Arjuna and Indra meets! | Vana Parva - Section 167a | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தான் இந்திரலோகம் சென்றதையும், அங்கு வாசம் செய்ததையும், இந்திரனிடம் ஆயுதங்கள் பெற்றதையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதரே, தேவர்களுக்குத் தேவனும், தலைமை ஆன்மாவுமான திரயம்பகன் {முக்கண்ணன்} அருளால், அந்த இரவை அந்த இடத்திலேயே கழித்தேன். இரவைக் கழித்து, காலைச் சடங்குகளை முடித்ததும், நான் முன்பு சந்தித்த அந்தணர்களில் முதன்மையானவரைச் சந்தித்தேன். நடந்தவற்றை நான் அவரிடம் சொன்னேன். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, தெய்வீகமான மகாதேவனை {சிவனை} நான் சந்தித்தது குறித்துச் சொன்னேன். ஓ! மன்னார்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, அவர் என்னிடம் திருப்தி கொண்டு, "யாராலும் காண முடியாத பெரும் தெய்வத்தை நீ கண்டதால், விரைவில் நீ வைவஸ்வதன் {யமன்} முதலான பிற லோகபாலர்கள் மற்றும் தேவர்களின் தலைவன் {இந்திரன்} ஆகியோருடன் நீ பழகுவாய். இந்திரன் உனக்கு ஆயுதங்களை வழங்குவான்" என்றார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதைச் சொன்ன சூரியனைப் போன்ற அந்த அந்தணர், என்னை மீண்டும் மீண்டும் அணைத்து, அங்கிருந்து சென்றார்.
ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அந்த நாளின் மாலைப் பொழுதில், முழு உலகத்திற்கும் புத்துணர்ச்சியூட்டும் சுத்தமான தென்றல் வீசத் தொடங்கியது. இமய மலையின் அடிவாரத்தில் என் அருகில், நறுமணமிக்க அழகிய மலர்கள் புதிதாகப் பூக்கத் தொடங்கின. அனைத்து பக்கங்களிலும், மனதைக் கவரும் இனிய இன்னிசையும், இந்திரன் சம்பந்தமான பாடல்களும் கேட்கப்பட்டன. தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} முன்னிலையில் அப்சரஸ் மற்றும் கந்தர்வக் கூட்டங்கள் பலவகைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். மருதர்களும், மகேந்திரனின் பணியாட்களும், சொர்க்கவாசிகளும் தெய்வீகத் தேர்களில் ஏறி அங்கே வந்தனர். பிறகு சச்சியுடன் கூடிய மருத்வானும், அனைத்து தேவர்களும் நல்ல அலங்காரத்தோடு தேரில் ஏறி வந்தனர். அந்த நேரத்தில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மனிதர்களின் தோள்களில் பயணிப்பவன் {குபேரன்}, தனது சிறந்த கிருபையால் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பிறகு தென்திசையில் அமர்ந்திருந்த யமனையும், அவரவர் இடங்களில் அமர்ந்திருந்த வருணன் மற்றும் தேவர்கள் தலைவனையும் {இந்திரனையும்) நான் கண்டேன்.
ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! பலம்வாய்ந்த ஏகாதிபதி, என்னை உற்சாகப்படுத்திய பிறகு அவர்கள், "ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, லோகபாலர்களான நாங்கள் அமர்ந்திருப்பதைப் பார். தேவர்களின் காரியத்தை நிறைவேற்றவே நீ சங்கரனின் {சிவனின்} காட்சியைப் பெற்றாய். சுற்றி அமர்ந்திருக்கும் எங்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்" என்றனர். ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, அதன் பிறகு, உரிய முறையில் தேவர்களில் முதன்மையானவர்களை வணங்கிய நான் அந்தப் பெரும் பலம்வாய்ந்த ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டேன். பிறகு அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகவே உணர்ந்தார்கள். பின்னர் அந்தத் தேவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தப் பகுதிக்கே திரும்பினர்.
புகழ்பெற்ற தனது ரதத்தில் ஏறிய தேவர்கள் தலைவனான தெய்வீக மகவானும் {இந்திரனும்} என்னிடம், "ஓ! பல்குனா {அர்ஜுனா}, நீ தேவலோகம் செல்ல வேண்டியதிருக்கும். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இந்த உனது வருகைக்கு முன்னரே, நீ இங்கு வருவாய் என்பது எனக்குத் தெரியும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அதன்பிறகே நான் உனக்கு என்னை வெளிப்படுத்தினேன். முன்பே நீ பல தீர்த்தங்களில் நீராடி, இப்போதோ கடும் தவங்கள் இயற்றுகிறாய். ஆகையால், ஓ! பாண்டவா {அர்ஜுனா}, உன்னால் தேவலோகம் செல்ல இயலும். எனினும் நீ தேவலோகப் பயணம் மேற்கொள்ள இன்னும் கடும் தவம்பயில வேண்டும். எனது கட்டளையின் பேரில், மாதலி உன்னைத் தேவலோகங்களுக்கு அழைத்துச் செல்வான். உன்னை ஏற்கனவே தேவர்களும், உயர்ஆன்ம தெய்வீக முனிவர்களும் அறிவார்கள்" என்றான் {இந்திரன்}.
அதன்பேரில் நான் சக்ரனிடம் {இந்திரனிடம்}, "ஓ! தெய்வீகமானவரே {இந்திரரே}, எனக்குச் சாதகமாக இருப்பாயாக. நான் ஆயுதங்கள் பயில விரும்புகிறேன். ஆகவே, 'நீ எனக்குக் குருவாக இருப்பாயாக' என்று வேண்டுகிறேன்" என்று கேட்டேன். அதற்கு இந்திரன், "ஓ! குழந்தாய், ஆயுதங்கள் பயின்றால் பயங்கரக் காரியங்கள் புரிவாய். இதை நோக்கமாகக் கொண்டே நீ ஆயுதங்களை விரும்புகிறாய். எனினும், நீ விரும்பியவாறே ஆயுதங்களை அடைந்து கொள்" என்றான். பிறகு நான், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே, என்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டால் தவிர, நான் இந்தத் தெய்வீக ஆயுதங்களை மனிதர்கள் மீது ஏவ மாட்டேன். ஓ! தேவர்கள் தலைவா {இந்திரா}, எனக்குத் தெய்வீக ஆயுதங்களை அருள்வாயாக. (அதன் காரணமாக) இதன்பிறகு நான் போர் வீரர்கள் அடையும் உலகங்களை அடைவேன்" என்றேன்.
இந்திரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உன்னைச் சோதித்துப் பார்க்கவே, நான் இவ்வார்த்தைகளை உன்னிடம் சொன்னேன். என் மூலமாகப் பெறப்பட்ட உனக்கு, இவ்வார்த்தைகள் பொருத்தமானதே. ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ எனது வசிப்பிடத்தை அடைந்து, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {அர்ஜுனா} வாயு, அக்னி, வசு, வருண, மருத, சித்த, பிரம்ம, கந்தர்வ, உரக, ராட்சச, விஷ்ணு, நைரித ஆயுதங்களையும் மற்றும் என்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பெறுவாய்" என்று சொன்னான். இதை என்னிடம் சொன்ன சக்ரன் {இந்திரன்} அந்த இடத்திலேயே மறைந்து போனான்.