Arjuna gave gift to his love! | Vana Parva - Section 164 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சொர்க்கத்தில் தான் இருந்த விதத்தைச் சுருக்கமாக யுதிஷ்டிரன் முதலானோருக்கு அர்ஜுனன் கூறியது...
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "ஒரு நாள் அந்தப் பெரும் பலம்வாய்ந்த ரதசாரதிகள் {பாண்டவர்கள்} அர்ஜுனனைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, மின்னலைப் போன்ற பிரகாசத்தையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட மகேந்திரனின் {இந்திரனின்} தேர் திடீரென வந்ததால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சிப் பரவசமடைந்தனர். மாதலியால் ஓட்டப்பட்ட அந்தச் சுடர்விடும் ரதம், திடீரென வானத்தைப் பிரகாசமடையச் செய்து, புகையற்ற நெருப்பின் நாக்கு போலவும், மேகங்களால் அணைக்கப்பட்டு எரிகல் போலவும் தெரிந்தது. அந்த ரதத்தில் மாலைகளும், புதிதாகச் செய்யப்பட்ட ஆபரணங்களும் பூண்டு கிரீடி {அர்ஜுனன்} அமர்ந்திருந்தான். வஜ்ரம் தாங்குபவனின் {இந்திரனின்} பராக்கிரமம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சுடர்விடும் அழகுடன் அம்மலையில் இறங்கினான். அந்தப் புத்திக்கூர்மை கொண்டவன் {அர்ஜுனன்}, மகுடத்துடனும் மாலைகளுடன் அம்மலையில் இறங்கி முதலில் தௌமியரின் கால்களையும், பிறகு அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} கால்களையும் பணிந்தான்.
பிறகு அவன் {அர்ஜுனன்} விருகோதரனின் {பீமனின்} பாதங்களையும் பணிந்தான்; இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்} அவனை {அர்ஜுனனை} வணங்கினர். பிறகு கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} சென்று அவளை உற்சாகமூட்டிய அவன் {அர்ஜுனன்}, தனது அண்ணனின் முன்னிலையில் பணிவுடன் நின்றான். அந்த ஒப்பற்றவனை {அர்ஜுனனைச்} சந்தித்ததால் அவர்கள் {பாண்டவர்கள்} அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தனர். நமுச்சி என்ற அசுரனைக் கொன்றவன் {இந்திரன்}, எந்தத் தேரில் இருந்து திதியின் வாரிசுகளான {தைத்தியர்களின்} ஏழு கூட்டங்களைக் கொன்றானோ அந்த இந்திரனுடைய தேரினைக் கண்ட தளராத மனம் கொண்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, அதனிடம் சென்று அதனை {தேரை} வலம் வந்தனர். மிகவும் திருப்தி அடைந்த அவர்கள் {பாண்டவர்கள்}, தேவர்கள் தலைவனை {இந்திரனை} வணங்குவது போல மாதலியை வணங்கினர். பிறகு அந்தக் குரு மன்னனின் மகன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {மாதலியிடம்}, தேவர்களின் நலனை விசாரித்தான். மாதலியும் அவர்களைப் பதிலுக்கு வாழ்த்தினான். ஒரு தந்தை தனது மகன்களுக்கு அறிவுரை கூறுவது போலப் பார்த்தர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அறிவுரை கூறிய அவர் {மாதலி}, அந்த ஒப்பற்ற ரதத்தில் ஏறி, தேவர்கள் தலைவனிடம் {இந்திரனிடம்} திரும்பினார்.
இப்படி மாதலி சென்றவுடன், அரசு குலத்தின் முதன்மையானவனும் எதிரிகளை அழிப்பவனுமான சக்ரனின் மகன் {அர்ஜுனன்}, தனது காதலியான, சூதசோமனின் அன்னையிடம் {திரௌபயிடம்} சென்றான். சக்ரன் {இந்திரன்} தனக்கு அளித்த சூரியனைப் போலப் பிரகாசிக்கும் ஆபரணங்களையும், அழகான சுத்தமான ரத்தினங்களையும் அவளுக்கு {திரௌபதிக்கு} அளித்தான். பிறகு குருக்களில் முதன்மையானவர்களுக்கும் {பாண்டவர்களுக்கும்}, அந்தணர்களில் சிறந்தவர்களுக்கும் மத்தியில அமர்ந்து கொண்டு, நெருப்பைப் போல, சூரியனைப் போலப் பிரகாசித்த அவன் {அர்ஜுனன்}, "இவ்வழியில், சக்ரனிடம் இருந்தும், வாயுவிடம் இருந்தும், எங்கும் நிறைந்த சிவனிடம் இருந்தும் ஆயுதங்களை அடைந்தேன். இந்திரனோடு கூடிய அனைத்து தேவர்களும், எனது நடத்தையாலும், கவனக்கூர்மையாலும் என்னிடம் திருப்தி கொண்டார்கள்" என்று நடந்தது அத்தனையும் சொல்ல ஆரம்பித்தான் {அர்ஜுனன்}.
ஏற்றுக் கொள்ளும் வகையில் களங்கமற்ற செய்கைகள் செய்யும் கிரீடி {அர்ஜுனன்}, தனது குறுகிய கால சொர்க்கவாசத்தை அவர்களுக்குச் சுருக்கமாகச் சொன்ன பிறகு, மாத்ரியின் இரண்டு மகன்களுடன் {நகுலன் மற்றும் சகாதேவனுடன்} அன்று இரவு உறங்கினான்.