The wrath of Kuvera appeased! | Vana Parva - Section 160 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பீமனைக் காணாது மனம் வருந்திய பாண்டவர்கள் மலைச்சிகரத்தில் ஏறியது; பீமனையும், பீமனால் கொல்லப்பட்ட ராட்சசர்களையும் காண்பது; குபேரன் பீமனிடம் போருக்கு வந்தது; வந்த இடத்தில் யுதிஷ்டிரனைக் கண்டு கோபம் தணிந்து, தனக்கு அகத்தியரால் ஏற்பட்ட சாபத்தைச் சொன்னது; பீமசேனன் செயலால் சாபவிமோசனம் பெற்றதாகக் குபேரன் சொல்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "மலையின் குகைகளில் இருந்து பலதரப்பட்ட ஒலிகள் வருவதையும், பீமசேனனைக் காணாததையும் கண்ட, குந்தியின் மகனான அஜாதசத்ருவும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மகன்களான இரட்டையர்களும், தௌமியரும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, அனைத்து அந்தணர்களும், (பாண்டவர்களின்) நண்பர்களும் துயரத்தில் நிறைந்தனர். அதன்பிறகு திரௌபதியை ஆரிஷ்டஷேணரிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அந்த வீரமிக்க, வலிமைமிக்க ரதவீரர்கள் {பாண்டவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து அந்த மலையின் சிகரத்தில் ஏறினர். எதிரிகளை ஒடுக்குபவர்களான வலிமையான வில்லாளிகளும், பலம் வாய்ந்த தேரோட்டிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்} அந்த மலைச்சிகரத்தை அடைந்ததும் பீமனையும், பீமனால் அடிக்கப்பட்டுச் சுயநினைவற்ற நிலையில் கிடக்கும் பெரும் பலம்வாய்ந்த ராட்சசர்களையும் கண்டனர். அந்தத் தானவப் படையைக் கொன்ற பிறகு, தனது கதாயுதத்தையும், வாளையும், வில்லையும் பிடித்தவாறு இருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, மகவானைப் {இந்திரனைப்} போலத் தெரிந்தான்.
அற்புதமான நிலையை அடைந்த அந்தப் பாண்டவர்கள் தங்கள் சகோதரனை {பீமனைக்} கண்டதும், அவனை அணைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தனர். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் இருந்த அந்தச் சிகரம், தேவர்களில் முதன்மையான, உயர்ந்த நற்பேறைக் கொண்ட லோகபாலர்கள் இருக்கும் சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது. குபேரனின் வசிப்பிடத்தையும், கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் ராட்சசர்களையும் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அங்கே அமர்ந்திருந்த தனது தம்பியிடம் {பீமனிடம்}, "முரட்டுத்தனத்தாலோ, அறியாமையாலோ, ஓ! பீமா, நீ பாவ காரியத்தைச் செய்திருக்கிறாய். ஓ! வீரா {பீமா}, துறவு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, காரணமற்று நீ செய்திருக்கும் இந்தக் கொலை உனக்குத் தகுந்ததன்று. ஏகாதிபதி விரும்பாத செயல் என்று கடமைகளை அறிந்தவர்களால் கணிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்யக்கூடாது. ஆனால், ஓ! பீமசேனா, நீ தேவர்களையே அவமதிக்கும் காரியத்தைச் செய்திருக்கிறாய். பொருளையும், கடமையையும் கருதிப் பாராமல், பாவ எண்ணங்கள் பால் திரும்புபவன், ஓ! பார்த்தா {பீமா}, அந்தப் பாவகரச் செயல்களுக்கான கனியை அறுவடை செய்கிறான். எனினும், நீ எனது நன்மையை விரும்பினால், மீண்டும் இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்யாதே" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "தனது தம்பியான விருகோதரனிடம் {பீமனிடம்} இதைச் சொன்ன உயர்ந்த சக்தியும் உறுதியான மனமும், பொருள் குறித்த அறிவியலையும் அறிந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பேச்சை நிறுத்தி, அவ்விஷயம் குறித்துச் சிந்திக்கலானான்.
மறுபுறம், பீமானால் கொல்லப்பட்டவர்கள் தவிர மீந்திருந்த ராட்சசர்கள் ஒன்று சேர்ந்து குபேரனின் வசிப்பிடத்திற்கு ஓடினார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை விரைவாக அடைந்து, பீமனின் மீது ஏற்பட்ட பயத்தால் துன்பக்குரலுடன் கதறத் தொடங்கினர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆயுதங்களை இழந்து, களைப்படைந்து, இரத்தக்கறை கொண்ட கவசங்களுடனும், கலைந்த கேசங்களுடனும், குபேரனிடம், "ஓ! தலைவா, கதாயுதம், தண்டம், வாள்கள், ஈட்டிகள், வேல்கம்புகள் கொண்டு போரிடும் உமது ராட்சசர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஓ! கருவூலத்தின் தலைவா, மலையில் ஊடுருவி வந்த ஒரு மனிதன், தனி ஒருவனாக உமது குரோதவாச ராட்சசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். மேலும், செல்வத்தின் தலைவா, யக்ஷர்களிலும் ராட்சசர்களின் முதன்மையானவர்கள் அங்கே அடிபட்டு, உணர்வற்று விழுந்து, இறந்து கிடக்கின்றனர். அவனது {பீமனது} கருணையால் நாங்கள் விடப்பட்டோம். மேலும், உமது நண்பரான மணிமானும் கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் ஒரு மனிதன் செய்தான். இதன்பிறகு எது சரியோ அதைச் செய்யும்" என்றனர்.
இதைக் கேட்ட யக்ஷப் படைகளின் தலைவன் {குபேரன்}, கோபம் மிகுந்து, சினத்தால் கண்கள் சிவக்க, "என்ன?" என்று கேட்டான். பீமனின் இரண்டாவது தாக்குதலைக் கேட்ட பொக்கிஷங்களின் தலைவனான, யக்ஷர்கள் மன்னன், கோபத்தால் நிறைந்து, "(குதிரைகளைப்) பூட்டுங்கள்" என்றான். அதன்பேரில், கரு மேக வண்ணத்தில் மலைச்சிகரம் போல உயரமாக இருந்த தேரில் தங்க ஆபரணங்கள் பூண்ட குதிரைகள் பூட்டப்பட்டன. தேரில் பூட்டப்பட்ட அனைத்து நற்குணங்களும், பத்து மங்களகரமான சுழிகளும் கொண்ட அந்தச் சக்திமிக்க, பலமிக்க அற்புதமான குதிரைகள், பலதரப்பட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுக் காண்பதற்கு அருமையாக இருந்தன. காற்றைப் போல வேகமாகச் செல்ல விரும்பிய அவை வெற்றித்தருணத்தில் கனைக்கும் கனைப்பொலியை, ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு அப்போது கனைத்தன.
அந்தத் தெய்வீகமான பிரகாசமிக்க யக்ஷர்கள் மன்னன் {குபேரன்}, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் துதிபாடப்பட்டுக் கிளம்பினான். கண்கள் சிவந்து, தங்க நிறத்தில், பெரும் உடல் படைத்த, பெரும் பலமிக்க யக்ஷர்களின் முதன்மையான ஆயிரம் பேர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, வாளைச் சுழற்றிக் கொண்டு, அந்த உயர் ஆன்ம பொக்கிஷத் தலைவனை {குபேரனைத்} தொடர்ந்து சென்றனர். வானத்தின் ஊடே பறந்து வந்த அக்குதிரைகள், தங்கள் வேகத்தால் வானத்தை இழுப்பதைப் போல ஓடி விரைவாகக் கந்தமாதனத்தை அடைந்தன. செல்வத்தின் தலைவனால் {குபேரனால்} பராமரிக்கப்படும் அந்தப் பெரும் கூட்டத்தையும், யக்ஷப்படைகளால் சூழப்பட்ட அருள் நிறைந்த உயர் ஆன்ம குபேரனையும் கண்ட பாண்டவர்களுக்கு மயிர் சிலிர்த்தது.
விற்களும், வாள்களும் தாங்கிக் கொண்டு நின்ற பெரும்பலம்வாய்ந்த ரதவீரர்களான பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கண்ட குபேரன் மகிழ்ந்தான். தேவர்களின் காரியத்தை மனதில் கொண்ட அவன் இதயத்தால் திருப்தியடைந்தான். பெரும் வேகத்தைக் கொடையாகக் கொண்ட யக்ஷர்கள் பறவைகளைப் போல அந்த மலைச்சிகரத்தில் ஏறி, கருவூலங்களின் தலைவனைத் {குபேரனைத்} தலைமையாகக் கொண்டு அவர்கள் {பாண்டவர்கள்} முன்பாக நின்றனர். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவன் {குபேரன்} பாண்டவர்களிடம் திருப்தியடைந்து நிற்பதைக் கண்ட யக்ஷர்களும், கந்தர்வர்களும் கலக்கமில்லாமல் அங்கே நின்றனர். பிறகு தாங்களே ஊடுருவி வந்ததாகக் கருதிய அந்த உயர் ஆன்ம ரத வீரர்களான பாண்டவர்கள், செல்வங்களைத் தரும் அத்தலைவனை {குபேரனை} வணங்கி, குவிந்த கரங்களுடன் கருவூலங்களின் தலைவனைச் {குபேரனைச்} சூழ்ந்து நின்றனர்.
பல வண்ணங்கள் பூசப்பட்டு விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட அழகான புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்}, ஓர் அற்புதமான இருக்கையில் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்} அமர்ந்தான். பெரும் உடல் படைத்தவர்கள் சிலரும், முளை {அல்லது தாழ்ப்பாள்} போன்ற காதுகளைக் கொண்ட சிலருமான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், ராட்சசர்களும், நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரசுக் கூட்டங்களுங்களும் அமர்ந்திருந்த அவன் {குபேரனின்} முன்னால், நூறு வேள்விகளைச் செய்தவனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல அமர்ந்தனர். தலையில் அழகான தங்க மாலை அணிந்துகொண்டு, கரங்களில் சுருக்குக் கயிற்றையும், வாளையும், வில்லையும் கொண்டிருந்த செல்வத் தலைவனைக் {குபேரனைக்} ஏறிட்டுப் பார்த்தபடி பீமன் நின்றான். ராட்சசர்களால் பலத்த காயமடைந்திருந்த பீமசேனன் எந்தக் கவலையும் அடையாமல், குபேரனின் வருகையால் பயத்தையும் அடையாமல் இருந்தான்.
மனிதர்களின் தோள்களில் சவாரி செய்யும் அவன் {குபேரன்}, கூரிய கணைகளுடன் போரிடும் விருப்பத்துடன் நின்று கொண்டிருக்கும் பீமனைக் கண்டு தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிர்களும், நீ அவைகளுக்கான நன்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருக்கின்றன. ஆகையால், நீ இந்த மலைச்சிகரத்தில் உனது தம்பிகளுடன் பயமற்ற வசிப்பாயாக. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ பீமனிடம் கோபம் கொள்ளாதே. இந்த யக்ஷர்களும், ராட்சசர்களும் விதியால் ஏற்கனவே கொல்லப்பட்டனர். உன் தம்பி அதற்கு ஒரு கருவியாக இருந்திருக்கிறான். செய்யப்பட்ட இந்தக் கெட்ட செயலுக்காக வெட்கப்பட வேண்டியது அவசியமில்லை. ராட்சசர்களின் இந்த அழிவு, தேவர்களால் முன்பே கணிக்கப்பட்டதுதான். பீமசேனன் மீதான கோபத்தை நான் ஊக்குவிக்கமாட்டேன். மாறாக, ஓ பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நான் அவனிடம் {பீமனிடம்} திருப்தியாக இருக்கிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பே, பீமனின் இச்செயலால் திருப்தியடைந்தேன்" என்றான் {குபேரன் யுதிஷ்டிரனிடம்}.
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசியவன் {குபேரன்}, பீமனிடம், "ஓ! குழந்தாய், ஓ குருக்களில் சிறந்தவனே, நான் இதை மனதில் வைக்கவில்லை. ஓ! பீமா, கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} திருப்தி செய்வதற்காக, தேவர்களையும், என்னையும் அவமதிக்கும் இம்முரட்டுச் செயலைச் செய்தாய். உனது கரங்களின் பலத்தை நம்பி, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் அழித்த உன்னிடம் நான் மிகவும் திருப்தி கொண்டுள்ளேன். ஓ! விருகோதரா {பீமா}, இன்று நான் ஒரு பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு குற்றத்திற்காகப் பெரும் முனிவரான அகஸ்தியர், கோபத்தால் என்னைச் சபித்தார். (உனது) இந்தச் செயலின் மூலம் நீ என்னை விடுவித்தாய். ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, நான் அடைந்த இழிவு முன்பே விதிக்கப்பட்டதே. எனவே, எவ்வழியிலும், ஓ! பாண்டவா {பீமா}, எக்குற்றமும் உன்னைச் சாராது" என்றான் {குபேரன்}.
யுதிஷ்டிரன் {குபேரனிடம்}, "ஓ! தெய்வீகமானவனே, உயர் ஆன்ம அகஸ்தியரால், நீ ஏன் சபிக்கப்பட்டாய்? ஓ! தேவனே, இந்தச் சாபம் ஏற்பட்ட விதத்தைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். சிறந்த புத்தியுள்ளவரான அகஸ்தியரின் கோபத்தால், அச்சமயத்திலேயே உன்னைத் தொடர்ந்து வந்த சேனைகளுடனும், பரிவாரங்களுடனும் நீ எரிக்கப்படாமல் இருந்தாய் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது" என்றான்.
அதன்பேரில் கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மூன்று மகாபத்மங்கள் எண்ணிக்கையிலான கடும் முகம் கொண்ட, பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய யக்ஷர்கள் சூழ நான் அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் வழியில், பல வகையான பறவைகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும் நிறைந்த யமுனைக் கரையில் கடும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் முதன்மையான அகஸ்தியரைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நெருப்பு போன்ற பிரகாசத்துடனும், உயர்த்திப் பிடித்த கரங்களுடன் அமர்ந்து, சூரியனை நோக்கிக் கொண்டிருந்த அந்தச் சக்தியின் குவியலைக் {அகஸ்தியரைக்} கண்ட உடனேயே, எனது நண்பனும், ராட்சசர்களின் அருள்நிறைந்த தலைவனுமான மணிமான், முட்டாள்தனத்தாலும், செருக்காலும், அறியாமையாலும், அந்தப் பெரும் முனிவரின் தலையில் எச்சிலை உமிழ்ந்தான்.
அதன் காரணமாக, அனைத்து திக்குகளையும் எரித்துவிடக்கூடிய கோபம் கொண்ட அவர் {அகஸ்தியர்} என்னிடம், "ஓ! கருவூலங்களின் தலைவா {குபேரா}, உனது நண்பன், உனது முன்னிலையில் என்னை இழிவாக அவமதித்ததால், உனது படைகளுடன் கூடிய அவன், ஒரு மனிதனின் கையால் அழிவைச் சந்திப்பான். ஓ! தீய மனம் கொண்டவனே, நீ அந்த மனிதனைக் காண்பதால், வீழ்ந்த உனது படைவீரர்களால் ஏற்படும் துன்பமான அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய். ஆனால் அவர்கள் {படைவீரர்கள்} உனது கட்டளைகளைப் பின்பற்றினால் (அந்தப் படைவீரர்களின்) பலமிக்க மகன்களுக்கு இந்தக் கடும் சாபம் உண்டாகாது. இந்தச் சாபத்தையே முன்பொரு காலத்தில் நான் முனிவர்களில் முதன்மையானவரிடம் {அகஸ்தியரிடம்} பெற்றேன். ஓ! பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது நான் உனது தம்பியான பீமனால் விடுவிக்கப்பட்டேன்" என்றான் {குபேரன்}.