I fought with Siva! | Vana Parva - Section 166 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
வேடன் உருவில் வந்த சிவனுடன் தான் போரிட்டதைக் குறித்தும், பாசுபத ஆயுதத்தை, தான் பெற்ற கதையையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "தனக்கு உரிய இடத்திற்குச் சக்ரன் {இந்திரன்} சென்றதும், தனது சகோதரர்களுடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு, இப்படி வணங்கிய அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} தலையை முகர்ந்தவன் {யுதிஷ்டிரன்}, மனக்களிப்பும் மகிழ்ச்சியும் கொண்டு தடைபட்ட வார்த்தைகளில் அர்ஜுனனிடம் "ஓ! அர்ஜுனா, இந்தக் காலத்தை நீ எப்படிச் சொர்க்கத்தில் கழித்தாய்? ஆயுதங்களை எப்படி அடைந்தாய்? தேவர்களின் தலைவனை {இந்திரனை} எப்படித் திருப்தி செய்தாய்? ஓ! பாண்டவா {அர்ஜுனா}, பிநாகையைத் தாங்கும் தெய்வீகமான சங்கரனை {சிவனை} எப்படிக் கண்டாய்? மேலும் ஆயுதங்களை எப்படி அடைந்தாய்? எம்முறையில் (அவர்களை) வழிபட்டாய்? "உன்னால் நான் திருப்தியடைந்தேன்" என்று நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} சொல்லும் விதம், அந்த எதிரிகளை ஒடுக்குபவனுக்கு என்ன சேவை செய்தாய்? ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {அர்ஜுனா}, நான் இவை அனைத்தையும் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாவமற்றவனே, மகாதேவனையும் {சிவனையும்}, தேவர்களின் மன்னனையும் {இந்திரனையும்} நீ திருப்தி செய்த விதத்தையும், ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, வஜ்ரத்தைத் தாங்கியிருப்பவனுக்கு {இந்திரனுக்கு} நீ செய்த சேவையையும், எனக்கு விவரமாகச் சொல் தனஞ்சயா {அர்ஜுனா}" என்றான் {யுதிஷ்டிரன்}.
அர்ஜுனன் {யுஷ்டிரனிடம்}, "ஓ! பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்}, தெய்வீக சங்கரனையும் {சிவனையும்} எவ்வாறு முறையாகக் கண்டேன் என்பதைக் கேளும். ஓ! எதிரிகளை அழிப்பவரே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {ஆயுத} அறிவியலை (கற்க} அடைய நீர் வழிகாட்டியதும், உமது கட்டளையின் பேரில் கானகம் சென்று தவம்பயின்றேன். காம்யகத்தில் இருந்து பிருகுதுங்கம் சென்று தவத்தில் ஈடுபட்டு ஒரு இரவை அங்கே கழித்தேன். அடுத்த நாள் நான் ஒரு குறிப்பிட்ட அந்தணரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம், "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்லப் போகிறாய்?" என்று கேட்டார். ஓ! குருக்களின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, அதன்பேரில் நான் உண்மை அனைத்தையும் அவரிடம் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரரே}, அந்த உண்மையைக் கேட்ட அந்த அந்தணர் மிகவும் திருப்தி கொண்டு என்னைப் புகழ்ந்தார். பின்பு, என்னிடம் திருப்தி கொண்ட அந்தணர், "ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிரு. அப்படித் தவம் பயில்கையில், குறுகிய காலத்தில் நீ தேவர்களின் தலைவனைக் {இந்திரனைக்} காண்பாய்" என்றார்.
ஓ! பெரும் பலம்வாய்ந்த மன்னா, பிறகு, நான் அவரது அறிவுரைப்படி இமயத்தில் ஏறி, ஒரு மாதகாலம் கனிகளும் கிழங்குகளும் மட்டும் உண்டு தவம்பயில ஆரம்பித்தேன். இரண்டாவது மாதத்தை நீரை மட்டும் உண்டு கழித்தேன். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, மூன்றாவது மாதம் முழுதும் உணவைத் தவிர்த்தேன். நான்காவது மாதம் கைகளை உயர்த்தியபடி இருந்தேன். அப்போது, நான் எனது பலத்தை இழக்காதது ஆச்சரியம்தான். ஐந்தாவது மாதத்தின் முதல் நாள் கழிந்த போது, எனது முன்னிலையில் பன்றியின் உருவத்தில் ஒரு உயிரினம், பூமியைத் தனது வாயால் புரட்டியும், கால்களால் தரையை மிதித்துக் கொண்டும், மார்பால் மண்ணைத் தேய்த்துக் கொண்டும் பயங்கரமாக நின்றது. அதை {அந்த உயிரினத்தைத்} தொடர்ந்து, பெண்கள் சூழ, வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தாங்கியபடி வேடன் உருவில் இருந்த ஒருவன் வந்தான். அதன் பேரில், நான் எனது வில்லையும், இரண்டு அம்பறாத்தூணிகளையும் எடுத்து, எனது கணைகளால் அந்தப் பயங்கரமான உயிரினத்தைத் துளைத்தேன். அதே வேளையில் அந்த வேடனும் தனது பலம்வாய்ந்த வில்லை இழுத்து, அதை {அந்த விலங்கை) அடித்தது எனது மனதை உலுக்கியது.
மேலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் என்னிடம், "வேட்டை விதிகளை மீறி, நான் முதலில் அடித்த விலங்கை நீ ஏன் அடித்தாய்? இந்தக் கூரிய கணைகள் உனது கர்வத்தை அழிக்கும். அங்கேயே நில்" என்றான். பிறகு அந்தப் பெரும் உடல் படைத்தவன் {வேடன்}, வில்லோடு என்னை நோக்கி விரைந்தான். பிறகு மேகம் மழையைப் பொழிந்து மலையை மறைப்பது போல, அவனது பலம்வாய்ந்த கணைகளால், என்னை மறைத்தான். நான் எனது பங்குக்கு, பல கணைகளால் அவனை மறைத்தேன். முனை ஒளிரும் உறுதியான அம்புகளை உரிய மந்திரங்களுடன், {இந்திரன்} வஜ்ரம் கொண்டு மலையைப் பிளப்பது போல, அவனைத் துளைத்தேன். அப்போது அவனது உருவம் நூறாகவும், ஆயிரமாகவும் ஆனது. நான், அந்த உடல்கள் அத்தனையையும் எனது கணைகளால் துளைத்தேன். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த உருவங்கள் அனைத்தும் மீண்டும் ஒன்றாகின. அதை நான் அடித்தேன்.
பிறகு அவன் சிறிய உடலும் பெரிய தலையும் கொண்டவன் ஆனான். அதன்பிறகு பெரும் உடலும் சிறிய தலையும் கொண்டவன் ஆனான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவன் தனது பழைய உருவம் கொண்டு போருக்காக என்னை அணுகினான். ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நான் அவனை எனது கணைகளால் மூழ்கடிப்பதில் தோல்வியுற்ற போது, வாயுத் தேவனின் பெரும் பலம் வாய்ந்த ஆயுதத்தைப் பொருத்தினேன். ஆனால் அதை அவன் மீது செலுத்துவதில் நான் தோல்வி கண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆயுதம் பலனைக் கொடுக்கத் தவறிய போது, நான் திகைப்படைந்தேன். எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் கடுமையாக முயன்ற நான் அவனைப் பல பலம் வாய்ந்த கணைகளால் நிறைத்தேன். பிறகு, ஸ்தூணாகர்ண, வருண, சலப, அசமவர்ஷ ஆயுதங்களை எடுத்து அவன் மீது பொழிந்தேன். ஆனால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எனது அனைத்து ஆயுதங்களையும் அவன் உடனே விழுங்கிவிட்டான். எனது ஆயுதங்கள் அனைத்தும் விழங்கப்பட்ட பிறகு, நான் பிரம்மனின் ஆளுகை கொண்ட ஆயுதத்தை அவன் {வேடன்} மீது விட்டேன்.
சுடர்விட்டுச் செல்லும் கணைகள் அந்த ஆயுதத்தில் இருந்து கிளம்பி அவன் மீது குவிந்தது. இப்படி அடிக்கப்பட்ட எனது பலம்வாய்ந்த ஆயுதத்தால் மூழ்கிய அவன், தனது உடலைப் பெருக்கினான். பிறகு நான் வீசிய ஆயுதத்தின் சக்தியால் ஆகாயமும், வானத்தின் அனைத்து திக்குகளும் வாட்டப்பட்டன. ஆனால் அந்தப் பெரும் பலமும் சக்தியும் கொண்டவன் அந்த ஆயுதத்தை உடனே கலங்கடித்தான். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பிரம்மனின் ஆளுமை கொண்ட அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட போது பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது. அதனால் உடனே எனது வில்லையும் இரண்டு அம்பறாத்தூணிகளைப் பிடித்துக் கொண்டு, அவன் மீது கணைகளை அடித்தேன். ஆனால் அவன் {வேடன்} அனைத்து ஆயுதங்களையும் விழுங்கினான்.
அனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டும் விழங்கப்பட்டும் போன போது, அவனுக்கும் {வேடனுக்கும்} எனக்கும் இடையில் மற்போர் நடந்தது. அடிகளாலும், அறைகளாலும் இருவரும் மோதிக் கொண்டோம். ஆனால் அவனை வீழ்த்த முடியாத நான், மதிமயங்கித் தரையில் விழுந்தேன். ஓ! பெரும்பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு சிரித்த அவன் {வேடன்}, என் கண் முன்பாகவே அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து அந்த இடத்திலேயே மறைந்து போனான்.. ஓ! சிறப்புவாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இதைச் சாதித்த அந்தத் தெய்வீகமானவன் வேறு உரு கொண்டு தெய்வீக ஆடை பூண்டு வந்தான். வேடன் உருவைக் கைவிட்ட தேவர்களின் தெய்வீகத் தலைவன் {சிவன்}, தனது தெய்வீக தோற்றத்தைப் பெற்று அங்கே நின்றான்.
பிறகு, உமையுடன் கூடிய காளையைத் தனது குறியாகக் கொண்டவனும் பினகையைத் தாங்குபவனும், பல உருவங்கள் எடுக்கவல்லவனுமான அந்தத் தெய்வீகமானவன் {சிவன்}, பாம்புகளைத் தாங்கிக் கொண்டு என் முன்பு தோன்றினான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அப்போதும் போருக்குத் தயாராகக் களத்தில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி வந்த திரிசூலம் தாங்குபவன் {சிவன்}, "நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டேன்" என்றான். பிறகு அந்தத் தெய்வீகமானவன் எனது விற்களையும், வற்றாத அம்புகள் கொண்ட அம்பறாத்தூணி ஜோடியையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து, "ஓ! குந்தியின் மகனே. நீ என்னிடம் ஏதாவது வரம் கேள். நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும். ஓ! வீரா, உனது இதயத்தில் குடி கொண்டிருக்கும் விருப்பத்தைச் சொல். நான் அதை அருளுவேன். இறவா நிலை தவிர்த்து, உனது இதயத்தில் இருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்" என்றான் {சிவன்}.
ஆயுதங்கள் பெறுவதில் நிலைத்த மனதுடன், நான் சிவனை வணங்கி, "ஓ! தெய்வீகமானவனே, எனக்குச் சாதகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், நான் ஒரு வரத்தைப் பெற விரும்புகிறேன். தேவர்களிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் {ஆயுத அறிவியலையும்} நான் கற்க விரும்புகிறேன்" என்றேன். பிறகு, அந்தத் திரயம்பகன் {சிவன் [முக்கண்ணன்]} என்னிடம், "ஓ! பாண்டவா {அர்ஜுனா}, எனது ஆயுதமான ரௌத்திரத்தை {பாசுபதத்தை} நான் உனக்குக் கொடுப்பேன்" என்றான். பிறகு மிகவும் திருப்தி கொண்ட மகாதேவன் {சிவன்}, வலிமைமிக்க ஆயுதமான பாசுபதத்தை எனக்கு அருளினான். அந்தத் தெய்வீக ஆயுதத்தை அருளிய அவன், என்னிடம், "இது மனிதர்கள் மீது ஏவப்படலாகாது. குறைந்த சக்தி கொண்டவர் மீது இதை ஏவினால், அது அண்டத்தையே உட்கொண்டு விடும். கடுமையாகப் பாதிக்கப்படும் போது மட்டுமே, இதை ஏவ வேண்டும். உன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் வீணான பிறகே, இதை நீ ஏவலாம்" என்றான் {சிவன்}.
காளையைக் குறியாகக் கொண்டவன் {சிவன்} இப்படி என்னிடம் திருப்தி கொண்ட போது, தடையற்ற சக்தி கொண்டு அனைத்து ஆயுதங்களைக் கலங்கடிப்பதும், பகைவர்களை அழிப்பதும், எதிரிகளின் படைகளை அழிப்பதும், அடைய முடியாத ஒப்பற்றதும், தேவர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் தாங்கமுடியாததுமான பாசுபத ஆயுதம் உருவமெடுத்து வந்து என் அருகில் நின்றது. பிறகு அந்தத் தெய்வத்தின் கட்டளையின் பேரில் நான் அங்கே அமர்ந்தேன். நான் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே அந்தத் தெய்வம் {சிவன்} அந்த இடத்தில் இருந்து மறைந்தான்.