Maniman slained! | Vana Parva - Section 159 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சுபர்ணத்தின் சிறகசைவில் எழும்பிய காற்றால் கொண்டுவரப்பட்ட பஞ்சநிற மலரை திரௌபதி காண்பது; ராட்சசர்களை அழித்து வரும்படி பீமனிடம் திரௌபதி வேண்டுவது; பீமன் கந்தமாத மலையின் சிகரத்தில் ஏறி, மணிமான் முதலிய யக்ஷர்களைப் போரிட்டுக் கொல்வது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட எனது பெரும்பாட்டன்கள் {பாண்டவர்கள்} கந்தமாதன மலையில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்கள்? ஆண்மையைக் கொடையாகக் கொண்ட பெரும் பலம் வாய்ந்த அவர்கள் {பாண்டவர்கள்} {அங்கிருந்த போது} என்ன செய்தார்கள்? உலகங்களின் வீரர்களான அவர்கள் {பாண்டவர்கள்} அங்கு வசித்த போது, அந்த உயர் ஆன்மா கொண்டவர்களின் {பாண்டவர்களின்} உணவு என்னவாக இருந்தது? ஓ! அற்புதமானவரே {வைசம்பாயனரே}, இது குறித்த அனைத்தையும் நீர் சொல்லும். பீமசேனனின் பராக்கிரமத்தையும், அந்தப் பலம்வாய்ந்த கரம் கொண்டவன் இமய மலையில் என்ன செய்தான் என்பதையும் விவரித்துச் சொல்லும். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, நிச்சயமாக மீண்டும் அவன் {பீமன்} யக்ஷர்களுடன் போரிடவில்லையா? அவர்கள் {பாண்டவர்கள்} வைஸ்ரவணனைச் சந்தித்தார்களா? ஆர்ஷ்டிஷேணர் சொன்னதுபோலச் செல்வத்தலைவன் {குபேரன்} அங்கு வந்தானா? ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, இவை அனைத்தையும், நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். நிச்சயமாக நான் அவர்களது {பாண்டவர்களின்} செயல்களைக் கேட்டு இன்னும் முழுமையாகத் திருப்தியடையவில்லை."
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "அந்த ஒப்பற்ற சக்தி கொண்டவரிடம் {ஆர்ஷ்டிஷேணரிடம்}, தங்கள் நன்மைக்கான அறிவுரைகளைக் கேட்ட அந்தப் பாரதர்களில் சிறந்தவர்கள் {பாண்டவர்கள்}, அதன் படியே நடக்கத் தொடங்கினார்கள். மனிதர்களில் சிறந்த அந்தப் பாண்டவர்கள், முனிவர்கள் உண்ணும் உணவையும், சுவை மிக்கக் கனிகளையும், நஞ்சில்லா கணைகளால் கொல்லப்பட்ட மான் இறைச்சியையும், பல வகைப்பட்ட சுத்தமான தேனையும் {மது என்று வேறு பதிப்பில் இருக்கிறது} உண்டு இமயத்தில் வசித்தார்கள். லோமசரிடம் பல கதைகளைக் கேட்டபடி இப்படியே வாழ்ந்து, தங்களது ஐந்தாவது வருடத்தைக் கடத்தினார்கள். ஓ! தலைவா {ஜனமேஜயா}, கடோத்கசன் "தேவையேற்படும் போது நான் இங்கு இருப்பேன்" என்று சொல்லி, அனைத்து ராட்சசர்களுடன் முன்பே சென்றுவிட்டான். பல அற்புதங்களைக் கண்டபடியே அந்தச் சிறப்புமிக்கவர்கள் {பாண்டவர்கள்} பல மாதங்களை ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தில் கழித்தனர். அங்கே பாண்டவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளம் நிறைவு பெற்று, கடும் நோன்புகள் நோற்கும் முனிவர்களும், பெரும் நற்பேறு பெற்ற சாரணர்களும், பரிசுத்தமான ஆன்மா கொண்டவர்களும் அவர்களைக் {பாண்டவர்களைக்} காண வந்தனர். அந்தப் பாரதர்களில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்} அவர்களுடன் உலகம் சார்ந்த பல தலைப்புகளைப் {கதைகளைப்} பேசினார்கள்.
இப்படியே பல நாள் கடந்ததும் ஒரு நாள், ஒரு சுபர்ணம் {கருடன்}, அங்கிருந்த பெரும் தடாகத்தில் இருந்து, ஒரு பலம் வாய்ந்த நாகத்தைத் தூக்கிச் செல்வதை அவர்கள் {பாண்டவர்கள்} காண நேர்ந்தது. அதன் காரணமாக, பெரும் மரங்கள் உடைந்தன. அம்மரங்களைத் தாங்கிக் கொண்டிருந்த அந்தப் பெரும் மலை நடுங்கத்தொடங்கியது. அந்த அற்புதத்தை அனைத்து உயிர்களும் பாண்டவர்களும் கண்டனர். அந்தப் பெரும் மலையின் உச்சியில் இருந்து வீசிய காற்று, பாண்டவர்களுக்கு முன்னிலையில் பலவித நறுமணம் கொண்ட அழகான மலர்களை அடித்துக் கொண்டு வந்து சேர்ந்தது. நண்பர்களோடு கூடிய பாண்டவர்களும், சிறப்புமிக்கக் கிருஷ்ணையும் {திரௌபதியும்} ஐந்து நிறம் {பஞ்சவர்ணம்} கொண்ட தெய்வீக மலர்களைக் கண்டனர்.
அந்த மலையில் சுகமாக வீற்றிருந்து பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமனிடம் கிருஷ்ணை {திரௌபதி}, "ஓ! பாரதக் குலத்தின் சிறந்தவரே, சுபர்ணம் {கருடன்} எழுப்பிய காற்றினால், ஐந்து நிறம் கொண்ட இந்த மலர்கள் {பஞ்சவர்ண மலர்கள்}, அனைத்து உயிர்களுக்கும் முன்னிலையில் மிக வேகமாக அஸ்வரத நதியில் விழுகின்றன. சத்தியத்தில் உறுதி கொண்ட உமது தம்பியால் {அர்ஜுனரால்}, கந்தர்வர்களும், நாகர்களும், ஏன் வாசவனும் {இந்திரனும்} கூடக் காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} கலங்கடிக்கப்பட்டார்கள். கடுமை நிறைந்த ராட்சசர்கள் கொல்லப்பட்டார்கள். காண்டீவ வில்லையும் அவர் {அர்ஜுனர்} பெற்றார். பராக்கிரமத்திலும், கரங்களின் பலத்திலும் வெல்லப்பட முடியாதவராக, தாங்க முடியாதவராக, சக்ரனின் {இந்திரனின்} பலத்திற்கு ஒப்பாகவே நீரும் இருக்கிறீர். ஓ! பீமசேனரே, உமது கரங்களின் சக்தியைக் கண்ட அனைத்து ராட்சசர்களும் பயந்து போய், இந்த மலையை விட்டுவிட்டு பத்து திக்குகளையும் அடையட்டும். அப்போது பயம் மற்றும் துயரத்தில் இருந்து உமது நண்பர்கள் விடுவிக்கப்பட்டு, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த மங்களகரமான சிகரம் கொண்ட அற்புத மலையைக் காண்பார்கள். ஓ! பீமரே, உமது கரங்களின் பலத்தால் காக்கப்பட்டு, இந்தச் சிகரத்தைக் காணவேண்டும் என்ற எண்ணத்தை நான் நீண்ட நாளாக எனது மனதில் பேணிக்காத்து வருகிறேன்" என்றாள் {திரௌபதி}.
இதனால், நல்ல எழுச்சி கொண்ட காளை அடிக்கப்பட்டது போல அடிக்கப்பட்ட பீமசேனன், திரௌபதி தன்னை அவமதிப்பதாகக் கருதினான். அதை அவனால் பொறுக்கமுடியவில்லை. சிங்கம் அல்லது காளையைப் போன்ற நடையும், அருளும், தயாளமும், தங்கத்தைப் போன்ற பிரகாசமும், புத்திகூர்மையும், பலமும், கர்வமும், உணர்வும், வீரமும், சிவந்த கண்களும், அகன்ற தோள்களும், சிங்கப்பற்களும், அகன்ற கழுத்தும், ஆச்சா {சால} மரத்தைப் போன்ற உயரமும், உயர் ஆன்மாவும், அருள் நிறைந்த அனைத்து உறுப்புகளும், சங்கு குறிகள் கொண்ட கழுத்தும், மதயானையின் பலத்தையும் கொடையாகக் கொண்ட அந்தப் பாண்டவன் {பீமன்}, பொன்னால் பின்புறம் அலங்கரிக்கப்பட்ட தனது வில்லையும், வாளையும் எடுத்தான். சிங்கம் போன்ற செருக்குடன், மதயானையைப் போன்ற பலம் வாய்ந்த அவன் {பீமன்}, பயமோ துயரமோ இல்லாமல் அச்சிகரத்தை நோக்கி விரைந்தான். விற்களுடனும், கணைகளுடனும் சிங்கம் போன்றோ அல்லது மதங்கொண்ட யானை போன்றோ செல்லும் அவனை அனைத்து உயிரினங்களும் கண்டன.
பயமோ துயரமோ அற்ற அந்தப் பாண்டவன் {பீமன்}, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, திரௌபதி மகிழும் வகையில், அந்த மலைகளின் ஏகாதிபதியை {கந்தமாதன மலையை} நோக்கி முன்னேறினான். பிருதை {குந்தி} மற்றும் வாயுத்தேவன் மகனுக்கு {பீமனுக்கு} வாட்டமோ, பயமோ, ஊக்கமின்மையோ, (பிறரைக் கண்டு} விரோத மனப்பான்மையோ ஏற்படவில்லை. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய கரடுமுரடான பாதையில் சென்ற அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, பல பனைமரங்களின் {ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் பனைகளின்} உயரம் இருக்கும் அந்தக் கடுமை நிறைந்த சிகரத்தில் ஏறினான். அச்சிகரத்தில் ஏறி, கின்னரர்களையும், பெரும் நாகர்களையும், முனிவர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும் மகிழ்வித்த பாரதக் குலத்தில் வந்த முதன்மையானவன் {பீமன்}, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தைப் பார்த்தான். சிகரத்தைவிட உயர்ந்த நந்தவனங்கள் சூழ, கோட்டைமதிற்சுவர், கோபுரங்கள், கதவுகள், வாயில்கள், வரிசையான கொடிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கச் சுவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்த பொன்மயமான பளிங்கு மாளிகைகள் அங்கே இருந்தன. இன்பக்கேளிக்கைகளுடன் ஆடிக்கொண்டிருந்த அருள் நிறைந்த மங்கைகளுடனும், தென்றல் காற்றால் ஆடிக்கொண்டிருந்த முக்கோண வடிவக் கொடிகளுடனும் {குபேரனின்} அவ்வசிப்பிடம் இருந்தது.
வளைந்த கைகளால் வில்லின் நுனியைப் பிடித்திருந்த பீமன், ஆவலுடன் கருவூலத் தலைவனின் {குபேரனின்} நகரத்தைக் கண்டான். அனைத்து உயிரினங்களும் மகிழும் வகையில் அங்கே நறுமணத்தைச் சுமந்து கொண்டு வீசிய தென்றல், அவனுக்குக் குணமளிக்கும் உணர்ச்சியைக் கொடுத்தது. அங்கே பல நிறங்களில் அழகான அற்புதமான மரங்களில், பலதரப்பட்ட இனிய ஒலிகள் நிரம்பியிருந்தன. அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பாரதர்களில் முதன்மையானவன் {பீமன்}, ரத்தினக்குவியல்கள் சிதறி, பலவண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த ராட்சசத் தலைவனின் {குபேரனின்} அரண்மனையை நோட்டம் விட்டான். உயிர் மீது கொண்ட கவனத்தைக் கைவிட்ட பெரும் பலம்வாய்ந்த கரம் கொண்ட பீமசேனன், தனது கதாயுதம், வாள், வில் ஆகியவற்றைக் கைகளில் தாங்கியவாறு பாறை போல அசைவற்று நின்றான் {பீமன்}.
பிறகு பகைவர்களின் மயிர் சிலிர்க்கும் வண்ணம் தனது சங்கை எடுத்து ஊதினான்; தனது வில்லைச் சுண்டி நாணொலி எழுப்பினான்; தனது கைகளைத் தட்டி அனைத்து உயிர்களையும் துணிவிழக்கச் செய்தான். மயிர் சிலிர்த்த யக்ஷர்களும், ராட்சசர்களும் ஒலி வந்த திக்கில் இருந்த பாண்டவனை {பீமனை} நோக்கி விரைந்தனர். கதாயுதம், தடி, வேல்கம்பு, ஈட்டி, கோடரி ஆகிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு யக்ஷர்களும், ராட்சசர்களும் கோபத்துடன் வந்தனர். ஓ!பாரதா {ஜனமேஜயா}, பீமனுக்கும் ராட்சசர்களுக்கும் இடையில் போர் துவங்கிய போது, மாய சக்தி கொண்ட அவர்களது சூலங்கள், ஈட்டிகள், கோடரிகள் ஆகியவற்றைப் பீமன் தனது அம்புகளால் அறுத்தெறிந்தான். பெரும் பலம் மிக்க அவன் {பீமன்} தனது கணைகளைக் கொண்டு, ஆகாயத்திலும், பூமியிலும் நின்று கர்ஜித்துக் கொண்டிருந்த ராட்சசர்களின் உடலைத் துளைத்தான் {பீமன்}.
அளவிலா பலமிக்கப் பீமன், கதாயுதம், தடி முதலியன கொண்டு எல்லாப்புறங்களிலும் இருந்து வந்த ராட்சசர்களின் உடலில் இருந்த செந்நிற மழை பெய்ய வைத்து, அந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினான். பீமனின் பலமிக்கக் கரங்களில் இருந்த விடுபட்ட ஆயுதங்கள், ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களின் உடல்களையும், கரங்களையும் அடித்தன. பிறகு, மேகங்களால் மூடப்பட்ட சூரியனைப் போல அருள் நிறைந்த பாண்டவன் {பீமன்} அனைத்துப் புறங்களிலும் ராட்சசர்களால் சூழப்பட்டிருப்பதை அனைத்து உயிரினங்களும் கண்டன. சூரியன் தனது கதிர்களால் அனைத்தையும் சூழ்வதைப் போல, அந்தப் பெரும்பலம் மிக்கக் கரம் கொண்டு வீழா பராக்கிரமம் கொண்டவன் {பீமன்}, தனது கணைகளால் எதிரிகளை மூழ்கடித்து அழித்தான்.
அவர்கள் {ராட்சசர்கள்} கர்ஜித்துக் கொண்டு பயமுறுத்தியபடி இருந்தாலும், பீமன் கலங்காதிருப்பதை ராட்சசர்கள் கண்டனர். அவர்களது உடல்கள் சிதைய, யக்ஷர்கள் பயத்தால் பீடிக்கப்பட, பீமசேனன் துன்பம் விளைவிக்கிற வகையில் பயங்கரமான ஒலி எழுப்பினான். பலமான வில்லைத் தாங்கியிருப்பவனை {பீமனைக்} கண்டு பயந்த அவர்கள், தங்கள் கதைகளையும், வேல்கம்புகளையும், வாள்களையும், தடிகளையும், கோடரிகளையும் கைவிட்டுத் தென்திசை நோக்கி ஓடினர். அகன்ற மார்பும், வலுத்த கரமும் கொண்டவனும், வைஸ்ரவணனின் {குபேரனின்} நண்பனுமான மணிமான் என்ற பெயர் கொண்ட ராட்சசன், தனது கைகளில் சூலங்களுடனும், கதாயுதங்களுடனும் அங்கே நின்று கொண்டிருந்தான்.
பெரும்பலம் மிக்க அவன் {மணிமான்}, தனது நிபுணத்துவத்தையும், ஆண்மையையும் வெளிக்காட்டத் தொடங்கினான். போரைக் கைவிட்டு ஓடும் அவர்களிடம் {ராட்சசர்களிடம்} புன்னகையுடன், "வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்திற்குச் சென்று, அந்தச் செல்வத்தலைவனிடம் {குபேரனிடம்}, எண்ணிக்கையில் அதிகமான எங்கள் அனைவரையும், தனித்த ஒரு மனிதன் போரில் வீழ்த்தினான் என்று எப்படிச் சொல்வீர்கள்?" என்று கேட்டான். இதை அவர்களிடம் சொன்ன அந்த ராட்சசன் {மணிமான்}, கைகளில் தடிகளையும், ஈட்டிகளையும், கதாயுதங்களையும் எடுத்துக்கொண்டு அந்தப் பாண்டவனை {பீமனை} நோக்கி விரைந்தான். மதங்கொண்ட யானையைப் போல, அவன் வேகமாக விரைந்து சென்றான். அப்படி வந்தவனை {மணிமானை} பீமசேனன் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கணைகளால் {வத்சதந்தம் என்ற கணை} விலாப்புறத்தில் அடித்தான். அந்தப் பெரும்பலம் வாய்ந்த மணிமானும், தனது பங்கிற்கு, கோபத்துடன், பயங்கரமான கதாயுதத்தைப் பீமசேனன் மீது வீசினான். இதன் பேரில், கற்களில் கூரேற்றப்பட்ட எண்ணிலடங்கா கணைகளால் அந்தக் கதாயுதத்தைப் பீமன் தடுத்தான். அது மின்னல் போன்ற ஒளியை வெளியிட்டது. ஆனால் அந்தக் கதாயுதத்தை அடைந்த கணைகள் அனைத்தும் கலங்கடிக்கபட்டன. பிறகு கடும் பராக்கிரமம் நிறைந்தவனும் பெரும் பலம் வாய்ந்தவனுமான பீமன் {அந்த ராட்சசனால்- மணிமானால்} விடப்பட்ட அந்த ஆயுதத்தைத் தனது கதாயுத நிபுணத்துவத்தால் கலங்கடித்தான்.
அதே சமயம், புத்திகூர்மை கொண்ட அந்த ராட்சசன் {மணிமான்}, தங்கப் பிடி கொண்டு இரும்பினால் செய்யப்பட்ட பயங்கரமான தடியை எடுத்து வீசினான். நெருப்பைக் கக்கிய அத்தடி, பயங்கரச் சத்தமிட்டபடி, திடீரெனப் பீமனின் வலக்கரத்தைத் துளைத்துத் தரையில் விழுந்தது. அத்தடியால் கடும் காயமடைந்த வில்லாளியான, அளவிலா பராக்கிரமம் கொண்ட குந்தியின் மகன் {பீமன்}, கோபத்தில் கண்கள் உருள, தனது கதாயுதத்தை எடுத்தான். எதிரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி அவர்களை வீழ்த்த, பொற்தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த இரும்பு கதையை எடுத்த அவன் {பீமன்}, பெரும்பலமிக்க மணிமானை நோக்கி அச்சுறுத்தும் வகையிலும் பெரும் ஒலியுடனும் பெரும் வேகத்துடனும் வீசினான். மணிமான் தனது பங்கிற்குப் பெரும் உருவமும், சுடர்விட்டுப் பிரகாசிப்பதுமான தனது கைவேலை {வேல்} எடுத்துப் பீமனை நோக்கி பெரும் கூச்சலுடன் தூக்கி எறிந்தான்.
அந்த வேலை, தனது கதையின் முனையால் உடைத்த கதாயுத்த நிபுணனான அந்தப் பெரும் பலம்வாய்ந்தவன் {பீமன்}, கருடன் நாகத்தைக் கொல்ல விரைவது போல, அவனைக் {மணிமானைக்} கொல்ல விரைந்தான். பிறகு திடீரெனக் களத்தின் முன்னணிக்கு வந்த அந்தப் பலமிக்கக் கரம்வாய்ந்தவன் {பீமன்} வானத்தில் எழும்பி தனது கதையைச் சுழற்றி பெரும் கர்ஜனையுடன் வீசி எறிந்தான். இந்திரனால் ஏவப்பட்ட வஜ்ரம் போல, தீமை விளைவிக்கும் அந்தக் கதாயுதம், காற்றின் வேகத்தோடு சென்று அந்த ராட்சசனை {மணிமானை} அழித்துவிட்டுத் தரையில் விழுந்தது. காளை சிங்கத்தால் கொல்லப்படுவதைப் போல, பயங்கரமான பலம் கொண்ட ராட்சசன் {மணிமான்} பீமனால் கொல்லப்படுவதை அனைத்து உயிரினங்களும் கண்டன. அவன் {மணிமான்} கொல்லப்பட்டுத் தரையில் வீழ்த்தப்பட்டதைக் கண்டு, உயிருடன் இருந்த பிற ராட்சசர்கள் துயரத்தால் பயங்கரமான ஓலமெழுப்பியபடி கிழக்கு நோக்கி ஓடினர்.