறு நின்றன. மா, காட்டு இலந்தை, பவ்யம், மாதுளை, எலுமிச்சை நாரத்தைப் போன்றவை, பலா, கொய்யா, வாழை, நீர்ச்செடிகள், பரா, சண்பகம், மனமகிழச் செய்யும் கடம்பு, வில்வம், விளா, நாவல், காஸ்மரி, இலந்தை, அத்தி, இறலி, ஆல், அரசு, க்ஷிரிகம், சேமரம், நெல்லி, கடுமரம், தான்றி, புன்கு, கரமர்த்தம், மேலும் நிறையக் கனிகளைக் காய்க்கும் திந்துகம் ஆகிய பலவிதமான மரங்கள் அமிர்தம் போன்ற சுவையுள்ள கனிகளால் கந்தமாதன மலைச்சரிவிலுள்ள மரங்கள் நிறைந்திருந்தது.
அது தவிரச் சண்பகம், அசோகம், தாழை {கேதகம்}, மகிழ் {வாகுலம்}, புன்னை {புன்னகம்}, எழிலைம்பாலை {சப்தபர்னம்}, தாழையோடு கூடிய கோங்கு {கர்னிகரம்}, பாதிரி {பாதல் Patal}, அழகிய வெட்பாலை {குதஜம்}, மந்தாரம், தாமரை, பாரிஜாதம், மலையகத்தி {கோவிதரம்}, தேவதாரு, ஆச்சா {சாலம்}, பனை, பச்சிலை, திப்பிலி, பெருங்காயம், இலவு, பலாசு, அசோகம், சிம்சுபை, ஸர்ஜகம் ஆகிய மரங்கள் நான்கு பக்கங்களிலும் மனத்தைக் கவரும் வகையில் நிறைந்திருந்தது. அல்லிகள், புண்டரீகங்கள், கோகநாதங்கள், கருநெய்தல்கள், செங்கழுநீர்கள், தாமரைகள் ஆகியவை நான்கு பக்கத்திலும் நிரம்பியிருந்தன. கமலஹம்சங்கள், சக்கிரவாகங்கள், அன்றில்கள், நீர்க்கோழிகள், காரண்டவங்கள், வாத்துக்கள், அன்னங்கள், கொக்குகள், நாரைகள் ஆகிய நீர்வாழ் பறவைகள் அங்கிருந்த தடாகங்களில் நிறைந்திருந்தன. அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் அங்கே அந்தத் தாமரைத் தடாகங்கள் அழகான தாமரைக்கூட்டங்கள் நிரம்பியும், அதில் தேனைப் பருகி போதையின் மயக்கத்தில் மகிழ்ச்சியாகத் திரிந்த வண்டுகளின் இனிமையான ரீங்காரத்துடனும், தாமரைகளின் மத்தியில் இருந்து விழும் மகரந்தங்களால் சிவந்தும் காணப்பட்டன.
அங்கே இருந்த புதர்களில் பெண்மயில்களோடு இருந்த ஆண்மயில்கள் ஆசையால் பித்துக் கொண்டு மேக தூரியம் போன்ற ஒலியெழுப்பின. அப்படி ஆசையால் மயங்கி இருந்த மயில்கள் மகிழ்ச்சியால் ஆடிக்கொண்டும், தங்கள் தோகையை விரித்துக் கொண்டும் இனிமையான ஒலிகளை எழுப்பின. சில மயில்கள் தங்கள் துணையுடன் சேர்ந்து கொடிகள் அடர்ந்த வெட்பாலை மரங்களில் {குதஜா மரங்கள்} விளையாடிக் கொண்டிருந்தன. சில மயில்கள் வெட்பாலை மரங்களின் கிளைகளில் அமர்ந்து தங்கள் அழகான தோகைகளை விரித்து வீற்றிருந்தது அம்மரங்கள் அணிந்த கிரீடம் போல இருந்தது. காட்டின் ஊடே திறந்தவெளிகளில் காமனின் கணைகளைப் போல இருக்கும் அருள்நிறைந்த சிந்துவாரங்களைக் கண்டார்கள். மலைச்சிகரங்களில் உள்ள கோங்கு மரங்களில் {Karnikara கர்ணிகர மரம்} பொன்னிறமான மலர்கள் பூத்துக் குலுங்குவது சிறந்த காதணிகளைப் போல இருப்பதைக் கண்டார்கள். அக்கானகத்தில் காமனின் கணைகளைப் போல ஒருவனை ஆசையில் புன்னகைக்க வைத்து, சங்கடப்படவைக்கும் பூத்துக் குலுங்கும் மருதோன்றி மரங்களையும் {Karuvaka Tree} கண்டார்கள். அக்கானகத்தின் நெற்றியில் அழகாக வரையப்பட்டது போல உள்ள மஞ்சாடி மரங்களையும் {tilaka tree} கண்டார்கள். பூத்திருந்த மாமரங்களில் கருவண்டுகள் ரீங்காரமிட்டபடி காமனின் கணைகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தன.
அந்த மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் பலவிதமான மரங்களில் சில தங்க நிறத்திலும், சில காட்டுத்தீ போன்ற நிறத்திலும், சில சிவப்பு நிறத்திலும், சில கரு நிறத்திலும், சில வைடூரியம் போன்ற பச்சை நிறத்திலும் மலர்களைச் சுமந்த படி அழகாக நின்றன. இது தவிர அந்தப் பகுதியில் ஆச்சா {சால மரம்}, பச்சிலை {tamala}, பாதிரி {patala}, மகிழம் {vakula} மரங்களும் சேர்ந்து அந்த மலைச்சிகரத்திற்கு அணிவிக்கப்பட்ட மாலை போல இருந்தன. தெளிந்த பளிங்கு போன்ற பல தடாகங்களைக் கொண்ட அந்த மலைச் சரிவுகளில் வெண்மையான இறகுகள் கொண்ட அன்னங்கள் மற்றும் நாரைகளின் சத்தங்களும், தாமரைகளும், குவளைகளும் நிறைந்த அழகான நீர்நிலைகளும், நறுமணமிக்க மலர்களும், சுவமிக்கக் கனிகளும், அழகான தடாகங்களும், மனதைக் கவரும் மரங்களும் என அனைத்தையும் பாண்டவர்களின் கண்கள் ஆச்சரியத்துடன் கண்டன. (அப்படியே அவர்கள் முன்னேறிச் செல்கையில்) தாமரை {Kamala}, கருநெய்தல் {Utpala}, செங்கழுநீர் {Kalhara}, செந்தாமரை {Pundarika} ஆகியவற்றின் நறுமணத்துடன் இனிமையான தீண்டல் கொண்ட தென்றல் காற்றினால் வீசப்பட்டவர்களாகவும் அவர்கள் அந்தக் கானகத்துக்குள் புகுந்தார்கள்.
அப்போது யுதிஷ்டிரன் பீமனிடம் இனிமையாக, "ஆ! ஓ! பீமா, கந்தமாதனத்தின் இந்தக் கானகம் அழகாக இருக்கிறது. அந்த அழகான வனத்தில் தெய்வீகமான காட்டு மரங்களும், கொடிகளும், அழகான அடர்த்தியான இலைகளும், கனிகளும் இங்கிருக்கின்றன. மலராத மரமேதும் நாம் இங்குக் காணவில்லை. கந்தமாதனத்தின் இந்தச் சரிவுகளில், அனைத்து மரங்களும் அழகான இலைகளும் கனிகளும் கொண்டிருக்கின்றன. இந்தத் தாமரைத் தடாகங்களைப் பார், அதில் இருக்கும் தாமரைகளும் முழுதும் மலர்ந்திருக்கின்றன. அவற்றைச் சுற்றி கருவண்டுகள் ரீங்காரமிட்டபடி இருக்கின்றன. அத்தடாகத்தை யானைகள் தங்கள் துணையுடன் சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கின்றன. இதோ இன்னுமொரு தடாகத்தைப் பார். மாலைகள் அணிந்து உருவம் கொண்டு வந்திருக்கும் இரண்டாவது ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல வரிசையாகத் தாமரைகளுடன் இருக்கின்றன பார். இந்த அற்புதமான கானகத்தில் அழகான வனங்களும், பலவிதமான மலர்களின் நறுமணங்களும், கருவண்டுகளின் ரீங்காரமமும் நிறைந்திருக்கின்றன. ஓ! பீமா, எல்லாப்புறங்களையும் சுற்றிப் பார், இது தேவர்களின் விளையாட்டு மைதானம் போலல்லவா இருக்கின்றது. இங்கே வந்ததால் நாம் மனிதர்களில் உயர்ந்த நிலையை அடைந்து அருளப்பட்டவர்களானோம்.
ஓ! பார்த்தா {பீமா}, இந்தக் கந்தமாதனச் சரிவுகளில் பூத்துக்குலுங்கும் அழகான மரங்களில், பூத்துக் குலுங்கும் கொடிகள் அணைத்துக் கொண்டிருப்பது அழகாக இருக்கிறது. ஓ! பீமா, மலைச்சரிவுகளில் பேடுகளுடன் சேர்ந்து ஒலியெழுப்பும் மயில்களின் ஓசையைக் கேள். சகோரங்களும் {chakora}, சதபத்திரங்களும் {satapatra}, மதம்பிடித்த குயில்களும் {kokila}, கிளிகளும் {parrot} பூத்துக் குலுங்கும் இந்தப் பெரிய மரங்களில் அமர்ந்திருக்கின்றன. சிவப்பு நிறத்திலும், சிவந்த மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் பல பறவைகள் மரங்களின் உச்சியை அடைந்து, கிளைகளில் அமர்ந்து கொண்டு ஒன்றை மற்றொன்று பார்க்கின்றன. மலை அருவிகளிலும், பச்சை மற்றும் சிவந்த நிறத்திலுள்ள புற்தரையிலும் நாரைகள் தென்படுகின்றன. பிருங்கராஜம் {bhringaraja}, வல்லூறு {upachakra}, போத்து {heron} ஆகியவை அனைத்து உயிரினங்களின் மனதையும் கவரும் வண்ணம் இனிமையான ஒலியுடன் கூவுகின்றன. தாமரை போன்ற வெண்ணிறத்தில் நான்கு தந்தங்களைக் கொண்ட யானைகள் தங்கள் துணைகளுடன், வைடூரிய நிறத்தில் இருக்கும் பெரிய தடாகங்களைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.
பல பனைமரங்கள் உயரமுள்ள மலைச்சிகரங்களில் இருந்து விழும் பல ஊற்றுகள் பல அருவிகளில் இருந்து விழுகின்றன. சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட பல அற்புதமான தாதுக்கள், இலையுதிர் காலத்தின் மேகங்கள் போல இந்தப் பெரிய மலையைப் பிரகாசிக்கச் செய்கின்றன. சில இடங்களில் மையின் நிறத்திலும், சில இடங்களில் தங்க நிறத்திலும், சில இடங்களில் கனிப்பொருள் போல மஞ்சள் நிறத்திலும், சில இடங்களில் செந்தூர நிறத்திலும், சில இடங்களில் மாலைநேர மேகங்களின் நிறத்திலும் சிவப்பு நஞ்சு போலக் குகைகளிலும், சில இடங்களில் முயலின் நிறத்திலும், சில இடங்களில் வெள்ளையும் கருப்புமாகத் தாதுக்கள் நிறத்திலும், சில இடங்களின் உதயச் சூரியனின் நிறத்திலும், பெரும் பிரகாசமிக்கத் தாதுக்கள் அந்த மலையை அழகூட்டிக் கொண்டிருக்கின்றன. ஓ! பார்த்தா {பீமா}, விருஷபர்வா சொன்னது போல, கந்தர்வர்களும், கிம்புருஷர்களும், தங்கள் காதல் துணைகளுடன் இந்த மலையின் சிகரங்களில் தெரிகிறதார்கள். ஓ! பீமா, அனைத்து உயிரினங்களையும் மயக்கும் ஒரே தாளம் கொண்ட பல பாடல்களும், வேத ஒலிகளும் கேட்கின்றன. புனிதமானதும், அருள் நிறைந்ததுமான தெய்வீக நதியான மகாகங்கை அன்னங்களுடனும், முனிவர்களுடனும், கின்னரர்களுடன் இருப்பதைப் பார். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {பீமா}, தாதுக்களையும், நதிகளையும், அழகிய வனங்களையும், விலங்குகளும், பல வடிவங்களிலும், நூறு தலைகள் கொண்ட பாம்புகளையும், கின்னரர்களையும், கந்தர்வர்களையும், அப்சரசுகளையும் பார்" என்றான் {யுதிஷ்டிரன் பீமனிடம்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "எதிரிகளை வாட்டுபவர்களும், பராக்கிரமசாலிகளுமான அவர்கள் திரௌபதியுடனும், உயர் ஆன்ம அந்தணர்களுடனும், அச்சிறந்த மலைகளின் மன்னனை அடைந்து மகிழ்ந்தும், போதுமென்ற மனநிலையை அடையவில்லை. அதன்பிறகு, மலர்களும் கனிகளும் கொண்ட மரங்கள் நிறைந்த அரசமுனி ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தை அவர்கள் கண்டார்கள். பிறகு அவர்கள் எலும்புக்கூடு போலச் சதைகள் அற்று இருப்பவரும், கடும் தவத்திற்கான அனைத்துக் கடமைகளை அறிந்தவருமான ஆர்ஷ்டிஷேணரிடம் சென்றார்கள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.