Arjuna's arrival! | Vana Parva - Section 163 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனனின் வருகைக்காகப் பாண்டவர்கள் காத்திருந்தது; அனைத்து ஆயுதங்களையும் இந்திரனிடம் பெற்ற அர்ஜுனன் கந்தமாதனம் திரும்பியது...
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "மலைகளில் அற்புதமான மலையில் {மேரு மலையில்} வசித்துக் கொண்டிருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் அற்புதமான நோன்புகளை நோற்றுக் கொண்டு, அர்ஜுனனைக் காண்பதற்கு ஆவலாக இருந்தனர். கந்தர்வர்களும், பெரும் முனிவர்களும், பெரும் பராக்கிரமமும், தூய்மையான விருப்பங்களும், உண்மையும், பொறுத்துக் கொள்ளும் ஆற்றலும் உடையவர்களில் முதன்மையான அந்தச் சக்தி மிகுந்தவர்களை {பாண்டவர்களை} மகிழ்ச்சிகரமாகக் காண வந்தனர். பூத்துக்குலுங்கும் மரங்கள் நிறைந்த அற்புதமான மலையை அடைந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்த ரதசாரதிகள், அந்தத் தெய்வீகப் பகுதியை அடைந்ததால் மருதர்களைப் போல மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தனர். மலர்கள் நிறைந்தும், மயில்கள் மற்றும் நாரைகளின் ஒலிகளும் நிறைந்த அந்த மலையின் சரிவுகளிலும், சிகரங்களிலும் பெரும் உற்சாகத்துடன் அவர்கள் {பாண்டவர்களும் சகாக்களும்} வாழ்ந்தனர்.
அந்த அழகான மலையில் தாமரைகள் நிறைந்த தடாகங்களையும், மரங்களடர்ந்த அத்தடாகங்களின் இருள் சூழ்ந்திருக்கும் கரைகளையும், அதில் கரண்டவங்களையும் அன்ன பறவைகளையும் அவர்கள் கண்டனர். பலதரப்பட்ட மலர்களும் ரத்தினங்களும் நிறைந்த அந்த மலர்ந்த விளையாட்டிடம், செல்வத்தை அளிக்கும் மன்னனை {குபேரனை} ஆக்கிரமிக்கும் வண்ணம் இருந்தது. எப்போதும் (அங்கேயே) உலவிக்கொண்டிருந்த, தவசிகளின் முதன்மையான (பாண்டவர்கள்), பல நிறங்களில் இருந்த நறுமணம் பொருந்திய பெரிய மரங்களும், மேகக்கூட்டங்களும் நிறைந்திருக்கும் அம்மலையின் சிகரத்தைக் காணும் சக்தியற்றிருந்தனர்.
ஓ! பெரும் வீரா {ஜனமேஜயா}, அந்த மலையின் சுய ஒளியாலும், வருடாந்தரச் செடிகளின் பிரகாசத்தாலும் அங்கே இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் தெரியாதிருந்தது. அந்த மலையிலேயே தங்கியிருந்து, ஒப்பற்ற சக்தி கொண்ட சூரியனின் பாதுகாப்பில் இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்களுக்கு மத்தியில் அந்த மனிதர்களில் முதன்மையான வீரர்கள் {பாண்டவர்கள்}, சூரியனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டனர். சூரியனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டு, அந்த மலை மற்றும் திசைகளின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டு, இருளை விலக்குபவனின் {சூரியனின்} கதிர்களால் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் சந்திகளைக் கண்டும், அந்த வீரர்கள், உண்மையில் உறுதியான பலம்வாய்ந்த ரதசாரதியின் {அர்ஜுனனின்} வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தினசரி சடங்குகளையும், வேதங்களையும் உரைத்து, அறச்சடங்குகளை முதன்மையாகச் செய்து, புனிதமான நோன்புகள் பயின்று உண்மைக்கு {சத்தியத்துக்கு} உண்மையாக அவர்கள் {பாண்டவர்கள்} இருந்தனர்.
"ஆயுதங்களில் தேர்ச்சி பெற்று அர்ஜுனன் திரும்புவதை விரைவாகக் காணும் நாம் மகிழ்ச்சியை உணர்வோமாக" என்று சொன்ன பார்த்தர்கள் {பாண்டவர்கள்} யோகப் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அந்த மலையில் இருக்கும் அழகான வனங்களைக் கண்டும், அவர்கள் கிரீடியையே {அர்ஜுனனையே} நினைத்துக் கொண்டிருந்ததால் அனைத்து பகலும் இரவும் அவர்களுக்கு ஒரு வருடத்தைப் போலத் தோன்றியது. தௌமியரின் அனுமதியுடன், உயர் ஆன்ம ஜிஷ்ணு {அர்ஜுனன்} ஜடா முடி தரித்து (வனத்திலிருந்து) சென்ற அந்த நொடியில் இருந்து மகிழ்ச்சி அவர்களை விட்டுச் சென்றது. ஆழ்ந்த நினைவுகளில் மூழ்கி இருக்கும் அவர்கள் எப்படி மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்? தங்கள் அண்ணனான யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், மதயானை போன்ற நடை கொண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்} காம்யக வனத்தில் அவர்களைப் பிரிந்ததில் இருந்து அவர்கள் அனைவரும் துயரத்திலேயே மூழ்கியிருந்தனர்.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே, பரதனின் வழித்தோன்றல்களான அவர்கள் {பாண்டவர்கள்}, ஆயுதங்களைக் கற்கும் நோக்குடன் வாசவனின் {இந்திரனின்} வசிப்பிடம் சென்றிருக்கும், வெள்ளைக் குதிரைகள் கொண்ட அவனைக் {அர்ஜுனனைக்} குறித்து நினைத்துக் கொண்டு அந்த மலையில் ஒரு மாத காலத்தைக் கடுமையுடன் கழித்தனர். ஆயிரம் கண் கொண்டவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் ஐந்து வருடங்கள் வசித்த அர்ஜுனன், தேவர்கள் தலைவனிடம் இருந்து, அக்னி {ஆக்னேயம்}, வருண {வாருணம்}, சோம {சௌம்யம்}, வாயு {வாயவ்ய}, விஷ்ணு {வைஷ்ணவம்}, இந்திர {ஐந்திரம்}, பசுபதி {பாசுபதம்}, பிரம்ம {பிரம்மம்}, பாரமேஷ்டி {பாரமேஷ்டியம்}, பிரஜாபதி, யம, தாதா, சவிதா, துவஷ்டா, வைஸ்ரவணா ஆகிய அனைத்து தெய்வீக ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டு, நூறு வேள்விகள் செய்தவனை {இந்திரனை} வணங்கி வலம் வந்து அவனது {இந்திரனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் கந்தமாதனம் வந்தான்.