The mail of Indra! | Vana Parva - Section 173 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
இந்திரனிடம் பெற்ற மாலை, சங்கு, கவசம், கிரீடம் ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது; யுதிஷ்டிரன் அந்தத் தெய்வீக ஆயுதங்களைப் பார்க்க விரும்பியது; அர்ஜுனன் நாளை காட்டுவதாகச் சொன்னது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "உடலைப் பிளக்கும் கணைகளால் காயப்பட்டிருந்த என்னை, தன்னைப் போலவே நினைத்த தேவர்களின் ஆட்சியாளன் {இந்திரன்}, என்னிடம் மிகவும் உறுதியுடன், "ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து தெய்வீக ஆயுதங்களும் உன்னிடம் இருக்கின்றன. பூமியில் இருக்கும் எந்த மனிதனும் உன்னைப் பலத்தில் விஞ்ச முடியாது. ஓ! மகனே {அர்ஜுனனே}, நீ களத்தில் இருக்கும்போது, பல க்ஷத்திரியர்களுடன் கூடிய பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சகுனி ஆகிய அனைவரும் சேர்ந்தும் கூட உன்னில் பதினாறில் {1/16} ஒரு பங்குக்குக் கூட ஆக மாட்டார்கள்" என்றான் {இந்திரன்}.
பிறகு, இந்தப் பொன்மாலையையும், பெரும் ஒலியெழுப்பும் தேவதத்தம் என்ற இந்தச் சங்கையும், துளைக்க முடியாதபடி உடலைப் பாதுகாக்கும் தனது தெய்வீக கவசத்தையும் அந்தத் தலைவனான மகவான் {இந்திரன்} எனக்குக் கொடுத்தான். இந்திரன் தானே (எனது தலையில்) இந்தக் கிரீடத்தைப் பொருத்தினான். அழகான, அரிதான புவிசாரா ஆடை ஆபரணங்களையும் எனக்குச் சக்ரன் {இந்திரன்} கொடுத்தான். இம்முறையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களுடன் சேர்ந்த சக்ரன் {இந்திரன்} என்னிடம், "ஓ! அர்ஜுனா, நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; உனது சகோதரர்கள் உன்னை நினைக்கிறார்கள்" என்றான். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, சூதாட்டத்தின் காரணமாக எழும் கோபத்தை நினைத்தவாறே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அந்த ஐந்து வருடங்களையும் இந்திரனின் வசிப்பிடத்தில் இப்படியே கழித்தேன். பிறகு அங்கிருந்து வந்து, சகோதரர்கள் சூழ இருந்த உம்மைக் கந்தமாதனத்தின் தாழ்ந்த பகுதிகளில் இருக்கும் சிகரத்தில் கண்டேன்" {என்றான் அர்ஜுனன்}.
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ ஆயுதங்களை அடைந்தாய்; நற்பேறின் நிமித்தமாகவே தேவர்களின் தலைவன் {இந்திரன்} உன்னை வணங்கினான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே தேவியுடன் கூடிய ஸ்தாணு {உமையுடன் கூடிய சிவன்}, ஓ! பாவமற்றவனே உனக்குத் தங்களை வெளிப்படுத்தி, போரில் உன்னால் திருப்தியடைந்தான்; ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ லோகபாலர்களைச் சந்தித்தாய்; ஓ! பார்த்தா, நற்பேறின் நிமித்தமாகவே நாம் வளமையடைந்தோம்; நற்பேறின் நிமித்தமாகவே நீ திரும்பி வந்தாய். நகரங்களை மாலையாக அணிந்த முழு உலகமும் வெல்லப்பட்டதாகவும், திருதராஷ்டிரன் மகன்கள் ஏற்கனவே அடக்கப்பட்டதாகவும் நான் இன்று கருதுகிறேன். இப்போது, ஓ! பாரதா {அர்ஜுனா}, பலமிக்க நிவாதகவசர்களை நீ எதன் உதவியால் கொன்றாயோ அந்தத் தெய்வீக ஆயுதங்களைக் காண ஆவலாக இருக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்கு அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "கடும் நிவாதகவசர்களை எதை வைத்துக் கொன்றேனோ அந்தத் தெய்வீக ஆயுதங்களை நாளை காலையில் நீர் காணலாம்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படித் தனது வருகையைக் குறித்து (உண்மையைத்) தெரிவித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் ஒன்றாக அன்று இரவைக் கடத்தினான்.