Kubera vanished! | Vana Parva - Section 161 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனுக்குச் சில உபதேசங்களைச் செய்த குபேரன், அர்ஜுனனின் நலத்தைச் சொல்லி அங்கிருந்து மறைவது...
பொக்கிஷத்தலைவன் {குபேரன்} சொன்னான், "ஓ! யுதிஷ்டிரா, பொறுமை, திறன் (சரியான) நேரம், இடம் மற்றும் பராக்கிரமம் ஆகிய ஐந்தும் காரியங்களில் வெற்றியை நோக்கி மனிதனை இட்டுச் செல்கின்றன. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கிருத யுகத்தில், மனிதர்கள் பொறுமையாகவும், தங்களுக்கு உரிய பணிகளில் திறன்வாய்ந்தும் தங்கள்கள் பராக்கிரமத்தைக் காட்டுவது எவ்வாறு என்பதை அறிந்துமிருந்தனர். ஓ!க்ஷத்திரியர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, பொறுமையோடிருந்து தனக்கான இடம், மற்றும் நேரத்தை புரிந்து கொண்டு, மனித தர்மங்களை நன்கு அறிந்த ஒரு க்ஷத்திரியன், நீண்ட காலம் இந்த உலகத்தைத் தனியாக ஆளுகிறான். ஓ! வீரா, இதன் படி நடந்து கொள்பவன் இந்த உலகத்தில் புகழையும், அடுத்த உலகத்தில் அற்புத நிலையையும் அடைகிறான்.
தனது பராக்கிரமத்தை உரிய இடத்தில் காலத்தில் வெளிப்படுத்திய வசுக்களோடு கூடிய சக்ரன் {இந்திரன்}, சொர்க்கத்தின் ஆளுமையை அடைந்தான். கோபத்திலிருப்பவனுக்குத் தனது வீழ்ச்சி தெரியாது. இயற்கையிலேயே தீயவனும், தீய எண்ணம் கொண்டவனும், இடம் நேரம் அறியாது செயல் புரிபவனும், இவ்வுலகம் மற்றும் அடுத்த உலகம் ஆகிய இரண்டிலும் அழிவைச் சந்திக்கிறார்கள். அப்படிப்பட்ட முட்டாளின் முயற்சிகள் அனைத்தும் கனியற்றதாகும். விரும்பத்தகுந்த நேரம் மற்றும் செயல்களை அறியாதவன் இவ்வுலகம் மற்றும் அடுத்த உலகம் ஆகிய இரண்டிலும் அழிவைச் சந்திக்கிறான். தீய நோக்கம் கொண்ட ஏமாற்றுகர மனிதர்கள் அனைத்து வகையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று எண்ணி முரட்டுச் செயல்களைச் செய்வார்கள்.
ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பீமசேனன் அச்சமற்றவனாகவும், கடமைகளை அறியாதவனாகவும், செருக்குடையவனாகவும், குழந்தையின் மனம் கொண்டவனாகவும், பொறுமையற்றவனாகவும் இருக்கிறான். ஆகையால் அவனைக் குறித்து ஆய்வு செய். மீண்டும் பக்திமானான முனிவர் ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்திற்கு இந்தத் தேய்பிறைகாலத்தில் திரும்பி பயமோ துயரமோ அற்று இரு. ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, என்னால் நியமிக்கப்பட்டு அழகையிலும் {அழகாபுரியில்} வசிக்கும் அனைத்து கந்தர்வர்களும் மற்றும் இந்த மலையில் வசிப்பவர்களும், ஓ! பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, உன்னையும், இந்த அந்தணர்களில் சிறந்தவர்களையும் காப்பார்கள். மேலும், ஓ! மன்னா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, தனது முரட்டுத் தனத்தால் விருகோதரன் இங்கு வந்தான் என்பதை அறிந்தாய், ஆகையால் அவனை ஆய்வு செய். ஓ! ஏகாதிபதி, இது முதல், இந்தக் கானகத்தில வசிக்கும் அனைத்து உயிர்களும் உன்னை வந்து சந்தித்து, உனக்காகக் காத்திருந்து, எப்போதும் உங்கள் அனைவரையும் காப்பாற்றும்.
மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, எனது பணியாட்கள் எப்போதும் உனக்குப் பலதரப்பட்ட இறைச்சிகளையும், சுவைமிக்கப் பானங்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். ஓ! மகனே, யுதிஷ்டிரா, தெய்வீகக் கூடுகையால் பெறப்பட்ட அர்ஜுனன் மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, விருகோதரன் வாயுத்தேவனுக்கும், நீ தர்மனும், பலம் கொண்ட இரட்டையர்கள் அசுவினிகளுக்கும் எப்படிப் பாதுகாக்கப்படத் தகுந்தவர்களோ, அதே போலவே எனக்கும் நீங்கள் அனைவரும் ஆவீர்கள். பிறப்பால் பீமசேனனுக்கு அடுத்தவனான, பொருள் அறிவியலும், அனைத்து மனித விதிகளையும் அறிந்தவனுமான பல்குனன் {அர்ஜுனன்} சொர்க்கத்தில் நன்றாக இருக்கிறான். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லக்கூடியவை என்று உலகத்தில் அறியப்பட்ட அனைத்து நிறைகுணங்களும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} அவனது பிறப்பில் இருந்து நிறுவப்பட்டிருக்கின்றன.
தன்னடக்கம், தானம், பலம், புத்திக்கூர்மை, அடக்கம், தாங்கும் திறன், அற்புதமான சக்தி ஆகிய அனைத்தும் அந்த அற்புத ஆன்மாகக் கொண்ட மகத்தானவனிடம் {அர்ஜுனனிடம்} நிறுவப்பட்டுள்ளன. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, ஆவியின் வறுமையால் {Poverty of Spirit}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} எந்த வெட்கங்கெட்ட செயலையும் செய்ததில்லை. பார்த்தன் {அர்ஜுனன்} ஒரு பொய் சொன்னான் என்று இந்த உலகத்தில் யாரும் சொன்னதில்லை. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களாலும், பித்ருக்களாலும், கந்தர்வர்களாலும் மதிக்கப்பட்டுச் சக்ரனின் வசிப்பிடத்தில் ஆயுத அறிவியலைப் பயின்று கொண்டிருக்கிறான் குருக்களின் புகழைத் தூண்டுபவன் {அர்ஜுனன்}.
ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, பூலோகத்தின் அனைத்து ஆட்சியாளர்களையும் நீதியுடன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உனது தகப்பனின் பாட்டனான சந்தனுவையும் தனது செயலைக் குறித்துத் திருப்தி கொள்ள வைத்தான் தனது குலத்தில் முதன்மையானவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}. ஓ! மன்னா, யமுனையின் கரையில் தேவர்களையும், பித்ருக்களையும், அந்தணர்களையும் வழிபட்டு, ஏழு பெரும் குதிரை வேள்விகளைச் செய்து சொர்க்கத்தை அடைந்து, இந்திரனின் உலகத்தில் வசித்து வரும் உனது முப்பாட்டனும் கடும் தவசியுமான சக்கரவர்த்திச் சந்தனு, உனது நலம் குறித்து விசாரித்தான்" என்றான் {குபேரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "செல்வத்தைப் பகிர்ந்தளிப்பவனின் {குபேரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் அவனிடம் மிகவும் திருப்தி கொண்டனர். பிறகு தனது தடி, கதாயுதம், வாள், வில் ஆகியவற்றை இறக்கிய பாரதர்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்} குபேரனை வணங்கினான். பாதுகாப்பை அளிப்பவனான கருவூலத்தலைவன், நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவனைக் {யுதிஷ்டிரனைக்} கண்டு, "எதிரிகளின் கர்வத்தை அழிப்பவனாகவும், நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனாகவும் இரு. எதிரிகளை ஒடுக்குபவனே, எங்கள் அழகிய பகுதியில் வாழு. உனது விருப்பங்களுக்கு யக்ஷர்கள் குறுக்கே நிற்க மாட்டார்கள். குடகேசன் {அர்ஜுனன்}, ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்த பிறகு விரைவில் திரும்பி வருவான். மகவத்தால் {இந்திரனால்} விடை கொடுத்து அனுப்பப்படும் தனஞ்சயன் உன்னிடம் வந்து சேர்வான்" என்றான் {குபேரன்}.
அற்புதச் செயல்கள் செய்யும் யுதிஷ்டிரனிடம் இப்படிச் சொன்ன குஹ்யர்களின் தலைவன் {குபேரன்}, அந்த மலைகளில் சிறந்த மலையில் மறைந்தான். ஆயிரம் ஆயிரம் யக்ஷர்களும், ராட்சசர்கள் பஞ்சணைகள் கொண்ட, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அவனைத் தொடர்ந்து சென்றனர். குதிரைகள் குபேரனின் வசிப்பிடத்தை நோக்கி முன்னேறிய போது, பறவைகள் காற்றில் பறக்கும் ஒலி எழும்பியது. கருவூலங்களின் தலைவனது {குபேரனின்} சாரதிகள் வானத்தை இழுப்பது போல, காற்றில் பறந்து சென்றனர்.
பிறகு செல்வத்தலைவனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், ராட்சசர்களின் சடலங்கள் அந்த மலைச்சிகரத்தில் இருந்த அப்புறப்படுத்தப்பட்டன. புத்திகூர்மை கொண்ட அகஸ்தியர் சாபத்தின் காலத்தை நிர்ணயித்தது போல, மோதலில் கொல்லப்பட்ட ராட்சசர்கள் சாபத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். பாண்டவர்கள் ராட்சசர்களால் மதிக்கப்பட்டுப் பல இரவுகளை அந்த வசிப்பிடத்தில இனிமையாகக் கழித்தனர்.