The description made by Dhaumya! | Vana Parva - Section 162 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனுக்குத் தௌமியர் மந்தரம், மேரு மலைகளைக் குறிப்பிட்டுச் சொன்னதும், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதும்..
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "பிறகு, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, சூரியோதயத்தின் போது, தனது தினசரி வழிபாடுகளை முடித்த தௌமியர், ஆரிஷ்டஷேணருடன் இருந்த பாண்டவர்களிடம் வந்தார். ஆரிஷ்டஷேணரின் பாதங்களை வணங்கிய தௌமியர், கூப்பிய கரங்களுடன் அனைத்து அந்தணர்களையும் வணங்கினார். பிறகு யுதிஷ்டிரனின் வலது கரத்தைப் பற்றிய தௌமியர் கிழக்கை நோக்கிக் கொண்டே, "ஓ! பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இந்த மலைகளின் மன்னன் மந்தரம் பரந்து, பூமியை நிரப்பிக் கடல் வரை விரிந்திருக்கிறது. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, வனங்களும், கானகங்களும், மலைகளும் நிறைந்த இந்தப் பகுதியை இந்திரனும், வைஸ்ரவணனும் {குபேரனும்} ஆட்சி செய்கிறார்கள். ஓ! குழந்தாய், அனைத்துக் கடமைகளையும் அறிந்த புத்திகூர்மையுள்ள முனிவர்கள், இதுவே இந்திரன் மற்றும் மன்னன் வைஸ்ரவணனின் {குபரேனின்} வசிப்பிடம் என்று சொல்கின்றனர். இருபிறப்பாளர்களும், கடமைகளை அறிந்த முனிவர்களும், சித்தர்களும், சத்யஸ்களும், தேவர்களும், இங்கிருந்தபடியே, சூரியன் உதிக்கும்போதே அவனைத் துதிக்கின்றனர்.
உயிருடன் இருக்கும் அனைத்து உயிரினங்களின் தலைவனும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனுமான மன்னன் யமன், ஆவி பிரிந்து வருபவர்கள் அடையத்தக்க இந்தத் தென்திசையை ஆள்கிறான். புனிதமானதும், காண்பதற்கு அற்புதம் வாய்ந்ததும், முதன்மையான செழிப்பு கொண்டதுமான இந்தச் சன்யமனம் {Sanyamana [சம்யமிநீ]} ஆவி பிரிந்தவர்கள் தலைவனின் {யமனின்} வசிப்பிடமாக இருக்கிறது. புத்திகூர்மையுடையவர்கள் அந்த மலைகளின் ஏகாதிபதியை அஸ்தம் (என்ற பெயரில்) என்று அழைக்கிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கு வந்த சூரியன், எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருக்கிறான். இந்த மலைகளின் மன்னன் {அஸ்தகிரி} மேலும், பரந்த ஆழத்திலும் நிலைத்திருக்கும் மன்னன் வருணன், அனைத்து உயிர்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். ஓ! உயர்ந்த நற்பேறு பெற்றவனே, வடக்குப் பகுதிகளைப் பிரகாசிக்க வைத்துக் கொண்டு, பலம்வாய்ந்த மகாமேரு கிடக்கிறது. பிரம்மத்தை அறிந்தவர்களுக்குப் புகலிடமாக இருக்கும் அந்த மங்களகரமான மலையில் {மகாமேருவில்}, பிரம்மனின் சபை இருக்கிறது. அங்குதான் அசையும் மற்றும் அசையாத அனைத்தையும் படைத்தவனும் அனைத்து உயிர்களின் ஆன்மாவுமான பிரஜாபதி இருக்கிறான். பிரம்மனின் மனதில் பிறந்த ஏழு மகன்களின் {பிரம்மனின் மானசபுத்திரர்கள்} வசிப்பிடமாக மங்களகரமான ஆரோக்கியமான மகாமேரு இருக்கிறது. அந்த எழுவரில் ஏழாமவன் தக்ஷன் ஆவான். ஓ! குழந்தாய், இங்கேதான் வசிஷ்டரைத் தலைமையாகக் கொண்ட ஏழு தெய்வீக முனிவர்களும் உதித்து அஸ்தமிக்கிறார்கள்.
பெருந்தகப்பன் (பிரம்மா), தேவர்களுடன் சுயஞானத்துடன் அமரும் மேருவின் அற்புதமான, பிரகாசமான சிகரத்தைப் பார். பிரம்மனின் வசிப்பிடத்துக்கு அடுத்ததாக, உயிர்களின் படைப்புக்குத் துவக்கமும், உண்மையான தலைமைக் காரணமுமான, பிறப்பு இறப்பும் அறியா முதன்மைத் தலைவனான நாராயணனின் இடம் இருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மங்களகரமான இடத்தில் தேவர்களும் காண முடியாத அனைத்து சக்திகளும் இருக்கின்றன. சுயப்பிரகாசத்துடன் இருக்கும் உயர் ஆன்ம விஷ்ணுவின் பகுதி, சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தை விட அதிகமாகப் பிரகாசிப்பதால் தேவர்களாலோ தானவர்களாலோ அதைக் காண இயலாது. நாராயணனுடைய அந்த இடம் மேருவுக்குக் கிழக்கே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஓ! குழந்தாய், அனைத்து உயிர்களுக்கும் தலைவனும், சுயம்புவும், அண்டத்தின் முதன்மைக்காரணமானவனும், அனைத்து உயிர்களிலும் இருப்பவனும், அங்கே அற்புதமான அருளுடன் இருக்கிறான். பிரம்ம முனிவர்களே {பிரம்மரிஷிகளே} அங்கே செல்ல முடியாது என்கிற போது பெருமுனிவர்களைக் {மகாரிஷிகளைக்} குறித்து என்ன சொல்ல?
ஓ! குருக்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, யதிக்கள் {மனதால் தியானிப்பவர்கள்} மட்டுமே அங்கே செல்ல முடியும். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, (அவ்விடத்தில்) எந்த ஜோதிகளும் பிரகாசிப்பதில்லை. அங்கே அந்தப் புத்திக்கு எட்டாத ஆன்மா கொண்டவன் {விஷ்ணு} மட்டுமே ஆழ்நிலையில் ஒளிர்கிறான். அங்கே மரியாதையுடனும், கடும் தவத்துடனும், பக்திப்பயிற்சிகளின் அறத்தால் யதிக்கள் நாராயணனான ஹரியை அடைகின்றனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அங்கே சென்று சுயம்புவும், தேவர்களுக்கும், உயர் ஆன்மா கொண்டவர்களுக்கும், யோக வெற்றி பெற்றவர்களுக்கும், கர்வம் மற்றும் அறியாமை அகற்றியவர்களுக்கும் நித்தியமான தேவனுமான அண்ட ஆன்மாவை {நாராயணனை} அடைந்தவர்கள், மீண்டும் உலகத்துக்குத் திரும்புவதில்லை. ஓ! உயர்ந்த நற்பேறு பெற்ற யுதிஷ்டிரா, இந்தப் பகுதி ஆதியற்றது, அழிவற்றது, முடிவுமற்றது. இது கடவுளின் சாரமுடையது.
ஓ! குருக்களின் மகனே {யுதிஷ்டிரா}, சூரியனும் சந்திரனும் ஒவ்வொரு நாளும் எதிர் திசையில் மேருவைச் சுற்றி வருகின்றன. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, ஓ! பலம்பொருந்திய ஏகாதிபதியே, அனைத்து ஒளிக் கோள்களும் இதே போல இந்த மலைகளின் மன்னனை {மேருவைச்} சுற்றி வருகின்றன. இப்படியே இருளை அகற்றும் வழிபடத்தகுந்த சூரியன், மற்றக் கோள்களை இழுத்துக் கொண்டு இதை (மலையை) வலம் வருகிறான். பிறகு நிலைத்து, மாலை வேளையைக் கடந்த நாளை உண்டாக்கும் சூரியன், வடதிசையை நோக்கிப் பயணிக்கிறான். பிறகு மீண்டும் மேருவை நெருங்கும் தெய்வீகமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்ய விரும்பி கிழக்கு நோக்கி பயணிக்கிறான். இதே போலத் தெய்வீகமான சந்திரனும் மற்ற நட்சத்திரங்களுடன் கூடி இந்த மலையை வலம் வருகிறான். மாதத்தைப் பல பகுதிகளாகப் பிரிக்கும் அவனது {சந்திரனின்} வருகையால் பர்வ சந்திகள் பிரிகின்றன. இப்படியே தடையில்லாமல் பெரும் மேருவை வலம் வந்து அனைத்து உயிரினங்களுக்கும் உணவளித்த பிறகு, சந்திரன் மீண்டும் மந்தரத்திற்குச் செல்கிறான். இதே வழியில், இருளை அழிப்பவனான தெய்வீக சூரியன், தடங்கலற்ற பாதையில் நகர்ந்து, அண்டத்தின் அசைவுகளுக்குக் காரணமாகிறான். பனியை உண்டாக்க விரும்பும்போது, அவன் தெற்கே சென்று, அனைத்து உயிரினங்களுக்கும் குளிர்காலத்தைக் கொடுக்கிறான்.
பிறகு சூரியன், தெற்கில் இருந்து திரும்பி, தனது கதிர்களைக் கொண்டு அசையும் மற்றும் அசையாத அனைத்து உயிர்களிடம் இருந்தும் சக்தியை உறிஞ்சுகிறான். அதன் காரணமாக, மனிதர்களுக்கு வியர்வை, சோர்வு, மயக்கம் மற்றும் களைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. அனைத்து உயிர்களும் உறக்க {மயக்க/ களைப்பு} உணர்ச்சிக்கு ஆட்படுகின்றன. பிறகு, அறியப்படாத பகுதிகளில் இருந்து மீண்டு வரும் அந்தத் தெய்வீகமாகப் பிரகாசிப்பவன் {சூரியன்} மழையைப் பொழிய வைத்து, உயிரினங்களை மீள வைக்கிறான். மழை, காற்று, வெப்பம், ஆகிய வசதிகளால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைப் பேணிப் பாதுகாக்கும் பலம்வாய்ந்த சூரியன் மீண்டும் தனது பழைய வழியைக் கைக்கொள்கிறான். ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இப்படி உலவும் சூரியன் காலச்சக்கரத்தைத் தங்குதடையின்றிச் சுழற்றி, படைத்த பொருட்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறான். ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா} அவனின் {சூரியனின்} வழி தடையற்றது; அவன் {சூரியன்} ஒரு போதும் ஓய்வதில்லை. அனைத்து உயிர்களின் சக்தியை உறிஞ்சி மீண்டும் அவற்றுக்குத் திரும்ப அளிக்கிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நேரத்தை பகல், இரவு, காலம் {விநாடி}, கஷ்த்தம் {நாழிகை} ஆகியவாறு பிரிக்கும் அந்தத் தலைவனான சூரியன், அனைத்து உயிர்களின் உயிரையும், அசைவையும் நிர்ணயிக்கிறான்.