Return to Kamyaka Yudhishthira! | Vana Parva - Section 165 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
இந்திரன் யுதிஷ்டிரனிடம் காம்யகம் திரும்புமாறு பணித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "இரவு கழிந்த பிறகு, தனது சகோதரர்களுடன் கூடிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, நீதிமானான யுதிஷ்டிரனை வணங்கினான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த நேரத்தில், தேவர்களிடமிருந்து பலமிக்க இசையொலிகளும் தேர் சக்கரத்தின் தடதடப்பும், கிண்கிணி மணி ஒலிகளும் எழுந்தன. அதனால், அனைத்து விலங்குகளும், இரை தேடும் பறவைகளும் விலங்குகளும் தனித்தனியாக ஒலியெழுப்பின.
அனைத்துத் திசைகளில் இருந்தும் சூரியனைப் போன்ற பிரகாசமிக்கத் தேர்களில் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ் கூட்டங்கள் எதிரிகளை ஒடுக்குபவனான தேவர்கள் தலைவனை {இந்திரனைத்} தொடர ஆரம்பித்தனர். தேவர்களின் மன்னனான புரந்தரன் {இந்திரன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி, ஜொலிக்கும் அழகுடன் பார்த்தர்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தான். அங்கே (அந்த இடத்திற்கு) வந்த ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்} தனது தேரைவிட்டு இறங்கினான்.
நீதிமானான யுதிஷ்டிரன் இதைக் கண்டவுடன், இறவாதவர்களின் {தேவர்களின்} மன்னனான அந்த அருள் நிறைந்தவனை {இந்திரனை} தனது தம்பிகளுடன் அணுகினான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, தனது கண்ணியத்தின் விளைவாக அந்த அளவிடமுடியாத ஆன்மா கொண்ட தயாளனை {இந்திரனை} முறைப்படி வணங்கினான்.
பிறகு, புரந்தரனை {இந்திரனை} வணங்கிய பராக்கிரமம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்பு பணியாளனைப் போலப் பணிவுடன் நின்றான். தவத்தகுதியுடன் சடாமுடி தரித்து இருக்கும் பாவமற்ற தனஞ்செயன் {அர்ஜுனன்}, தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்பாகப் பணிவுடன் இருப்பதைக் கண்ட பெரும் சக்தி வாய்ந்த குந்தி மகன் யுதிஷ்டிரன், அவனது {அர்ஜுனனின்} தலையை முகர்ந்தான். (அந்த உயரத்தில்} பல்குனனைக் {அர்ஜுனனைக்} கண்ட அவன் {யுதிஷ்டிரன்} பெரிதும் மகிழ்ந்து, தேவர்களின் மன்னனை {இந்திரனை} வணங்கி, உயர்ந்த அருளை அனுபவித்தான்.
பிறகு, பேருவகையில் நீந்திக் கொண்டிருந்த அந்த மனோபலம் கொண்ட ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்}, தேவர்கள் தலைவனான புத்திக்கூர்மை கொண்ட புரந்தரன் {இந்திரன்}, "ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ பூமியை ஆள்வாய். நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மீண்டும் காம்யகம் செல்வாயாக" என்றான்.
பிரம்மச்சரிய வாழ்வுமுறையை ஒரு வருடம் கடைப்பிடித்து, தனது புலன்களை அடக்கி, நோன்புகள் நோற்ற ஒரு கற்ற மனிதன், சக்ரன் {இந்திரன்} பாண்டவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து கவனத்துடன் கேட்டானானால், அவன் எத்தடங்கலும் இன்றி நூறு வருடங்களுக்கு இன்பமாக வாழ்வான்" {என்றார் வைசம்பாயனர்}.