Hiranyapura! | Vana Parva - Section 172 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனன் இந்திரலோகம் திரும்புகையில் ஹிரண்யபுரத்தைப் பார்த்தல்; அந்நகரத்தில் வசித்து வந்த பௌலோமர்களையும் காலகேயர்களையும் கொன்ற பிறகு இந்திரலோகம் திரும்புதல்...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அப்படித் திரும்புகையில், சுதந்திரமாக நினைத்தவண்ணம் நகரும் தன்மை கொண்டதும், பூமிக்குச் சம்பந்தமில்லாததும், நெருப்பைப் போன்றும், சூரியனைப் போன்றும் பிரகாசிப்பதுமான பலம்வாய்ந்த ஒரு நகரத்தை {அந்தரத்தில் மிதக்கும் நகரம்} நான் கண்டேன். அந்நகரத்தில் ரத்தினங்கள் நிறைந்த பல்வேறு மரங்களும், இனிய குரல் படைத்த இறகுகள் கொண்டவைகளும் {பறவைகளும்} நிறைந்திருந்தன. நான்கு வாயில்களும், பல வாயில் வழிகளும், கோபுரங்களும் இருந்த தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்த நகரத்தில் பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசித்தனர். அது அனைத்து விதமான ரத்தினங்கள் நிறைந்து, புவிசாரா அற்புத தோற்றத்தைக் கொண்டிருந்தது. கனிகளும், மலர்களும் தாங்கியிருந்த மரங்கள் அனைத்து விதமான ரத்தினங்களுடன் அந்நகரில் நிறைந்திருந்தன. அங்கே பூமிக்கு சம்பந்தமில்லாத மிக அழகான பறவைகள் இருந்தன. மாலைகள் அணிந்து, கைகளில் சூலங்கள், இருமுனை கொண்ட வாட்கள், கதாயுதங்கள், தடிகள், விற்கள் ஆகியவற்றைச் சுமந்தபடி அசுரர்கள் கும்பலாக மகிழ்ச்சியுடன் அங்கே இருந்தனர்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தைத்தியர்களின் அந்த அற்புதமான நகரத்தைக் கண்ட நான், மாதலியிடம் {இந்திரனின் தேரோட்டியிடம்}, "அற்புதமாகக் காட்சியளிக்கிறதே அது என்ன?" என்று கேட்டேன். அதற்கு மாதலி, "ஒரு காலத்தில் ஒரு தைத்தியனின் மகளான பௌலோமாவும், அசுர வகையில் வந்த பலமிக்கப் பெண்ணான காலகாவும் ஆயிரம் தேவ வருடங்களுக்குக் கடும் தவமிருந்தனர். அவர்களது தவத்தின் முடிவில், சுயம்பு {பிரம்மன்} அவர்களுக்கு வரங்களை அளித்தான். ஓ! மன்னர்களின் மன்னா {அர்ஜுனா}, என்றும் அவர்களது வாரிசுகளைத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} அடையாதிருக்கவும், தேவர்களாலோ, ராட்சசர்களாலோ, பன்னகர்களாலோ தங்கள் வாரிசுகளை அழிக்க முடியாதபடி இருக்கவும், அனைத்து வகை ரத்தினங்களும் நிறைந்த மிகப்பிரகாசமானதும், மிக அழகானதும், தேவர்களாலோ, பெரும் முனிவர்களாலோ, யக்ஷர்களாலோ, கந்தர்வர்களாலோ, பன்னகர்களாலோ, அசுரர்களாலோ, ராட்சசர்களாலோ வெல்ல முடியாததுமான வான்நகரம் ஒன்றையும் {பௌலோமாவும் காலகாவும்} வரமாகப் பெற்றனர். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நகர்ந்து கொண்டே இருக்கும், தேவர்களற்ற அந்தப்புவிசாரா வான்நகரம் காலகேயர்களுக்காகப் பிரம்மனே உருவாக்கியதாகும்.
விரும்பப்படும் அனைத்து பொருட்களும் நிறைந்த இந்நகரத்தில் துன்பமோ நோயோ அறியப்பட்டதில்லை. ஓ! வீரா {அர்ஜுனா}, ஹிரண்யபுரம் எனக் கொண்டாடப்படும் இந்தப் பலமிக்க நகரத்தில் பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசிக்கிறார்கள். இந்நகர் அந்த அசுரர்களாலேயே காக்கப்படுகிறது. ஓ! மன்னா {அர்ஜுனா}, எந்தத் தேவனாலும் கொல்லப்பட முடியாமல் இருப்பதால், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, அவர்கள் தங்கள் அனைத்து விருப்பங்களும் ஈடேறி, துயரைக் காணாமல் இன்பமாக இங்கு வசிக்கிறார்கள். மனிதனின் கைகளில் தான் இவர்களுக்கு அழிவு என்பதைப் பிரம்மன் முன்பே தீர்மானித்துவிட்டான். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ வஜ்ராயுதத்தை ஏவி இந்தப் பலமிக்க ஒடுக்கப்பட முடியாத காலகஞ்சர்களை அழிப்பாயாக" என்றான் {மாதலி}.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களாலோ அசுரர்களாலோ அவர்களுக்கு அழிவில்லை என்பதைக் கேள்விப்பட்ட நான் மகிழ்ச்சியாக மாதலியிடம், "அந்நகரத்தை நோக்கி விரைவாகச் செல். தேவர்கள் தலைவனை {இந்திரனை} வெறுக்கும் அவர்களை நான் என் ஆயுதங்களைக் கொண்டு தாக்குவேன். தேவ வெறுப்புக் கொண்ட தீயவர்களில் என்னால் கொல்லப்பட முடியாதவர்கள் யாருமில்லை என்பது நிச்சயம்" என்றேன். அதன் பேரில் மாதலி, குதிரைகள் பூட்டிய அந்தத் தெய்வீகத் தேரில் என்னை ஹிரண்யபுரத்தின் அருகே அழைத்துச் சென்றான். என்னைக் கண்ட அந்தத் திதியின் மகன்கள் {அசுரர்கள்} பல்வேறு ஆடை ஆபரணங்களையும் அணிந்து, கவசம் பூண்டு என்னை நோக்கி விரைவாகப் பறந்து வந்தனர். பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தத் தானவர்களில் முதன்மையானவர்கள், என் மீது கோபம் கொண்டு கணைகளாலும், பல்லங்களாலும், கதாயுதங்களாலும், இருமுனை வாள்களாலும், தோமாரங்களாலும் என்னைத் தாக்கினர்.
அதன்பேரில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் வலிமையின் துணை கொண்டு சரமாரியாக வந்த அந்த ஆயுதங்களை எனது கணை மழையால் தடுத்து எனது தேரில் அங்குமிங்கும் நின்று அவர்களைக் குழப்பி அதிசயிக்க வைத்தேன். இப்படிக் கலங்கிப் போன தானவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளத் தொடங்கினர். குழம்பிப் போன அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதினர். நான் எனது சுடர்விட்டெரியும் கணைகளால் அவர்களது தலைகளை நூற்றுக்கணக்கில் அறுத்துப் போட்டேன். என்னால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்தத் திதியின் வாரிசுகள், (தங்கள்) நகரக்குள் {ஹிரண்யபுரத்திற்குள்} தஞ்சம் புகுந்து, தானவர்களுக்குத் தர்மமான மாயையைப் பயன்படுத்தி அதனுடன் {நகரத்துடன்} சேர்ந்து ஆகாயத்தில் பறந்தனர். அதன்பேரில், ஓ! குருக்களின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்தத் தைத்தியர்களின் வழிகளை அடைத்துக் கொண்டு, பலமிக்கக் கணைகளை அடித்து அவர்களது வழியைத் தடுத்தேன். பிறகு வரத்தின் அருளால் அந்தத் தைத்தியர்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் எங்கும் விருப்பப்படி செல்லவல்ல அந்தப் புவிசாரா வான் நகரத்தில் தங்களைத் நிலைபடுத்திக் கொண்டனர். ஒரு சமயம் (அந்நகரம்) பூமியை அடைந்தது, ஒரு சமயம் மேலெழுந்தது; ஒரு சமயம் குறுக்காகச் சென்றது, ஒரு சமயம் நீருக்குள் மூழ்கியது.
ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, இதனால் நான், அமராவதியை ஒத்திருக்கும், விருப்பப்படி செல்லும் அந்தப் பெரும்பலம் வாய்ந்த நகரத்தைக் கடுமையாகத் தாக்கினேன். ஓ! பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, திதியின் மகன்கள் {அசுரர்கள்} இருந்த அந்நகரத்தை {ஹிரண்யபுரத்தைக்} குவியலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு தாக்கினேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நேராகச் செல்லும், நான் அடித்த இரும்புக் கணைகளால் அடிக்கப்பட்ட அந்த அசுர நகரம் {ஹிரண்யபுரம்} உடைந்து பூமியில் விழுந்தது. இடியைப் போன்ற வேகம் கொண்ட எனது இரும்பு அம்புகளால் அடிக்கப்பட்டுக் காயமடைந்த அவர்கள், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, விதியால் உந்தப்பட்டு விரைந்தனர். பிறகு வானத்துக்கு உயர்ந்த மாதலி, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தத் தேருடன் முன் வந்து விழுவது போல வேகமாகப் பூமியில் இறங்கினான். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, என்னுடன் போரிடும் ஆவலில் இருந்த கோபம் கொண்டவர்களின் {அசுரர்களின்} அறுபதாயிரம் {60,000} தேர்கள் என்னைச் சூழ்ந்து நின்றன. கழுகின் இறகுகள் கொண்ட கூரிய கணைகளைக் கொண்டு நான் அவற்றை (தேர்களை) அழித்தேன்.
இதைக் கண்டு, "மனிதர்களால் நமது படையை அழிக்க முடியாது" என்று எண்ணிய அவர்கள் கடல் அலைகளைப் போல மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். அதன் பேரில் நான் தொடர்ச்சியாக (நாணில்) தெய்வீக ஆயுதங்களையே பொருத்தினேன். அற்புதமாகப் போரிடும் அந்த ரதவீரர்களின் ஆயிரக்கணக்கான கணைகள் எனது தெய்வீக ஆயுதங்களை எதிர்த்தன. அக்களத்தில் நான் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்கள் (அசுரர்கள்), விதவிதமான சூழ்ச்சிகள் செய்து தங்கள் தேர்களில் உலாவுவதைக் கண்டேன். பல வண்ண கவசங்களுடனும், கொடிக்கம்பங்களுடனும், வித்தியாசமான ஆபரணங்களுடனும் அவர்கள் என் மனதை மகிழ்வித்தனர். அந்த மோதலில் அவர்களை கணை மழை கொண்டு என்னால் துன்புறுத்த முடியவில்லை. அவர்களாலும் என்னைத் துன்புறுத்த முடியவில்லை. போரில் வல்லவர்களான ஆயுதம் தாங்கிய அந்த எண்ணிலடங்காதவர்களால் தாக்கப்பட்ட நான், அந்தப் பெரும் மோதலில் வலியை உணர்ந்தேன். பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது.
அதன்பேரில் மோதுவதற்கு (எனது சக்திகளைச்) சேகரித்த நான், தேவாதி தேவனான ரௌத்திரனிடம் {சிவனிடம் வணங்கி}, "அனைத்து உயிர்களுக்கும் நன்மையுண்டாகட்டும்" என்று சொல்லி, ரௌத்திரம் {பாசுபதம்} என்ற பெயரால் கொண்டாடப்படும் அனைத்து எதிரிகளையும் அழிக்கும் அந்தப் பெரும் பலமிக்க ஆயுதத்தைப் பொருத்தினேன். பிறகு, மூன்று தலைகளும், ஒன்பது கண்களும், மூன்று முகங்களும், ஆறு கரங்களும் கொண்ட ஒரு ஆண்மகனை நான் கண்டேன். அவனது கேசம் எரியும் நெருப்பைப் போலவும், சூரியனைப் போலவும் பிரகாசித்தது. ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, நாக்குகளை நீட்டிக் கொண்டிருக்கும் பெரும் பலம் மிக்கப் பாம்புகளைத் தனது ஆடையாக அவன் கொண்டிருந்தான். ஓ! பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, பயத்திலிருந்து விடுபட்ட நான், அந்தப் பயங்கரமான நித்தியமான ரௌத்திரத்தை {பாசுபதத்தைப்} காண்டீவத்தில் பொருத்தி, அளவிலா சக்தி கொண்ட முக்கண் சர்வனை {சிவனை} வணங்கி, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களை அழிக்கும் நோக்கோடு (அவ்வாயுதத்தை) விடுத்தேன்.
ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, அது {பாசுபத ஆயுதம்} அவ்வாறு ஏவப்பட்டதும், அதிலிருந்து, ஆயிரக்கணக்கான மான் உருவங்களும், சிம்மங்களும், புலிகளும், கரடிகளும், எருமைகளும், பாம்புகளும், பசுக்களும், சரபங்களும், யானைகளும், எண்ணிலடங்கா குரங்குகளும், காளைகளும், பன்றிகளும், பூனைகளும், நாய்களும், பேய்பிசாசுகளும், புருண்டங்களும், கழுகுகளும், கருடர்களும், சாமரங்களும், சிறுத்தைகளும், மலைகளும், கடல்களும், தேவர்களும், முனிவர்களும், அனைத்து கந்தர்வர்களும், யக்ஷர்களுடன் கூடிய ஆவிகளும், தேவர்களை வெறுப்பவர்களும் (அசுரர்களும்), குஹ்யர்களும், நைரிதர்களும், யானை வாய் கொண்ட சுறாக்களும், ஆந்தைகளும், மீன்கள், குதிரைகள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்களும், வாள்கள் மற்றும் பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய உயிரினங்களும், கதைகள் மற்றும் தண்டங்கள் ஏந்திய ராட்சர்களும் தோன்றினர்.
அவ்வாயுதம் {பாசுபதம்} ஏவப்பட்டதும் இப்படிப்பட்ட பல்வேறு உருவங்கொண்டவர்களால் இந்த அண்டமே நிறைந்தது. மூன்று தலைகள் கொண்ட சிலவும், நான்கு தெற்றுப் பற்கள் கொண்ட சிலவும், நான்கு வாய்கள் கொண்ட சிலவும், நான்கு கரங்கள் கொண்ட சிலவும் எனத் தங்கள் மேனியில் சதைத் துண்டுகளுடனும், கொழுப்புடனும், எலும்புகளுடனும், ஊனீருடனும் இருந்த பூதங்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட தானவர்கள் அழிவைச் சந்தித்தனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, ஒரு நொடியில் நான் அந்தத் தானவர்கள் அனைவரையும், கல்லின் சாறு கொண்டு நெருப்பையும் சூரியனையும் போலச் சுடர்விட்டெரிந்த எனது அம்புக்கூட்டத்தால் கொன்றேன். காண்டீவத்தால் வெட்டப்பட்டு உயிரிழந்து வானத்தில் இருந்து விழுந்த அவர்களைக் கண்டு, நான் மீண்டும் திரிபுரத்தை அழித்த தெய்வத்தை {சிவனை} வணங்கினேன். புவிசாரா ஆபரணங்கள் பூண்டிருந்த அவர்கள் ரௌத்திராயுதத்தால் {பாசுபதத்தால்} நசுக்கப்பட்டதைக் கண்ட தேவர்களின் தேரோட்டி {மாதலி} பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.
தேவர்களான அவர்களாலும் அடைய முடியாத தாங்க முடியாத காரியத்தைச் சாதித்ததைச் சாட்சியாகக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலி, மிகவும் திருப்தி கொண்டு என்னை வணங்கி இரு கரம் கூப்பி, "போர்க்களத்தில் நீ சாதித்த இந்தக் காரியம், பிறந்த எந்தப் பிறவியாலும், தேவர்களாலும் சாதிக்க முடியாது. ஏன் தேவர்கள் தலைவனே {இந்திரனே} இக்காரியத்தைச் சாதிக்க முடியாது. தேவர்களால் அழிக்க முடியாத வானத்தில் மிதந்து கொண்டிருந்த நகரத்தையும், அசுரர்களையும், ஓ! {அர்ஜுனா{ வீரா, நீ உனது பராக்கிரமத்தாலும், தவச்சக்தியாலும் நசுக்கினாய்" என்றான். அந்த வான்நகரம் அழிந்த போதும், தானவர்கள் கொல்லப்பட்ட போதும், அவர்களது மனைவியர் குராரிப் பறவைகளைப் போலத் துன்பத்தால் கதறி அழுது, கூந்தல் கலைந்தபடி நகரத்தைவிட்டு வெளியே வந்தனர். தங்கள் மகன்களுக்காகவும், சகோதரர்களுக்காகவும், தந்தைகளுக்காவும் தரையில் விழுந்து ஒப்பாரி வைத்த அவர்கள் துன்பகரமான குரலுடன் அழுதார்கள். தங்கள் நாயகரை இழந்ததால், அவர்கள் தங்கள் மார்புகளை அடித்துக் கொண்டதால், அவர்களது மாலைகளும் ஆபரணங்களும் கழன்று விழுந்தன.
கந்தர்வர்கள் நகரத்திற்கு ஒப்பான தோற்றம் கொண்ட அந்தத் தானவர்கள் நகரம் ஒப்பாரியால் நிறைந்தது. துயரடைந்து, அருள் இழந்து யானைகள் அற்ற தடாகம் போல, மரங்களற்ற கானகம் போலத் தங்கள் தலைவர்கள் அற்ற அந்நகரம் அழகாக இல்லை. மேகங்களால் கட்டப்பட்ட நகரம் போல அது மறைந்து போனது. களத்தில் எனது காரியம் முடிந்ததும் மகிழ்ச்சி நிறைந்த ஆவி கொண்ட மாதலி என்னைத் தேவர்கள் தலைவனின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான். அந்தப் பலமிக்க அசுரர்களைக் கொன்று, ஹிரண்யபுரத்தை அழித்து, நிவாத கவசர்களையும் கொன்ற நான் இந்திரனிடம் சென்றேன். ஓ! மிகுந்த பிரகாசம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, மாதலி நடந்ததை நடந்தவாறே தேவேந்திரனிடம் விவரமாகவும் முழுமையாகவும் எனது சாதனைகளை எடுத்துச் சொன்னான்.
ஹிரண்யபுரம் அழிக்கப்பட்டதையும், மாயைகள் சமன்படுத்தப்பட்டதையும், போர்க்களத்தில் நிவாதகவசர்களின் படுகொலையையும் கேள்விப்பட்ட புரந்தரன் {இந்திரன்} மருதர்களுடன் கூடி மிகவும் மகிழ்ந்து, "நன்று; நன்றி!" என்று சொல்லி மகிழ்ந்தான். தேவர்களுடன் கூடிய தேவர்களின் மன்னன் {இந்திரன்}, மீண்டும் மீண்டும் மகிழ்வூட்டி, "தேவர்களாலும் அசுரர்களாலும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பலமிக்க எனது எதிரிகளைக் கொன்று உனது குருவின் கூலியை {குருதட்சணையைக்} கொடுத்துவிட்டாய். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இப்படியே போர்க்களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து, தவறில்லாமல் ஆயுதங்களை ஏவினால், தேவர்களும், தானவர்களும், ராட்சசர்களும், யக்ஷர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், பறவைகளும், பாம்புகளும் உன்னை எதிர்த்துக் களத்தில் நிற்க முடியாது. ஓ! கௌந்தேய {அர்ஜுனா}, உன்னுடைய கரங்களில் பலத்தால் வெல்லப்பட்ட பூமியை, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் ஆள்வான்" என்றான் {இந்திரன்}.